எரேமியா 23:9-40

எரேமியா 23:9-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீ இறைவாக்கு உரைப்போரைக் குறித்து: என் இருதயம் எனக்குள் நொறுங்குகிறது; என் எல்லா எலும்புகளும் நடுங்குகின்றன. யெகோவாவினாலும் அவருடைய பரிசுத்த வார்த்தையினாலும் நான் ஒரு மதுவெறியனைப் போலானேன். திராட்சை மதுவினால் போதை கொண்டவனைப் போலானேன். விபசாரம் செய்பவர்களால் நாடு நிரம்பியிருக்கிறது. சாபத்தினால் நாடு வறண்டு கிடக்கின்றது. பாலைவனத்து மேய்ச்சல் நிலங்கள் வாடியிருக்கின்றன. இறைவாக்கு உரைப்போர் தீய வழிகளைப் பின்பற்றி தங்கள் அதிகாரத்தை அநீதியாக உபயோகிக்கிறார்கள். “இறைவாக்கு உரைப்பவனும், ஆசாரியனுமாகிய இருவரும் இறைவனை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுடைய கொடுமையை என்னுடைய ஆலயத்திலும் நான் காண்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அதனால் அவர்களுடைய வழி சறுக்கலாகிவிடும்; அவர்கள் இருளுக்குள் துரத்தப்பட்டு விழுவார்கள். அவர்கள் தண்டிக்கப்படும் வருடத்தில், நான் அவர்கள்மேல் பேராபத்தைக் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “சமாரியாவின் இறைவாக்கு உரைப்போர் மத்தியில் வெறுக்கத்தக்க இக்காரியத்தைக் கண்டேன்: அவர்கள் பாகாலைக் கொண்டு இறைவாக்கு சொல்லி, என் மக்களான இஸ்ரயேலரை தவறாய் வழிநடத்தினார்கள். நான் எருசலேமின் இறைவாக்கு உரைப்போர் மத்தியிலுங்கூட மோசமான ஒரு செயலைக் கண்டேன். அவர்கள் விபசாரம் செய்கிறார்கள். உண்மை வழியில் வாழவில்லை. ஒருவனும் தனது கொடுமையைவிட்டுத் திரும்பாதபடி, தீயவரின் கைகளைப் பெலப்படுத்துகிறார்கள். அவர்கள் எல்லோரும் எனக்கு சோதோமைப்போல் இருக்கிறார்கள். எருசலேம் மக்கள் கொமோராவைப்போல் இருக்கிறார்கள்.” ஆகவே சேனைகளின் யெகோவா இறைவாக்கு உரைப்போரைக் குறித்து சொல்வது இதுவே: “அவர்களை நான் கசப்பான உணவை உண்ணச்செய்து, நச்சுத் தண்ணீரையும் குடிக்கச் செய்வேன். ஏனெனில் எருசலேமின் இறைவாக்கினரிடமிருந்தே இறைவனுக்குக் கீழ்ப்படியாத தன்மை நாடு முழுவதும் பரவியிருக்கிறது” என்கிறார். சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “இறைவாக்கு உரைப்போர் சொல்லும் இறைவாக்குகளைக் கேட்க வேண்டாம். அவர்கள் பொய்யான எதிர்பார்ப்பினால் உங்கள் மனதை நிரப்புகிறார்கள். யெகோவாவின் வாயிலிருந்து அல்ல, தங்கள் மனதிலுள்ள சுயதரிசனத்தையே பேசுகிறார்கள். என்னை அவமதிப்போரிடம், ‘உங்களுக்குச் சமாதானம் இருக்கும் என்று யெகோவா சொல்கிறார்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். தங்கள் இருதயங்களின் பிடிவாதத்தில் நடப்பவர்கள் எல்லோரையும் பார்த்து, ‘உங்களுக்கு ஒரு தீங்கும் வராது’ என்கிறார்கள். யெகோவாவின் வார்த்தையைக் காணும்படியும், கேட்கும்படியும் யெகோவாவின் ஆலோசனைச் சபையில் அவர்களில் எவன் நின்றான்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்? பாருங்கள், யெகோவாவின் பெருங்காற்றாகிய கொடிய புயல் வெளிப்படும். அது கொடியவர்களின் தலையின்மேல் சுழல் காற்றாய் மோதும். யெகோவா தமது இருதயத்திலுள்ள நோக்கங்களை முழுவதுமாக நிறைவேற்றும்வரை அவரது கோபம் தணிவதில்லை. வரும் நாட்களில் இதைத் தெளிவாக விளங்கிக்கொள்வீர்கள். இந்த இறைவாக்கு உரைப்போரை நான் அனுப்பவில்லை. ஆயினும் அவர்கள் தங்களுடைய செய்திகளுடன் ஓடிவந்திருக்கிறார்கள். நான் அவர்களுடன் பேசவில்லை. அவர்களோ இறைவாக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னுடைய ஆலோசனைச் சபையில் இருந்திருந்தால், என் மக்களுக்கு என்னுடைய வார்த்தைகளையே அறிவித்திருப்பார்கள். என்னுடைய மக்களை அவர்களுடைய தீயவழிகளிலிருந்தும், செயல்களிலிருந்தும் திருப்பியிருப்பார்கள். “நான் அருகில் இருக்கும் இறைவன் மட்டுமோ? தூரத்தில் நடப்பதை அறியாத இறைவனோ?” என யெகோவா சொல்கிறார். “நான் காணாதபடிக்கு யாராவது தன்னை மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள முடியுமா?” என்று யெகோவா அறிவிக்கிறார். “வானத்தையும், பூமியையும் நிரப்புகிறவர் நான் அல்லவோ?” என யெகோவா அறிவிக்கிறார். “இறைவாக்கு உரைப்போர் என் பெயரில் பொய்களை இறைவாக்காகச் சொல்கிறதை நான் கேட்டிருக்கிறேன். அவர்கள், ‘நான் கனவு கண்டேன்! நான் கனவு கண்டேன்!’ என்கிறார்கள். இவ்வாறு தங்கள் வஞ்சனையான எண்ணங்களை, இறைவாக்காகக் கூறும் இந்தப் பொய் இறைவாக்கினரின் இருதயங்களில் இது எவ்வளவு காலத்திற்குத் தொடரும்? என் மக்களின் தந்தையர் பாகால் வழிபாட்டினால் என் பெயரை மறந்தார்கள். அதுபோல, இவர்களும் தாங்கள் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளும் தங்கள் கனவுகள், என் மக்களை என் பெயரை மறக்கும்படி செய்யும் என எண்ணுகிறார்கள். கனவையுடைய இறைவாக்கினன் தன் கனவைச் சொல்லட்டும். ஆனால் என்னுடைய வார்த்தையை உடையவனோ அதை உண்மையாக கூறட்டும். தானியத்துடன் வைக்கோலுக்கு என்ன வேலை?” என்று யெகோவா அறிவிக்கிறார். “என்னுடைய வார்த்தை நெருப்பைப் போன்றது அல்லவா? கற்பாறையை துண்டுகளாய் நொறுக்கும் சம்மட்டியைப் போன்றதல்லவா?” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஆகையால்” யெகோவா அறிவிக்கிறதாவது: “ஒருவரிடமிருந்து இன்னொருவர் வார்த்தைகளை எடுத்து, இது யெகோவாவிடமிருந்து வந்தது என்று சொல்லுகிற இறைவாக்கினருக்கு நான் விரோதமாய் இருக்கிறேன். ஆம்” யெகோவா அறிவிக்கிறதாவது: “தங்கள் நாக்குகளை அசைத்து, ‘யெகோவா சொல்கிறார்’ என்று சொல்கிற இறைவாக்கு உரைப்போரையும் நான் எதிர்க்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார். பொய்யான கனவுகளை இறைவாக்காக கூறுபவருக்கு நான் விரோதமாக இருக்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “துணிகரமான பொய்களைக் கூறி என் மக்களை தவறாய் வழிநடத்துகிறார்கள்; நானோ அவர்களை அனுப்பவுமில்லை; அவர்களை நியமிக்கவுமில்லை. அவர்களால் இந்த மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “இந்த மக்களோ, இறைவாக்கினனோ, ஆசாரியனோ உன்னிடம், ‘யெகோவாவின் வாக்கு என்ன?’ என்று கேட்டால் நீ அவர்களிடம், ‘வாக்கு என்ன? உன்னைக் கைவிட்டு விடுவேன், என்று யெகோவா சொல்கிறார்’ என்று சொல். ஒரு இறைவாக்கினனோ, ஆசாரியனோ, வேறு எவனோ, ‘இதுவே யெகோவாவின் வாக்கு’ என்று அதிகாரமாய் சொன்னால் நான் அவனையும், அவன் குடும்பத்தையும் தண்டிப்பேன். உங்களில் ஒவ்வொருவனும் தன் நண்பனிடத்திலும், உறவினனிடத்திலும், ‘யெகோவாவின் பதில் என்ன?’ அல்லது ‘யெகோவா என்ன பேசியிருக்கிறார்?’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் நீங்களோ இனிமேலும், ‘யெகோவாவின் பாரம்’ என்று எதையும் சொல்லவேண்டாம். ஏனெனில் ஒவ்வொருவனுடைய சொந்த வார்த்தையும் அவனவனுடைய பாரமாயிருக்கிறது. இவ்விதமாக எங்கள் இறைவனாகிய சேனைகளின் யெகோவாவான வாழும் இறைவனின் வார்த்தைகளை நீங்கள் புரட்டுகிறீர்கள். நீங்கள் இறைவாக்கினரிடம் ‘யெகோவா உனக்குக் கொடுத்த பதில் என்ன?’ அல்லது ‘யெகோவா என்ன பேசியிருக்கிறார்?’ என்றே கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ‘யெகோவாவின் வாக்கு இதுவே’ என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனாலும் யெகோவா கூறுவது இதுவே: ‘யெகோவாவின் வாக்கு இதுவே என்று நீங்கள் அதிகாரமாய் சொல்லக்கூடாது’ என்று நான் உங்களுக்குச் சொல்லியிருந்தேன். அப்படியிருந்தும் நீங்கள், ‘யெகோவாவின் வாக்கு இதுவே’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள். ஆகையால் நான் நிச்சயமாக உங்களை மறந்து, உங்களுக்கும், உங்கள் தந்தையருக்கும் கொடுத்த பட்டணத்துடன், உங்களையும் என் முன்னின்று தள்ளிவிடுவேன். நான் உங்கள்மேல் நித்திய அவமானத்தை, மறக்கமுடியாத நித்திய வெட்கத்தைக் கொண்டுவருவேன்.”

எரேமியா 23:9-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தீர்க்கதரிசிகளுக்காக என் இருதயம் என் உள்ளத்தில் நொறுங்கியிருக்கிறது; என் எலும்புகளெல்லாம் அதிருகிறது; கர்த்தருக்காகவும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளுக்காகவும் நான் வெறித்திருக்கிற மனிதனைப்போலவும் மதுபானம் மேற்கொண்டவனைப்போலவும் இருக்கிறேன். தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்திரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது; அவர்கள் ஓட்டம் பொல்லாதது; அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது. தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள்; என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். ஆதலால், அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டில் சறுக்கலான வழியாயிருக்கும், துரத்தப்பட்டு அதில் விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருடத்தில் அவர்கள்மேல் பொல்லாப்பை வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் மக்களை மோசம்போக்கினார்கள். எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்செய்து, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்பாமல் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லோரும் எனக்குச் சோதோமைப்போலவும், அதின் குடிமக்கள் கொமோராவைப்போலவும் இருக்கிறார்கள். ஆதலால் சேனைகளின் யெகோவா தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குச் சாப்பிட எட்டியையும், குடிக்க விஷம் கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரவிற்றோ என்று சொல்லுகிறார். உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமையடையச் செய்கிறார்கள்; யெகோவாவுடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். அவர்கள் என்னை அசட்டை செய்கிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று யெகோவா சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்தில் நடக்கிற அனைவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள். யெகோவாவுடைய ஆலோசனையில் நின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்? இதோ, யெகோவாவுடைய பெருங்காற்றாகிய கொடிய புயல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் கடுமையாக மோதும். யெகோவா தம்முடைய இருதயத்தின் நினைவுகளை செய்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள். அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களுடன் நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அவர்கள் என் ஆலோசனையில் நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை மக்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள். நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார். யாராவது தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள முடியுமோ என்று யெகோவா சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார். சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் பெயரைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன். எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்தில் ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள். என் மக்களின் முற்பிதாக்கள் பாகாலுக்காக என் பெயரை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினால் என் பெயரை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள். சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று யெகோவா சொல்லுகிறார். என் வார்த்தை நெருப்பைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று யெகோவா சொல்லுகிறார். ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார். இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் அதை சொன்னார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார். இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் மக்களைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த மக்களுக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று யெகோவா சொல்லுகிறார். யெகோவா சொன்னது என்னவென்று, இந்த மக்களாகிலும் ஒரு தீர்க்கதரிசியாகிலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பதில் என்று நீ அவர்களுடன் சொல்லவேண்டும். கர்த்தரால் வரும் பதில் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் மக்களாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனிதனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். யெகோவா என்ன பதில் கொடுத்தார்? யெகோவா என்ன சொன்னார்? என்று நீங்கள் அவரவர் தங்கள் அருகில் உள்ளவனையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேளுங்கள். ஆனால் கர்த்தரால் வரும் பதில் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவனவன் வார்த்தையே அவனவனுக்குப் பதிலாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் யெகோவா என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள். யெகோவா உனக்கு என்ன பதில் கொடுத்தார்? யெகோவா என்ன சொன்னார்? என்று நீ தீர்க்கதரிசியைக் கேட்பாயாக. நீங்களோவென்றால், கர்த்தரால் வரும் பதில் என்று சொல்லுகிறதினால்: யெகோவாவின் பதில் என்று சொல்லாதிருங்களென்று நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியும், நீங்கள் இந்த வார்த்தையைக் யெகோவாவின் பதில் என்று சொல்லுகிறீர்களே. ஆதலால், இதோ, நான் உங்களை முற்றிலும் மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும், எனக்கு முன்பாக இல்லாதபடி கைவிட்டு, மறக்கமுடியாத, நிலையான நிந்தையையும், நிலையான வெட்கத்தையும் உங்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 23:9-40 பரிசுத்த பைபிள் (TAERV)

தீர்க்கதரிசிகளுக்கான ஒரு செய்தி: நான் மிகவும் சோகமாக இருக்கிறேன். என் இருதயம் உடைந்திருக்கிறது. எனது அனைத்து எலும்புகளும் அசைகின்றன. நான் (எரேமியா) குடிக்காரன் போல் இருக்கிறேன். கர்த்தரினிமித்தமும் அவரது பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும். யூதா நாடு முழுவதும் வேசித்தனம் என்னும் பாவம் செய்த ஜனங்களால் நிறைந்துள்ளது. அவர்கள் பல வழிகளில் விசுவாசமற்றவர்களாக இருக்கிறார்கள். கர்த்தர் அந்த நாட்டை சபித்தார். அது மிகவும் வறண்டுபோயிற்று. செடிகள் வாடி மேய்ச்சல் நிலங்கள் செத்துப்போயின. வயல்கள் வனாந்தரங்களைப்போன்று ஆயின. தீர்க்கதரிசிகள் எல்லாம் தீயவர்கள். அத்தீர்க்கதரிசிகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி தவறான வழிகளில் அதிகாரத்தைச் செலுத்தினார்கள். “தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் கூடத் தீயவர்கள் ஆனார்கள். அவர்கள் எனது சொந்த ஆலயத்தில் தீயவற்றைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. “எனது செய்தியை அவர்களுக்கு கொடுப்பதை நான் நிறுத்துவேன். இது அவர்கள் இருட்டில் நடப்பதைப்போன்றது. இது அந்தத் தீர்க்கதரிசிகளுக்கும் ஆசாரியர்களுக்கும் வழுக்குகின்ற சாலையைப்போன்றது. அவர்கள் அந்த இருளில் விழுவார்கள். அவர்களுக்கு நான் துரதிர்ஷ்டம் கொண்டு வருவேன். நான் அந்தத் தீர்க்கதரிசிகளையும் ஆசாரியர்களையும் தண்டிப்பேன்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. “சமாரியா தீர்க்கதரிசிகள் தவறுகள் செய்வதை நான் பார்த்தேன். பொய்த் தெய்வமாகிய பாகாலின் பெயரால் அத்தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வதைப் பார்த்தேன். அத்தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் ஜனங்களை, கர்த்தரைவிட்டு வெளியே வழிநடத்திச் சென்றனர். இப்போது நான் யூதாவிலுள்ள தீர்க்கதரிசிகள் எருசலேமில் பயங்கரமான செயல்கள் செய்வதைப் பார்க்கிறேன். இத்தீர்க்கதரிசிகள் வேசித்தனம் என்னும் பாவத்தைச் செய்கின்றனர். அவர்கள் பொய்களைக் கேட்கின்றனர். அவர்கள் பொய்யான போதனைகளுக்கு அடிபணிகிறார்கள். அவர்கள் தீயவர்கள் தொடர்ந்து தீயச் செயல்களைச் செய்ய ஊக்குவிக்கிறார்கள். எனவே, ஜனங்கள் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. அவர்கள் சோதோமின் ஜனங்களைப்போன்று இருக்கிறார்கள். இப்போது எருசலேம் எனக்கு கொமோராபோன்று உள்ளது.” எனவே, தீர்க்கதரிசிகளைப்பற்றி சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறது இதுதான்: “நான் அத்தீர்க்கதரிசிகளை தண்டிப்பேன். தண்டனையானது விஷமுள்ள உணவை உண்பது போலவும், விஷத்தண்ணீரை குடிப்பதுபோன்றும் இருக்கும். தீர்க்கதரிசிகளுக்கு ஆன்மீக நோய் ஏற்பட்டது. அந்நோய் நாடு முழுவதும் பரவியது. எனவே, அத்தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன். அந்நோய் எருசலேமிலிருக்கும் தீர்க்கதரிசிகளிடமிருந்து வந்தது.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “உங்களில் அத்தீர்க்கதரிசிகள் சொல்பவற்றில் கவனம் செலுத்தாதீர்கள். அவர்கள் உங்களை முட்டாளாக்க முயல்கிறார்கள். அத்தீர்க்கதரிசிகள் தரிசனங்களைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் என்னிடமிருந்து அத்தரிசனங்களைப் பெறவில்லை. அவர்களின் தரிசனங்கள் அவர்களது சொந்த மனதிலிருந்தே வருகின்றன. கர்த்தரிடமிருந்து வந்த உண்மையான செய்தியைச் சிலர் வெறுக்கிறார்கள். எனவே, அத்தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு வேறுபட்டச் செய்தியைக் கூறுகிறார்கள். அவர்கள், ‘உங்களுக்கு சமாதானம் இருக்கும்’ என்று கூறுகிறார்கள். சில ஜனங்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்யவிரும்புவதை மட்டுமே செய்கிறார்கள். எனவே அத்தீர்க்கதரிசிகள், ‘உங்களுக்கு எந்தத் தீமையும் ஏற்படாது!’ என்று கூறுகிறார்கள். ஆனால் அத்தீர்க்கதரிசிகளில் எவரும் பரலோகச் சபையில் நின்றிருக்கமாட்டார்கள். அவர்களில் எவரும் கர்த்தருடைய செய்தியைப் பார்த்திருக்கவோ கேட்டிருக்கவோமாட்டார்கள். அவர்கள் எவரும் கர்த்தருடைய செய்தியை கூர்ந்து கவனமாகக் கேட்டிருக்கமாட்டார்கள். இப்பொழுது கர்த்தருடைய தண்டனை புயலைப் போன்று வரும். கர்த்தருடைய கோபம் கொடிய புயலைப்போன்றிருக்கும். கெட்ட மனிதர்களின் தலைகளை மோதித் தள்ளவரும். கர்த்தருடைய கோபம், அவர் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாரோ அவற்றைச் செய்து முடிக்கும்வரை நிற்காது. அந்த நாட்களின் முடிவில் நீங்கள் தெளிவாக அறிந்துக்கொள்வீர்கள். அத்தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை. ஆனால், அவர்கள் செய்தியைச் சொல்ல ஓடினார்கள். நான் அவர்களோடு பேசவில்லை. ஆனால் அவர்கள் என் நாமத்தில் பிரசங்கம் செய்தனர். அவர்கள் எனது பரலோகச்சபையில் நின்றிருந்தால், பிறகு யூதாவின் ஜனங்களுக்கு என் செய்தியைச் சொல்லியிருப்பார்கள். அவர்கள் தீயசெயல் செய்யாமல் ஜனங்களைத் தடுத்திருப்பார்கள். அவர்கள் பாவம் செய்யாதபடி ஜனங்களைத் தடுத்திருப்பார்கள்.” “நான் தேவன்! நான் எப்பொழுதும் அருகில் இருக்கிறேன்!” இந்த வார்த்தை கர்த்தரிடத்திலிருந்து வருகிறது. “நான் தூரத்தில் இல்லை. சில மறைவிடங்களில் ஒருவன் என்னிடமிருந்து ஒளிய முயலலாம். ஆனால், அவனைப் பார்ப்பது எனக்கு எளிதாகும். ஏனென்றால், நான் பரலோகம் பூமி என்று எல்லா இடங்களிலும் இருக்கிறேன்!” கர்த்தர் இவற்றைச் சொன்னார். “என் நாமத்தில் பொய்யைப் பிரசங்கம் செய்யும் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். அவர்கள், ‘எனக்கு ஒரு கனவு வந்தது. எனக்கு ஒரு கனவு வந்தது’ என்றார்கள். அவர்கள் இவற்றைச் சொல்வதை நான் கேட்டேன். இது இன்னும் எவ்வளவு காலம் செல்லும்? அத்தீர்க்கதரிசிகள் பொய்களை நினைக்கின்றனர். பிறகு அப்பொய்களை ஜனங்களுக்குப் போதிக்கிறார்கள். இத்தீர்க்கதரிசிகள் ஜனங்கள் என் நாமத்தை மறக்கச் செய்ய முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பொய்யான கனவுகளை அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லி இதனைச் செய்கிறார்கள். அவர்களது முற்பிதாக்கள் என்னை மறந்தது போலவே, எனது ஜனங்கள் என்னை மறக்கும்படி அவர்கள் செய்ய முயல்கிறார்கள். அவர்களின் முற்பிதாக்கள் என்னை மறந்துவிட்டு பொய்யான பாகால் தெய்வத்தை தொழுதனர். வைக்கோல் கோதுமையைப்போன்று ஆகாது. இது போலவே, அத்தீரிக்கதரிசிகளின் கனவுகள் எல்லாம் என்னிடமிருந்து வரும் செய்திகள் ஆகாது. ஒருவன் தனது கனவுகளைப்பற்றிச் சொல்ல விரும்பினால், அவன் சொல்லட்டும். ஆனால், எனது நற்செய்தியை கேட்கட்டும். நற்செய்தியைக் கேட்கிற மனிதன் எனது செய்தியை உண்மையுடன் கூறட்டும்.” “எனது செய்தி அக்கினியைப் போன்றது இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. இது பாறையை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றது.” “எனவே நான் கள்ளதீர்க்கதரிசிகளுக்கு எதிரானவர்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. “இத்தீர்க்கதரிசிகள் ஒருவரிடமிருந்து ஒருவர் என் வார்த்தைகளைத் திருடுகிறார்கள். நான் பொய்யான தீர்க்கதரிசிகளுக்கு எதிரானவர்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “அவர்கள் தம் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அச்செய்தியை என்னிடமிருந்து வருவதாக நடிக்கின்றனர். பொய்க் கனவுகளைப் பரப்பும் பொய்த் தீர்க்கதரிகளுக்கு நான் எதிரானாவர்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “அவர்கள் எனது ஜனங்களைப் பொய்யாலும், பொய் போதனைகளாலும் தவறாக வழிகாட்டுகின்றனர். ஜனங்களுக்குப் போதிக்க நான் இத்தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை. எனக்காக எதையும் செய்யும்படி நான் அவர்களுக்குக் கட்டளை இடவில்லை. யூதாவின் ஜனங்களுக்கு அவர்களால் உதவி செய்யவே முடியாது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “யூதாவின் ஜனங்களே, ஒரு தீர்க்கதரிசியோ, ஒரு ஆசாரியரோ உன்னிடம் ‘கர்த்தருடைய அறிக்கை என்ன என்று கேட்கும்போது’ நீ அவர்களுக்கு, ‘நீங்கள் கர்த்தருக்குப் பெரும் பாரமாக இருக்கிறீர்கள். நான் இப்பாரத்தைத் தூக்கிப் போடுவேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது என்று சொல். “ஒரு தீர்க்கதரிசி அல்லது ஆசாரியன், அல்லது ஜனங்களில் ஒருவன் சொல்லலாம். ‘இது தான் கர்த்தருடைய அறிக்கை …’ அம்மனிதன் பொய் சொன்னான். அவனையும் அவனது குடும்பத்தையும் நான் தண்டிப்பேன். இதைத்தான் ஒருவரிடம் ஒருவர் நீங்கள் கேட்கவேண்டும். ‘கர்த்தருடைய பதில் என்ன?’ அல்லது ‘கர்த்தர் என்ன பதில் சொன்னார்?’ ‘கர்த்தருடைய அறிவிப்பு’ பெருஞ்சுமையானது என்று ஒருபோதும் மீண்டும் சொல்லமாட்டாய். ஏனென்றால், கர்த்தருடைய நற்செய்தி யாருக்கும் பெருஞ்சுமையாக இருக்கக்கூடாது. ஆனால் நீ எங்கள் தேவனுடைய வார்த்தையை மாற்றினாய். அவரே ஜீவனுள்ள தேவன். சர்வ வல்லமையுள்ள கர்த்தர்! “நீ தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்பினால் ஒரு தீர்க்கதரிசியைக் கேள். ‘கர்த்தர் என்ன பதிலைக் கொடுத்தார்?’ அல்லது ‘கர்த்தர் என்ன சொன்னார்?’ ஆனால் ‘கர்த்தரிடமிருந்து வந்த அறிக்கை (பெருஞ்சுமை) என்ன’ என்று சொல்ல வேண்டாம். நீங்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பிறகு, கர்த்தர் இவற்றை உனக்குச் சொல்வார், ‘எனது செய்தியைக் “கர்த்தரிடமிருந்து வந்த அறிவிப்பு” பாரமானது என்று சொல்ல வேண்டாம். இவ்வார்த்தைகளைச் சொல்லவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்னேன். ஆனால், நீ எனது செய்தியை பெருஞ்சுமை என்று அழைத்தாய். எனவே, நான் உன்னைப் பெருஞ்சுமையைப் போன்று தூக்கித் தூர எறிவேன். உங்கள் முற்பிதாக்களுக்கு எருசலேம் நகரத்தைக் கொடுத்தேன். ஆனால், நான் உன்னையும் அந்நகரத்தையும் என்னை விட்டுத் தூர எறிவேன். உன்னை முடிவற்ற அவமானத்திற்கு உள்ளாக்குவேன். உன் அவமானத்தை ஒருபோதும் நீ மறக்கமாட்டாய்.’”

எரேமியா 23:9-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தீர்க்கதரிசிகளினிமித்தம் என் இருதயம் என் உள்ளத்திலே நொறுங்கியிருக்கிறது; என் எலும்புகளெல்லாம் அதிருகிறது; கர்த்தர் நிமித்தமும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும் நான் வெறித்திருக்கிற மனுஷனைப்போலவும் மதுபானம் மேற்கொண்டவனைப்போலவும் இருக்கிறேன். தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்தரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது; அவர்கள் ஓட்டம் பொல்லாதது; அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது. தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள்; என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆதலால், அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டிலே சறுக்கலான வழியாயிருக்கும், துரத்துண்டு அதிலே விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்திலே அவர்கள்மேல் பொல்லாப்பை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தை மோசம்போக்கினார்கள். எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள். ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார். உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள். கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்? இதோ, கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புசல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் உக்கிரமாய் மோதும். கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள். அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள். நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார். யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார். சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன். எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்தில் ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள். என் ஜனத்தின் பிதாக்கள் பாகாலினிமித்தம் என் நாமத்தை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினாலே என் நாமத்தை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள். சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார். என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என்வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தராலே சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாகிலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பாரம் என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும். கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் என்ன மறுஉத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீங்கள் அவரவர் தங்கள் அயலானையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேட்பீர்களாக. ஆனால் கர்த்தரால் சுமரும் பாரம் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவனவன் வார்த்தையே அவனவனுக்குப் பாரமாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள். கர்த்தர் உனக்கு என்ன மறுஉத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீ தீர்க்கதரிசியைக் கேட்பாயாக. நீங்களோவெனில், கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிறபடியினாலே: கர்த்தரின் பாரம் என்று சொல்லாதிருங்களென்று நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியும், நீங்கள் இந்த வார்த்தையைக் கர்த்தரின் பாரம் என்று சொல்லுகிறீர்களே. ஆதலால், இதோ, நான் உங்களை மறக்கவே மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும், எனக்கு முன்பாக இராதபடிக்குக் கைவிட்டு, மறக்கப்படாத நித்திய நிந்தையையும், நித்திய இலச்சையையும் உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.