நியாயாதிபதிகள் 2:10-15

நியாயாதிபதிகள் 2:10-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின்பு அந்த எல்லா தலைமுறையினரும் தங்கள் தந்தையருடன் சேர்க்கப்பட்டபின், யெகோவாவையும் அவர் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்தவற்றையும் அறியாத வேறு ஒரு தலைமுறை தோன்றியது. அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்து, பாகால் தெய்வங்களுக்குப் பணிசெய்தனர். அவர்கள் தங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் முற்பிதாக்களின் யெகோவாவாகிய இறைவனை கைவிட்டார்கள். தங்களைச் சுற்றியிருந்த மக்களின் பலவிதமான தெய்வங்களைப் பின்பற்றி வணங்கினார்கள். யெகோவாவுக்கு கோபமூட்டினார்கள். அவர்கள் யெகோவாவைக் கைவிட்டு பாகாலுக்கும், அஸ்தரோத்துக்கும் பணிசெய்ததினாலேயே யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள். இஸ்ரயேலருக்கு விரோதமாக யெகோவா கோபங்கொண்டு அவர் அவர்களைக் கொள்ளைக்காரரிடத்தில் ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தார்கள். அவர் அவர்களைச் சுற்றிலுமிருந்த அவர்களுடைய பகைவர்களுக்கு விற்றுப்போட்டார், அந்தப் பகைவர்களைத் தொடர்ந்து அவர்களால் எதிர்க்க முடியவில்லை. இஸ்ரயேலர் சண்டையிடப் போகும்போதெல்லாம், யெகோவா அவர்களுக்கு ஆணையிட்டபடி யெகோவாவின் கரம் அவர்களுக்கெதிராக இருந்து அவர்களைத் தோல்வியுறச் செய்தது. அவர்கள் பெரும் துயரத்திற்குள்ளானார்கள்.

நியாயாதிபதிகள் 2:10-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களோடு சேர்க்கப்பட்டப்பின்பு, யெகோவாவையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த செய்கைகளையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின்பு எழும்பியது. அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்கு தீமையானதைச் செய்து, பாகால்களைத் தொழுது, தங்களுடைய முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச் செய்த அவர்களுடைய தேவனாகிய யெகோவாவைவிட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களுடைய தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிப்போய், அவைகளைத் தொழுதுகொண்டு, யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள். அவர்கள் யெகோவாவைவிட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுதுகொண்டார்கள். அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி, அவர்கள் அதற்குப்பின்பு தங்கள் எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர்களுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்களுடைய எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுத்தார். யெகோவா அவர்களுக்கு வாக்கு செய்தபடி, அவர்கள் புறப்பட்டுப்போகிற இடங்களெல்லாம் யெகோவாவுடைய கரம் தீமைக்கென்றே அவர்களுக்கு எதிராக இருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.

நியாயாதிபதிகள் 2:10-15 பரிசுத்த பைபிள் (TAERV)

அந்தத் தலைமுறையினர் மரித்தபின், அடுத்த தலைமுறையினர் வளர்ந்து வந்தனர். புதிய தலைமுறையினர் கர்த்தரைக் குறித்தும் அவர் இஸ்ரவேலருக்குச் செய்தவற்றைக் குறித்தும் அறிந்திருக்கவில்லை. எனவே இஸ்ரவேலர் தீயவற்றைச் செய்து பொய் தேவனான பாகாலை சேவிக்கத் தொடங்கினார்கள். ஜனங்கள் இந்த தீயகாரியத்தைச் செய்வதை கர்த்தர் கண்டார். கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்திருந்தார். இந்த ஜனங்களின் முற்பிதாக்கள் கர்த்தரை ஆராதித்தனர். ஆனால் இஸ்ரவேலரோ கர்த்தரைப் பின்பற்றுவதை விட்டு விலகி, தங்களைச் சுற்றிலும் வாழ்ந்த ஜனங்களின் பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அது கர்த்தரை கோபத்திற்குள்ளாக்கிற்று. இஸ்ரவேலர் கர்த்தரை ஆராதிப்பதை விட்டு விட்டுப் பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுது கொள்ளத் தொடங்கினார்கள். கர்த்தர் இஸ்ரவேலரிடம் கோபங்கொண்டார். பகைவர்கள் இஸ்ரவேலரை எதிர்த்து அவர்களுடைய உடமைகளைக் கைப்பற்றிக்கொள்ள கர்த்தர் அனுமதித்தார். பகைவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இஸ்ரவேலரால் முடியவில்லை. இஸ்ரவேலர் போருக்குச் சென்ற போதெல்லாம், தோல்வியே கண்டனர். கர்த்தர் அவர்களோடு இல்லாதபடியால் அவர்கள் தோற்றனர். தங்களைச் சுற்றிலும் வாழ்கின்ற ஜனங்களின் பொய்த் தெய்வங்களைத் தொழுதால் அவர்கள் தோற்று விடுவார்கள் என்று கர்த்தர் அவர்களை ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இஸ்ரவேலர் மிகவும் துன்புற்றார்கள்.

நியாயாதிபதிகள் 2:10-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து, தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள். அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள். அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார். கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.