யோவான் 8:39-47

யோவான் 8:39-47 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்கு அவர்கள், “ஆபிரகாமே எங்கள் தந்தை” என்றார்கள். இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளானால் ஆபிரகாம் செய்தவற்றையே நீங்களும் செய்வீர்கள். ஆனால் நீங்களோ, இறைவனிடம் கேட்டறிந்த சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனான என்னைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ஆபிரகாம் இப்படியான காரியங்களைச் செய்யவில்லையே. நீங்கள் உங்கள் சொந்தத் தகப்பன் செய்ததையே செய்கிறீர்கள்” என்றார். அதற்கு அவர்கள் அவரிடம், “நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை. இறைவன் ஒருவரே எங்களுக்கும் பிதா” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவன் உங்கள் பிதாவாக இருந்தால், நீங்கள் என்னிலும் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் இப்பொழுது இங்கே இருக்கின்ற நான் இறைவனிடமிருந்தே வந்தேன். நான் எனது சுயவிருப்பத்தின்படி வரவில்லை; அவரே என்னை அனுப்பினார். நான் சொல்வது ஏன் உங்களுக்குத் தெளிவாய் இல்லை? நான் சொல்வதைக் கேட்க உங்களுக்கு மனதில்லாமல் இருக்கிறதினால்தானே. நீங்கள் உங்கள் தகப்பனான சாத்தானுக்கு உரியவர்கள். உங்கள் தகப்பனின் ஆசைகளைச் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள். அவன் தொடக்கத்திலிருந்தே கொலைகாரனாய் இருக்கிறான். அவனிடம் சத்தியமில்லை. அதனால் அவன் சத்தியத்தில் நிலைத்திருப்பதில்லை. அவன் பொய் பேசும்போது தன் சொந்த மொழியையே பேசுகிறான். ஏனெனில் அவன் ஒரு பொய்யன், பொய்களின் தகப்பன். இருந்தும் நானோ உங்களுக்கு சத்தியத்தை சொல்கிறபடியால், நீங்கள் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள். நான் பாவம் செய்தேன் என்று என்னைக் குற்றம் சாட்டி நிரூபிக்க உங்களில் எவனால் முடியும்? நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொல்லியும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்? யார் இறைவனுக்குரியவராய் இருக்கிறவர்கள், அவன் இறைவன் சொல்லும் வார்த்தையைக் கேட்கிறான். நீங்களோ இறைவனுக்குரியவர்கள் அல்லாதபடியினாலே, இறைவனுடைய வார்த்தையைக் கேளாமல் இருக்கிறீர்கள்” என்றார்.

யோவான் 8:39-47 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்களுடைய பிதா என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாக இருந்தால் ஆபிரகாமின் செயல்களைச் செய்வீர்களே. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. நீங்கள் உங்களுடைய பிதாவின் செயல்களைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை; ஒரே பிதா எங்களுக்கு இருக்கிறார், அவர் தேவன் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தேவன் உங்களுடைய பிதாவாக இருந்தால் என்னிடத்தில் அன்பாக இருப்பீர்கள். ஏனென்றால், நான் தேவனிடத்தில் இருந்து வந்திருக்கிறேன்; நான் நானாக வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாமல் இருக்கிறதினால் அல்லவா? நீங்கள் உங்களுடைய தகப்பனாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்களுடைய தகப்பனின் ஆசைகளின்படி செய்ய விருப்பமாக இருக்கிறீர்கள்; அவன் ஆரம்ப முதற்கொண்டு மனித கொலைபாதகனாக இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாததினால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் தகப்பனுமாக இருக்கிறதினால் அவன் பொய் பேசும்போது தன்னுடைய சுபாவத்தின்படி அப்படிப் பேசுகிறான். நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தமுடியும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருந்தும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கவில்லை. தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாகாததினால் செவிகொடுக்காமல் இருக்கிறீர்கள் என்றார்.

யோவான் 8:39-47 பரிசுத்த பைபிள் (TAERV)

“எங்கள் பிதா ஆபிரகாம்தான்” என்றனர் யூதர்கள். இயேசு அவர்களுக்கு விடையாக “நீங்கள் உண்மையிலேயே ஆபிரகாமின் பிள்ளைகள் என்றால் அவர் செய்தவற்றையே நீங்களும் செய்ய வேண்டும். நான் தேவனிடமிருந்து கேட்ட உண்மையை உங்களுக்குச் சொல்லுகிற மனிதன். ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இதுபோல் எதுவும் செய்யவில்லை. ஆகையால் நீங்கள் உங்கள் சொந்தப் பிதா செய்ததையே செய்கிறீர்கள்” என்றார். ஆனால் யூதர்கள், “எங்கள் பிதா யாரென்று தெரிந்துகொள்ள இயலாத குழந்தைகள் அல்ல நாங்கள். தேவனே எங்கள் பிதா. எங்களுக்குரிய ஒரே பிதாவும் அவரே” என்றனர். இயேசு அவர்களிடம், “தேவன்தான் உங்களது உண்மையான பிதா என்றால் நீங்கள் என்மீது அன்பு செலுத்தியிருப்பீர்கள். நான் தேவனிடமிருந்து வந்தேன். இப்பொழுது இங்கே இருக்கிறேன். நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. தேவன் என்னை அனுப்பினார். நான் சொல்லுகிறவற்றையெல்லாம் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் என் உபதேசத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிசாசே உங்கள் பிதாவாயிருக்கிறான். நீங்கள் அவனுக்கு உரியவர்கள். அவனுக்கு விருப்பமானவற்றையே நீங்கள் செய்யவிரும்புகிறீர்கள். தொடக்கம் முதலே பிசாசானவன் கொலைகாரனாக இருக்கிறான். அவன் உண்மைக்கு எதிரானவன். அவனிடம் உண்மை இல்லை. அவன் அவனால் சொல்லப்படுகிற பொய்யைப் போன்றவன். அவன் ஒரு பொய்யன். அவன் பொய்களின் பிதா. “நான் உண்மையைப் பேசுகிறேன். அதனால்தான் நீங்கள் என்னை நம்புவதில்லை. உங்களில் எவராவது ஒருவர் நான் பாவம் செய்தவன் என்று நிரூபிக்க இயலுமா? நான் சொல்வது உண்மையாக இருக்கும்போது என்னை ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள்? தேவனைச் சேர்ந்த எவனும் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறான். ஆனால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் நீங்கள் தேவனைச் சார்ந்தவர்கள் இல்லை” என்றார்.

யோவான் 8:39-47 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா? நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்