யோபு 14:1-17
யோபு 14:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“பெண்ணினால் பெற்றெடுக்கப்பட்ட மனிதன் சில நாட்களே வாழ்கிறான், அவையும் கஷ்டம் நிறைந்தவையே. அவன் ஒரு பூவைப்போல் பூத்து வாடிப்போகிறான்; அவன் நிழலைப்போல் நிலையற்று மறைந்துபோகிறான். அப்படிப்பட்டவனை நீர் கூர்ந்து கவனிப்பீரோ? அவனை நியாயந்தீர்ப்பதற்காக உமக்கு முன்பாகக் கொண்டுவருவீரோ? அசுத்தத்தில் இருந்து சுத்தத்தை உருவாக்க யாரால் முடியும்? யாராலுமே முடியாது! மனிதனுடைய நாட்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன; அவனுடைய மாதங்களையும் நீரே நிர்ணயித்திருக்கிறீர், அவன் கடக்கமுடியாத எல்லைகளைக் குறித்திருக்கிறீர். ஒரு கூலியாள் தன் அன்றாட வேலை முடிந்தது என்று நிம்மதியாய் இருக்கிறானே. அதுபோல் நீரும் மனிதன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும். “மரத்திற்குக்கூட ஒரு எதிர்பார்ப்பு உண்டு: அது வெட்டிப்போடப்பட்டாலும் மீண்டும் தழைக்கும்; அதின் புதிய தளிர்கள் தவறாது முளைக்கும். அதின் வேர் நிலத்தினடியில் பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், தண்ணீர் பட்டவுடனே அது துளிர்விட்டு ஒரு செடியைப்போல் கிளைவிட்டு வளரும். மனிதனோ இறந்தபின், தன் இறுதி மூச்சைவிட்டு இல்லாதொழிந்து போகிறான். கடல் தண்ணீர் வற்றி, வெள்ளம் வறண்டு கிடப்பதுபோலவும் மனிதன் படுத்துக்கிடக்கிறான், அவன் வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை; தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை. “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் மறைத்துவைத்து, நீர் எனக்கு ஒரு காலத்தைக் குறித்து, அதின்பின் என்னை நினைவுகூர்ந்திருந்தாலோ எனக்கு நன்றாயிருந்திருக்குமே! ஒரு மனிதன் இறந்துபோனால் திரும்பவும் அவன் வாழ்வானோ? ஆனாலும் என் கடின உழைப்பின் நாட்களிலெல்லாம் நான் எனது விடுதலைக்காகக் காத்திருப்பேன். அப்பொழுது நீர் கூப்பிடுவீர், நான் பதில் கொடுப்பேன், நீர் உமது கரங்களின் படைப்பாகிய என்மேல் வாஞ்சையாயிருப்பீர். நிச்சயமாக நீர் என் காலடிகளைக் கணக்கிடுவீர்; என் பாவத்தையோ கவனத்தில் கொள்ளமாட்டீர். எனது குற்றங்கள் பையில் இடப்பட்டு முத்திரையிடப்படும்; நீர் எனது பாவங்களை மூடி மறைப்பீர்.
யோபு 14:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“பெண்ணிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும் வருத்தம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்துமறைந்து போகிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான். ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்திற்கு என்னைக் கொண்டுபோவீரோ? அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறக்கவைப்பவன் உண்டோ? ஒருவனுமில்லை. அவனுடைய நாட்கள் இவ்வளவுதான் என்று குறிக்கப்பட்டிருப்பதால், அவனுடைய மாதங்களின் எண்ணிக்கை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகமுடியாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். அவன் ஒரு கூலிக்காரனைப்போல தன் நாளின் வேலை முடிந்தது என்று நிம்மதியடையும்வரை அவன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும். ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும். மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான், மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே? தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிக் காய்ந்துபோகிறதுபோல, மனிதன் படுத்துக்கிடக்கிறான், வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை, தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை. நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். மனிதன் இறந்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு பதில் சொல்லுவேன்; உமது கைகளின் செயல்களின்மேல் விருப்பம் வைப்பீராக. இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். என் மீறுதல் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒன்று சேர்த்தீர்.
யோபு 14:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)
யோபு, “நாமெல்லோரும் மனித ஜீவிகளே. நம் வாழ்க்கை குறுகியதும் தொல்லைகள் நிரம்பியதுமாகும். மனிதனின் வாழ்க்கை ஒரு மலரைப் போன்றது. அவன் விரைவாக வளருகிறான், பின்பு மடிந்துப் போகிறான். மனிதனின் வாழ்க்கை ஒரு நிழலைப் போன்றது. அது குறுகிய காலம் இருந்து, பின்பு மறைந்துப்போகும். அது உண்மையே, ஆனால் ஒரு மனிதனாகிய என்னை தேவன் நோக்கிப்பார்ப்பாரா? நீர் என்னோடு நியாய சபைக்கு வருவீரா? அங்கு நாம் இருவரும் நம் விவாதங்களை முன் வைப்போம். “ஆனால் அழுக்குப்படிந்த ஒரு பொருளுக்கும் தூய்மையான ஒரு பொருளுக்குமிடையே இருக்கும் ஒற்றுமை என்ன? ஒன்றுமில்லை! மனிதனின் வாழ்க்கை ஒரு எல்லை உடையது. தேவனே, ஒரு மனிதன் எத்தனைக் காலம் வாழ்கிறான் என்பதை நீர் முடிவு செய்கிறீர். ஒரு மனிதனுக்கு அந்த எல்லைகளை நீர் முடிவெடுக்கிறீர், எதுவும் அதை மாற்றமுடியாது. எனவே, தேவனே எங்களைக் கவனிப்பதை நிறுத்தும். எங்களைத் தனித்துவிடும். எங்கள் காலம் முடியும் வரைக்கும் எங்கள் கடின வாழ்க்கையை நாங்கள் வாழவிடும். “ஒரு மரத்திற்கும் நம்பிக்கை உண்டு. அது வெட்டப்பட்டால், மீண்டும் வளரக்கூடும். அது புது கிளைகளைப் பரப்பியபடி நிற்கும். அதன் வேர்கள் பலகாலம் மண்ணிற்குள் வளரும், அதன் அடிப்பகுதி புழுதியில் மடியும். ஆனால் தண்ணீரினால் அது மீண்டும் வளரும். புதுச்செடியைப்போன்று அதில் கிளைகள் தோன்றும். ஆனால் மனிதன் மரிக்கும்போது, அவன் அழிந்து போகிறான். மனிதன் மரிக்கும்போது, அவன் காணமற்போகிறான். நதிகள் வற்றிப்போகும்படியாகவும் கடல் தண்ணீர் முழுவதும் வற்றிப்போகும்படியாக தண்ணீர் இறைத்தாலும் மனிதன் மரித்தவனாகவேகிடப்பான். ஒருவன் மரிக்கும்போது அவன் படுத்திருக்கிறான், மீண்டும் எழுகிறதில்லை. அவர்கள் எழும்முன்னே வானங்கள் எல்லாம் மறைந்துபோகும். ஜனங்கள் அந்த உறக்கத்திலிருந்து எழுவதேயில்லை. “நீர் என் கல்லறையில் என்னை ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன். நீர் உமது கோபம் ஆறும்வரை என்னை அங்கு ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன். பின்பு என்னை நினைவுகூரும் காலத்தை நீர் தேர்ந்தெடுக்கலாம். ஒருவன் இறந்தால், அவன் மீண்டும் வாழ்வானா? நான் விடுதலையாகும்வரை எத்தனை காலமாயினும் காத்திருந்தேயாக வேண்டும்! தேவனே, நீர் என்னைக் கூப்பிடுவீர், நான் உமக்குப் பதில் தருவேன், நீர் என்னை சிருஷ்டித்தீர், நான் உமக்கு முக்கியமானவன். நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர். ஆனால், நீர் என் பாவங்களை நினைவுக்கூர்வதில்லை. நீர் என் பாவங்களை ஒரு பையில் கட்டி வைப்பீர். அதை முத்திரையிடும், அதை வீசியெறிந்துபோடும்!
யோபு 14:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான். ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ? அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை. அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும். ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும். மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே? தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறதுபோல, மனுஷன் படுத்துக்கிடக்கிறான், வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை. நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக. இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்.