யோபு 38:4-21

யோபு 38:4-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்? துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப்போடப்படும்படிக்கு, அதின் கடையாந்தரங்களைப் பிடிக்கும்பொருட்டு, உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளை கொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறது போல் காணப்படும். துன்மார்க்கரின் ஒளி அவர்களை விட்டு எடுபடும்; மேட்டிமையான புயம் முறிக்கப்படும். நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு. வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே? அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ? நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை அவ்வளவு பெரிதோ?

யோபு 38:4-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“நான் பூமிக்கு அஸ்திபாரம் போடும்போது நீ எங்கேயிருந்தாய்? உனக்கு விளங்கினால் அதை எனக்குச் சொல். அதின் அளவைக் குறித்தவர் யார்? அதின்மேல் அளவுநூலைப் பிடித்தது யார்? நீ சொல், உனக்குத் தெரிந்திருக்குமே! அதின் தூண்கள் எதன்மேல் அமைக்கப்பட்டிருக்கின்றன? அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடிவெள்ளிகள் ஒன்றாகக்கூடி பாட்டுப்பாடின; இறைத்தூதர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனரே. “கடல் தன் கருப்பையிலிருந்து வெடித்து வெளிப்பட்டபோது, அதைக் கதவுகளுக்குப் பின்வைத்து அடைத்தவர் யார்? நான் மேகத்தை அதற்கு உடையாக வைத்தபோதும், காரிருளினால் அதைச் சுற்றியபோதும், நான் அதற்கு எல்லைகளை அமைத்துத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் வைத்தபோது நீ எங்கேயிருந்தாய்? நான் அதனிடம், ‘நீ இதுவரை வா, மீறி வராதே; உன் அகங்கார அலைகள் அடங்குவதாக’ என்று சொன்னபோது நீ எங்கேயிருந்தாய்? “உன் வாழ்நாளில் காலைநேரத்திற்குக் கட்டளையிட்டு, அதிகாலைப்பொழுதுக்கு அதின் இடத்தைக் காட்டினதுண்டோ? இவ்வாறு, பூமியின் ஓரங்களைப் பிடித்து அதிலிருந்து கொடியவர்களை உதறித் தள்ளும்படி சொன்னதுண்டோ? முத்திரையிடப்பட்ட களிமண்போல் பூமி உருப்பெறுகிறது; அதின் இயற்கைத் தோற்றங்களும் உடைகளைப்போல் நிற்கின்றன. கொடியவர்களுக்கு வெளிச்சம் மறுக்கப்படுகிறது; உயர்த்தப்பட்ட அவர்களின் புயம் முறிக்கப்படும். “கடலின் ஊற்றுக்களுக்கு நீ போனதுண்டோ? அல்லது ஆழத்தின் உள்ளிடங்களில் நடந்திருக்கிறாயோ? மரண வாசல்கள் உனக்குக் காண்பிக்கப்பட்டதுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ கண்டதுண்டோ? பூமியின் அகன்ற வெளிகளை நீ விளங்கிக்கொண்டாயோ? இவைகளெல்லாம் உனக்குத் தெரியுமானால் எனக்குச் சொல். “வெளிச்சம் வசிக்கும் இடத்திற்குப் போகும் வழி எது? இருள் எங்கே குடியிருக்கிறது? அவற்றை அவை இருக்கும் இடத்திற்குக் கூட்டிச்செல்ல உன்னால் முடியுமா? அவைகள் தங்குமிடத்திற்கான பாதைகளை நீ அறிவாயோ? இவை உனக்குத் தெரிந்திருக்குமே; இவைகளுக்கு முன்னே நீ பிறந்து பல வருடங்கள் வாழ்ந்துவிட்டாய் அல்லவா!

யோபு 38:4-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதைச் சொல். அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல். அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி, தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே. கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: இதுவரை வா, மீறி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்? தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக, அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க, உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து, சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்; அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும். துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; மேட்டிமையான கை முறிக்கப்படும். நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல். வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே? அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ? நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ?

யோபு 38:4-21 பரிசுத்த பைபிள் (TAERV)

“யோபுவே, நான் பூமியை உண்டாகினபோது, நீ எங்கே இருந்தாய்? நீ அத்தனை கெட்டிக்காரனானால், எனக்குப் பதில் கூறு. நீ அத்தனை கெட்டிக்காரனானால், உலகம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டுமென யார் முடிவெடுத்தவர்? அளவு நூலால் யார் உலகை அளந்தார்? பூமியின் அஸ்திபாரம் எங்கு நிலைத்திருக்கிறது? அதன் முதற்கல்லை (கோடிக் கல்லை) வைத்தவர் யார்? காலை நட்சத்திரங்கள் சேர்ந்து பாடின, அது நிகழ்ந்தபோது தேவதூதர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்! “யோபுவே, கடல் பூமியின் ஆழத்திலிருந்து பாய்ந்தபோது, கடலைத் தடை செய்யும்பொருட்டு வாயில்களை அடைத்தது யார்? அப்போது நான் அதனை மேகங்களால் மூடி, அதனை இருளால் பொதிந்து வைத்தேன். நான் கடலுக்கு எல்லையை வகுத்து, அதை அடைத்த வாயிலுக்கு பின்னே நிறுத்தினேன். நான் கடலிடம், ‘நீ இதுவரை வரலாம், இதற்கு அப்பால் அல்ல, உனது பெருமையான அலைகள் இங்கே நின்றுவிடும்’ என்றேன். “யோபுவே, உன் வாழ்க்கையில் என்றைக்காவது நீ காலையை ஆரம்பிக்கவோ, ஒரு நாளைத் தொடங்கவோ கூறமுடியுமா? யோபுவே, பூமியைப் பிடித்து, தீயோரை அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவருமாறு உதறிவிட காலையொளிக்கு நீ கூற முடியுமா? மலைகளையும் பள்ளத்தாக்கையும் எளிதில் காலையொளியில் காணலாம். பகலொளி பூமிக்கு வரும்போது அங்கியின் மடிப்புக்களைப்போல இந்த இடங்களின் அமைப்புக்கள் (வடிவங்கள்) வெளித்தோன்றும். முத்திரையிடப்பட்ட களிமண்ணைப் போல அவ்விடங்கள் வடிவங்கொள்ளும். தீயோர் பகலொளியை விரும்பார்கள். பிரகாசமாக அது ஒளிவிடும்போது, அவர்கள் தீயக் காரியங்களைச் செய்யாதபடி தடுக்கும். “யோபுவே, கடல் புறப்படும் கடலின் ஆழமான பகுதிகளுக்கு நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா? சமுத்திரத்தின் அடிப்பகுதியில் நீ எப்போதாவது நடந்திருக்கிறாயா? மரித்தோரின் உலகத்திற்கு வழிகாட்டும் வாயிற் கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? மரணத்தின் இருண்ட இடத்திற்கு வழிகாட்டும் வாயிற்கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? யோபுவே, பூமி எவ்வளவு பெரிய தென்று நீ உண்மையில் அறிந்திருக்கிறாயா? நீ இவற்றை அறிந்திருந்தால், எனக்குக் கூறு. “யோபுவே, ஒளி எங்கிருந்து வருகிறது? எங்கிருந்து இருள் வருகிறது? யோபுவே, ஒளியையும், இருளையும் அவை புறப்படும் இடத்திற்கு நீ திரும்ப கொண்டு செல்ல முடியுமா? அந்த இடத்திற்குப் போகும் வகையை நீ அறிவாயா? யோபுவே, நீ நிச்சயமாக இக்காரியங்களை அறிவாய். நீ வயது முதிர்ந்தவனும் ஞானியுமானவன். நான் அவற்றை உண்டாக்கியபோது நீ உயிரோடிருந்தாய் அல்லவா?

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்