எரேமியா 36:27-32

எரேமியா 36:27-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எரேமியா சொல்ல பாரூக் எழுதிய வார்த்தைகளைக் கொண்ட புத்தகச்சுருளை அரசன் எரித்த பின்பு, யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. “நீ இன்னொரு சுருளை எடுத்து யூதா அரசன் யோயாக்கீம் எரித்த, முதல் புத்தகச்சுருளிலிருந்த எல்லா வார்த்தைகளையும் திரும்பவும் எழுதிவை. மேலும் நீ யூதா அரசனாகிய யோயாக்கீமிடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே; “பாபிலோன் அரசன் வந்து நாட்டை அழித்து, அதிலிருந்து மனிதரையும் மிருகங்களையும் அகற்றிப்போடுவான் என்பதையும், நீ அதில் எழுதியிருக்கிறதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே.” ஆகையால் யூதாவின் அரசனாகிய யோயாக்கீமை குறித்து யெகோவா சொல்வது இதுவே: தாவீதினுடைய அரியணையில் இருந்து அரசாளுவதற்கு அவனுக்கு ஒருவனும் இருக்கமாட்டான். அவனுடைய இறந்த உடல் வெளியில் எறியப்படும். பகற்பொழுதின் சூட்டிலும், இரவின் பனியிலும் கிடக்கும். நான் அவனையும், அவன் பிள்ளைகளையும், அவனுடைய வேலையாட்களையும், அவர்களுடைய கொடுமைக்காகத் தண்டிப்பேன். அவர்கள் எனக்குச் செவிகொடுக்காதபடியால் அவர்கள்மீதும், எருசலேமில் வாழ்வோர்மீதும், யூதாவின் மக்கள்மீதும் அவர்களுக்கெதிராக நான் கூறிய எல்லா பேராபத்தையும் கொண்டுவருவேன்’ என்றார்.” அப்பொழுது எரேமியா வேறொரு புத்தகச்சுருளை எடுத்து அதை நேரியாவின் மகனும், எழுத்தாளனுமான பாரூக்கிடம் கொடுத்தான். அவன் யூதாவின் அரசன் யோயாக்கீம் நெருப்பில் எரித்த புத்தகச்சுருளிலிருந்த எல்லா வார்த்தைகளையும், எரேமியா சொல்லச்சொல்ல அதிலே எழுதினான். அவைகளோடு முந்திய வார்த்தைகளை போன்ற வேறு பல வார்த்தைகளும் சேர்க்கப்பட்டன.

எரேமியா 36:27-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ராஜா அந்தச் சுருளையும், அதில் எரேமியாவின் வாய் சொல்ல பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்தபின்பு, எரேமியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த வார்த்தைகளையெல்லாம் அதில் எழுது என்றார். மேலும் நீ யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை நோக்கி: பாபிலோன் ராஜா கண்டிப்பாக வருவான் என்பதையும், அவன் இந்த தேசத்தை அழித்து இதிலிருந்து மனிதரையும் மிருகங்களையும் அழிப்பான் என்பதையும், நீ அதில் எழுதியிருக்கிறதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே என்று யெகோவா சொல்லுகிறார். ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து: தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காருவதற்கு வம்சத்தில் ஒருவனும் இருக்கமாட்டான்; அவனுடைய சடலங்களோவென்றால், பகலின் வெப்பத்திற்கும் இரவின் குளிருக்கும் எறியப்பட்டுக்கிடக்கும். நான் அவனிடத்திலும், அவன் சந்ததியினிடத்திலும், அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து, அவன்மேலும் எருசலேமின் குடிமக்கள்மேலும், யூதா மனிதர்மேலும், நான் அவர்களுக்குச் சொன்னதும், அவர்கள் கேளாமற்போனதுமான தீங்குகளையெல்லாம் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார். அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் மகனாகிய பாருக்கு என்னும் காரியதரிசியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் நெருப்பால் சுட்டெரித்த புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதில் எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளைப்போல அநேகம் வார்த்தைகளும் அவைகளுடன் சேர்க்கப்பட்டது.

எரேமியா 36:27-32 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்குச் செய்தி வந்தது. இது, கர்த்தரிடமிருந்து வந்தச் செய்தி முழுவதும் எழுதப்பட்ட புத்தகச்சுருள் ராஜா யோயாக்கீமால் எரிக்கப்பட்டப்பிறகு வந்தது. எரேமியா பாருக்கிடம் பேசியிருந்தான். பாருக் அவற்றைப் புத்தகச்சுருளில் எழுதியிருந்தான். கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்தச் செய்தி இதுதான்: “எரேமியா, இன்னொரு புத்தகச்சுருளை எடு. முதல் புத்தகச்சுருளில் இருந்த அனைத்து செய்திகளையும் இதில் எழுது. அந்தச் சுருள் ராஜா யோயாக்கீமால் எரிக்கப்பட்டது. எரேமியா, யூதா ராஜா யோயாக்கீமிடம் இவற்றையும் சொல், கர்த்தர் சொல்கிறது இதுதான்: ‘யோயாக்கீம், அப்புத்தகச்சுருளை எரித்தாய். நீ, “பாபிலோன் ராஜா உறுதியாக வந்து இந்நாட்டை அழிப்பான் என்று எரேமியா ஏன் எழுதினான்? பாபிலோன் ராஜா இத்தேசத்திலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழிப்பான் என்று ஏன் அவன் சொல்கிறான்?” என்று சொன்னாய். எனவே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் பற்றி கர்த்தர் சொன்னது இதுதான். யோயாக்கீமின் சந்ததியார் தாவீதின் சிங்காசனத்தில் உட்காரமாட்டார்கள். யோயாக்கீம் மரிக்கும்போது, அவன் ராஜாவுக்குரிய அடக்க ஆராதனையைப் பெறமாட்டான். ஆனால் அவனது உடல் தரையில் வீசி எறியப்படும். அவனது உடல் பகலின் வெப்பத்திலும் இரவில் குளிரிலும் கிடக்கும்படி விடப்படும். கர்த்தராகிய நான், யோயாக்கீமையும் அவனது பிள்ளைகளையும் தண்டிப்பேன். அவனது அதிகாரிகளையும் நான் தண்டிப்பேன். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் அவர்கள் துன்மார்க்கர்கள். பயங்கரமான பேரழிவு அவர்களுக்குக் கொண்டுவருவதாக நான் வாக்குறுதி செய்திருக்கிறேன். எருசலேமில் வாழ்கிற ஜனங்களுக்கும் யூதாவில் வாழ்கிற ஜனங்களுக்கும் வரும். நான் வாக்குறுதி அளித்தபடி அவர்களுக்கு அனைத்து தீயவற்றையும் கொண்டு வருவேன். ஏனென்றால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை.’” பிறகு எரேமியா இன்னொரு புத்தகச்சுருளை எடுத்தான். அவன் அதனை எழுத்தாளன் நேரியாவின் குமாரனான பாருக்கிடம் கொடுத்தான். எரேமியா சொன்னபடி, பாருக் புத்தகச்சுருளில் எழுதினான். அதில் ராஜா யோயாக்கீமால் நெருப்பில் எரிக்கப்பட்ட அதே செய்திகளை எழுதினான். அச்செய்திகளைப் போன்ற பல்வேறு வார்த்தைகளும் இரண்டாவது புத்தகச்சுருளில் சேர்க்கப்பட்டன.

எரேமியா 36:27-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ராஜா அந்தச் சுருளையும், அதிலே எரேமியாவின் வாய் சொல்லப் பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்தபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த முந்தின வார்த்தைகளையெல்லாம் அதிலே எழுது என்றார். மேலும் நீ யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை நோக்கி: பாபிலோன் ராஜா நிச்சயமாய் வருவான் என்பதையும், அவன் இந்த தேசத்தை அழித்து இதிலிருந்து மனுஷரையும் மிருகங்களையும் ஒழியப்பண்ணுவான் என்பதையும் நீ அதில் எழுதினதேதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து: தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்து விடப்பட்டுக்கிடக்கும். நான் அவனிடத்திலும், அவன் சந்ததியினிடத்திலும், அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து, அவன்மேலும் எருசலேமின் குடிகள்மேலும், யூதா மனுஷர்மேலும், நான் அவர்களுக்குச் சொன்னதும், அவர்கள் கேளாமற்போனதுமான தீங்கனைத்தையும் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் குமாரனாகிய பாருக்கு என்னும் சம்பிரதியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அக்கினியால் சுட்டெரித்த புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதிலே எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளுக்கொத்த அநேகம் வார்த்தைகளும் அவைகளோடே சேர்க்கப்பட்டது

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்