யோவான் 4:7-14

யோவான் 4:7-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத் தா என்றார். யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும். இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.

யோவான் 4:7-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவ்வேளையில் சமாரிய பெண் ஒருத்தி தண்ணீர் மொள்ளுவதற்கு வந்தாள். இயேசு அவளிடம், “நீ எனக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் தருவாயா?” என்று கேட்டார். அப்பொழுது அவருடைய சீடர்கள் உணவு வாங்கும்படி பட்டணத்திற்கு போயிருந்தார்கள். அந்தச் சமாரியப் பெண் இயேசுவிடம், “நீர் ஒரு யூதன், நானோ ஒரு சமாரியப் பெண். என்னிடம் நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்?” என்று கேட்டாள். ஏனெனில் யூதர் சமாரியருடன் பழகுவதில்லை. இயேசு அவளுக்குப் பதிலாக, “நீ இறைவனுடைய வரத்தையும், உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கிற நான் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே என்னிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய். நான் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பேன்” என்றார். அதற்கு அந்தப் பெண், “ஐயா, தண்ணீர் மொள்ளுவதற்கு உம்மிடம் ஒன்றும் இல்லை; கிணறும் ஆழமாய் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஜீவத்தண்ணீர் கிடைக்கும்? நம்முடையத் தந்தை யாக்கோபு எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தாரே; இந்த கிணற்றிலிருந்து அவரும் அவருடைய பிள்ளைகளும் தண்ணீர் குடித்து, தங்கள் ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தார்களே. எங்கள் தந்தை யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ?” என்று கேட்டாள். இயேசு அதற்குப் பதிலாக, “இந்தத் தண்ணீரைக் குடிக்கிற ஒவ்வொருவரும் மீண்டும் தாகமடைவார்கள். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவர்களோ, ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். உண்மையாகவே, நான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவர்களுக்குள்ளே ஒரு நீரூற்றாக நித்திய ஜீவனாய் பொங்கி வழியும்” என்றார்.

யோவான் 4:7-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்கு ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள். அப்பொழுது சமாரியா தேசத்தாளாகிய ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். இயேசு அவளைப் பார்த்து: தாகத்திற்குத் தா என்றார். யூதர்கள் சமாரியருடனே எந்தத் தொடர்பும் வைக்காதவர்களானபடியால், சமாரிய பெண் அவரைப் பார்த்து: நீர் யூதனாக இருக்க, சமாரிய பெண்ணாகிய என்னிடத்தில், தாகத்திற்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். அதற்கு அந்த பெண்: ஆண்டவரே, எடுத்துக்கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாக இருக்கிறதே, பின்னே எங்கே இருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கும். இந்தக் கிணற்றை எங்களுக்குக் கொடுத்த நம்முடைய முற்பிதாவாகிய யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரும் அவருடைய பிள்ளைகளும், அவருடைய மிருகஜீவன்களும் இதிலே குடித்தது என்றாள். இயேசு அவளுக்கு மறுமொழியாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார்.

யோவான் 4:7-14 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு சமாரியப் பெண் தண்ணீரெடுப்பதற்காக அக்கிணற்றுக்கு வந்தாள். இயேசு அவளிடம், “தயவுசெய்து நான் குடிப்பதற்குத் தண்ணீர் கொடு” என்று கேட்டார். (இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது இது நடந்தது.) “குடிப்பதற்கு நீங்கள் என்னிடம் கேட்பதை எண்ணி எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ஒரு யூதர். நானோ சமாரியப் பெண்” என்று அவள் பதிலுரைத்தாள். (ஏனென்றால் யூதர்கள் சமாரியர்களோடு எப்பொழுதும் நட்புடன் இருப்பதில்லை.) “தேவன் கொடுப்பவற்றைப்பற்றி நீ அறியவில்லை. குடிக்கத் தண்ணீர் கேட்கிற நான் யாரென்று உனக்குத் தெரியாது. இவற்றைப்பற்றி நீ அறிந்தால் நீ என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். ஜீவத் தண்ணீரை நான் உனக்குக் கொடுத்திருப்பேன்” என்றார் இயேசு. “ஐயா, ஜீவத் தண்ணீரை நீங்கள் எங்கிருந்து பெறுவீர்கள்? இந்தக் கிணறோ ஆழமாக இருக்கிறது. இதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கும் உங்களிடம் எதுவும் இல்லையே! நீங்கள் எமது மூதாதையரான யாக்கோபை விடப் பெரியவரா? அவர்தான் எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தார். அவரும் இந்தக் கிணற்றிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார். அத்துடன் அவரது பிள்ளைகளும் மிருகங்களும் இதிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார்கள்” என்று அந்தப் பெண் சொன்னாள். “இந்த தண்ணீரைக் குடிக்கிறவர்களுக்கு மீண்டும் தாகம் எடுக்கும். ஆனால் நான் கொடுக்கிற தண்ணீரைக் குடிப்பவர்களுக்கோ மறுபடியும் தாகம் எடுப்பதில்லை. என்னால் கொடுக்கப்படுகிற தண்ணீர், அதைக் குடிப்பவனுக்குள் நீரூற்றாகப் பெருக்கெடுக்கும். அது அவனுக்கு எக்காலத்துக்கும் உரிய வாழ்க்கையைத் தரும்” என்று இயேசு பதிலுரைத்தார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்