யோவான் 12:12-18

யோவான் 12:12-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மறுநாள் பண்டிகைக்காக வந்திருந்த பெருந்திரளான மக்கள் இயேசு எருசலேமுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டார்கள். அவர்கள் குருத்தோலைகளை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். அவர்கள், “ஓசன்னா!” “கர்த்தருடைய பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” “இஸ்ரயேலின் அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” என்று ஆர்ப்பரித்தார்கள். இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் உட்கார்ந்தார். ஏனெனில் அவரைக்குறித்து எழுதப்பட்டிருக்கிறதாவது: “சீயோன் மகளே, பயப்படாதே; இதோ உன்னுடைய அரசர் கழுதைக் குட்டியின்மேல் வருகிறார்.” ஆரம்பத்திலே அவருடைய சீடர்கள் இதையெல்லாம் விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு மகிமைப்பட்ட பின்பே, இவை எல்லாம் அவரைக்குறித்து இறைவாக்கினரால் எழுதப்பட்டிருந்தன என்றும், இவற்றை மக்கள் அவருக்கு அப்படியே செய்தார்கள் என்றும் உணர்ந்துகொண்டார்கள். இயேசு லாசருவைக் கல்லறையிலிருந்து கூப்பிட்டு, அவனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினபோது, அவருடன் இருந்த மக்கள் கூட்டம் தொடர்ந்து இந்தச் செய்தியைப் பரப்பினார்கள். அநேக மக்கள் இயேசு இப்படிப்பட்ட ஒரு அடையாளத்தைச் செய்தார் என்று கேள்விப்பட்டதினால், அவரைச் சந்திப்பதற்குச் சென்றார்கள்.

யோவான் 12:12-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அடுத்தநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று பண்டிகைக்கு வந்த திரளான மக்கள் கேள்விப்பட்டு, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டு போகும்படி புறப்பட்டு: “ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா போற்றப்படத்தக்கவர்” என்று ஆர்ப்பரித்தார்கள். அல்லாமலும்: “சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக் குட்டியின்மேல் ஏறிவருகிறார்” என்று எழுதியிருக்கிறபடி, இயேசு ஒரு கழுதைக்குட்டியைப் பார்த்து அதின்மேல் ஏறிப்போனார். இவைகளை அவருடைய சீடர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்தபின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள். அன்றியும் அவருடன் இருந்த மக்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடு எழுப்பினார் என்று சாட்சிகொடுத்தார்கள். அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று மக்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.

யோவான் 12:12-18 பரிசுத்த பைபிள் (TAERV)

மறுநாள் இயேசு வருவதாக எருசலேமிலுள்ள பெருங்கூட்ட மக்கள் கேள்விப்பட்டனர். இம்மக்கள் பஸ்கா பண்டிகைக்காக வந்தவர்கள். அந்த மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள்: “‘அவரைப் புகழ்வோம்! வருக!’ ‘தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவரே கர்த்தரின் பேரால் வருகிறவரே!’ “தேவன் இஸ்ரவேலின் ராஜாவை ஆசீர்வதிப்பாராக!” என்று முழங்கினர். இயேசு ஒரு கழுதையைக் கண்டு அதன் மேல் ஏறிக்கொண்டார். “சீயோன் நகரமே அஞ்சவேண்டாம். பார். உன் ராஜா வந்துகொண்டிருக்கிறார். அவர் இளங்கழுதைமேல் சவாரி செய்து வருகிறார்” என்றும் மக்கள் ஆரவாரம் செய்தனர். இயேசுவின் சீஷர்கள் இவற்றை முதலில் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இயேசு மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்கள் இவை ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறதே என்று உணர்ந்துகொண்டனர். அத்துடன் அவருக்காகத் தாங்கள் செய்த செய்கைகளையும் நினைவுகூர்ந்தனர். மரணத்திலிருந்து லாசருவை இயேசு எழுப்பி “கல்லறையை விட்டு வெளியே வா” என்று சொன்னபோது இயேசுவுடன் பலர் இருந்தனர். இப்பொழுது அவர்கள் மற்றவர்களிடம் இயேசு செய்தவற்றைப்பற்றிக் கூறினர். இயேசு இந்த அற்புதத்தைச் செய்ததைக் கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் இயேசுவை வரவேற்பதற்காகத் திரண்டனர்.

யோவான் 12:12-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக, இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார். இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள். அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள். அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டுபோனார்கள்.

யோவான் 12:12-18

யோவான் 12:12-18 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்