எரேமியா 9:10-24
எரேமியா 9:10-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நான் மலைகளுக்காகக் கதறி அழுவேன். காடுகளிலுள்ள மேய்ச்சலிடங்களுக்காகப் புலம்புவேன், அவை போக்கும் வரத்தும் இன்றி பாழாய்க் கிடக்கின்றன. மந்தைகளின் கதறுதல் கேட்கப்படுவதில்லை. ஆகாயத்துப் பறவைகளும் பறந்துவிட்டன. மிருகங்களும் ஓடிப்போய் விட்டனவே. யெகோவா சொல்கிறதாவது: “நான் எருசலேமை இடிபாடுகளின் குவியலாகவும், நரிகளின் தங்குமிடமாகவும் மாற்றுவேன். யூதாவின் பட்டணங்களை ஒருவனும் வசிக்க முடியாதவாறு பாழாக்குவேன்.” இதை விளங்கிக்கொள்ளத்தக்க ஞானமுள்ளவன் யார்? யாருக்கு யெகோவாவினால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது? யாரால் அதை விளக்கிச் சொல்லமுடியும்? ஏன் இந்த நாடு ஒருவரும் கடந்துசெல்ல முடியாதபடி, அழிக்கப்பட்டு பாலைவனத்தைப்போல் பாழாகிக் கிடக்கிறது. ஏனெனில், “நான் அவர்களுக்கு முன்பாக வைத்த என் சட்டத்தை அவர்கள் கைவிட்டிருக்கிறார்கள். அவர்கள் எனக்கு கீழ்ப்படியவோ அல்லது எனது சட்டத்தைப் பின்பற்றவோ இல்லை. அவர்கள் தங்கள் இருதயங்களின் பிடிவாதத்தின்படி நடந்து, தங்கள் முற்பிதாக்கள் போதித்தபடி பாகால்களைப் பின்பற்றினார்கள்” என்றார். ஆகையால் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “நான் இந்த மக்களைக் கசப்பான உணவை சாப்பிடவும், நஞ்சு கலந்த தண்ணீரைக் குடிக்கவும் பண்ணுவேன். அவர்களோ அவர்களுடைய முற்பிதாக்களோ அறியாத தேசத்தாரின் மத்தியில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முழுவதும் அழித்துத் தீருமட்டும் அவர்களை வாளுடன் துரத்துவேன்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “இப்பொழுதும் யோசித்துப் பாருங்கள், ஒப்பாரி வைக்கும் பெண்களை அழைத்திடுங்கள்; அவர்களில் திறமையானவர்களுக்கு ஆளனுப்புங்கள். அவர்கள் விரைவாக வந்து, எங்களுக்காக ஒப்பாரி வைக்கட்டும். எங்கள் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்து, எங்கள் இமைகளிலிருந்து தண்ணீர் தாரைகள் ஓடும்வரைக்கும் எங்களுக்காகப் புலம்பட்டும்.” சீயோனிலிருந்து ஒரு புலம்பல் சத்தம் கேட்கப்படுகிறது: “நாங்கள் எவ்வளவாய் அழிந்து போனோம். எங்கள் வெட்கம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது. எங்கள் வீடுகள் பாழாய்க் கிடப்பதால், எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் புறப்படவேண்டும்” என்கிறார்கள். பெண்களே, இப்பொழுது யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். அவருடைய வாயின் வார்த்தைகளுக்கு உங்கள் செவிகளைத் திறவுங்கள். எப்படி ஒப்பாரி வைப்பதென உங்கள் மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். ஒருவருக்கொருவர் ஒரு புலம்பலைக் கற்றுக்கொடுங்கள். மரணம் ஜன்னல் வழியே ஏறி எங்கள் அரண்களுக்குள் புகுந்து விட்டது. வீதிகளிலிருக்கும் பிள்ளைகளையும், பொதுச் சதுக்கங்களில் நிற்கும் வாலிபரையும் வெட்டி வீழ்த்திவிட்டது. யெகோவா அறிவிக்கிறது இதுவே என்று சொல்: மனிதரின் சடலங்கள் திறந்த வெளியிலுள்ள குப்பையைப்போல் கிடக்கும். அவைகள் அறுவடை செய்கிறவனுக்குப் பின்னால், பொறுக்குவதற்கு ஒருவனுமில்லாமல் விழுந்து கிடக்கும் தானியக் கதிரைப்போல் கிடக்கும் என்றார். யெகோவா கூறுவது இதுவே: “அறிவாளி தன் ஞானத்தைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்கட்டும். பலசாலி தன் பலத்தைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்கட்டும். செல்வந்தன் தன் செல்வத்தைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்கட்டும். ஆனால் பெருமை பாராட்டுபவன் இதைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்: அது, ஒருவன் என்னை அறிந்து, விளங்கிக்கொண்டதாலும், நானே பூமியில் தயவும் நியாயமும் நீதியும் செய்கிற யெகோவா என்பதை அறிந்திருக்கிறதைக் குறித்துமே அவன் பெருமை பாராட்டட்டும். அவைகளிலேயே நான் மகிழ்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 9:10-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்திரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாமலிருக்க அவைகள் அழிக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; வானத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போனது. நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தங்குமிடமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாமல் அழித்துப்போடுவேன். இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்து போகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று யெகோவாவுடைய வாய் தன்னுடன் சொல்லுகிறதைக் கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்? நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாமலும், அதின்படி நடவாமலும், தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் முற்பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று யெகோவா சொல்லுகிறார். ஆதலால், இதோ, நான் இந்த மக்களுக்குச் சாப்பிட எட்டியையும், குடிக்க விஷம் கலந்த தண்ணீரையும் கொடுத்து, அவர்களும், அவர்கள் முற்பிதாக்களும் அறியாத மக்களுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை அழிக்கும்வரை அதை அவர்களுக்குப் பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். நீங்கள் யோசனைசெய்து, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதில் பழகின பெண்களைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்களில் கண்ணீர் வடியவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடுமளவும், ஒப்பாரி சொல்வார்களாக. எவ்வளவாக அழிக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் இருப்பிடங்களை அவர்கள் இடித்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து ஏற்படுகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும். ஆதலால் பெண்களே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் காது அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் மகள்களுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள். வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற வாலிபரையும் அழிக்கும் மரணம், நம்முடைய ஜன்னல்களிலேறி, நம்முடைய அரண்மனைகளில் நுழைந்தது. மனிதரின் சடலங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னால் ஒருவனும் எடுக்காதிருக்கிற அரிக்கட்டைப்போலவும் கிடக்கும் என்று யெகோவா சொன்னாரென்று சொல். ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியில் கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற யெகோவா நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டுவானாக என்று யெகோவா சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 9:10-24 பரிசுத்த பைபிள் (TAERV)
நான் (எரேமியா) மலைகளுக்காக உரக்க அழுவேன். காலியான வயல்களுக்காக நான் ஒப்பாரிப் பாடலைப் பாடுவேன். ஏனென்றால், உயிர் வாழ்வன அனைத்தும் எடுக்கப்பட்டுவிடும். இப்பொழுது எவரும் அங்கு பயணம் செய்யமாட்டார்கள். ஆடுமாடுகளின் சத்தத்தை அங்கே கேட்கமுடியாது. பறவைகள் பறந்து போயிருக்கின்றன. மிருகங்கள் போய்விட்டன. “நான் (கர்த்தர்) எருசலேம் நகரத்தை குப்பை மேடாக்குவேன். அது ஓநாய்களின் வீடாகும். யூதா நாட்டிலுள்ள நகரங்களை நான் அழிப்பேன், அதனால் அங்கே எவரும் வாழமுடியாது.” இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்ளுகிற அளவிற்கு ஒரு ஞானமுள்ள மனிதன் அங்கே இருக்கிறானா? கர்த்தரால் கற்பிக்கப்பட்டிருக்கிற சிலர் அங்கே இருக்கிறார்களா? கர்த்தருடைய செய்தியை எவரொருவராலும் விளக்கமுடியுமா? அந்தப் பூமி ஏன் வீணாயிற்று? எந்த மனிதரும் போகமுடியாத அளவிற்கு அது ஏன் வெறுமையான வனாந்தரமாயிற்று? கர்த்தர் இந்த வினாக்களுக்கு விடை சொன்னார். அவர் கூறினார்: “இது ஏனென்றால், யூதாவின் ஜனங்கள் எனது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிட்டார்கள். நான் எனது போதனைகளைக் கொடுத்தேன். ஆனால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டனர். யூதாவின் ஜனங்கள் தங்கள் சொந்த வழியிலேயே வாழ்ந்தார்கள். அவர்கள் பிடிவாதக்காரர்கள், அவர்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொள்கிறார்கள். அவர்களின் தந்தைகள் அந்தப் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள சொல்லித் தந்தனர்.” “எனவே, இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: நான் விரைவில் யூதா ஜனங்களைத் தண்டிப்பேன். நான் யூதாவின் ஜனங்களை பல நாடுகளிலும் சிதறும்படி செய்வேன். அவர்கள் புற ஜாதிகளுக்குள் வாழ்வார்கள். அவர்களும் அவர்களது தந்தைகளும் அந்த நாடுகளைப்பற்றி எப்பொழுதும் அறிந்திருக்கமாட்டார்கள். நான் பட்டயங்களுடன் ஆட்களை அனுப்புவேன். அவர்கள் யூதாவின் ஜனங்களைக் கொல்வார்கள். ஜனங்கள் முடிந்து போகுமட்டும் அவர்கள் அவர்களைக் கொல்வார்கள்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதைத்தான் கூறுகிறார்: “இப்பொழுது, இவற்றைப்பற்றி எண்ணுங்கள்! நீங்கள், சாவில் கூலிக்காக அழுவதில் திறமைவாய்ந்த பெண்களைக் கூப்பிடுங்கள். அந்த வேலையில் கெட்டிக்காரிகளை ஜனங்களுக்காக சொல்லி அனுப்புங்கள். ஜனங்கள் சொல்கிறார்கள், ‘அந்தப் பெண்கள் விரைவாக வந்து, நமக்காக அழட்டும், பிறகு நமது கண்கள் கண்ணீரால் நிறையும். நமது கண்களிலிருந்து நீரோடை வரும்.’ “சீயோனிலிருந்து உரத்த அழுகையின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. ‘நாம் உண்மையிலேயே அழிக்கப்பட்டிருக்கிறோம். நாம் உண்மையிலேயே வெட்கப்படுகிறோம்! நாம் நமது நாட்டைவிட்டு விலக வேண்டும். ஏனென்றால், நமது வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது நமது வீடுகள் கற்குவியல்களாக இருக்கின்றன.’” யூதாவின் ஸ்திரீகளே! இப்பொழுது, கர்த்தரிடமிருந்து வரும் செய்தியைக் கேளுங்கள். கர்த்தருடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகளைக் கேளுங்கள். கர்த்தர், “உங்கள் பெண்பிள்ளைகளுக்கு எவ்வாறு உரக்க அழுவது என்று கற்றுக் கொடுங்கள்.” ஒவ்வொரு பெண்ணும் ஒப்பாரிப் பாடலை பாடக் கற்றுக்கொள்ள வேண்டும். “மரணம் வந்திருக்கிறது. நமது ஜன்னல்கள் வழியாக மரணம் ஏறியிருக்கிறது. நமது அரண்மனைகளுக்குள் மரணம் வந்திருக்கிறது. தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும், நமது பிள்ளைகளிடம் மரணம் வந்திருக்கிறது. பொது இடங்களில் நாம் சந்திக்கிற இளைஞர்களிடம் மரணம் வந்திருக்கிறது.” “கர்த்தர் எரேமியாவை நோக்கி, மரித்த உடல்கள் வயல் வெளிகளின்மேல் எருவைப் போன்று கிடக்கும். அவர்களின் உடல்கள், விவசாயி அறுத்துப் போட்ட அரியைப்போன்று தரையில் கிடக்கும். ஆனால் அவற்றை சேகரிக்க எவரும் இருக்கமாட்டார்கள்” என்று சொல் என்றார். கர்த்தர், “ஞானம் உள்ளவர்கள் தமது ஞானத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம். பலம் உள்ளவர்கள் தமது பலத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம். செல்வம் உடையவர்கள் தமது செல்வத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம். ஆனால் எவராவது பெருமைபேச விரும்பினால், அவன் இதைப்பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளட்டும். என்னைப்பற்றி அவன் அறிந்துக்கொண்டதைக் குறித்து பெருமைப்படட்டும். நானே கர்த்தர் என்றும், நான் தயவும் நியாயமும் கொண்டவர் என்றும், நான் பூமியில் நன்மையைச் செய்கிறவர் என்றும் புரிந்துகொண்டவன் பெருமைப்படட்டும். நான் அவற்றை நேசிக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 9:10-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாய் அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின. நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன். இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்து போகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக் கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்? நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாமலும், அதின்படி நடவாமலும், தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து, அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப் பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாகவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்தக்கதாகவும், ஒப்பாரி சொல்லக்கடவர்கள். எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும். ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள். வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது. மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தாரென்று சொல். ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.