யோபு 26:7-14

யோபு 26:7-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை. அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார். அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும். அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும். அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார். தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று. இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.

யோபு 26:7-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவன் வெறுமையான வெளியில் வடதிசை வானங்களை விரிக்கிறார், அவர் பூமியை அந்தரத்திலே தொங்கவிடுகிறார். அவர் தண்ணீரைத் தம்முடைய மேகங்களில் சுற்றி வைக்கிறார், ஆனாலும் அவைகளின் பாரத்தால் மேகங்கள் கிழிந்து போவதில்லை. அவர் சிங்காசனத்தின் மேற்பரப்பின் மேலாகத் தமது மேகத்தை விரித்து, அதை மூடிவைக்கிறார். அவர் தண்ணீரின் மேற்பரப்பில் அடிவானத்தை ஒளிக்கும் இருளுக்கும் இடையிலுள்ள எல்லையாகக் குறிக்கிறார். வானத்தின் தூண்கள், அவருடைய கண்டனத்தால் திகைத்து நடுங்குகின்றன. அவர் தமது வல்லமையினால் கடலை அமர்த்துகிறார், தமது ஞானத்தினால் ராகாப் கடல் விலங்கைத் துண்டுகளாக வெட்டுகிறார். அவருடைய சுவாசத்தினால் ஆகாயங்கள் அழகாயின; அவருடைய கரம் நெளியும் பாம்பை ஊடுருவிக் குத்தியது. இவை அவருடைய செயல்களில் வெளிப்புற விளிம்பு மட்டுமே; அவரைப்பற்றி நாம் கேள்விப்பட்டது மிகக் கொஞ்சமே; அப்படியானால் அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை விளங்கிக்கொள்பவன் யார்?”

யோபு 26:7-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை. அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார். அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்; வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும். அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும். அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார். தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது. இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.

யோபு 26:7-14 பரிசுத்த பைபிள் (TAERV)

வெறுமையான இடத்தில் தேவன் வடக்கு வானத்தைப் பரப்பினார். வெற்றிடத்தின் மேல் தேவன் பூமியைத் தொங்கவிட்டார். தேவன் அடர்ந்த மேகங்களை தண்ணீரால் நிரப்புகிறார். மிகுந்த பாரம் மேகங்களை உடைத்துத் திறக்காதபடி தேவன் பார்க்கிறார். முழு நிலாவின் முகத்தை தேவன் மூடுகிறார். அவர் தமது மேகங்களை அதன் மீது விரித்து அதைப் போர்த்துகிறார். தேவன் ஒரு எல்லைக் கோடுபோன்ற வளையத்தை கடலில் வரைந்து ஒளியும், இருளும் சந்திக்கும்படிச் செய்தார். தேவன் பயமுறுத்தும்போது வானைத் தாங்கும் அஸ்திபாரங்கள் அச்சத்தால் நடுங்குகின்றன. தேவனுடைய வல்லமை கடலை அமைதிப்படுத்துகிறது. தேவனுடைய ஞானம் ராகாபின் உதவியாளர்களை அழித்தது. தேவனுடை மூச்சு வானங்களைத் தெளிவாக்கும். தப்பிச்செல்ல முயன்ற பாம்பை தேவனுடைய கை அழித்தது. தேவன் செய்கிற வியக்கத்தக்க காரியங்களில் இவை சிலவே. தேவனிடமிருந்து ஒரு சிறிய இரகசிய ஒலியையே நாம் கேட்கிறோம். தேவன் எத்தனை மேன்மையானவரும் வல்லமையுள்ளவரும் என்பதை ஒருவனும் உண்மையாகப் புரிந்துகொள்ள முடியாது” என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்