யோபு 2:3-7 - Compare All Versions

யோபு 2:3-7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

பின்பு யெகோவா சாத்தானிடம், “எனது அடியான் யோபுவைக் கவனித்தாயோ? பூமியில் அவனைப்போல் யாருமே இல்லை; அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனும், இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு நடக்கிற மனிதனுமாய் இருக்கிறான். காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை அவனுக்கெதிராகத் தூண்டின போதிலும், இன்னும் அவன் தனது உத்தமத்திலே நிலைத்திருக்கிறானே” என்றார். சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “தோலுக்குத் தோல், ஒருவன் தன் உயிருக்காகத் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் மனிதன் கொடுப்பான். ஆனாலும் நீர் உமது கரத்தை நீட்டி அவனுடைய சதையையும் எலும்புகளையும் தொடுவீரானால், அப்போது அவன் நிச்சயமாய் உம்மை உமது முகத்துக்கு நேரே சபிப்பான்” என்றான். அதற்கு யெகோவா சாத்தானிடம், “சரி, இப்பொழுது அவன் உன் கைகளில் இருக்கிறான்; ஆனாலும் நீ அவனுடைய உயிரை மாத்திரம் தொடாதே” என்றார். எனவே, சாத்தான் யெகோவாவின் சமுகத்தினின்று போய் யோபுவின் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைவரை வேதனைமிக்க கொப்புளங்களால் வாதித்தான்.

பகிர்
யோபு 2 TCV

யோபு 2:3-7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனிதனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை தூண்டினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாக நிற்கிறான் என்றார். சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் உயிருக்குப் பதிலாகத் தனக்கு இருந்த எல்லாவற்றையும், மனிதன் கொடுத்துவிடுவான். ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவனுடைய எலும்பையும் அவனுடைய உடலையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்பாக உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான். அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆனாலும் அவனுடைய உயிரை மாத்திரம் விட்டுவிடு என்றார். அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய முன்னிலையைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவனுடைய உச்சந்தலைவரை கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான்.

பகிர்
யோபு 2 IRVTAM

யோபு 2:3-7 TAERV (பரிசுத்த பைபிள்)

அப்போது கர்த்தர் சாத்தானை நோக்கி, “என் தாசனாகிய யோபுவைக் கண்டாயா? பூமியில் அவனைப் போன்றோர் எவருமில்லை. அவன் உண்மையுள்ளவனுமாயிருக்கிறான். அவன் தேவனுக்கு பயந்து தீயவற்றைவிட்டு விலகுகிறான். எக்காரணமுமின்றி அவனுக்குள்ளவை அனைத்தையும் அழிக்கும்படி நீ கேட்டும் கூட, அவன் இன்னும் உண்மையுள்ளவனாக இருக்கிறான்” என்றார். சாத்தான், “தோலுக்குத் தோல்! என்று பதில் சொன்னான். ஒருவன் தன் உயிரை காப்பதற்காக தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பான். அவனது உடம்பைத் துன்புறுத்தும்படி நீர் உமது கையை நீட்டு வீரானால், அப்போது உமது முகத்திற்கு நேராக அவன் உம்மை சபிப்பான்!” என்றான். அப்போது கர்த்தர் சாத்தானைப் பார்த்து, “அது சரி, யோபு உன் ஆற்றலுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறான். ஆனால் அவனைக் கொல்வதற்குமட்டும் உனக்கு அனுமதியில்லை” என்றார். பின்பு சாத்தான் கர்த்தரிடமிருந்து சென்று, யோபுவுக்கு வேதனைமிக்க புண்களைக் கொடுத்தான். அவனது பாதங்களின் அடிப்பகுதியிலிருந்து தலையின் உச்சிவரைக்கும் வேதனை தரும் அப்புண்கள் யோபுவின் உடலெங்கும் காணப்பட்டன.

பகிர்
யோபு 2 TAERV

யோபு 2:3-7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான். ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான். அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனைமாத்திரம் தப்பவிடு என்றார். அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.

பகிர்
யோபு 2 TAOVBSI