யோசுவா 10:24-26

யோசுவா 10:24-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்களை யோசுவாவிடம் கொண்டுவந்ததும், யோசுவா இஸ்ரயேல் மனிதர்கள் அனைவரையும் அங்கு வரவழைத்து, தன்னோடு வந்திருந்த படைத்தளபதிகளிடம், “இங்கே வாருங்கள்! உங்கள் பாதங்களை இந்த அரசர்களின் கழுத்துகளில் வையுங்கள்” என்று கட்டளையிட்டான். எனவே அவர்கள் முன்னேவந்து தங்கள் பாதங்களை அரசர்களின் கழுத்தின்மேல் வைத்தார்கள். யோசுவா தன் படைத்தளபதிகளிடம், “பயப்படாதீர்கள்; மனந்தளராதீர்கள். பலங்கொண்டு தைரியமாய் இருங்கள். நீங்கள் போரிடவிருக்கும் உங்கள் எதிரிகளுக்கு யெகோவா இவ்விதமே செய்வார்” என்றான். இப்படிக் கூறி யோசுவா அந்த அரசர்களை வெட்டிக்கொன்று அவர்களுடைய உடல்களை ஐந்து மரங்களிலே தொங்கவிட்டான். அவ்வுடல்கள் மாலைவரை தொங்கிக்கொண்டிருந்தன.

யோசுவா 10:24-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்களை யோசுவாவிடம் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரையும் அழைத்து, தன்னோடு வந்த யுத்தமனிதர்களின் அதிகாரிகளை நோக்கி: நீங்கள் அருகில் வந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் அருகில் வந்து, தங்களுடைய கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள். அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலமாகவும் திடமனதாகவும் இருங்கள்; நீங்கள் யுத்தம்செய்யும் உங்களுடைய எதிரிகளுக்கெல்லாம் யெகோவா இப்படியே செய்வார் என்றான். அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; மாலைநேரம்வரைக்கும் மரங்களில் தொங்கினார்கள்.

யோசுவா 10:24-26 பரிசுத்த பைபிள் (TAERV)

அவர்கள் அந்த ஐந்து ராஜாக்களையும் யோசுவாவிடம் அழைத்து வந்தனர். அவ்விடத்திற்கு வருமாறு யோசுவா தன் எல்லா ஆட்களையும் அழைத்தான். யோசுவா படையதிகாரிகளை நோக்கி, “இங்கே வாருங்கள்! உங்கள் பாதங்களை இந்த ராஜாக்களின் கழுத்தின் மீது வையுங்கள்” என்றான். அவ்வாறே யோசுவாவின் படை அதிகாரிகள் நெருங்கி வந்து அந்த ராஜாக்களின் கழுத்துக்களின் மீது தங்கள் பாதங்களை வைத்தனர். அப்போது யோசுவா தன் ஆட்களை நோக்கி, “வலிமையும் துணிவும் உடையவர்களாயிருங்கள், அஞ்சாதீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளப் போகிற பகைவர்கள் எல்லோருக்கும் கர்த்தர் செய்யவிருப்பதை உங்களுக்குக் காட்டுவேன்” என்றான். யோசுவா அந்த ஐந்து ராஜாக்களையும் கொன்று, அவர்களின் உடல்களை ஐந்து மரங்களில் தொங்கவிட்டான். மாலைவரை யோசுவா அவர்களை மரத்திலேயே தொங்கவிட்டான்.

யோசுவா 10:24-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள். அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான். அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; சாயங்காலமட்டும் மரங்களில் தொங்கினார்கள்.