யோவான் 8:1-11

யோவான் 8:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசுவோ ஒலிவமலைக்குச் சென்றார். அதிகாலையிலே அவர் மீண்டும் ஆலய முற்றத்திற்கு வந்தார். மக்கள் எல்லோரும் அவரைச் சுற்றிக் கூடிவந்தனர். இயேசு அவர்களுக்கு போதிப்பதற்காக உட்கார்ந்தார். அப்பொழுது மோசேயின் சட்ட ஆசிரியரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அங்கு கொண்டுவந்தார்கள். அவர்கள் அவளை அங்கிருந்த எல்லோருக்கும் நடுவாக நிறுத்தினார்கள். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசேயின் சட்டத்தில் மோசே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நீர் என்ன சொல்கிறீர்?” என்றார்கள். இயேசுவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரும்படி, ஒரு சூழ்ச்சியாக அவர்கள் இந்தக் கேள்வியை கேட்டார்கள். ஆனால் இயேசுவோ, குனிந்து தமது விரலினால் தரையிலே எழுதத் தொடங்கினார். அவர்கள் தொடர்ந்து அவரைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததினால், இயேசு நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “உங்களில் யாராவது பாவமில்லாதவன் இருந்தால், அவன் முதலாவதாக இவள்மேல் கல்லெறியட்டும்” என்றார். இயேசு மீண்டும் குனிந்து தரையில் எழுதினார். அப்பொழுது, இதைக் கேட்டவர்களில், முதியோர் தொடங்கி சிறியோர் வரை ஒவ்வொருவராகப் போகத் தொடங்கினார்கள். இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண்ணும் அங்கே நடுவே நின்றுகொண்டிருந்தாள். இயேசு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “மகளே, அவர்கள் எங்கே? ஒருவனும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கவில்லையோ?” என்று கேட்டார். அதற்கு அவள், “இல்லை ஆண்டவரே” என்றாள். அப்பொழுது இயேசு அவளிடம், “நானும் உன்னை குற்றவாளியாகத் தீர்க்கமாட்டேன். இப்பொழுது நீ போகலாம், இனிப் பாவம் செய்யாதே” என்றார்.

யோவான் 8:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு ஒலிவமலைக்குப் போனார். மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார். அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேதபண்டிதர்களும், பரிசேயர்களும் அவரிடத்தில் அழைத்துவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளைக் கொடுத்திருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாக்குவதற்கு, அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். அவர்கள் தொடர்ந்து அவரைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மீது முதலாவது கல்லெறியட்டும் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக்கேட்டு, தங்களுடைய மனச்சாட்சியில் உணர்த்தப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராக போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த பெண் நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த பெண்ணைத்தவிர வேறொருவரையும் காணாமல்: பெண்ணே, உன்மேல் குற்றஞ்சுமத்தினவர்கள் எங்கே? ஒருவன்கூட உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நானும் உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவம் செய்யாதே என்றார்.

யோவான் 8:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவோ ஒலிவ மலைக்குப் போனார். மறுநாள் அதிகாலையில் அவர் திரும்பவும் தேவாலயத்துக்குப் போனார். அனைவரும் இயேசுவிடம் வந்தனர். இயேசு உட்கார்ந்து மக்களுக்கு உபதேசித்தார். வேதபாரகரும், பரிசேயரும் ஒரு பெண்ணை அவரிடம் கொண்டுவந்தனர். அவள் விபசாரம் செய்ததற்காகப் பிடிக்கப்பட்டவள். அவளை மக்களுக்கு முன்னால் நிற்கும்படி யூதர்கள் வற்புறுத்தினர். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் ஒருவனிடம் கள்ளத்தனமாக உறவுகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டாள். மோசேயின் சட்டப்படி இவ்வாறு பாவம் செய்கிற ஒவ்வொரு பெண்ணையும் கல் எறிந்து கொல்லவேண்டும். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீர் சொல்கிறீர்?” என்று கேட்டனர். யூதர்கள் இந்தக் கேள்வியை இயேசுவைச் சோதிப்பதற்காகக் கேட்டனர். இயேசுவின் மீது ஏதாவது குற்றம் சுமத்தவே அவர்கள் விரும்பினர். ஆனால் இயேசுவோ குனிந்து தரையில் தன் விரலால் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்றார். பிறகு இயேசு மறுபடியும் கீழே குனிந்து தரையில் ஏதோ எழுத ஆரம்பித்தார். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் ஒவ்வொருவராக விலகிப் போயினர். முதலில் முதியவர்கள் விலகினர்; பிறகு மற்றவர்கள் விலகினர். அந்தப் பெண்ணோடு இயேசு மட்டும் தனியாக விடப்பட்டார். அவள் அவருக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தாள். இயேசு அவளை ஏறிட்டுப்பார்த்து, “பெண்ணே, எல்லோரும் போய்விட்டார்கள். ஒருவனும் உன்னைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவள், “ஆண்டவரே, எவரும் என்னைத் தண்டனைக்குட்படுத்தித் தீர்ப்பளிக்கவில்லை” என்றாள். பிறகு இயேசு, “நானும் உனக்குத் தீர்ப்பளிக்கவில்லை. இப்பொழுது நீ போகலாம், ஆனால் மறுபடியும் பாவம் செய்யாதே” என்றார்.

யோவான் 8:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு ஒலிவமலைக்குப் போனார். மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையும் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்