நியாயாதிபதிகள் 3:20-22

நியாயாதிபதிகள் 3:20-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தனது அரண்மனையின் குளிர்ச்சியான மேலறையில் தனிமையாக உட்கார்ந்துகொண்டிருந்த அவனிடம் ஏகூத் கிட்டவந்து, “என்னிடம், உமக்குக் கொடுக்கவேண்டிய இறைவனிடமிருந்து பெற்ற ஒரு செய்தி இருக்கிறது” என்றான். அரசன் தனது நாற்காலியிலிருந்து எழுந்தபோது, ஏகூத் தனது இடதுகையை நீட்டி, தனது வலது தொடையில் கட்டியிருந்த வாளை உருவி, அதனால் அரசனின் வயிற்றில் குத்தினான். வாளுடன்கூட கைப்பிடியும் அவன் வயிற்றில் புகுந்தது. வாளின் முனை அவன் முதுகினால் வெளியே வந்தது. ஏகூத் அந்த வாளை வெளியே இழுக்கமுடியாத அளவுக்கு கொழுப்பு அதை மூடிக்கொண்டது.

நியாயாதிபதிகள் 3:20-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஏகூத் அவன் அருகில் போனான்; அவனோ தனக்குத் தனியாக இருந்த குளிர்ச்சியான மேல் வீட்டு அறையில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடம் சொல்லவேண்டிய தேவ வாக்கு என்னிடம் உண்டு என்றான்; அவன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தான். உடனே ஏகூத் தன்னுடைய இடதுகையை நீட்டி, தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டியிருந்த பட்டயத்தை உருவி, அதை அவனுடைய வயிற்றிற்குள் குத்தினான். கத்தியோடு கைப்பிடியும் உள்ளே போனது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கமுடியாதபடி, கொழுப்பு கத்தியைச் சுற்றிக் கொண்டது; கத்தி முனை பின்புறமாக வந்தது.

நியாயாதிபதிகள் 3:20-22 பரிசுத்த பைபிள் (TAERV)

ராஜாவாகிய எக்லோனுடன் ஏகூத் சென்றான். கோடைக் கால அரண்மனையிலுள்ள மேல் அறையில் எக்லோன் இப்போது தனித்தவனாய் உட்கார்ந்திருந்தான். ஏகூத், “தேவனிடமிருந்து ஒரு செய்தியை உமக்குக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான். ராஜா சிங்காசனத்திலிருந்து எழுந்து நின்றான். அவன் ஏகூத்திற்கு மிக அருகில் இருந்தான். ராஜா சிங்காசனத்திலிருந்து எழுந்த போது, ஏகூத் தனது இடது கையை நீட்டி வலது தொடையில் கட்டப்பட்டிருந்த வாளை எடுத்து அவ்வாளை ராஜாவின் வயிற்றில் செருகினான். வாளின் பிடிகூட வெளியே தெரியாதபடி வாள் எக்லோனின் வயிற்றினுள் நுழைந்தது. ராஜாவின் பருத்த உடல் வாளை மறைத்தது. எனவே ஏகூத் வாளை எக்லோனின் உடம்பிலேயே விட்டுவிட்டான்.

நியாயாதிபதிகள் 3:20-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஏகூத் அவன் கிட்டே போனான்; அவனோ தனக்குத் தனிப்புறம் இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடத்திலே சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு என்றான்; அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான். உடனே ஏகூத் தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான். அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கக்கூடாதபடிக்கு, நிணம் அலகைச் சுற்றிக் கொண்டடைத்தது; அது பின்புறத்திலே புறப்பட்டது.