எரேமியா 13:1-27
எரேமியா 13:1-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா என்னிடம், “நீ போய், ஒரு மென்பட்டுக் இடைப்பட்டியை வாங்கி, உன் இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொள். ஆனால் அதில் தண்ணீர்பட விடாதே” என்றார். எனவே நான் யெகோவா அறிவுறுத்தியபடி, ஒரு இடைப்பட்டியை வாங்கி, என்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டேன். அப்பொழுது யெகோவாவின் வார்த்தை இரண்டாம்முறை எனக்கு வந்தது: “நீ வாங்கி உன் இடுப்பில் கட்டியுள்ள இடைப்பட்டியை எடுத்துக்கொண்டு, இப்பொழுது யூப்ரட்டீஸ் நதியண்டைக்குப் போய், அங்கே கற்பாறைகளின் வெடிப்பில் அதை ஒளித்து வை” என்றார். எனவே நான் போய் யெகோவா கட்டளையிட்டபடியே யூப்ரட்டீஸ் நதியண்டையில் அதை ஒளித்து வைத்தேன். அநேக நாட்களுக்குப்பின்பு யெகோவா என்னிடம், “நீ யூப்ரட்டீஸ் நதியண்டைக்குப் போய், நான் உன்னிடம் மறைத்துவைக்கும்படி சொன்ன அந்த இடைப்பட்டியை அங்கிருந்து எடு” என்றார். அப்பொழுது நான் யூப்ரட்டீஸ் நதிக்குப் போய், அதை மறைத்துவைத்த இடத்திலிருந்து தோண்டி எடுத்தேன். அந்த இடைப்பட்டியோ மக்கிப்போய் முற்றிலும் பயனற்றதாகி விட்டது. அதன்பின் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம், “யெகோவா சொல்வது இதுவே: ‘இவ்வாறே யூதாவின் பெருமையையும், எருசலேமின் மிகுந்த பெருமையையும் அழிப்பேன். இக்கொடிய மக்கள் என் வார்த்தைகளைக் கேட்க மறுத்து, தங்கள் இருதயங்களின் பிடிவாதத்தில் நடக்கிறார்கள். அவர்கள் பிற தெய்வங்களுக்குப் பணிசெய்து அவைகளின் பின்னாலேயே சென்று அவைகளை வணங்குகிறார்கள். இக்கொடிய மனிதர் முற்றிலும் பயனற்றுப்போன இந்த இடைப்பட்டியைப்போல் இருப்பார்கள். ஒரு மனிதனின் இடுப்பைச் சுற்றி இடைப்பட்டி கட்டப்படுவதுபோல் இஸ்ரயேலின் முழுக் குடும்பத்தையும் யூதாவின் முழுக் குடும்பத்தையும் என்னுடன் சேர்த்துக் கட்டினேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘அவர்கள் எனக்குப் புகழும், துதியும், கனமும் உடைய எனது மக்களாய் இருக்கும்படி இப்படிச் செய்தேன். ஆனால் அவர்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை.’ “நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ஒவ்வொரு ஜாடியும் திராட்சரசத்தால் நிரப்பப்பட வேண்டும்.’ அதற்கு அவர்கள் ஒவ்வொரு ஜாடியும் திராட்சரசத்தால் நிரப்பப்பட வேண்டுமென்று எங்களுக்குத் தெரியாதா? என்று உன்னிடம் சொன்னால், அப்பொழுது நீ அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே: தாவீதின் அரியணையிலிருக்கும் அரசர்கள், ஆசாரியர்கள், இறைவாக்கு உரைப்போர், எருசலேமின் வழிப்போக்கர் உட்பட இந்த நாட்டில் வாழும் யாவரையும் குடிபோதையில் நிரப்புவேன். நான் தகப்பன்மார், மகன்கள் என்ற வித்தியாசமின்றி ஒரேவிதமாக ஒருவருக்கு எதிராக ஒருவரை மோதியடிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார். அவர்கள்மீது எந்தவித அனுதாபத்தையோ, இரக்கத்தையோ, பரிவையோ காட்டாமல் அவர்களை அழித்துப்போடுவேன்’ ” என்கிறார். நன்றாகக் கவனித்துக் கேளுங்கள்; அகந்தையாயிராதீர்கள். ஏனெனில் யெகோவா பேசியிருக்கிறார். அவர் இருளைக் கொண்டுவருவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் பாதங்கள் இடறுவதற்கு முன்னும், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு மகிமையைக் கொடுங்கள். நீங்கள் வெளிச்சத்தை எதிர்ப்பார்க்கிறீர்கள். ஆனால் அவர் அதைக் காரிருளாக்கி மப்பும் மந்தாரமுமாக மாற்றிப்போடுவார். ஆனால் இதற்கு நீங்கள் செவிகொடாவிட்டால், உங்கள் பெருமையின் நிமித்தம் நான் எனக்குள்ளே துக்கித்துப் புலம்புவேன். யெகோவாவின் மந்தை சிறைப்பிடிக்கப்பட்டுப்போகும் என்பதால், என் கண்கள் கண்ணீர் சிந்தி மனங்கசந்து அழும். நீ அரசனிடமும் அவரின் தாய் அரசியிடமும், உங்கள் அரியணையை விட்டுக் கீழே இறங்குங்கள். ஏனெனில் மகிமையான மகுடங்கள் உங்கள் தலைகளிலிருந்து விழுந்துவிடும் என்று சொல். தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டுவிடும். அவைகளைத் திறக்க ஒருவரும் இருக்கமாட்டார்கள். யூதாவில் உள்ள மக்கள் எல்லோரும் முழுவதுமாக நாடுகடத்தப்படுவார்கள். உன் கண்களை உயர்த்தி வடக்கிலிருந்து வருகிறவர்களைப் பார். உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மந்தை எங்கே? நீ மேன்மைபாராட்டிய உன் செம்மறியாடு எங்கே? நீ விசேஷ கூட்டாளிகளாக நட்பு பாராட்டியவர்களை யெகோவா உன்மேல் ஆளுகை செலுத்த வைக்கும்போது நீ என்ன சொல்வாய்? ஒரு பெண்ணின் பிரசவ வேதனையைப்போன்ற ஒரு வேதனை உன்னைப் பற்றிக்கொள்ளாதோ? “இது ஏன் எனக்கு நடந்தது” என்று நீ உன்னையே கேட்பாயானால், அது உன் அநேக பாவங்களினாலேயே. அதனால்தான் உன் உடைகள் கிழிக்கப்பட்டு, உனது உடல் கேவலமாய் அவமானப்படுத்தப்பட்டது. எத்தியோப்பியன் தன் தோலை மாற்ற முடியுமோ? சிறுத்தை தன் புள்ளிகளை மாற்ற முடியுமோ? அதுபோலவே தீமைசெய்யப் பழகிய உங்களாலும் நன்மை செய்யமுடியாது. ஆகையினால் பாலைவனக் காற்றினால் பறக்கடிக்கப்படும் பதரைப்போல், நானும் உங்களைச் சிதறடிப்பேன். நீங்கள் என்னை மறந்து, பொய் தெய்வங்களை நம்பியிருந்தபடியால், இதுவே உங்கள் பங்கும் நான் உங்களுக்கென நியமித்த பாகமுமாகும் என யெகோவா அறிவிக்கிறார். உங்கள் நிர்வாணம் காணப்பட்டு வெட்கப்படும்படியாக நான் உங்கள் உடைகளை உங்கள் முகத்துக்கு மேலாகத் தூக்கிப் பிடிப்பேன். உங்கள் விபசாரங்களும், காமத்தின் கனைப்புகளும், உங்கள் வெட்கம் கெட்ட வேசித்தனமும் வெளிப்படும். நீங்கள் குன்றுகளின்மேலும், வயல்களின்மேலும் செய்த அருவருப்பான செயல்களை நான் கண்டிருக்கிறேன். எருசலேமே! ஐயோ உனக்குக் கேடு. எவ்வளவு காலத்துக்கு நீ அசுத்தமாயிருப்பாய்?
எரேமியா 13:1-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் இடுப்பில் கட்டிக்கொள்; அதில் தண்ணீர் படவிடாதே என்றார். நான் யெகோவாவுடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் இடுப்பில் கட்டிக்கொண்டேன். இரண்டாம்முறை யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நீ வாங்கினதும் உன் இடுப்பில் இருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிவரை போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பில் ஒளித்துவை என்றார். நான் போய், யெகோவா எனக்குக் கட்டளையிட்டபடியே அதை ஐப்பிராத்து நதியின் ஓரத்தில் ஒளித்து வைத்தேன். அநேக நாட்கள் சென்றபின்பு யெகோவா என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார். அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்தில் தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமல் போனது. அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகச்செய்வேன். என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தெய்வங்களை வணங்கி அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத மக்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப் போலாவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். கச்சையானது மனிதனுடைய இடுப்பில் இணைக்கப்பட்டு இருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரையும் யூதாவின் குடும்பத்தார் அனைவரையும், எனக்கு மக்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் இணைத்துக்கொண்டேன்; ஆனாலும் அவர்கள் கேட்காமற்போனார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எல்லா பாத்திரங்களும் திராட்சைரசத்தினால் நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறார் என்ற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: எல்லா பாத்திரங்களும் திராட்சைரசத்தினால் நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள். அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின் குடிகளெல்லோரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிமக்கள் எல்லோரையும் நான் வெறியினால் நிரப்பி, தகப்பன்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை, இரங்குவதுமில்லையென்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார். நீங்கள் காதுகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாக இராதேயுங்கள்; யெகோவா விளம்பினார். அவர் அந்தகாரத்தை வரச்செய்வதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் தடுமாறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்திற்குக் காத்திருக்கும்போது, அவர் அதை இருளும் காரிருளுமாக மாறச்செய்வதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்துங்கள். நீங்கள் இதைக் கேளாமற்போனால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, யெகோவாவுடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும். நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: கீழேவந்து உட்காருங்கள்; உங்கள் தலையின் அலங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள். தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடியில்லாமல்போகும்; அது எளிதாகச் சிறைப்பட்டுப்போகும். உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கிலிருந்து வருகிறவர்களைப் பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே? அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும், தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்கப்படுத்தினாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ? இவைகள் எனக்கு சம்பவித்தது ஏனென்று நீ உன் இருதயத்தில் சொல்வாய் என்றால், உன் மிகுதியான அக்கிரமத்தினால் உன் ஆடையின் ஓரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன. எத்தியோப்பியன் தன் தோலையும் சிறுத்தை தன் புள்ளிகளையும் மாற்றமுடிமோ? மாற்றமுடியுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மை செய்யமுடியும். ஆதலால் வனாந்திரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல அவர்களைச் சிதறடிப்பேன். நீ என்னை மறந்து, பொய்யை நம்பினதினால், இது உன்னுடைய தீர்மானமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று யெகோவா சொல்லுகிறார். உன் மானம் காணப்பட நான் உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை எடுத்துப்போடுவேன். உன் விபசாரங்களையும், உன் கனைப்புகளையும், வெளியில் மேடுகளின்மேல் நீ செய்த வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அருவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ, நீ சுத்தமாக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலம் வரைக்கும் நடக்கும் என்கிறார்.
எரேமியா 13:1-27 பரிசுத்த பைபிள் (TAERV)
இதுதான் கர்த்தர் என்னிடம் கூறுகிறது: “எரேமியா போய் ஒரு சணல் இடுப்புத் துணியை வாங்கு. பிறகு அதனை உன் இடுப்பிலே கட்டிக்கொள். அந்த இடுப்புத்துணி நனையும்படிவிடாதே.” எனவே நான், கர்த்தர் என்னிடம் செய்யச் சொன்னபடி ஒரு சணல் இடுப்புத்துணியை வாங்கினேன், அதனை என் இடுப்பிலே கட்டினேன். பிறகு கர்த்தருடைய செய்தி என்னிடம் இரண்டாவது முறையாக வந்தது. இதுதான் செய்தி: “எரேமியா நீ வாங்கினதும் இடுப்பிலே கட்டியிருக்கிறதுமான துணியை எடுத்துக்கொண்டு பேராத்துக்குப் போ. அதை அங்கே பாறையின் வெடிப்பிலே மறைத்துவை.” எனவே, நான் பேராத்துக்குப் போய் அங்கே கர்த்தர் என்னிடம் செய்யச் சொன்னபடி இடுப்புத் துணியை மறைத்து வைத்தேன். பல நாட்கள் கழிந்தது; கர்த்தர் என்னிடம், “இப்பொழுது எரேமியா! பேராத்துக்குப் போ. நான் மறைத்து வைக்கச் சொன்ன இடுப்புத்துணியை எடுத்துக்கொள்” என்று சொன்னார். எனவே, நான் பேராத்துக்குச் சென்று இடுப்புத் துணியை தோண்டி எடுத்தேன், ஆனால், இப்பொழுது என்னால் அதனை இடுப்பிலே கட்டமுடியவில்லை. ஏனென்றால், அது மிக பழமையாகிப் போயிருந்தது. அது எதற்கும் பயன்படும் அளவில் நன்றாயில்லை. பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்னது: “இடுப்புத்துணி கெட்டுப்போயிற்று, அதனை எதற்கும் பயன்படுத்த முடியாது. இதைப்போலவே, எருசலேமிலும் யூதாவிலும் உள்ள வீண்பெருமைகொண்ட ஜனங்களை அழிப்பேன். யூதாவிலுள்ள வீண் பெருமையும், தீமையும்கொண்ட ஜனங்களை, நான் அழிப்பேன். அவர்கள் எனது வார்த்தையைக் கேட்க மறுத்தனர். அவர்கள் பிடிவாதமுள்ளவர்களாக விரும்புகின்றவற்றை மட்டுமே செய்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களைப் பின் பற்றி தொழுதுகொண்டனர். யூதாவிலுள்ள அந்த ஜனங்கள் இந்தச் சணல் இடுப்புத் துணியைப்போன்று ஆவார்கள். அவர்கள் அழிக்கப்பட்டு எதற்கும் பயனற்றுப் போவார்கள். ஒரு இடுப்புத் துணியை ஒரு மனிதன் இடுப்பைச்சுற்றி இறுக்கமாக கட்டுகிறான். இதைப்போலவே நான் என்னைச் சுற்றிலும் இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதாவின் குடும்பத்தையும் கட்டினேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அதைச் செய்தேன். எனவே, அந்த ஜனங்கள் என் ஜனங்களாவார்கள். பிறகு, எனது ஜனங்கள் கனமும் துதியும் மகிமையும் எனக்குக் கொண்டு வருவார்கள். ஆனால் எனது ஜனங்கள் என்னை கவனிக்கவில்லை.” “எரேமியா! யூதாவின் ஜனங்களிடம் சொல்: ‘இதுதான் கர்த்தர், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது: ஒவ்வொரு திராட்சை ஜாடிகளும், திராட்சை ரசத்தால் நிரப்பப்படவேண்டும்’ அந்த ஜனங்கள் சிரிப்பார்கள். உன்னிடம், ‘நிச்சயமாக, ஒவ்வொரு திராட்சை ஜாடியும், திராட்சை ரசத்தால் தான் நிரப்பப்படவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்’ என்பார்கள். பிறகு நீ அவர்களிடம், இதுதான் கர்த்தர் சொல்வது. இந்த நாட்டில் வாழ்கிற ஒவ்வொரு மனிதனையும் குடிகாரனைப் போன்று உதவியற்றவனாகச் செய்வேன். நான் தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ராஜாக்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நான் ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் எருசலேமில் வாழும் அனைத்து ஜனங்களையும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நான் யூதாவின் ஜனங்களை ஒருவர் மீது ஒருவர் மோதி விழும்படி பண்ணுவேன். தந்தைகளும் குமாரர்களும் ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள்” என்று கூறுவாய், என்று கர்த்தர் சொல்லுகிறார். “‘நான் அவர்களுக்காக வருத்தமோ இரக்கமோ அடைவது இல்லை. நான் யூதாவின் ஜனங்களை அழிப்பதிலிருந்து நிறுத்த, இரக்கத்தை அனுமதிக்கமாட்டேன்.’” கேள் உன் கவனத்தைச் செலுத்து. கர்த்தர் உன்னோடு பேசியிருக்கிறார். வீண் பெருமைகொள்ளாதே. உனது தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவரைத் துதி. இல்லையெனில் அவர் இருளைக் கொண்டுவருவார். இருளான குன்றுகளின்மேல் விழுமுன், அவரைத் துதி. இல்லாவிட்டால் யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் ஒளிக்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், கர்த்தர் அடர்த்தியான இருளைக் கொண்டு வருவார். கர்த்தர் ஒளியை மிக அடர்த்தியான இருளாக மாற்றிவிடுவார். யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் கர்த்தர் கூறுவதைக் கேட்காவிட்டால், உங்களது வீண்பெருமை எனது அழுகைக்குக் காரணம் ஆகும். நான் என் முகத்தை மறைத்து மிகக் கடுமையாக அழுவேன். எனது கண்கள் கண்ணீரால் நிரம்பும், ஏனென்றால், கர்த்தருடைய மந்தை சிறைப்பிடிக்கப்படும். ராஜாவிடமும் அவனது மனைவியிடமும் இவற்றைக்கூறு: “உங்களது சிங்காசனங்களில் இருந்து இறங்கி வாருங்கள், உங்களது அழகான கிரீடங்கள் உம் தலைகளிலிருந்து விழுந்திருக்கிறது.” நெகேவ் வனாந்தரத்தின் நகரங்கள் பூட்டப்பட்டுவிட்டன. எவராலும் அவற்றைத் திறக்க முடியாது. யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் சிறைபிடிக்கப்பட்டு அவர்களைக் கைதிகளாக வெளியே கொண்டு சென்றனர். எருசலேமே! பார். பகைவன் வடக்கிலிருந்து வந்துக்கொண்டிருக்கிறான். உனது மந்தை எங்கே? தேவன் உனக்கு அந்த அழகிய மந்தையைக் கொடுத்தார். நீங்கள் அந்த மந்தையை கவனித்துக்கொள்ள வேண்டியவர்கள். அந்த மந்தையை குறித்து கணக்கு சொல்ல வேண்டுமென்று கர்த்தர் கேட்டால், நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? நீங்கள் ஜனங்களுக்கு தேவனைப் பற்றி கற்பிக்க வேண்டியவர்கள். உங்கள் தலைவர்கள் ஜனங்களை வழிநடத்திச்செல்ல வேண்டியவர்கள். ஆனால், அவர்கள் தங்கள் வேலையைச் செய்யவில்லை. எனவே உங்களுக்கு மிகுதியான துன்பங்களும் கஷ்டங்களும் இருக்கும். நீங்கள் குழந்தையைப் பிரசவிக்கும் பெண்ணைப்போன்று இருப்பீர்கள். நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்கலாம். “ஏன் எனக்கு இத்தீமைகள் ஏற்பட்டன?” அவை, உங்களது பல பாவங்களாலேயே ஏற்பட்டன. உங்களது பாவங்களால் உங்கள் உள்ளாடைகள் கிழிக்கப்பட்டன. உங்களது பாதரட்சைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர்கள் உங்களை அவமானப்படுத்துவதற்காக இவற்றைச் செய்தனர். ஒரு கறுப்பு மனிதன் தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியாது. ஒரு சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக்கொள்ள முடியாது. இதைப் போலவே, எருசலேமே, நீயும் உன்னை மாற்றி நன்மை செய்ய முடியாது. நீ எப்போதும் தீமையே செய்கிறாய். “உங்களது வீட்டை விட்டு விலகும்படி நான் உங்களைக் கட்டாயப்படுத்துவேன். நீங்கள் எல்லா திசைகளிலும் ஓடுவீர்கள். நீங்கள் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப் போன்றிருப்பீர்கள். இக்காரியங்கள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும். எனது திட்டங்களில் இதுவே உங்கள் பங்கு” என்று கர்த்தர் சொல்லுகிறார். “இது ஏன் நிகழும்? ஏனென்றால், நீ என்னை மறந்தாய். பொய்த் தெய்வங்களிடம் நம்பிக்கை வைத்தாய். எருசலேமே! நான் உனது உள்ளாடையை உன் முகத்தின்மேல் போடுவேன். ஒவ்வொருவரும் உன்னைப் பார்ப்பார்கள். நீ அவமானம் அடைவாய். நீ செய்த பயங்கரமான செயல்களை எல்லாம் நான் பார்த்தேன். நீ சிரித்ததைப் பார்த்தேன். உனது நேசர்களுடன் நீ கொண்ட பாலின உறவுகளையும் பார்த்தேன். நீ ஒரு வேசியைப் போன்று, போட்டுக்கொண்ட திட்டங்களை நான் அறிவேன். மலைகளின் மேலும், வயல்களிலும் நான் உன்னைப் பார்த்திருக்கிறேன். எருசலேமே, இது உனக்கு கெட்டதாக இருக்கும். நீ இன்னும் எவ்வளவு காலத்திற்கு உனது தீட்டான பாவங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பாய் என நான் யோசிக்கிறேன்.”
எரேமியா 13:1-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல்கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார். நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன். இரண்டாம்விசை கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிமட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவை என்றார். நான் போய், கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அதை ஐப்பிராத்து நதியின் ஓரத்தில் ஒளித்து வைத்தேன். அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார். அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன். என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரையும் யூதாவின் குடும்பத்தார் அனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக்கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள். அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின் குடிகளெல்லாரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிகள் எல்லாரையும் நான் வெறியினால் நிரப்பி, பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார். அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள். நீங்கள் இதைக் கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும். நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: தாழவந்து உட்காருங்கள்; உங்கள் சிரசின் சிங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள். தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடிவிலக்கப்பட்டுப்போகும்; அது சமூலமாய்ச் சிறைப்பட்டுப்போகும். உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கேயிருந்து வருகிறவர்களைப் பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே? அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் ஆதிக்கக்காரரும் தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்குவித்தாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ? இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் வஸ்திரத்து ஒரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன. எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும். ஆதலால் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல அவர்களைச் சிதறடிப்பேன். நீ என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். உன் மானம் காணப்பட நான் உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டாக எடுத்துப்போடுவேன். உன் விபசாரங்களையும், உன் கனைக்குதல்களையும், வெளியிலே மேடுகளின்மேல் நீ பண்ணின வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அருவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்கிறார்.