யோவான் 4:31-38
யோவான் 4:31-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இதற்கிடையில் அவருடைய சீடர்கள், “போதகரே, சாப்பிடுங்கள்” என்று அவரைக் கேட்டுக்கொண்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத உணவு எனக்கு இருக்கிறது” என்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள், “யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்து, அவருடைய வேலையை முடிப்பதே எனது உணவு. ‘இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. அதற்குப் பின்பு அறுவடை வந்துவிடும்’ என்று நீங்கள் சொல்வதில்லையா? நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் உங்கள் கண்களைத் திறந்து வயல்களை நோக்கிப்பாருங்கள்! அவை விளைந்து அறுவடைக்கு ஆயத்தமாக இருக்கின்றன. இப்பொழுதும்கூட அறுவடை செய்பவன் கூலியைப் பெறுகிறான். இப்பொழுதே அவன் நித்திய ஜீவனுக்கான விளைச்சலை அறுவடை செய்கிறான்; இதனால் விதைக்கிறவனும் அறுவடை செய்கிறவனும் ஒன்றாய் மகிழ்ச்சியடைகிறார்கள். இவ்விதம், ‘ஒருவன் விதைக்கிறான், இன்னொருவன் அறுவடை செய்கிறான்’ என்ற பழமொழியும் உண்மையாகிறது. நீங்கள் வேலைசெய்து விளைவிக்காததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் கடுமையாய் உழைத்தார்கள். அவர்களுடைய உழைப்பின் பலனை நீங்கள் அறுவடை செய்தீர்கள்” என்றார்.
யோவான் 4:31-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இப்படி நடக்கும்போது சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். அதற்கு அவர்: நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத ஒரு உணவு எனக்கு இருக்கிறது என்றார். அப்பொழுது சீடர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்கு உணவுகொண்டுவந்திருப்பானோ என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படிசெய்து அவருடைய செயல்களை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று உங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற உண்மையான வழக்கச்சொல் இதினாலே வெளிப்படுகிறது. நீங்கள் பாடுபட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பாடுபட்டார்கள், அவர்கள் பாடுபட்டத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
யோவான் 4:31-38 பரிசுத்த பைபிள் (TAERV)
அந்தப் பெண் நகரத்திற்குள் இருந்தபோது இயேசுவின் சீஷர்கள், அவரை உண்ணும்படி வேண்டிக்கொண்டனர். ஆனால் இயேசுவோ, “என்னிடம் உண்பதற்கு உணவுண்டு. அதனைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றார். “ஏற்கெனவே வேறு யாராவது அவருக்கு உணவு கொண்டுவந்திருப்பார்கள்” என்று சீஷர் கள் தமக்குள் பேசிக்கொண்டனர். “எனது உணவு என்னை அனுப்பிய தேவன் செய்யச் சொன்னதைச் செய்வதுதான்; எனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடிப்பதுதான் எனது உணவாக இருக்கிறது. நீங்கள் பயிரை நடும்போது ‘அறுவடைக்காக இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும்’ என்று சொல்வீர்களல்லாவா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கண்களைத் திறவுங்கள், மக்களைப் பாருங்கள். அவர்கள் அறுவடைக்காகத் தயாராக இருக்கிற வயலைப்போன்று இருக்கிறார்கள். இப்பொழுதுகூட அறுவடை செய்கிறவன் சம்பளம் பெறுகிறான். அவன் தனது நித்திய வாழ்வுக்கு அனுகூலமாக அறுவடை செய்துகொள்கிறவன். ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனோடு அறுவடை செய்கிறவனும் மகிழ்ச்சியடைய இயலும். விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் இன்னொருவன் என்கிற பழமொழி இதனால் உண்மையாகிறது. நீங்கள் பாடுபட்டு விதைக்காத நிலத்தை அறுவடை செய்யுமாறு உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் பாடுபட்டார்கள். நீங்கள் அவர்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கிறீர்கள்” என்று இயேசு கூறினார்.
யோவான் 4:31-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார். அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது. நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.