எரேமியா 7:1-34 - Compare All Versions

எரேமியா 7:1-34 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே: “நீ யெகோவாவின் ஆலய வாசலில் நின்று இச்செய்தியைப் பிரசித்தப்படுத்து: “ ‘யெகோவாவை வழிபட இந்த வாசல்களின் வழியாக வருகிற யூதா நாட்டு மக்களே, நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்திருத்துங்கள். அப்பொழுது நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். ஏமாற்றும் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, “இதுவே யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம்!” என்று சொல்லாதிருங்கள். நீங்கள் உண்மையாக உங்கள் வழிகளையும், செயல்களையும் மாற்றி, ஒருவரோடொருவர் நீதியாய் நடவுங்கள், அந்நியரையும், தந்தையற்றவர்களையும், விதவைகளையும் ஒடுக்கவேண்டாம். இந்த இடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும், வேறு தெய்வங்களைப் பின்பற்றி உங்களுக்கே தீங்கை உண்டாக்காமலும் இருங்கள். அப்படி இருப்பீர்களானால், உங்கள் முற்பிதாக்களுக்கு என்றென்றைக்குமாக நான் கொடுத்த இந்த நாட்டிலுள்ள, இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்க வைப்பேன். ஆனால் பாருங்கள், நீங்கள் பயனற்ற ஏமாற்று வார்த்தைகளையே நம்புகிறீர்கள். “ ‘நீங்கள் திருடுகிறீர்கள், கொலைசெய்கிறீர்கள், விபசாரம் செய்கிறீர்கள், பொய் சத்தியம் பண்ணுகிறீர்கள், பாகாலுக்குத் தூபங்காட்டுகிறீர்கள், நீங்கள் அறியாத வேறு தெய்வங்களைப் பின்பற்றுகிறீர்கள். பின்பு என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயத்திற்கு முன்பாக வந்துநின்று, “நாங்கள் பாதுகாப்பாயிருக்கிறோம்” என்கிறீர்கள். இந்த எல்லா அருவருப்புகளையும் செய்வதற்காகவா நீங்கள் பாதுகாக்கப்பட்டீர்கள்? என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயம் உங்களுக்கு கள்ளர் குகையானதோ? ஆனால் நான் கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருக்கிறேன்! என்று யெகோவா அறிவிக்கிறார். “ ‘இப்பொழுது சீலோவில் உள்ள இடத்திற்கு போங்கள். அதையே என் பெயருக்குரிய இருப்பிடமாக முதன்முதலில் ஏற்படுத்தினேன். அங்கே என் மக்களாகிய இஸ்ரயேலருடைய கொடுமையினிமித்தம், அதற்கு நான் என்ன செய்தேன் என்று பாருங்கள். நீங்கள் இந்தச் செயல்களை எல்லாம் செய்து கொண்டிருக்கும்போது, நான் திரும்பத்திரும்ப உங்களுடன் பேசினேன், ஆனால் நீங்கள் கேட்கவில்லை; நான் உங்களைக் கூப்பிட்டேன், நீங்களோ பதில் தரவில்லை என்று யெகோவா அறிவிக்கிறார். ஆகையால் அன்று நான் சீலோவுக்குச் செய்ததையே, என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயத்திற்கும் செய்வேன். உங்களுக்கும் உங்கள் தந்தையருக்கும் நான் கொடுத்த இடமான, நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள இந்த ஆலயத்துக்கே இப்படிச் செய்வேன். எப்பிராயீம் மக்களான உங்கள் சகோதரருக்குச் செய்ததுபோல, நான் உங்களை என் முகத்திற்கு முன்னிருந்து தள்ளிவிடுவேன்.’ “எரேமியாவே, நீ இந்த மக்களுக்காக மன்றாடவோ, அவர்களுக்காக எந்த வேண்டுதலையோ, விண்ணப்பத்தையோ செய்யவேண்டாம்; அவர்களுக்காக என்னிடம் பரிந்துபேசவும் வேண்டாம். ஏனெனில் நான் உனக்குச் செவிகொடுக்கமாட்டேன். யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீ காணவில்லையோ? வான அரசிக்கு அப்பம் சுடுவதற்காக பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், தந்தையர் நெருப்பு மூட்டுகிறார்கள், பெண்கள் மாவைப் பிசைந்து அப்பம் சுடுகிறார்கள். அவர்கள் என்னைக் கோபம் மூட்டுவதற்காக, வேறு தெய்வங்களுக்குப் பானபலிகளைச் செலுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் என்னையா கோபமூட்டுகிறார்கள்? வெட்கக்கேடாக தங்களுக்கல்லவா தீங்கை வருவித்துக் கொள்கிறார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். “ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: என் கோபமும் கடுங்கோபமும் இந்த இடத்தின்மேல் ஊற்றப்படும். அது மனிதர்மேலும், மிருகத்தின்மேலும், வெளிநிலத்திலுள்ள மரங்களின்மேலும், நிலத்தின் பலனின்மேலும் ஊற்றப்படும். அது ஒருவராலும் அணைக்க முடியாதபடி எரியும். “ ‘ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: போங்கள், நீங்கள் போய், நீங்கள் விரும்பியபடி தொடர்ந்து பிற பலிகளுடன் தகனபலிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால் அவைகளின் இறைச்சியை நீங்களே சாப்பிடுங்கள்! ஏனென்றால் உங்கள் முற்பிதாக்களை நான் எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்து, அவர்களுடன் பேசியபோது, நான் அவர்களுக்குக் கட்டளை கொடுத்தது தகனபலிகளையும், மற்ற பலிகளையும் குறித்து மட்டுமல்ல. இந்த கட்டளையுடன், எனக்குக் கீழ்ப்படியுங்கள், அப்பொழுது நான் உங்கள் இறைவனாயிருப்பேன். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழிகளிலெல்லாம் நடவுங்கள், அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும் என்ற கட்டளையையும் கொடுத்தேன். ஆனால் அவர்கள் கேட்கவுமில்லை அதைக் கவனிக்கவுமில்லை; அதற்குப் பதிலாக, தங்கள் பொல்லாத இருதயங்களிலுள்ள பிடிவாத மனப்பாங்கின்படியெல்லாம் செய்தார்கள். முன்னேற்றமடையாமல் பின்னடைந்து போனார்கள். உங்கள் முற்பிதாக்கள் எகிப்தை விட்டுச்சென்ற காலத்திலிருந்து, இன்றுவரை, நாள்தோறும் திரும்பத்திரும்ப, நான் என்னுடைய ஊழியரான இறைவாக்கினரை உங்களிடம் அனுப்பிக்கொண்டே இருந்தேன். ஆனால் மக்களோ, நான் சொன்னவற்றைக் கேட்கவுமில்லை கவனிக்கவுமில்லை. இன்னும் முரட்டுத்தனமுள்ளவர்களாகி தங்கள் முற்பிதாக்களைப் பார்க்கிலும், அதிக தீமையான செயல்களையே செய்தார்கள்.’ “எரேமியாவே! இவையெல்லாவற்றையும் நீ அவர்களுக்குக் கூறினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள். நீ அவர்களைக் கூப்பிட்டாலும் பதில் கொடுக்கவுமாட்டார்கள். ஆகையால் நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்படியாமலும், அவருடைய கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற மக்களினம் இதுதான். உண்மை அழிந்துவிட்டது; அவர்களுடைய உதடுகளிலிருந்து அது மறைந்துபோயிற்று. “ ‘நீ உனது தலைமயிரை வெட்டி, அப்பால் எறிந்துவிடு. வறண்ட மேடுகளில் புலம்பு. ஏனெனில் யெகோவா தன் கடுங்கோபத்துக்குள்ளான இச்சந்ததியைப் புறக்கணித்துக் கைவிட்டுவிட்டார். “ ‘யூதா மக்கள் என் பார்வையில் தீமையான செயல்களைச் செய்துள்ளார்கள்; என் பெயரைக்கொண்டு விளங்கும் இந்த ஆலயத்தில், தங்கள் அருவருக்கப்பட்ட விக்கிரகங்களை வைத்து அதைக் கறைப்படுத்தியுள்ளார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். அவர்கள் தங்கள் மகன்களையும், மகள்களையும் நெருப்பில்போட்டு, எரிப்பதற்காகப் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தில் உயர்ந்த மேடைகளைக் கட்டியிருக்கிறார்கள். இதை நான் கட்டளையிடவுமில்லை. என் மனதில் நினைக்கவும் இல்லை. எனவே எச்சரிக்கையாயிரு, மக்கள் அதைத் தோப்பேத் என்றோ, பென் இன்னோமின் பள்ளத்தாக்கு என்றோ இனி ஒருபோதும் அழைக்காமல், படுகொலை பள்ளத்தாக்கு என்றே அழைக்கும் நாட்கள் வருகின்றன. ஏனெனில் அவர்கள் இடமின்றிப் போகுமட்டும் மரித்தவர்களை தோப்பேத்திலே புதைப்பார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது இந்த மக்களின் சடலங்கள் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் உணவாகும். அவைகளைப் பயமுறுத்தி விரட்டிவிட ஒருவரும் இருக்கமாட்டார்கள். யூதாவின் பட்டணங்களிலிருந்தும், எருசலேமின் வீதிகளிலிருந்தும் சந்தோஷத்தின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும் இல்லாமல் செய்வேன். மணமகளின் குரலையும், மணமகனின் குரலையும் ஒழியப்பண்ணுவேன். ஏனெனில், நாடு பாழாய்ப்போகும்.

எரேமியா 7:1-34 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: நீ யெகோவாவுடைய ஆலயத்தின் வாசலில் நின்று, அங்கே அறிவித்துச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், யெகோவாவைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே நுழைகிற யூத மக்களாகிய நீங்களெல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த இடத்தில் குடியிருக்கச்செய்வேன். யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள். நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் நன்றாக ஒழுங்குபடுத்தி, நீங்கள் மனிதனுக்கும் மனிதனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து, அந்நியதேசத்தாரையும், அனாதையானவனையும், விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த இடத்தில் சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களேயாகில், அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த இடத்தில் உங்களைச் சதாகாலமும் குடியிருக்கவும்செய்வேன். இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்செய்து, பொய்சாட்சி சொல்லி, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி, அதன்பின்பு வந்து, என் பெயர் சூட்டப்பட்ட இந்த ஆலயத்தில் எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ? என் பெயர் சூட்டப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையானதோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். நான் முதலில் என் பெயர் விளங்கச்செய்ய சீலோவிலுள்ள என் இடத்திற்கு நீங்கள் போய், இஸ்ரவேல் மக்களுடைய பொல்லாப்புக்காக நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள். நீங்கள் இந்தச் செயல்களையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லி வந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்திரவுகொடாமலும் போனதினால், என் பெயர் சூட்டப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்திற்கும், உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த இடத்திற்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன். நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டதுபோல, உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். நீ இந்த மக்களுக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் நீ சொல்வதைக் கேட்பதில்லை. யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா? எனக்கு மனவேதனையுண்டாக அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை ஊற்றுகிறார்கள்; அவர்கள் வானராணிக்குப் பணியாரங்களைச் சுடுவதற்காகப் பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், பெண்கள் மாப்பிசைகிறார்கள். அவர்கள் எனக்கா மனவேதனையுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்திற்குள்ளாக அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனவேதனையுண்டாக்குகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த இடத்தின்மேலும், மனிதர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் பழங்கள்மேலும் ஊற்றப்படும்; அது அணையாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறதென்னவென்றால்: உங்கள் தகனபலிகளை மற்ற பலிகளுடன், இறைச்சியைச் சாப்பிடுங்கள். நான் உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வந்த நாளில், தகனபலியைக்குறித்தும், மற்ற பலிகளைக்குறித்தும் நான் அவர்களுடன் பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும், என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழிகளிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாவதற்காக நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன். அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்நோக்கியல்ல பின்நோக்கியே போனார்கள். உங்கள் முற்பிதாக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்நாள்வரை நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் தினந்தினம் உங்களிடத்திற்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவர்கள் என் சொல்லைக்கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் முற்பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்பு செய்தார்கள். நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உன் சொல்லைக் கேட்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்திரவு கொடுக்கமாட்டார்கள். ஆகையால் தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற மக்கள் இதுதான் என்றும், சத்தியம் அழிந்து, அது அவர்கள் வாயிலிருந்து இல்லாமல் போனதென்றும் அவர்களுக்குச் சொல். நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்ந்த இடங்களில் புலம்பிக்கொண்டிரு; யெகோவா தமது கோபத்திற்கு ஏதுவான சந்ததியை வெறுத்துத் தள்ளிவிட்டார். யூதா மக்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; என் பெயர் சூட்டப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்தத் தங்கள் அருவருப்புகளை அதில் வைத்தார்கள். தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் நெருப்பால் எரிப்பதற்காக, அவர்கள் இன்னோம் மகனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை. ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் மகனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், அழிவின் பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்தில் இடம் கிடைக்காமற்போகும்வரை பிணங்களை அடக்கம் செய்வார்கள். இந்த மக்களின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் உணவாகும்; அவைகளை விரட்டுவாரும் இல்லாதிருப்பார்கள். நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் சிரிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும் ஓயச்செய்வேன்; தேசம் அழியும்.

எரேமியா 7:1-34 TAERV (பரிசுத்த பைபிள்)

எரேமியாவிற்கான கர்த்தருடைய செய்தி இது: எரேமியா, தேவனுடைய வீட்டுக் கதவருகில் நில். வாசலில் இந்த செய்தியைப் பிரசங்கம் செய்: “யூதா நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களே! கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள்! இந்த வாசல் வழியாக கர்த்தரை ஆராதிக்க வருகின்ற ஜனங்களே, இந்தச் செய்தியைக் கேளுங்கள். இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதைத் தான் சொல்கிறார்: ‘உங்களது வாழ்க்கையை மாற்றுங்கள். நல்லவற்றைச் செய்யுங்கள், இதனை நீங்கள் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். சில ஜனங்கள் கூறுகிற பொய்களில் நம்பிக்கை வைக்காதீர்கள். இதுதான் கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய ஆலயம்’ என்று அவர்கள் கூறுகின்றனர். நீங்கள் உங்களது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நற் செயல்களைச் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் நியாயமாக இருக்கவேண்டும். நீங்கள் அந்நியர்களுக்கும் நியாயமாக இருக்கவேண்டும். நீங்கள் விதவைகளுக்கும் அநாதைகளுக்கும் நல்லவற்றைச் செய்யவேண்டும். ஒன்றுமறியாத ஜனங்களைக் கொல்லவேண்டாம். மற்ற தெய்வங்களைப் பின் பற்றவேண்டாம். ஏனென்றால் அவை உங்கள் வாழ்வை அழித்துவிடும். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன்: நான் உங்களது முற்பிதாக்களுக்கு இந்த நாட்டை என்றென்றைக்கும் வைத்திருக்கும்படி கொடுத்தேன். “ஆனால் நீங்கள் பொய்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பொய்கள் பயனில்லாதவை. நீங்கள் களவும், கொலையும் செய்வீர்களா? நீங்கள் விபச்சாரம் என்னும் பாவத்தை செய்வீர்களா? நீங்கள் மற்றவர்கள் மேல் பொய்வழக்கு போடுவீர்களா? நீங்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொண்டு, உங்களால் அறியப்படாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றுவீர்களா? நீங்கள் அந்தப் பாவங்களைச் செய்தால், எனது நாமத்தால் அழைக்கப்படும். இந்த வீட்டில் எனக்கு முன்னால் நிற்க முடியும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் இதுபோன்ற கெட்ட செயல்களையெல்லாம் செய்துகொண்டு, எனக்கு முன்னால் நின்று, ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டே தீய செயல்களைத் தொடர்ந்து செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? இந்த ஆலயம் எனது நாமத்தால் அழைக்கப்படுகின்றது. இந்த ஆலயம் உங்களுக்கு, கள்ளர் பதுங்கும் இடமே ஒழிய, வேறு எதுவுமில்லையா? நான் உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “யூதாவின் ஜனங்களே! இப்பொழுது சீலோ என்னும் நகரத்திற்குப் போங்கள். நான் முதலில் எந்த இடத்தில் எனது நாமத்தால் ஒரு வீட்டை அமைத்தேனோ அங்கு போங்கள். இஸ்ரவேல் ஜனங்களும் தீயச்செயல்களைச் செய்தனர். அவர்கள் செய்த தீயச்செயல்களுக்கு நான் அந்த இடத்துக்குச் செய்தவற்றைப் போய் பாருங்கள். யூதா ஜனங்களாகிய நீங்கள், இத்தீயச் செயல்களையெல்லாம் செய்தீர்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் உங்களிடம் மீண்டும், மீண்டும் பேசினேன். ஆனால் நீங்கள் என்னை கவனிக்க மறுத்துவிட்டீர்கள். நான் உங்களை அழைத்தேன். ஆனால் நீங்கள் பதில் சொல்லவில்லை. எனவே, எருசலேமில் எனது நாமத்தால் அழைக்கப்பட்ட வீட்டை அழிப்பேன். நான் சீலோவை அழித்தது போன்று, அந்த ஆலயத்தையும் அழிப்பேன். எனது நாமத்தால் அழைக்கப்படும் எருசலேமில் உள்ள அந்த வீடு, நீங்கள் நம்பிக்கை வைத்த ஆலயம். நான் அந்த இடத்தை உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்தேன். எப்பிராயீமிலுள்ள உங்கள் சகோதரர்களை நான் தூர எறிந்ததைப்போன்று, உங்களையும் என்னைவிட்டுத் தூர எறிவேன். “எரேமியா, யூதாவிலுள்ள இந்த ஜனங்களுக்காக நீ விண்ணப்பம் செய்யவேண்டாம். அவர்களுக்காக நீ ஜெபிக்கவும், கெஞ்சவும் வேண்டாம், அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று என்னிடம் மன்றாடவேண்டாம். அவர்களுக்கான உனது ஜெபத்தை நான் கேட்கமாட்டேன். யூதாவின் நகரங்களில் அந்த ஜனங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நீ பார்க்கிறாய் என்பதை நான் அறிவேன். எருசலேம் நகரத்து வீதிகளில் அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உன்னால் பார்க்க முடியும். யூதாவிலுள்ள ஜனங்கள் செய்துகொண்டிருப்பது இதுதான். பிள்ளைகள் மரக்கட்டைகளைச் சேகரிக்கின்றனர். தந்தைகள் நெருப்புக்காக அந்த மரக்கட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். பெண்கள், வானராக்கினிக்கும் பலியிட அப்பங்களைச் சுடுகிறார்கள். அந்நிய தெய்வங்களை தொழுவதற்காக யூதா ஜனங்கள் பானங்களின் காணிக்கைகளை ஊற்றுகின்றனர். எனக்குக் கோபம் ஏற்படும்படி அவர்கள் இதனைச் செய்கின்றனர். ஆனால் யூதா ஜனங்கள் உண்மையிலேயே என்னைப் புண்படுத்தவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அவர்கள் தங்களையே புண்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்கே அவமானத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள்.” எனவே கர்த்தர் அவர்களிடம், “நான் இந்த இடத்துக்கு எதிராக எனது கோபத்தைக் காட்டுவேன். நான் ஜனங்களையும் மிருகங்களையும் தண்டிப்பேன். நான் வெளியிலுள்ள மரங்களையும் தரையிலுள்ள விளைச்சலையும் தண்டிப்பேன். எனது கோபம் சூடான நெருப்பைப் போன்றிருக்கும். எவராலும் அதனைத் தடுக்கமுடியாது” என்று கூறுகிறார். இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “போங்கள், உங்கள் விருப்பப்படி எத்தனை மிகுதியாகத் தகன பலிகளையும், மற்ற பலிகளையும் செலுத்த முடியுமோ செலுத்துங்கள். அப்பலிகளின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள். எகிப்துக்கு வெளியே உங்களது முற்பிதாக்களைக் கொண்டுவந்தேன். நான் அவர்களோடு பேசினேன், ஆனால் தகனபலிகள் மற்றும் மற்ற பலிகள் பற்றி எந்தக் கட்டளையையும் இடவில்லை. நான் இந்தக் கட்டளையை மட்டும் கொடுத்தேன். ‘எனக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது நான் உங்களது தேவனாக இருப்பேன். நீங்கள் என் ஜனமாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட அனைத்தும் செய்யுங்கள். உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.’ “ஆனால் உங்களது முற்பிதாக்கள் என்னை கவனிக்கவில்லை. அவர்கள் நான் சொன்னதில் கவனம் வைக்கவில்லை, அவர்கள் முரட்டாட்டமாக இருந்தார்கள். அவர்கள் விரும்பியதையே செய்தார்கள். அவர்கள் நல்லவர்கள் ஆகவில்லை. அவர்கள் மேலும் தீயவர்கள் ஆனார்கள். அவர்கள் முன்னுக்கு வராமல் பின்னுக்குப் போனார்கள். உங்களது முற்பிதாக்கள் எகிப்தை விட்டு விலகிய நாள் முதல், இன்றுவரை நான் உங்களிடம் எனது சேவகர்களை அனுப்பியிருக்கிறேன். தீர்க்கதரிசிகளே எனது சேவகர்கள். நான் அவர்களை மீண்டும், மீண்டும் உங்களிடம் அனுப்பினேன். ஆனால், உங்களது முற்பிதாக்கள் நான் சொன்னதற்கு செவிசாய்க்கவில்லை. அவர்கள் என்மீது கவனம் வைக்கவில்லை. அவர்கள் மிகுந்த பிடிவாதமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் தம் தந்தையரைவிட மோசமான தீமைகளைச் செய்தனர். “எரேமியா! நீ யூதா ஜனங்களிடம் இவற்றை எல்லாம் சொல்லுவாய். ஆனால் அவர்கள் நீ சொல்வதை கவனிக்கமாட்டார்கள்! நீ அவர்களை அழைப்பாய். ஆனால் அவர்கள் பதில் சொல்லமாட்டார்கள். எனவே, நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும். நமது தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியாத தேசம் இதுதான். தேவனுடைய போதனைகளை அதன் ஜனங்கள் கவனிக்கவில்லை, இந்த ஜனங்கள் உண்மையான போதனைகளை அறியவில்லை. “எரேமியா, உனது தலைமுடியை வெட்டி எறிந்துபோடு. பாறையின் உச்சிக்குப் போய் அழு. ஏனென்றால், கர்த்தர் இந்த தலைமுறை ஜனங்களை மறுத்திருக்கிறார். இந்த ஜனங்களுக்கு கர்த்தர் தனது முதுகைத் திருப்பிக்கொண்டார். கோபத்துடன் அவர்களைத் தண்டிப்பார். இவற்றைச் செய். ஏனென்றால், யூதா ஜனங்கள் தீமை செய்வதை நான் பார்த்திருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அவர்கள் தம் விக்கிரகங்களை அமைத்திருக்கிறார்கள், அதனை எனது நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். அவற்றை நான் வெறுக்கிறேன். அவர்கள் எனது வீட்டை ‘தீட்டு’ செய்திருக்கிறார்கள்! யூதா ஜனங்கள், இன்னோமின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டியிருக்கிறார்கள். அந்த இடங்களில் அவர்கள் தமது குமாரர்களையும், குமாரத்திகளையும் கொன்று, பலியாக எரித்தார்கள். இவற்றைச் செய்யுமாறு நான் கட்டளையிடவில்லை. இவை போன்றவற்றை நான் மனதிலே நினைத்துப் பார்க்கவுமில்லை. எனவே, நான் உன்னை எச்சரிக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஜனங்கள் இந்த இடத்தை தொப்பேத் என்னும் இன்னோமின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்போவதில்லை. அவர்கள் இதனை ‘சங்காரப் பள்ளத்தாக்கு’ என்று அழைப்பார்கள். அவர்கள் இதற்கு இந்தப் பெயரை இடுவார்கள். ஏனென்றால் மரித்தவர்களை அவர்கள் தோப்பேத்தில் இனி புதைக்க இடமில்லை என்று கூறுமளவுக்குப் புதைப்பார்கள். பிறகு, மரித்தவர் களின் உடல்கள் பூமிக்கு மேலே கிடக்கும், வானத்து பறவைகளுக்கு உணவாகும். அந்த ஜனங்களின் உடல்களைக் காட்டு மிருகங்கள் உண்ணும். அந்தப் பறவைகள் அல்லது மிருகங்களைத் துரத்திட அங்கு எவரும் உயிரோடு இருக்கமாட்டார்கள். எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் நகரங்களிலும் உள்ள, சந்தோஷம் மகிழ்ச்சி ஆகியவற்றின் ஒலிகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவேன். எருசலேம் அல்லது யூதாவில் இனிமேல் மணவாளன் மற்றும் மணவாட்டியின் சத்தமும் இனிமேல் இருக்காது. இந்த நாடு ஒரு பாழடைந்த பாலைவனமாகும்.”

எரேமியா 7:1-34 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: நீ கர்த்தருடைய ஆலயத்தின் வாசலிலே நின்று, அங்கே கூறிச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், கர்த்தரைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே பிரவேசிக்கிற யூத ஜனங்களாகிய நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன். கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக் கொள்ளாதிருங்கள். நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தி, நீங்கள் மனுஷனுக்கும் மனுஷனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து, பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களேயாகில், அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த ஸ்தலத்திலே உங்களைச் சதாகாலமும் குடியிருக்கப்பண்ணுவேன். இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ? என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையாயிற்றோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள். நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி வந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால், என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும், உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன். நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டதுபோல, உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை. யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா? எனக்கு மனமடிவுண்டாக அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள்; அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள். அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும்; அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறதென்னவென்றால்: உங்கள் தகனபலிகளை மற்ற பலிகளோடுங்கூட்டி, இறைச்சியைச் சாப்பிடுங்கள். நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்ற பலிகளைக்குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும், என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன். அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல பின்னிட்டே போனார்கள். உங்கள் பிதாக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்நாள்மட்டும் நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் தினந்தினம் உங்களண்டைக்கு ஏற்கெனவே அனுப்பிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவர்கள் என் சொல்லைக்கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்பு செய்தார்கள். நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்தரவு கொடுக்கமாட்டார்கள். ஆகையால் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற ஜாதி இதுதான் என்றும், சத்தியம் அழிந்து, அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போனதென்றும் அவர்களுக்குச் சொல். நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்தலங்களிலே புலம்பிக்கொண்டிரு; கர்த்தர் தமது சினத்துக்கு ஏதுவான சந்ததியை வெறுத்து நெகிழவிட்டார். யூதா புத்திரர் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் நாமம் தரித்திருக்கிற ஆலயத்தைத் தீட்டுப்படுத்தத் தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள். தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை. ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள். இந்த ஜனத்தின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை வெருட்டுவாரும் இல்லாதிருப்பார்கள். நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் களிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன்; தேசம் பாழாகும்.