யோவான் 3:22-35

யோவான் 3:22-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதற்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயாவின் நாட்டுப் புறத்துக்குச் சென்றார்கள். அங்கே இயேசு சிறிதுகாலம் அவர்களுடன் தங்கி, மக்களுக்குத் திருமுழுக்கு கொடுத்து வந்தார். யோவானும் சாலிமுக்கு அருகே இருந்த அயினோன் என்ற இடத்தில் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். ஏனெனில் அங்கே தண்ணீர் அதிகமாய் இருந்ததுடன், திருமுழுக்கு பெறும்படி மக்களும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள். இது யோவான் சிறையில் போடப்படும் முன்னே நடைபெற்றது. யோவானுடைய சீடர்களுக்கும் சில யூதர்களுக்கும் இடையில் சடங்காச்சார சுத்திகரிப்பைக் குறித்து விவாதம் ஏற்பட்டது. யோவானுடைய சீடர்கள் யோவானிடத்தில் வந்து அவனிடம், “போதகரே, யோர்தானுக்கு அக்கரையில் உம்மோடிருந்த ஒருவரைக் குறித்து நீர் சாட்சி கொடுத்தீரே. அவரும் திருமுழுக்கு கொடுக்கிறார். எல்லோரும் அவரிடத்தில் போய்க்கொண்டிருக்கிறார்களே” என்றார்கள். யோவான் அதற்குப் பதிலாக, “ஒருவர், பரலோகத்திலிருந்து கொடுக்கப்படுவதை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். ‘நான் கிறிஸ்து அல்ல, அவருக்கு முன்பாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் சொன்னதற்கு நீங்களே எனக்குச் சாட்சிகள். மணவாளனுக்கே மணப்பெண் உரியவள். மணவாளனின் தோழனோ, மணவாளனின் அருகே நின்று அவன் சொல்வதைக் கேட்கிறான். அவன் மணவாளனுடைய குரலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். அந்த மகிழ்ச்சியே எனக்குரியது. அது இப்போது நிறைவடைந்தது. அவரோ மிகுதிப்பட வேண்டும்; நானோ குறைந்துபோக வேண்டும். “மேலே இருந்து வருகிறவர் எல்லோருக்கும் மேலானவராகவே இருக்கிறார்; கீழே பூமியிலிருந்து வருகிறவனோ பூமிக்கே சொந்தமாயிருக்கிறான். அவன் பூமிக்குரிய காரியங்களைப் பேசுகிறான். பரலோகத்திலிருந்து வருகிறவரோ எல்லோரிலும் மேன்மையானவராகவே இருக்கிறார். அவர் தாம் கண்டதையும் கேட்டதையும் குறித்து சாட்சி கூறுகிறார். ஆனால் அவருடைய சாட்சியையோ ஒருவரும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. அவருடைய சாட்சியை ஏற்றுக் கொள்கிறவர்களோ, இறைவன் உண்மை உள்ளவர் என்று உறுதிப்படுத்துகிறார்கள். இறைவனால் அனுப்பப்பட்டவரோ இறைவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார். ஏனெனில், இறைவன் அவருக்கு ஆவியானவரை அளவின்றிக் கொடுத்திருக்கிறார். பிதா மகனை நேசிக்கிறார். அவர் எல்லாவற்றையும் மகனுடைய கைகளிலே ஒப்படைத்திருக்கிறார்.

யோவான் 3:22-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார். சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை. அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது. அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான். நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர். தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை. அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான். தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

யோவான் 3:22-35 பரிசுத்த பைபிள் (TAERV)

அதற்குப் பிறகு, இயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள். அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார். யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள். (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது). யோவானின் சீஷர்களுள் சிலர், யூதரோடு விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மத சம்பந்தமான முறையைப்பற்றியே விவாதித்தனர். ஆகையால் யோவானிடம் அவர்கள் வந்தனர். “போதகரே! யோர்தான் நதிக்கு அக்கரையில் ஒருவர் உம்மோடு இருந்தாரே, நினைவிருக்கிறதா? நீங்கள் அந்த மனிதரைப்பற்றியும் மக்களிடம் சொல்லியிருக்கிறீர்கள். அவர் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் ஏராளமான மக்கள் சென்றுகொண்டிருக்கின்றனர்” என்று கூறினர். “தேவன் எதை ஒருவனுக்குக் கொடுக்கிறாரோ, அதையே ஒரு மனிதன் பெற்றுக்கொள்ள முடியும். ‘நான் கிறிஸ்து அல்ல’ என்று நானே கூறியதையும் நீங்கள் சோதித்து அறிந்திருக்கிறீர்கள். ‘அவருக்கான பாதையைச் செம்மை செய்வதற்காகவே தேவன் என்னை அனுப்பியிருக்கிறார்.’ மணமகனுக்கே மணமகள் உரியவளாகிறாள். மணமகனுக்கு உதவி செய்கிற மாப்பிள்ளையின் தோழன், மணமகனின் வரவைக் கவனித்து எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறான். மணமகனின் சத்தத்தைக் கேட்டு அவன் மிகவும் மகிழ்கிறான். நானும் அதே மகிழ்ச்சியை அடைகிறேன். இதுவே எனது மகிழ்ச்சிகரமான நேரம். இயேசு மேலும் பெருமை பெறவேண்டும். எனது முக்கியத்துவம் குறைந்துவிடவேண்டும். “பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசு மற்ற எல்லாரையும்விடப் பெரியவர். பூமியில் இருந்து வந்தவன் பூமியைச் சார்ந்தவன். அவன் பூமியில் உள்ளவற்றைப்பற்றி மட்டுமே பேசுவான். ஆனால் பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசுவோ மற்ற எல்லாரையும்விட உயர்ந்தவர். அவர் எதைக் கண்டாரோ, கேட்டாரோ அதையே கூறுகிறார். ஆனால் எவரும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர் சொல்வதை எவனொருவன் ஒப்புக்கொள்கிறானோ அவன், தேவன் உண்மையாய் இருக்கிறார் என்று நிரூபிக்கிறான். தேவன் இயேசுவை அனுப்பினார். அவர் தேவன் சொன்னதைச் சொல்கிறார். தேவன் அவருக்கு ஆவியை நிரம்பக் கொடுத்திருக்கிறார். பிதாவானவர் தன் குமாரனை நேசிக்கிறார். அவர் தன் குமாரனுக்கு அனைத்தின் மேலும் அதிகாரம் கொடுத்திருக்கிறார்.

யோவான் 3:22-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார். சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை. அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று. அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்