எரேமியா 9:3-9
எரேமியா 9:3-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“அவர்கள் பொய்களை எய்வதற்குத் தங்கள் நாவுகளை வில்லைப்போல் ஆயத்தமாக்குகிறார்கள். நாட்டில் அவர்கள் வெற்றியடைந்தது உண்மையினால் அல்ல. அவர்கள் ஒரு பாவத்திலிருந்து இன்னொரு பாவத்திற்குப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். என்னையோ அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். மேலும் யெகோவா, நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஒரு சகோதரனையும் நம்பவேண்டாம். ஏனென்றால் ஒவ்வொரு சகோதரனும் ஏமாற்றுக்காரனாய் இருக்கிறான். ஒவ்வொரு சிநேகிதனும் தூற்றித் திரிகிறவனாயிருக்கிறான். சிநேகிதன் சிநேகிதனை ஏமாற்றுகிறான். ஒருவனாவது உண்மை பேசுவதில்லை. அவர்கள் தங்கள் நாவுக்குப் பொய்பேசப் போதித்திருக்கிறார்கள். பாவம் செய்வதினால் தங்களைத் தாங்களே களைப்படையச் செய்கிறார்கள். எரேமியாவே, நீ ஏமாற்றத்தின் மத்தியில் வாழ்கிறாய். இவர்கள் தங்கள் ஏமாற்றும் தன்மையில் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். அதனால், சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “பாருங்கள்; நான் சுத்திகரித்துச் சோதிப்பேன். என் மக்களின் பாவத்திற்காக இதைவிட நான் வேறென்ன செய்யலாம்? அவர்களின் நாவு ஒரு கொல்லும் அம்பாயிருக்கிறது. அது வஞ்சனையாய்ப் பேசுகிறது. ஒவ்வொருவனும் தன்தன் வாயினால் அயலானுடன் சிநேகமாய்ப் பேசுகிறான். ஆனால் உள்ளத்திலோ அவனுக்குப் பொறியை வைத்திருக்கிறான். இவைகளுக்காக நான் அவர்களைத் தண்டிக்க வேண்டாமோ? அத்தகைய தேசத்தாரிடம் நான் எனக்காகப் பழிவாங்க வேண்டாமோ?” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 9:3-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்கள் பொய்யைப் பயன்படுத்தத்தக்க தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்தில் பலப்படுவது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு முன்னேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். நீங்கள் அவனவன் தன்தன் நண்பனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்த சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்த சகோதரனும் மோசம்செய்கிறான், எந்த சிநேகிதனும் தூற்றித்திரிகிறான். அவர்கள் உண்மையைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை திட்டுகிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமம் செய்ய உழைக்கிறார்கள். வழக்கமாக பொய் பேசுகிறவர்கள் நடுவில் குடியிருக்கிறாய்; பொய்யின்காரணமாக அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; என் மக்களாகிய மகளை வேறெந்தமுறையாக நடத்துவேன்? அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது பொய் பேசுகிறது; அவனவன் தன்தன் அருகிலுள்ளவனிடம் தன்தன் வாயினால் சமாதானமாகப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்தில் அவனைக் கொல்ல சதி செய்கிறான். இதற்காக அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட மக்களுக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 9:3-9 பரிசுத்த பைபிள் (TAERV)
“அந்த ஜனங்கள் தங்களது நாக்குகளை வில்லைப்போன்று பயன்படுத்துகின்றனர். அவர்களது வாய்களிலிருந்து பொய்கள் அம்புகளைப்போன்று பறக்கின்றன. இந்த நாட்டில் உண்மைகளல்ல பொய்கள் மிகப் பலமாக வளர்ந்திருக்கின்றன. ஜனங்கள் ஒரு பாவத்திலிருந்து இன்னொரு பாவத்திற்குப் போகிறார்கள். அவர்களுக்கு என்னைத் தெரியாது” கர்த்தர் இவற்றைச் சொல்கிறார். கர்த்தர், “உனது அண்டை வீட்டாரை கவனியுங்கள்! உனது சொந்தச் சகோதரர்களையும் நம்பாதீர்கள்! ஏனென்றால், ஒவ்வொரு சகோதரனும் ஏமாற்றுக்காரனாய் இருக்கிறான். ஒவ்வொரு அண்டைவீட்டானும், உனது முதுகுக்குப் பின்னால் பேசுகிறான். ஒவ்வொருவனும் தனது அண்டை வீட்டானுக்கு பொய்யனாக இருக்கிறான். எவனும் உண்மையைப் பேசுவதில்லை. யூதாவின் ஜனங்கள் தம் நாக்குகளுக்கு பொய்யையே கற்றுக் கொடுத்திருக்கின்றனர். சோர்ந்துபோகிற அளவுக்கு பாவம் செய்தார்கள். ஒரு கெட்டச் செயலை இன்னொன்று தொடர்கிறது. பொய்கள், பொய்களைத் தொடர்கின்றன. ஜனங்கள் என்னை அறிய மறுக்கின்றனர்” என்று கர்த்தர் கூறினார். எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “ஒரு வேலையாள், ஒரு உலோகத்தை அது சுத்தமாயிருக்கிறதா என்று சோதனை செய்வதற்காக நெருப்பிலே சூடுபடுத்துகிறான். அதுபோல நான் யூதா ஜனங்களை சோதனைச் செய்கிறேன். எனக்கு வேறுவழி தெரிந்திருக்கவில்லை. எனது ஜனங்கள் பாவம் செய்திருக்கிறார்கள். யூதா ஜனங்கள் அம்புகளைப் போன்ற கூர்மையான நாக்குகளை வைத்திருக்கிறார்கள். அவர்களது வாய்கள் பொய்யைப் பேசுகின்றன. ஒவ்வொரு நபரும் தனது அயலானிடம் சமாதானமாய் பேசுகிறான். ஆனால், அவன் இரகசியமாக தனது அயலானைத் தாக்குவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறான். யூதா ஜனங்களை நான் தண்டிக்க வேண்டும்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அந்த வகையான ஜனங்களை நான் தண்டிக்க வேண்டும் என்று நீ அறிவாய். அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.”
எரேமியா 9:3-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் அவனவன் தன்தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான். அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள். கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்? அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன்தன் அயலானோடே தன்தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான். இவைகளினிமித்தம் அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.