யோசுவா 10:1-15
யோசுவா 10:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யோசுவா ஆயி நகரத்தைக் கைப்பற்றி அதை முழுவதும் அழித்துப்போட்டான் என, எருசலேமின் அரசன் அதோனி-சேதேக் இப்பொழுது கேள்விப்பட்டான். எரிகோ பட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்ததுபோலவே ஆயிபட்டணத்திற்கும் செய்தான் என்றும், அத்துடன் கிபியோன் மக்களும் இஸ்ரயேலருடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களருகே வாழ்கிறார்களென்றும் கேள்விப்பட்டான். இதனால் அவனும் அவனுடைய குடிமக்களும் மிகவும் கலக்கமடைந்தார்கள். ஏனெனில் கிபியோன் நகரமும், அரசர்கள் வாழும் பட்டணங்களில் ஒன்றைப்போல ஒரு பிரதான முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்தது. அது ஆயிபட்டணத்தைவிட பெரிதாகவும் இருந்தது. மனிதர் எல்லோரும் திறமையான வீரர்களாய் இருந்தனர். எனவே எருசலேம் அரசன் அதோனி-சேதேக் எப்ரோன் அரசன் ஓகாமுக்கும், யர்மூத் அரசன் பீராமுக்கும், லாகீசின் அரசன் யப்பியாவுக்கும், எக்லோனின் அரசன் தெபீருக்கும் ஒரு செய்தி அனுப்பினான்: “நான் கிபியோன் நகரைத் தாக்குவதற்கு நீங்கள் வந்து எனக்கு உதவுங்கள். ஏனெனில் கிபியோனியர் யோசுவாவோடும் இஸ்ரயேலரோடும் சமாதான ஒப்பந்தம் செய்துள்ளார்கள்” என வேண்டுகோள் விடுத்தான். அப்பொழுது எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய பட்டணங்களின் அரசர்களான, எமோரியரின் அரசர்கள் ஐவரும் போருக்கு ஒன்றுசேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் படைகளோடு கிபியோனுக்கு விரோதமாக நிலைகொண்டு போர்தொடுத்தார்கள். கிபியோனியர் கில்காலில் முகாமிட்டிருந்த யோசுவாவுக்கு உடனே ஒரு செய்தி அனுப்பி: “உங்கள் அடிமைகளாகிய எங்களைக் கைவிடாதேயும். உடனடியாக வந்து எங்களைக் காப்பாற்றும். எங்களுக்கு உதவிசெய்யும். ஏனெனில் மலைநாட்டிலுள்ள எமோரிய அரசர்கள் அனைவரும் எங்களுக்கெதிராகப் போர் செய்ய ஒன்றுகூடியிருக்கிறார்கள்” என்றார்கள். எனவே யோசுவா தனது மிகச்சிறந்த படைவீரர்கள் உட்பட, மற்ற முழு படையுடனும் கில்காலிலிருந்து அணிவகுத்துச் சென்றான். அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “நீ அவர்களுக்குப் பயப்படாதே. நான் அவர்களை உன் கையில் ஒப்படைத்துவிட்டேன். அவர்களில் ஒருவனாலும் உன்னை எதிர்த்து நிற்கமுடியாது” என்றார். கில்காலிலிருந்து யோசுவா இரவு முழுவதும் அணிவகுத்துச்சென்று, எமோரியர்கள் எதிர்பாராத வேளையில் அவர்களைத் தாக்கினான். யெகோவா எமோரியப் படையினரை இஸ்ரயேலருக்கு முன்பாகக் கலக்கமடையச் செய்தார். இஸ்ரயேலர் கிபியோனிலே அவர்களைத் தோற்கடித்து பெரும் வெற்றியீட்டினார்கள். இஸ்ரயேலர் பெத் ஓரோனுக்குப் போகும் வழியெங்கும் அவர்களைத் துரத்திச்சென்று அசேக்கா, மக்கெதா ஆகிய ஊர்கள் வரையிலும் வெட்டி வீழ்த்தினார்கள். அவர்கள் இஸ்ரயேலருக்கு முன்பாகப் பெத் ஓரோனிலிருந்து இறங்கும் வழியில் அசேக்காவரை ஓடுகையில், யெகோவா ஆகாயத்திலிருந்து பெரிய கல்மழையை அவர்கள்மேல் பொழிந்தார். இதனால் இஸ்ரயேலரின் வாளால் தாக்கப்பட்டு இறந்தவர்களைவிட, பெரிய கல்மழையினால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் அநேகராயிருந்தார்கள். யெகோவா எமோரியரை இஸ்ரயேலரிடம் ஒப்படைத்த அன்று, யோசுவா இஸ்ரயேலர் முன்னிலையில் யெகோவாவிடம் வேண்டிக்கொள்கையில் கூறியதாவது: “சூரியனே, கிபியோனுக்கு மேலாக தரித்து நில்; சந்திரனே ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலாகத் தரித்து நில்.” அப்படியே இஸ்ரயேலர் தங்கள் பகைவர்களைப் பழிவாங்கும்வரை சூரியனும் நின்றது, சந்திரனும் நின்றது. இது யாசேரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. சூரியன் நடுவானத்தில் தரித்து நின்றதால், ஒரு முழுநாள்வரை அது மறையத் தாமதித்தது. யெகோவா ஒரு மனிதனுடைய விண்ணப்பத்திற்கு செவிகொடுத்த இந்த நாளைப்போன்ற ஒரு நாள், இதற்கு முன்பு ஒருபோதும் இருந்ததில்லை, பின்பும் இருக்கவில்லை. நிச்சயமாக யெகோவா இஸ்ரயேல் மக்களுக்காகப் போர்புரிந்தார். அதன்பின் யோசுவா இஸ்ரயேலருடன் கில்காலில் இருந்த முகாமுக்குத் திரும்பிச்சென்றான்.
யோசுவா 10:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யோசுவா ஆயீயைப் பிடித்து, முழுவதும் அழித்து, எரிகோவிற்கும் அதின் ராஜாவிற்கும் செய்தபடி, ஆயீக்கும் அதின் ராஜாவிற்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலர்களோடு சமாதானம்செய்து அவர்களுக்குள் குடியிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது, கிபியோன், ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல பெரிய பட்டணமும், ஆயீயைவிட பெரியதுமாக இருந்தபடியினாலும், அதின் மனிதர்கள் எல்லோரும் பலசாலிகளாக இருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள். ஆகவே, எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி: நாங்கள் கிபியோனைத் தாக்கும்படி, நீங்கள் என்னிடம் வந்து, எனக்கு உதவிசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும், இஸ்ரவேல் மக்களோடும் சமாதானம் செய்தார்கள் என்று சொல்லியனுப்பினான். அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியர்களின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லா சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாக முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்தார்கள். அப்பொழுது கிபியோனின் மனிதர்கள் கில்காலில் இருக்கிற முகாமிற்கு யோசுவாவிடம் ஆள் அனுப்பி: உமது அடியார்களைக் கைவிடாமல், சீக்கிரமாக எங்களிடம் வந்து, எங்களைக் காப்பாற்றி, எங்களுக்கு உதவிசெய்யும்; மலை தேசங்களிலே குடியிருக்கிற எமோரியர்களின் ராஜாக்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள். உடனே யோசுவாவும் அவனோடு எல்லா யுத்தமனிதர்களும், எல்லா பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள். யெகோவா யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார். யோசுவா கில்காலிலிருந்து இரவுமுழுவதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான். யெகோவாவோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கச்செய்தார்; ஆகவே அவர்களைக் கிபியோனிலே மகா பயங்கரமாகத் தாக்கி, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்கா மற்றும் மக்கெதாவரைக்கும் முறியடித்தார்கள். அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகும்போது, அசெக்காவரைக்கும் ஓடுகிற அவர்கள்மேல் யெகோவா வானத்திலிருந்து பெரிய கல்மழைகளை விழச்செய்தார், அவர்கள் இறந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுடைய பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களைவிட கல்மழையினால் இறந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள். யெகோவா எமோரியர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்த நாளிலே, யோசுவா யெகோவாவை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும் நில்லுங்கள் என்றான். அப்பொழுது மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும்வரைக்கும் சூரியன் நின்றது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புத்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் மறைவதற்குத் துரிதப்படாமல், ஏறக்குறைய ஒருபகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது. இப்படிக் யெகோவா ஒரு மனிதனுடைய சொல்லைக் கேட்ட அந்த நாளைப்போன்ற ஒருநாள் அதற்கு முன்னும் இல்லை, அதற்குப் பின்னும் இல்லை; யெகோவா இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்தார். பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான்.
யோசுவா 10:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)
அக்காலத்தில் அதோனிசேதேக் எருசலேமின் ராஜாவாக இருந்தான். யோசுவா ஆயீ நகரைத் தோற்கடித்து முற்றிலும் அழித்துவிட்டான் என்ற செய்தியை அந்த ராஜா அறிந்தான். எரிகோவிற்கும் அதன் ராஜாவுக்கும் யோசுவா அவ்வாறே செய்தான் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவன் அறிந்திருந்தான். அந்த ஜனங்கள் எருசலேமுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்தனர். எனவே அதோனிசேதேக்கும் அவன் ஜனங்களும் மிகவும் பயந்தனர். கிபியோன் ஆயீயைப் போன்ற சிறிய நகரமன்று. கிபியோன் ஒரு பெரிய பலமான நாடு. அங்கிருந்த ஆண்கள் அனைவரும் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள். எருசலேமின் ராஜாவாகிய, அதோனிசேதேக், எபிரோனின் ராஜாவாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுடனும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுடனும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் ராஜா இவர்களிடம், “என்னோடு வந்து கிபியோனைத் தாக்குவதற்கு உதவுங்கள். யோசுவாவோடும் இஸ்ரவேல் ஜனங்களோடும் கிபியோனியர் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளனர்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். இந்த ஐந்து எமோரிய ராஜாக்களும் படை திரட்டினர். (அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆவார்கள்.) அப்படைகள் கிபியோனை நோக்கிச் சென்று நகரைச் சூழ்ந்து கொண்டு, போர் செய்ய ஆரம்பித்தன. கிபியோன் நகர ஜனங்கள் கில்காலில் முகாமிட்டுத் தங்கி இருந்த யோசுவாவிற்குச் செய்தியனுப்பினார்கள்: அதில், “நாங்கள் உமது பணியாட்கள்! எங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வந்து எங்களுக்கு உதவுங்கள்! விரைந்து வாருங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள்! மலை நாட்டின் எமோரிய ராஜாக்கள் எல்லோரும் எங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அவர்கள் படைகளைக் கொண்டுவந்துள்ளனர்” என்று இருந்தது. எனவே யோசுவா தனது படையோடு கில்காலிலிருந்து புறப்பட்டான். யோசுவாவின் சிறந்த படை வீரர்கள் அவனோடிருந்தனர். கர்த்தர் யோசுவாவிடம், “அப்படைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். அப்படைகளில் ஒன்றும் உங்களைத் தோற்கடிக்க இயலாது” என்றார். யோசுவாவும், அவனது படையும் கிபியோனுக்கு இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே அவன் திடீரென்று தாக்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர். அப்போது இஸ்ரவேல் படையினர் பகைவர்களை பெத்தொரோனிலிருந்து அசெக்கா வரைக்குமுள்ள வழியில் துரத்தினார்கள். அப்போது, கர்த்தர் வானத்திலிருந்து பெருங்கற்கள் விழும்படியாகச் செய்தார். அப்பெருங்கற்களால் பகைவர்கள் பலர் மரித்தனர். இஸ்ரவேல் வீரர்களின் வாளால் அழிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் கற்களால் கொல்லப்பட்டோரே அதிகம். கர்த்தர் அன்று இஸ்ரவேலர் எமோரியரை வெற்றிக்கொள்ளச் செய்தார். அந்த நாளில் யோசுவா இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக நின்று, கர்த்தரை நோக்கி: “சூரியன், கிபியோனின் மேல் நிற்கட்டும். ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல், சந்திரன் அசையாது நிற்கட்டும்” என்றான். எனவே சூரியனும், சந்திரனும் இஸ்ரவேலர் தங்கள் பகைவர்களை முறியடிக்கும் வரைக்கும் அசையாமல் நின்றன. இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. வானத்தின் நடுவில் சூரியன் அசையாமல் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது அசையவேயில்லை. அவ்வாறு முன்னர் நிகழ்ந்ததேயில்லை! அதன் பின் நிகழவுமில்லை. அந்நாளில் கர்த்தர் ஒரு மனிதனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார். உண்மையில் கர்த்தரே இஸ்ரவேலருக்காகப் போர் செய்தார்! அதன்பிறகு, யோசுவாவும் அவனது படையினரும் கில்காலில் முகாமிட்டிருந்த இடத்துக்கு திரும்பிப் போனார்கள்.
யோசுவா 10:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தபடி, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது, கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள். ஆகையால், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி: நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும், இஸ்ரவேல் புத்திரரோடும் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான். அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியரின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லாச் சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள். அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்குத் துணைசெய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாய்க் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள். உடனே யோசுவாவும் அவனோடேகூடச் சகல யுத்தமனுஷரும் சகல பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள். கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார். யோசுவா கில்காலிலிருந்து இராமுழுதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான். கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள். அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்கா மட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப்பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள். கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்து நில்லுங்கள் என்றான். அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும்மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது. இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார். பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.