எரேமியா 20:7-13

எரேமியா 20:7-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம் பண்ணுகிறார்கள். நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக் கூறுகிறேன்; நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று. ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று. அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயம் சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து: ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு, அவனில் குரோதந்தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள். கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும். ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன். கர்த்தரைப் பாடுங்கள், கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.

எரேமியா 20:7-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர், நான் ஏமாந்து போனேன்; நீர் உமது பலத்தினால் என்னை அடக்கி என்னை மேற்கொண்டீர். நாள்முழுவதும் நான் கேலி செய்யப்படுகிறேன். எல்லோரும் என்னை ஏளனம் பண்ணுகிறார்கள். நான் பேசும்போதெல்லாம் வன்முறையையும், அழிவையுமே சத்தமிட்டுக் கூறி அறிவிக்கிறேன். ஆகவே யெகோவாவின் வார்த்தை, காலமெல்லாம் எனக்கு அவமானத்தையும், நிந்தையையுமே கொண்டு வந்திருக்கிறது. ஆனால் நான், “அவரைப்பற்றி ஒன்றும் சொல்லமாட்டேன்; இல்லையெனில், அவருடைய பெயரில் இனிமேல் பேசமாட்டேன்” என்று சொல்வேனாகில், அவருடைய வார்த்தை என் எலும்புகளுக்குள் அடைக்கப்பட்டு, என் இருதயத்தில் எரிகிற நெருப்பைப்போல் இருக்கிறதே. அதை அடக்கிவைக்க முயன்று இளைத்துவிட்டேன். என்னால் அதை அடக்கிவைக்கவே முடியாது. சுற்றிலும் “பயங்கரமே காணப்படுகிறது. கண்டிக்கிறோம்! அவனை கண்டனம் செய்கிறோம்!” என்று அநேகர் தாழ் குரலில் சொல்வதைக் கேட்கிறேன். என்னுடைய நண்பர்கள் எல்லோரும் என் விழுகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள், “ஒருவேளை அவன் ஏமாந்து போவான்; அப்பொழுது நாம் அவனை மேற்கொண்டு அவனைப் பழிவாங்குவோம்” என்று சொல்கிறார்கள். ஆனாலும், யெகோவா வலிமையுள்ள போர்வீரனைப்போல் என்னுடன் இருக்கிறார். ஆகையால் என்னைத் துன்புறுத்துகிறவர்கள் இடறுவார்கள்; அவர்கள் என்னை மேற்கொள்ளமாட்டார்கள். அவர்கள் தோற்றுப்போய் மிகவும் அவமானம் அடைவார்கள்; அவர்களின் அவமானம் ஒருபோதும் மறக்கப்படமாட்டாது. சேனைகளின் யெகோவாவே! நீதிமானைச் சோதித்து, இருதயத்தையும், மனதையும் ஆராய்கிறவரே! நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணும்படி செய்யும். ஏனெனில் நான் என் வழக்கை உம்மிடத்தில் ஒப்படைத்துவிட்டேன். யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்; யெகோவாவுக்குத் துதி செலுத்துங்கள்; அவர் கொடியவர்களின் கையிலிருந்து எளியவர்களுடைய உயிரைத் தப்புவிக்கிறார்.

எரேமியா 20:7-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, என்னை இணங்கச் செய்தீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லோரும் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள். நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் அழிவு என்றும் சத்தமிட்டுச் சொல்கிறேன்; நான் சொன்ன யெகோவாவுடைய வார்த்தை அனுதினமும் எனக்கு நிந்தையும், பரியாசமுமானது. ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம் செய்யாமலும் இனிக் யெகோவாவுடைய பெயரில் பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற நெருப்பைப்போல என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து சோர்ந்துபோனேன்; எனக்குப் பொறுக்கமுடியாமல் போனது. அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயம் சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னுடன் சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்வரை காத்திருந்து: ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு, அவனில் கோபத்தைத் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள். யெகோவாவோ பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னுடன் இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காததினால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கமுடியாத நிலையான வெட்கம் அவர்களுக்கு உண்டாகும். ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள் மனதையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் யெகோவாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் செலுத்திவிட்டேன். யெகோவாவைப் பாடுங்கள், யெகோவாவை துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கையிலிருந்து காப்பாற்றுகிறார்.

எரேமியா 20:7-13 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, நீர் என்னிடம் தந்திரம் செய்தீர். நான் ஒரு முட்டாளாக இருந்தேன். நீர் என்னைவிட பலமுள்ளவர். எனவே நீர் வென்றீர். நான் வேடிக்கைக்குரிய பொருளானேன். ஜனங்கள் என்னைப் பார்த்து சிரித்தனர். நாள் முழுவதும் என்னை வேடிக்கை செய்தனர். ஒவ்வொரு முறையும் நான் பேசும்போது கதறுகிறேன். நான் எப்பொழுதும் வன்முறை மற்றும் பேரழிவு பற்றி சத்தமிடுகிறேன். நான் கர்த்தரிடமிருந்து பெற்ற வார்த்தையைப்பற்றி ஜனங்களிடம் சொல்கிறேன். ஆனால், ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்; என்னை வேடிக்கை செய்கிறார்கள். சில நேரங்களில் நான் எனக்குள் சொல்கிறேன். “நான் கர்த்தரைப்பற்றி மறப்பேன். நான் மேலும் கர்த்தருடைய நாமத்தால் பேசமாட்டேன்!” ஆனால் நான் இதனைச் சொன்னால், பிறகு கர்த்தருடைய வார்த்தை அக்கினியைப் போன்று எனக்குள் எரிந்துகொண்டு இருக்கிறது, எனது எலும்புக்குள் அது ஆழமாக எரிவதுபோன்று எனக்குத் தோன்றுகிறது! எனக்குள் கர்த்தருடைய செய்தியைத் தாங்கிக்கொள்வதில் நான் சோர்வு அடைகிறேன்! இறுதியாக அதனை உள்ளே வைத்துக்கொள்ள முடியாமல் ஆகிறது. ஜனங்கள் எனக்கு எதிராக முணுமுணுப்பதை நான் கேட்கிறேன். எங்கெங்கும் என்னைப் பயப்படுத்தும் செய்தியைக் கேட்கிறேன். என் நண்பர்களும் கூட, “அவனைப்பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்வோம்” என கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஜனங்கள் நான் தவறு செய்வேன் என்று காத்திருக்கிறார்கள். அவர்கள், “எங்களைப் பொய் சொல்லவிடுங்கள். அவன் தீயவற்றைச் செய்தான் என்று சொல்லவிடுங்கள். நாங்கள் எரேமியாவிடம் தந்திரம்செய்ய முடியும். பிறகு அவனைப் பெறுவோம். இறுதியாக நாங்கள் அவனைத் தொலைத்து ஒழிப்போம். பிறகு அவனை இறுகப்பிடிப்போம். அவன் மேலுள்ள வஞ்சத்தை தீர்த்துக்கொள்வோம்” என்றார்கள். ஆனால், கர்த்தர் என்னோடு இருக்கிறார்; கர்த்தர் பலமான போர் வீரனைப் போன்றிருக்கிறார். எனவே, என்னைத் துரத்துகிற வீரர்கள் விழுவார்கள். அந்த ஜனங்கள் என்னைத் தோற்கடிக்கமாட்டார்கள் அந்த ஜனங்கள் தோற்பார்கள். அவர்கள் ஏமாந்துப் போவார்கள். அந்த ஜனங்கள் அவமானமடைவார்கள். ஜனங்கள் அந்த அவமானத்தை என்றென்றும் மறக்கமாட்டார்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, நீர் நல்ல ஜனங்களை சோதிக்கிறீர். ஒருவனின் மனதை நீர் பார்க்கிறீர். அந்த ஜனங்களுக்கு எதிரான எனது வாதங்களை நான் உம்மிடம் சொன்னேன். எனவே அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நீர் அளிப்பதை என்னைப் பார்க்கப்பண்ணும். கர்த்தரிடம் பாடுங்கள்! கர்த்தரைத் துதியுங்கள்! கர்த்தர் ஏழைகளின் வாழ்வைக் காப்பாற்றுவார்! அவர் அவர்களைத் தீயவர்களிடமிருந்து காப்பாற்றுவார்!

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்