எரேமியா 38:1-28

எரேமியா 38:1-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மக்கள் எல்லோருக்கும் எரேமியா சொல்வதை மாத்தானின் மகன் செபதியா, பஸ்கூரின் மகன் கெதலியா, செலேமியாவின் மகன் யூகால், மல்கியாவின் மகன் பஸ்கூர் ஆகியோர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் சொன்னது என்னவென்றால், “யெகோவா கூறுவது இதுவே: ‘இந்தப் பட்டணத்தில் தங்கியிருக்கிற எவனும் வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பான். ஆனால் பாபிலோனியரிடம் போகிற எவனும் வாழ்வான். அவன் உயிர் தப்பி வாழ்வான்.’ யெகோவா கூறுவது இதுவே: ‘இப்பட்டணம் பாபிலோன் அரசனின் இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்படைக்கப்படும். அவன் இதைக் கைப்பற்றுவான்’ என்றான்.” அப்பொழுது அதிகாரிகள் அரசனிடம், “இந்த மனிதன் சாகவேண்டும். இவன் பட்டணத்தில் மீதியாயிருக்கும் போர்வீரரையும், எல்லா மக்களையும் தான் சொல்கிற வார்த்தைகளால் அதைரியப்படுத்துகிறான். இந்த மனிதன் மக்களின் நன்மையை அல்ல, அவர்களின் அழிவையே நாடுகிறான்” என்றார்கள். சிதேக்கியா அரசன் அதற்குப் பதிலாக, “இதோ அவன் உங்களுடைய கையில் இருக்கிறான். உங்களுக்கு மாறாக அரசனால் எதுவும் செய்யமுடியாது” என்றான். அப்பொழுது அவர்கள் எரேமியாவைக் காவற்கூட முற்றத்திலிருந்த அரசனின் மகன் மல்கியாவின் குழிக்குள் போட்டார்கள். அவர்கள் எரேமியாவை கயிறுகளினால் கட்டி அதற்குள் இறக்கினார்கள். அதில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எரேமியா சேற்றிற்குள்ளே புதைந்து கொண்டிருந்தான். அரச அரண்மனையில் இருந்த ஒரு எத்தியோப்பிய அதிகாரியான எபெத்மெலேக் எரேமியா குழிக்குள் போடப்பட்டதைக் கேள்விப்பட்டான். அரசன் பென்யமீன் வாசலில் உட்கார்ந்திருந்தபோது, எபெத்மெலேக் அரண்மனையிலிருந்து வெளியேறி அரசனிடம் சென்று, “அரசனே, தலைவனே இறைவாக்கினன் எரேமியாவை இந்த அதிகாரிகள் தங்கள் எல்லா செயல்களினாலும் கொடுமையாய் நடத்தியிருக்கிறார்கள். அவனை அவர்கள் ஒரு குழிக்குள் எறிந்துவிட்டார்கள். பட்டணத்தில் அப்பம் இல்லாமல் போகையில் பட்டினியால் அவன் அங்கே சாவானே” என்றான். அதற்கு அரசன் எத்தியோப்பியனான எபெத்மெலேக்கிடம், “உன்னோடு முப்பது மனிதரைக் கூட்டிக்கொண்டுபோய் இறைவாக்கினன் எரேமியா இறப்பதற்குமுன் அவனை குழியிலிருந்து வெளியே தூக்கியெடு” என்று கட்டளையிட்டான். அப்படியே எபெத்மெலேக் அந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு அரண்மனை பொக்கிஷ அறையின் கீழிருந்த அந்த இடத்திற்குப் போனான். அங்கிருந்து பழைய சீலைகளையும், பழைய உடைகளையும் எடுத்து அவைகளைக் கயிற்றின் வழியாய் எரேமியா இருந்த குழிக்குள் இறக்கினான். எத்தியோப்பியனான எபெத்மெலேக், எரேமியாவிடம், “நீ இந்த பழைய உடைகளையும், பழைய துணிகளையும் உனது அக்குள்களில் கயிறு வெட்டிவிடாதபடி வைத்துக்கொள்” என்று சொன்னான். எரேமியா அவ்வாறே செய்தான். அப்பொழுது அவர்கள் எரேமியாவை கயிறுகள் மூலம் குழியிலிருந்து வெளியே தூக்கி எடுத்தார்கள். அதன்பின் எரேமியா காவற்கூடத்தின் முற்றத்தில் தங்கியிருந்தான். பின்பு சிதேக்கியா அரசன், இறைவாக்கினன் எரேமியாவை யெகோவாவினுடைய ஆலயத்தின் மூன்றாம் வாசலுக்குக் கொண்டுவரச் செய்தான். அரசன் அவனிடம், “நான் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்கப்போகிறேன். எதையும் மறைக்காமல் எனக்குச் சொல்” என்றான். அதற்கு எரேமியா சிதேக்கியாவிடம், “நான் அவ்வாறே பதில் சொன்னால் என்னைக் கொலைசெய்வீர் அல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும் நீர் எனக்குச் செவிகொடுக்கமாட்டீரே” என்றான். ஆனால் சிதேக்கியா அரசனோ, எரேமியாவிடம் இரகசியமாக ஆணையிட்டு, “நமக்கு சுவாசத்தைக் கொடுத்திருக்கும் யெகோவா இருப்பது நிச்சயம் என்றால், நான் உன்னைக் கொல்வதோ, உன் உயிரை வாங்கத் தேடுகிறவர்களிடம் உன்னை ஒப்புக்கொடுப்பதோ இல்லை என்பதும் நிச்சயம்” என்று சத்தியம் செய்தான். அதற்கு எரேமியா சிதேக்கியாவிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘பாபிலோன் அரசனுடைய அதிகாரிகளிடம் நீ சரணடைந்தால், நீ உன் உயிரைக் காத்துக்கொள்வாய். இப்பட்டணமும் எரித்து அழிக்கப்படமாட்டாது. உன் குடும்பமும் உயிர்வாழும். ஆனால் நீ பாபிலோன் அரசனின் அதிகாரிகளிடம் சரணடையாவிட்டால், இப்பட்டணம் பாபிலோனியரின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும். அவர்கள் இப்பட்டணத்தைச் சுட்டெரிப்பார்கள். நீயும் அவர்களுடைய கையிலிருந்து தப்பமாட்டாய்’ என்றான்.” அதற்கு சிதேக்கியா அரசன் எரேமியாவிடம், “நான் பாபிலோனியரிடம் முன்பே போய்ச் சேர்ந்த யூதருக்குப் பயப்படுகிறேன். ஏனெனில் பாபிலோனியர் என்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்கள் என்னைத் துன்புறுத்தக்கூடும்” என்று சொன்னான். அதற்கு எரேமியாவோ, “அவர்கள் உன்னை ஒப்புக்கொடுக்கமாட்டார்கள். நான் உனக்குச் சொல்வதின்படி செய்து யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திரு. அப்பொழுது உனக்கு எல்லாம் நன்மையாயிருக்கும். நீயும் உயிருடன் தப்புவாய். ஆனால் நீ சரணடைவதற்கு மறுத்தால், யெகோவா எனக்கு வெளிப்படுத்தியுள்ளது இதுவே: யூதா அரசனின் அரண்மனையில் மீதியாய் விடப்பட்டிருக்கும் பெண்கள், பாபிலோன் அரசனின் அதிகாரிகளிடம் கொண்டுவரப்படுவார்கள். அப்பெண்கள் உன்னிடம்: “ ‘நீ நம்பியிருந்த உனது நண்பர்கள், உன்னை வழிதவறச்செய்து உன்னை மேற்கொண்டார்கள். உன்னுடைய பாதங்கள் சேற்றிற்குள்ளே புதைந்தன; உனது நண்பர்கள் உன்னைக் கைவிட்டுப் போய்விட்டார்கள்’ என்று சொல்வார்கள். “உனது எல்லா மனைவியரும், பிள்ளைகளும், பாபிலோனியரிடத்துக்குக் கொண்டுவரப்படுவார்கள். நீயுங்கூட அவர்களுடைய கையிலிருந்து தப்பாமல், பாபிலோன் அரசனால் கைதுசெய்யப்படுவாய். இப்பட்டணம் தீயினால் எரிக்கப்படும்” என்றான். அப்பொழுது சிதேக்கியா எரேமியாவிடம், “இந்த வார்த்தைகளை ஒருவரும் அறியாமலிருக்கட்டும்; அறிந்தால் நீ சாகக்கூடும். அதிகாரிகள் நான் உன்னுடன் பேசியதைக் கேள்விப்பட்டு உன்னிடம் வந்து, ‘அரசனுக்கு நீ கூறியது என்ன? அரசன் உனக்குக் கூறியது என்ன? எங்களுக்கு அதை மறைக்காதே, மறைத்தால் உன்னை நாங்கள் கொல்வோம்’ என்று சொன்னால், நீ அவர்களிடம், ‘நான் சாகும்படி யோனத்தானுடைய வீட்டுக்குத் திரும்பவும் என்னை அனுப்பவேண்டாம் என்று அரசனிடம் வேண்டிக்கொண்டேன்’ என்று சொல்” என்று கூறினான். அதுபோலவே அதிகாரிகளெல்லாரும் எரேமியாவிடம் வந்து, கேள்வி கேட்டார்கள்; அரசன் தனக்குக் கட்டளையிட்ட இந்த வார்த்தைகளுக்கேற்ப அவன் பதில் கூறினான். அரசனுடன் எரேமியா பேசியதை அவர்கள் ஒருவரும் அறிந்திராதபடியால், அவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். எருசலேம் பிடிக்கப்படும் நாள்வரைக்கும் எரேமியா காவற்கூடத்தின் முற்றத்திலேயே இருந்தான்.

எரேமியா 38:1-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இந்த நகரத்தில் தங்கியிருக்கிறவன், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பான்; கல்தேயரிடத்திற்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய உயிர் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப் போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் யெகோவா சொல்கிறார் என்றும், இந்த நகரம் பாபிலோன் ராஜாவுடைய படையின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அதைப் பிடிப்பானென்பதை யெகோவா சொல்கிறார் என்றும், எரேமியா எல்லா மக்களிடமும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை மாத்தானின் மகனாகிய செப்பத்தியாவும், பஸ்கூரின் மகனாகிய கெதலியாவும், செலேமியாவின் மகனாகிய யூகாலும், மல்கியாவின் மகனாகிய பஸ்கூரும் கேட்டார்கள். அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனிதன் கொல்லப்பட அனுமதிக்கவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற போர்வீரர்களிடத்திலும், மற்றுமுள்ள எல்லா மக்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினால் அவர்களுடைய கைகளைத் தளர்ந்து போகச்செய்கிறான்; இவன் இந்த மக்களின் நலனைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள். அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாக ராஜா ஒன்றும் செய்யமுடியாது என்றான். அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவல்நிலையத்தின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் மகனாகிய மல்கியாவினுடைய கிணற்றில் போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதில் இறக்கிவிட்டார்கள்; அந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் சேறாயிருந்தது, அந்த சேற்றில் எரேமியா புதைந்தான். அவர்கள் எரேமியாவை கிணற்றில் போட்டதை ராஜாவின் அரண்மனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரண்மனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்த மனிதர்கள் எரேமியா தீர்க்கதரிசியை கிணற்றில் போட்டது தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்தில் பட்டினியினால் இறப்பானே இனி நகரத்தில் அப்பமில்லை என்றான். அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனிதரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி இறப்பதற்குமுன்னே அவனைக் கிணற்றிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான். அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனிதரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழைய புடவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவின் அருகில் கிணற்றில் இறக்கிவிட்டு, எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழைய புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுகளுக்கு இடையில் வைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்; எரேமியா அப்படியே செய்தான். அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைக் கிணற்றிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எரேமியா காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான். பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் யெகோவாவுடைய ஆலயத்தில் இருக்கும் மூன்றாம் வாசலில் தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான். அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நான் அதை உமக்கு அறிவித்தால் என்னைக் கண்டிப்பாகக் கொலைசெய்வீரல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும், என் சொல்லைக் கேட்கமாட்டீர் என்றான். அப்பொழுது சிதேக்கியா ராஜா: நான் உன்னைக் கொல்லாமலும், உன் உயிரை வாங்கத்தேடுகிற இந்த மனிதர் கையில் உன்னை ஒப்புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டாக்கிய யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று எரேமியாவுக்கு இரகசியமாய் வாக்குக்கொடுத்தான். அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடம் புறப்பட்டுப்போனால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள். நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால், அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை நெருப்பினால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குத் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறார் என்றான். அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சேர்த்துகொண்ட யூதரின் கையில் என்னைப் பரியாசம்செய்ய ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் சந்தேகப்படுகிறேன் என்றான். அதற்கு எரேமியா: உம்மை ஒப்புக்கொடுக்கமாட்டார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும். நான் புறப்படுகிறதில்லை என்று சொல்வீர்ரென்றால், யெகோவா எனக்குத் தெரியப்படுத்தின வார்த்தையாவது: இதோ, யூதா ராஜாவின் வீட்டில் மீதியான எல்லாப் பெண்களும் வெளியே பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்தில் கொண்டுபோகப்படுவார்கள்; அப்பொழுது, இதோ, அவர்கள் தானே உம்முடைய நண்பர்கள்; அவர்கள் உமக்குப் போதனைசெய்து, உம்மை மேற்கொண்டார்கள் என்றும், உம்முடைய கால்கள் சேற்றில் அமிழ்ந்தபின்பு அவர்கள் பின்வாங்கிப் போனார்கள் என்றும் அந்த பெண்களே சொல்லுவார்கள். உம்முடைய எல்லாப் பெண்களையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டு போவார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையினால் பிடிக்கப்பட்டு, இந்த நகரம் நெருப்பால் சுட்டெரிக்கப்படக் காரணமாயிருப்பீர் என்றான். அப்பொழுது சிதேக்கியா எரேமியாவை நோக்கி: இந்த வார்த்தைகளை ஒருவருக்கும் அறிவிக்கவேண்டாம்; அப்பொழுது நீ இறப்பதில்லை. நான் உன்னுடன் பேசினதைப் பிரபுக்கள் கேள்விப்பட்டு, உன்னிடத்தில் வந்து: நீ ராஜாவோடு பேசிக்கொண்டதை எங்களுக்குத் தெரிவி, எங்களுக்கு ஒன்றும் மறைக்காதே, அப்பொழுது உன்னைக் கொல்லாதிருப்போம்; ராஜா உன்னோடு என்ன பேசினார் என்று உன்னைக் கேட்பார்களேயாகில், நான் யோனத்தானுடைய வீட்டில் மரணமடையாதபடி ராஜா என்னை அங்கே திரும்ப அனுப்பவேண்டாம் என்று, அவர் முகத்திற்கு முன்பாக விண்ணப்பம்செய்தேன் என்று சொல்வாயாக என்றான். பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனதினால், அவனுடன் பேசாமலிருந்துவிட்டார்கள். அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்வரை காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டபிறகும் அங்கேயே இருந்தான்.

எரேமியா 38:1-28 பரிசுத்த பைபிள் (TAERV)

அரச அதிகாரிகளில் சிலர் எரேமியாவின் பிரசங்கத்தை கேட்டனர். அவர்கள், மாத்தானின் குமாரனாகிய செப்பத்தியா, பஸ்கூரின் குமாரனாகிய கெதலியா, செலேமியாவின் குமாரனாகிய யூகால், மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரும் ஆவார்கள். எரேமியா இச்செய்தியை அனைத்து ஜனங்களுக்கும் சொன்னான். “இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘எருசலேமில் வாழ்கிற ஒவ்வொருவரும் வாள் அல்லது பசி அல்லது பயங்கரமான நோயால் மரிப்பார்கள். ஆனால் பாபிலோனியப் படையிடம் சரண் அடைபவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். அந்த ஜனங்கள் தாம் உயிரோடு தப்பித்துக்கொள்வார்கள்.’ இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘இந்த எருசலேம் நகரமானது பாபிலோன் ராஜாவின் படையிடம் உறுதியாகக் கொடுக்கப்படும். அவன் இந்நகரத்தைக் கைப்பற்றுவான்.’” பிறகு அந்த அரச அதிகாரிகள் ஜனங்களுக்கு எரேமியா சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டு விட்டு சிதேக்கியா ராஜாவிடம் சென்றனர். அவர்கள் ராஜாவிடம், “எரேமியா சாகடிக்கப்பட வேண்டும். இந்த நகரத்தில் இன்னும் இருக்கிற வீரர்களை அவன் அதைரியப்படுத்திக் கொண்டிருக்கிறான். எரேமியா தான் சொல்லிக்கொண்டிருப்பவற்றால் ஒவ்வொருவரையும் அதைரியப்படுத்திக்கொண்டிருக்கிறான். எரேமியா நமக்கு நன்மை நிகழ்வதை விரும்பவில்லை. அவன் எருசலேம் ஜனங்களை அழித்து விட விரும்புகிறான்” என்றனர். எனவே, சிதேக்கியா ராஜா அந்த அதிகாரிகளிடம், “எரேமியா உங்கள் கட்டுபாட்டுக்குள் இருக்கிறான். உங்களைத் தடுக்க என்னால் எதுவும் செய்ய முடியாது” என்றான். எனவே, அந்த அதிகாரிகள் எரேமியாவைக் கொண்டுப்போய் மல்கியாவின் தண்ணீர்க்குழியில் அடைத்தனர். (மல்கியா ராஜாவின் குமாரன்). அந்த தண்ணீர்க்குழி ஆலயப் பிரகாரத்தில் ராஜாவின் காவலர்கள் தங்கும் இடத்தில் இருந்தது. அந்த அதிகாரிகள் எரேமியாவைக் கயிற்றில் கட்டி தண்ணீர்க்குழியில் இறக்கினார்கள். அந்த தண்ணீர்க்குழியில் தண்ணீர் எதுவுமில்லை. ஆனால் சேறு மட்டுமே இருந்தது. எரேமியா சேற்றுக்குள் புதைந்தான். ஆனால், எபெத்மெலேக் என்ற பெயருடையவன் எரேமியாவை தண்ணீர்க்குழியில் அடைத்ததைப்பற்றி கேள்விப்பட்டான். எபெத்மெலேக் எத்தியோப்பியாவிலிருந்து வந்தவன். அவன் ராஜாவின் வீட்டில் பிரதானியாக இருந்தான். சிதேக்கியா ராஜா பென்யமீன் வாசலில் இருந்தான். எனவே எபெத்மெலேக் ராஜாவின் வீட்டை விட்டுப் போய் வாசலில் உள்ள ராஜாவிடம் பேசப் போனான். எபெத்மெலேக், “எனது பிரபுவே, ராஜாவே, அந்த அதிகாரிகள் கெட்ட வழியில் நடந்திருக்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசி எரேமியாவை மோசமாக நடத்துகிறார்கள். அவர்கள் அவனை தண்ணீர்க் குழியில் எறிந்துவிட்டனர். அங்கேயே பட்டினியால் மரிக்கவிடுவார்கள்” என்றான். பிறகு சிதேக்கியா ராஜா எத்திதோப்பியனான எபெத்மெலேக்கிற்கு ஒரு கட்டளை கொடுத்தான். இதுதான் கட்டளை: “எபெத்மெலேக், ராஜாவின் வீட்டிலிருந்து மூன்று பேரை உன்னோடு அழைத்துக்கொள். போய் எரேமியாவை அவன் மரிப்பதற்கு முன்பு தண்ணீர்க்குழியிலிருந்து வெளியே எடு.” எனவே, எபெத்மெலேக் ஆட்களைத் தன்னோடு அழைத்தான். ஆனால் முதலில் அவன் ராஜாவின் வீட்டிலுள்ள சாமான் அறைக்குக் கீழுள்ள அறைக்குச் சென்றான். அவன் கிழிந்த பழைய புடவைகளையும், கந்தைத் துணிகளையும் எடுத்தான். பின்னர் தண்ணீர்க் குழியில் அத்துணிகளையும் கயிறுகளையும் இறக்கினான். எத்திதோப்பியனான எபெத்மெலேக் எரேமியாவிடம், “இப்பழையத் துணிகளையும் கந்தைத்துணிகளையும் உன் கைகளுக்குக் கீழே கட்டிக் கொள். நாங்கள் உன்னை இழுக்கும்போது இந்தத் துணிகளை கைகளுக்கு இடையில் அடங்க வைத்துக்கொள். பிறகு, இந்தக் கயிறுகள் உன்னை சேதப்படுத்தாது” எனவே, எரேமியா எபெத்மெலேக் சொன்னபடிச் செய்தான். அம்மனிதர்கள் எரேமியாவை வெளியே எடுத்தனர். எரேமியா ஆலயப் பிரகாரத்தில் காவல் சாலையின் முற்றத்தில் தங்கினான். பிறகு, ராஜா சிதேக்கியா ஒருவனை தீர்க்கதரிசி எரேமியாவிடம் அனுப்பினான். கர்த்தருடைய ஆலயத்தின் மூன்றாவது வாசலுக்கு அவன் எரேமியாவை அழைத்தான். பிறகு ராஜா, “எரேமியா, நான் உன்னிடம் சிலவற்றைக் கேட்கப்போகிறேன். என்னிடமிருந்து எதனையும் மறைக்க வேண்டாம். எல்லாவற்றையும் நேர்மையாக எனக்குக் கூறு” என்றான். எரேமியா சிதேக்கியாவிடம், “நான் உனக்குப் பதில் சொன்னால் நீ உண்மையில் என்னைக் கொல்வாய். நான் உனக்கு அறிவுரைச் சொன்னாலும் நான் சொல்வதை நீ கேட்கமாட்டாய்” என்றான். ஆனால் சிதேக்கியா ராஜா இரகசியமாக எரேமியாவிடம் ஒரு உறுதிமொழி செய்து கொடுத்தான். சிதேக்கியா, “கர்த்தர் நமக்கு ஜீவனும் ஆத்துமாவைக் கொடுத்திருக்கிறார். கர்த்தர் ஜீவனோடு இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நான் உன்னைக் கொல்லமாட்டேன் என்பதும், உன்னைக் கொல்ல விரும்புகிற அந்த அதிகாரிகளிடம் உன்னைக் கொடுக்கமாட்டேன் என்றும் நான் வாக்குறுதி அளிக்கிறேன்” என்றான். பிறகு எரேமியா சிதேக்கியா ராஜாவிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர், கூறுகிறார், ‘நீ பாபிலோன் ராஜாவின் அதிகாரிகளிடம் சரணடைந்தால் உனது வாழ்க்கை காப்பாற்றப்படும். எருசலேம் எரிக்கப்படாமல் இருக்கும். நீயும் உனது குடும்பமும் காக்கப்படுவீர்கள். ஆனால் நீ சரணடைய மறுத்தால், பிறகு பாபிலோனியப் படையிடம் எருசலேம் கொடுக்கப்படும். அவர்கள் எருசலேமை எரிப்பார்கள். நீ அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது’” என்றான். ஆனால் ராஜா சிதேக்கியா எரேமியாவிடம், “ஆனால் நான் பாபிலோனியப் படையுடன் ஏற்கனவே சேர்ந்துவிட்ட யூதாவின் ஆட்களைப்பற்றிப் பயப்படுகிறேன். வீரர்கள் என்னை அந்த யூதாவின் ஆட்களிடம் கொடுப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன். அவர்கள் என்னை மோசமாக நடத்தி என்னைத் தாக்குவார்கள்” என்றான். ஆனால் எரேமியா பதிலாக, “யூதாவின் ஆட்களிடம் அவ்வீரர்கள் உன்னைக் கொடுக்கமாட்டார்கள். சிதேக்கியா ராஜாவே, நான் என்ன சொல்கிறேனோ அதன்படி கர்த்தருக்கு கீழ்ப்படி. பிறகு எல்லாம் உனக்கு நன்மையாகும். உனது வாழ்வு காப்பாற்றப்படும். ஆனால் பாபிலோனிய படைக்குச் சரணடைய மறுத்தால், கர்த்தர் எனக்கு என்ன நடக்கும் என்பதைக் காட்டியிருக்கிறார். இதுதான் கர்த்தர் எனக்குச் சொன்னது. யூதா ராஜாவின் வீட்டில் விடப்பட்டுள்ள ஸ்திரீகள் எல்லாம் வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோன் ராஜாவின் முக்கிய அதிகாரிகளிடம் கொண்டுவரப்படுவார்கள். உங்கள் ஸ்திரீகள் ஒரு பாடலால் பரிகாசம் செய்வார்கள். இதுதான் அப்பெண்கள் சொல்வது: “உங்கள் நல்ல நண்பர்கள் உனக்கு தந்திரம் செய்தார்கள். தீயக் காரியங்களை செய்யும்படி உன்னை மாற்றுகின்றனர். உங்கள் கால்கள் சேற்றில் சிக்கிக்கொண்டன. பின்னர் உன்னை தன்னந்தனியே அவர்கள் விட்டுவிட்டனர்.” “உன் மனைவிகளும் குழந்தைகளும் வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோனியப் படையிடம் கொடுக்கப்படுவார்கள். நீங்கள் பாபிலோன் படையிடமிருந்து தப்பிக்க முடியாது. நீ பாபிலோன் ராஜாவால் கைப்பற்றப்படுவாய். எருசலேம் எரிக்கப்படும்” என்றான். பிறகு சிதேக்கியா எரேமியாவிடம், “நீ எவரிடமும் நான் உன்னோடு பேசினேன் என்று சொல்ல வேண்டாம். நீ அவ்வாறு செய்தால் நீ மரிப்பாய். அந்த அதிகாரிகள் நான் உன்னிடம் பேசியதைக் கண்டுப்பிடித்துவிடலாம். பிறகு அவர்கள் உன்னிடம் வந்து, ‘எரேமியா, நீ ராஜா சிதேக்கியாவிடம் என்ன சொன்னாய் என்பதை எங்களிடம் கூறு. ராஜா சிதேக்கியா உன்னிடம் என்ன சொன்னான் என்பதையும் எங்களிடம் கூறு. எங்களோடு நேர்மையாக இருந்து எல்லாவற்றையும் சொல் அல்லது நாங்கள் உன்னைக் கொல்வோம்’ என்று சொல்வார்கள். அவர்கள் இதனை உன்னிடம் சொன்னால், அவர்களிடம் சொல், ‘நான் ராஜாவிடம் மீண்டும் என்னை யோனத்தானின் வீட்டின் அடியில் உள்ள பள்ளத்திற்குள் அனுப்பவேண்டாம். நான் அங்கே திரும்பப்போனால் நான் மரித்துவிடுவேன்’” என்று கெஞ்சிக்கொண்டிருந்தேன். இது நிகழ்ந்தது. அந்த அரச அதிகாரிகள் எரேமியாவிடம் கேள்விகள் கேட்க வந்தனர். ராஜா என்ன பதில் சொல்லவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தானோ அதனையே சொன்னான். பிறகு எரேமியாவை அந்த அதிகாரிகள் தனியே விட்டனர். எவரும் எரேமியாவும் ராஜாவும் என்ன பேசினார்கள் என்று கேட்கவில்லை. எனவே எரேமியா ஆலய பிரகாரத்தின் காவல் அறையில் எருசலேம் கைப்பற்றப்படும்வரை இருந்தான்.

எரேமியா 38:1-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இந்த நகரத்திலே தரித்திருக்கிறவன், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; கல்தேயரிடத்துக்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளையுடைமையைப் போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும், இந்த நகரம் பாபிலோன் ராஜாவினுடைய இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அதைப் பிடிப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும், எரேமியா எல்லா ஜனத்தோடும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை மாத்தானின் குமாரனாகிய செப்பத்தியாவும், பஸ்கூரின் குமாரனாகிய கெதலியாவும், செலேமியாவின் குமாரனாகிய யூகாலும், மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரும் கேட்டார்கள். அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்தமனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் க்ஷேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள். அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாய் ராஜா ஒன்றும் செய்யக்கூடாது என்றான். அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான். அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரமனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே இனி நகரத்திலே அப்பமில்லை என்றான். அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி சாகாததற்குமுன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான். அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடவைகளையும் கந்தைத்துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு, எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழம்புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுகளுக்குள் அடங்க வைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்; எரேமியா அப்படியே செய்தான். அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைத் துரவிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எரேமியா காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான். பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கும் மூன்றாம் வாசலிலே தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான். அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நான் அதை உமக்கு அறிவித்தால் என்னை நிச்சயமாய்க் கொலைசெய்வீரல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும், என் சொல்லைக் கேட்கமாட்டீர் என்றான். அப்பொழுது சிதேக்கியா ராஜா: நான் உன்னைக் கொல்லாமலும், உன் பிராணனை வாங்கத்தேடுகிற இந்த மனுஷர் கையில் உன்னை ஒப்புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டுபண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று எரேமியாவுக்கு இரகசியமாய் ஆணையிட்டான். அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போவீரானால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள். நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால், அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குத் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சேர்ந்துபோன யூதரின் கையிலே என்னைப் பரியாசம்பண்ண ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் ஐயப்படுகிறேன் என்றான். அதற்கு எரேமியா: உம்மை ஒப்புக்கொடார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும். நான் புறப்படுகிறதில்லை என்பீரேயாகில், கர்த்தர் எனக்குத் தெரியப்படுத்தின வார்த்தையாவது: இதோ, யூதா ராஜாவின் வீட்டிலே மீதியான எல்லா ஸ்திரீகளும் வெளியே பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டையில் கொண்டுபோகப்படுவார்கள்; அப்பொழுது, இதோ, அவர்கள் தானே உம்முடைய இஷ்டர்கள்; அவர்கள் உமக்குப் போதனைசெய்து, உம்மை மேற்கொண்டார்கள் என்றும், உம்முடைய கால்கள் உளையிலே அமிழ்ந்தினபின்பு அவர்கள் பின்வாங்கிப்போனார்கள் என்றும் அந்த ஸ்திரீகளே சொல்லுவார்கள். உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டு போவார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையினால் பிடிக்கப்பட்டு, இந்த நகரம் அக்கினியால் சுட்டெரிக்கப்படக் காரணமாயிருப்பீர் என்றான். அப்பொழுது சிதேக்கியா எரேமியாவை நோக்கி: இந்த வார்த்தைகளை ஒருவருக்கும் அறிவிக்கவேண்டாம்; அப்பொழுது நீ சாவதில்லை. நான் உன்னோடே பேசினதைப் பிரபுக்கள் கேள்விப்பட்டு, உன்னிடத்தில் வந்து: நீ ராஜாவோடே பேசிக்கொண்டதை எங்களுக்குத் தெரிவி, எங்களுக்கு ஒன்றும் மறைக்காதே, அப்பொழுது உன்னைக் கொல்லாதிருப்போம்; ராஜா உன்னோடு என்ன பேசினார் என்று உன்னைப் கேட்பார்களேயாகில், நான் யோனத்தானுடைய வீட்டிலே சாகாதபடிக்கு ராஜா என்னை அங்கே திரும்ப அனுப்பவேண்டாம் என்று, அவர் முகத்துக்கு முன்பாக விண்ணப்பம்பண்ணினேன் என்று சொல்வாயாக என்றான். பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனபடியினால், அவனோடே பேசாமலிருந்துவிட்டார்கள். அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்மட்டாக காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டுப்போனபோதும் அங்கேயே இருந்தான்.