யோசுவா 1:10-18

யோசுவா 1:10-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனவே யோசுவா மக்களின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, “நீங்கள் முகாமின் நடுவே சென்று மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவெனில், ‘உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ஆயத்தம் செய்யுங்கள்; ஏனெனில் இன்றிலிருந்து மூன்றுநாட்களுக்குள்ளே உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கப்போகிற நாட்டிற்குப்போய், அதை உங்கள் உரிமையாக்கிக்கொள்ள யோர்தான் நதியைக் கடப்பீர்கள்’ ” என்றான். மேலும் யோசுவா ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் கூறியதாவது: “யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நினைவுகூருங்கள். ‘யெகோவாவாகிய உங்கள் இறைவன் இந்த நாட்டை உங்களுக்கு வழங்கி, உங்களுக்கு இளைப்பாறுதல் கொடுத்தாரே.’ மோசே உங்களுக்குக் கொடுத்த யோர்தானின் கிழக்கேயுள்ள நிலப்பகுதியில் உங்கள் மனைவிகளும், பிள்ளைகளும், ஆடுமாடுகளும் தங்கியிருக்கலாம். ஆனால் உங்களிலுள்ள யுத்தம் செய்யும் மனிதர் முழு ஆயுதங்களையும் தரித்தவர்களாய் உங்கள் சகோதரர்களுக்கு முன்னே யோர்தானைக் கடந்து செல்லவேண்டும். இவ்வாறு நீங்கள் உங்கள் சகோதரருக்கு உதவிசெய்ய வேண்டும். யெகோவா உங்களுக்கு இளைப்பாறுதல் அளித்ததுபோல, அவர்களுக்கும் இளைப்பாறுதல் அளிக்கும்வரையும் உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களுக்குக் கொடுக்கவிருக்கும் நிலப்பகுதியை அவர்களும் தங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்வரையும் நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். அதன்பின் நீங்கள் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்குக் கிழக்கே சூரியன் உதிக்கும் திசையில் உங்களுக்குக் கொடுத்த உங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பிப்போய் அங்கே குடியிருக்கலாம்” என்றான். அதற்கு அவர்கள் யோசுவாவிடம் கூறியதாவது, “நீர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நாங்கள் நிறைவேற்றுவோம். நீர் அனுப்பும் இடங்களுக்கெல்லாம் நாங்கள் செல்வோம். மோசேக்கு நாங்கள் முழுவதும் கீழ்ப்படிந்ததுபோல, உமக்கும் கீழ்ப்படிவோம். உமது இறைவனாகிய யெகோவா மோசேயுடன் இருந்ததுபோலவே, உம்மோடும் இருப்பாராக. உமது வார்த்தைக்கு எதிராகக் கலகம்செய்து, நீர் கட்டளையிட்டுச் சொல்கிற எந்த வார்த்தைக்காவது கீழ்ப்படியாதிருப்பவன் எவனும் கொல்லப்படுவான். நீர் பலங்கொண்டு தைரியமாய் மட்டும் இரும்!” என்றார்கள்.

யோசுவா 1:10-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யோசுவா மக்களின் தலைவர்களை நோக்கி: நீங்கள் முகாமிற்குள்ளே நடந்துபோய், மக்களைப் பார்த்து: “உங்களுக்கு உணவுப் பொருட்களை ஆயத்தம் செய்யுங்கள்; உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சுதந்தரித்துக்கொள்வதற்காகக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாட்களுக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள்” என்று சொல்லச்சொன்னான். பின்பு யோசுவா; ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களையும் நோக்கி: யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; “உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களை இளைப்பாறச்செய்து, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே. உங்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இந்தப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர்கள் எல்லோரும் உங்களுடைய சகோதரர்களுக்கு முன்பாக அணியணியாகக் கடந்துபோய், யெகோவா உங்களைப்போல உங்களுடைய சகோதரர்களையும் இளைப்பாறச்செய்து, அவர்களும் உங்களுடைய தேவனாகிய யெகோவா தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரை, அவர்களுக்கு உதவிசெய்வீர்களாக; பின்பு நீங்கள் யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இந்தப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்களுடைய சொந்தமான தேசத்திற்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்களாக” என்றான். அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடங்களுக்கெல்லாம் போவோம். நாங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்ததுபோல உமக்கும் கீழ்ப்படிவோம்; உம்முடைய தேவனாகிய யெகோவா மட்டும் மோசேயோடு இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக. நீர் எங்களுக்குக் கட்டளையிடும் எல்லா காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேட்காமல், உம்முடைய கட்டளைக்கு எதிராக முரட்டாட்டம் செய்கிற எவனும் கொலை செய்யப்படக்கடவன்; பெலன்கொண்டு திடமனதாக மட்டும் இரும் என்றார்கள்.

யோசுவா 1:10-18 பரிசுத்த பைபிள் (TAERV)

யோசுவா, ஜனங்களின் தலைவர்களுக்கு ஆணைகளைக் கொடுத்தான். அவன், “முகாம்களுக்குச் சென்று ஜனங்களிடம் தயாராகும்படி கூறுங்கள், மேலும் ஜனங்களிடம் ‘கொஞ்சம் உணவைத் தயாரியுங்கள். இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் நாம் யோர்தான் நதியைக் கடக்கப் போகிறோம். தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்திற்குப் போய் அதைச் சுதந்தரிப்போம்’ எனச் சொல்லுங்கள்” என்றும் சொன்னான். பின் ரூபன், காத், ஆகிய கோத்திரத்தாரிடமும், மனாசே கோத்திரத்தின் பாதிப்பேர்களிடமும் யோசுவா பேசினான். அவன், “கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கூறியதை நினைவுகூருங்கள். தேவனாகிய கர்த்தர் நீங்கள் தங்குவதற்காக ஓரிடத்தை உங்களுக்குக் கொடுப்பார் என்று அவன் கூறினான். கர்த்தர் அத்தேசத்தை உங்களுக்குத் தருவார்! உண்மையில், யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தை கர்த்தர் ஏற்கெனவே கொடுத்துவிட்டார். உங்கள் மனைவிகளும், பிள்ளைகளும், உங்கள் மிருகங்களோடு உங்களுக்குச் சொந்தமான இத்தேசத்தில் தங்கியிருக்கலாம். ஆனால் போர் வீரர்கள் உங்கள் சகோதரரோடு யோர்தான் நதியைக் கடக்க வேண்டும். நீங்கள் போருக்குத் தயாராகி உங்கள் சகோதரர் அத்தேசத்தைக் கைப்பற்ற உதவவேண்டும். கர்த்தர் நீங்கள் தங்கியிருப்பதற்கு ஓர் இடத்தைக் கொடுத்தார். அதையே உங்கள் சகோதரருக்கும் செய்வார். தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குத் தருகின்ற தேசத்தைக் கைப்பற்றுவதற்கு நீங்கள் உதவவேண்டும். பிறகு நீங்கள் யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள உங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பி வரலாம். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே உங்களுக்கு அத்தேசத்தைப் பிரித்துக் கொடுத்தான்” என்றான். அப்போது ஜனங்கள் யோசுவாவிடம், “நீர் எங்களுக்குக் கட்டளையிடுகின்ற எல்லாக் காரியங்களையும் செய்வோம்! நீர் சொல்கின்ற இடங்களுக்கெல்லாம் போவோம்! நாங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தபடியே, நீர் கூறுகின்றவற்றிற்கும் கீழ்ப்படிவோம். நாங்கள் கர்த்தரிடம் ஒன்றை மட்டும் கேட்கிறோம். மோசேயோடு இருந்தபடியே, உங்களோடும் இருக்க வேண்டுமென தேவனாகிய கர்த்தரிடம் கேட்கிறோம். மேலும், உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய யாராவது மறுத்தால், அல்லது உமக்கு எதிராக யாராவது எழும்பினால், அப்போது அவன் கொல்லப்படுவான். உறுதியோடும் தைரியத்தோடும் இரும்!” என்றனர்.

யோசுவா 1:10-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்கு போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்து போவீர்கள் என்று சொல்லச்சொன்னான். பின்பு யோசுவா; ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் நோக்கி: கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே. உங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர் யாவரும் உங்கள் சகோதரருக்கு முன்பாக அணியணியாய்க் கடந்துபோய், கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்களாக என்றான். அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம். நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக. நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலை செய்யப்படக்கடவன்; பலங்கொண்டு திடமனதாய் மாத்திரம் இரும் என்றார்கள்.