யோபு 38:24-38

யோபு 38:24-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மின்னல் புறப்படும் இடத்திற்கு வழி எங்கே? கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே? பலத்த மழைக்கு வாய்க்காலை வெட்டுபவர் யார்? இடி மின்னலோடு வரும் மழைக்கு வழியை ஏற்படுத்துகிறவர் யார்? ஒருவரும் குடியிராத நிலத்திற்கும், எவருமே இல்லாத பாலைவனத்திற்கும் பசுமையைக் கொடுப்பதற்காகவும், வனாந்திரமான பாழ்நிலத்தை பசுமையாக்கி, அதில் புல் பூண்டுகளை முளைக்கப்பண்ணும்படி செய்கிறவர் யார்? மழைக்கு ஒரு தகப்பன் உண்டோ? பனித்துளிகளைப் பெற்றெடுத்தவர் யார்? யாருடைய கருப்பையிலிருந்து பனிக்கட்டி வருகிறது? வானங்களிலிருந்து வரும் உறைபனியைப் பெற்றெடுக்கிறவர் யார்? தண்ணீர்கள் கல்லைப்போலவும், ஆழத்தின் மேற்பரப்பு உறைந்துபோகவும் செய்கிறவர் யார்? “அழகான கார்த்திகை நட்சத்திரத்தை நீ இணைக்கமுடியுமோ? மிருகசீரிட நட்சத்திரத்தைக் கட்டவிழ்க்க உன்னால் முடியுமோ? விடிவெள்ளிக் கூட்டங்களை அதினதின் காலத்தில் கொண்டுவருவாயோ? சிம்மராசி நட்சத்திரத்தையும் அதின் கூட்டத்தையும் வழிநடத்த உன்னால் முடியுமோ? வானமண்டலத்தை ஆளும் சட்டங்களை நீ அறிவாயோ? பூமியின்மேல் அவைகளின் ஆட்சியை நீ அமைப்பாயோ? “நீ மேகங்களுக்குச் சத்தமிட்டுச் சொல்லி வெள்ளம் உன்னை மூடும்படிச் செய்வாயோ? மின்னல்களின் தாக்குதல்களை அதின் வழியிலே அனுப்புவது நீயா? ‘இதோ பார், நாங்கள் இருக்கிறோம்’ என அவை உன்னிடம் அறிவிக்குமோ? இருதயத்தை ஞானத்தால் நிரப்பியவரும், மனதுக்கு விளங்கும் ஆற்றலைக் கொடுத்தவரும் யார்? யாருக்கு மேகங்களைக் கணக்கிடும் ஞானம்? வானத்தின் தண்ணீர்ச் சாடிகளை, தூசியானது மண்கட்டிகளாகி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்?

யோபு 38:24-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே? பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு, பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும், மனிதநடமாட்டமில்லாத வனாந்திரத்திலும் மழையைப் பொழியச்செய்து, வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்? உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்? தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே. அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ? அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ? நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ? துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ? வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ? அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ? ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ? நீ மின்னல்களை வரவழைத்து, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ? மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்? ஞானத்தினாலே மேகங்களை எண்ணுபவர் யார்? தூசியானது பரவலாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், வானத்தின் மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்?

யோபு 38:24-38 பரிசுத்த பைபிள் (TAERV)

யோபுவே, சூரியன் மேலெழுந்து வருமிடத்திற்கு, அது கிழக்குக் காற்றைப் பூமியெங்கும் வீசச் செய்யுமிடத்திற்கு நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா? யோபுவே, மிகுந்த மழைக்காக வானத்தில் பள்ளங்களைத் தோண்டியவர் யார்? இடிமுழக்கத்திற்குப் பாதையை உண்டாகியவர் யார்? யோபுவே, ஜனங்கள் வாழாத இடங்களிலும், மழையைப் பெய்யப்பண்ணுகிறவர் யார்? பாழான அந்நிலத்திற்கு மழை மிகுந்த தண்ணீரைக் கொடுக்கிறது, புல் முளைக்க ஆரம்பிக்கிறது. யோபுவே, மழைக்குத் தகப்பன் (தந்தை) உண்டா? பனித்துளிகள் எங்கிருந்து தோன்றுகின்றன? யோபுவே, பனிக்கட்டிக்கு தாய் உண்டா? வானிலிருந்து விழும் உறை பனியைப் பிறப்பிக்கிறவர் யார்? பாறையைப் போல் கடினமாக நீர் உறைகிறது. சமுத்திரத்தின் மேற்பரப்பும் உறைந்து போகிறது! “நட்சத்திர கூட்டங்களை நீ இணைக்கக் கூடுமா? மிருக சீரிஷத்தின் கட்டை நீ அவிழ்க்க முடியுமா? யோபுவே, நீ சரியான நேரங்களில் வின்மீன் கூட்டங்களை வெளிக்கொணர முடியுமா? (துருவச்சக்கர நட்சத்திரமும் அதைச் சார்ந்த நட்சத்திரங்களும்) கரடியை அதன் குட்டிகளோடு நீ வெளி நடத்த இயலுமா? யோபுவே, வானை ஆளுகிற விதிகளை நீ அறிவாயா? பூமியை அவை ஆளும்படிச் செய்ய உன்னால் முடியுமா? “யோபுவே, நீ மேகங்களை உரக்கக் கூப்பிட்டு உன்னை மழையில் மூடும்படி கட்டளையிட முடியுமா? மின்னல்களுக்கு நீ கட்டளை பிறப்பிக்கக் கூடுமா? அவை உன்னிடம் வந்து, ‘நாங்கள் இங்கு இருக்கிறோம், ஐயா, உனக்கு என்ன வேண்டும்’ எனக் கூறுமா? அவை எங்கெங்குப் போகவேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அங்கெல்லாம் அவை செல்லுமா? “யோபுவே, யார் ஜனங்களை ஞானிகளாக்குகிறார்? அவர்களுக்குள்ளே ஆழமாக ஞானத்தை வைப்பவன் யார்? யோபுவே, மேகங்களை எண்ணுமளவிற்கும் அவற்றின் மழையைப் பொழியத் தூண்டும்படியும் ஞானம் படைத்தவன் யார்? அதனால் துகள்கள் சேறாக மாறி, அழுக்குகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்கின்றன.

யோபு 38:24-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே? பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி, பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி, வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்? உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்? ஜலம் கல்லுருவங்கொண்டு மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே. அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ? இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ? வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ? ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள் பரியந்தம் உயர்த்துவாயோ? நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்லும்படி செய்வாயோ? அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்? ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்? தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்?

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்