நியாயாதிபதிகள் 16:1-31

நியாயாதிபதிகள் 16:1-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு நாள் சிம்சோன் பெலிஸ்திய பட்டணம் காசாவுக்குப் போனபோது அங்கே ஒரு வேசியைக் கண்டான். அவன் அங்கு சென்று அன்று இரவை அவளுடன் கழித்தான். காசாவின் மக்கள், “சிம்சோன் இங்கே இருக்கிறான்” என்று கேள்விப்பட்டபோது, அவர்கள் அந்த இடத்தைச் சுற்றிவளைத்து இரவு முழுவதும் பட்டணத்து வாசலில் பதுங்கியிருந்தார்கள். இரவுவேளையில் ஒன்றும் செய்யாமல், காலையில் அவன் வெளியில் வரும்போது அவனைக் கொலைசெய்யக் காத்திருந்தனர். ஆனால் சிம்சோன் நள்ளிரவு வரையுமே அங்கு படுத்திருந்தான். பின்பு அவன் எழுந்து பட்டணத்து வாசல் கதவுகளையும், அதன் இரண்டு நிலைகளையும், தாழ்ப்பாள்களையும் பிடுங்கி எடுத்து அவற்றைத் தன் தோளில் சுமந்துகொண்டு, எப்ரோனை நோக்கியுள்ள மலை உச்சிக்குப் போனான். சில நாட்களுக்குபின் அவன் சோராக் பள்ளத்தாக்கில் வசித்த தெலீலாள் என்னும் பெண்ணில் அன்பு வைத்தான். பெலிஸ்தியரின் ஆளுநர்கள் அவளிடம் சென்று, “நீ அவனுடன் நயமாகப் பேசி, இப்பெரிய ஆற்றல்மிக்க பெலன் எங்கிருந்து வருகிறது என்ற இரகசியத்தைக் காட்டும்படி அவனை வசப்படுத்த முடியுமா என்று பார். நாங்கள் அவனை மேற்கொண்டு கட்டியடிக்க முடியுமா என்று பார். நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு சேக்கல் நிறையுள்ள வெள்ளிக்காசை உனக்குத் தருவோம்” என்றார்கள். எனவே தெலீலாள் சிம்சோனிடம், “உனது இப்பெரிய வலிமையின் இரகசியத்தையும், எப்படி உன்னைக் கீழ்ப்படுத்திக் கட்டலாம் என்பதையும் எனக்குச் சொல்” எனக் கேட்டாள். அதற்கு சிம்சோன் அவளிடம், “யாராவது என்னை ஏழு காயாத தோல் வார்களினால் கட்டினால், மற்ற மனிதர்களைப்போல நானும் பெலனற்றவனாவேன்” என்று பதிலளித்தான். அப்பொழுது பெலிஸ்தியரின் ஆளுநர்கள் ஏழு காயாத தோல்வார்களை அவளிடம் கொடுத்தார்கள். அவள் அவனை அவற்றால் கட்டினாள். அந்த மனிதர்களை அறைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு, “சிம்சோனே இதோ பெலிஸ்தியர்கள் உன்னைப் பிடிக்க வந்துவிட்டார்கள்” என்று சொன்னாள். அப்பொழுது அவன் தன்னைக் கட்டியிருந்த அந்த தோல்வார்களை நெருப்புப்பட்ட கயிறுகளை அறுப்பதுபோல இலகுவாக அறுத்தான். எனவே அவனுடைய வல்லமை எங்கிருந்து வந்தது என்பதன் இரகசியம் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்பொழுது தெலீலாள் சிம்சோனிடம், “நீ என்னை ஏமாற்றி விட்டாய். நீ எனக்குப் பொய் சொல்லியிருக்கிறாய். இப்பொழுது நீ எதனால் உன்னைக் கட்டலாம் என்று எனக்குச் சொல்” என்றாள். அதற்கு அவன், “ஒருபோதும் பயன்படுத்தப்படாத புதிய கயிறுகளால் என்னைப் பாதுகாப்பாகக் கட்டினால், நானும் மற்ற மனிதர்களைப்போல பெலனற்றவனாவேன்” என்றான். எனவே தெலீலாள் புதியகயிறுகளை எடுத்து அவனைக் கட்டினாள். பின்பு அந்த மனிதர்கள் அறைக்குள் பதுங்கியிருக்கும்போது அவள், “சிம்சோனே பெலிஸ்தியர் உன்மேல் வந்துவிட்டார்கள்” என்றாள். அவனோ தன் கையில் கட்டியிருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான். அப்பொழுது தெலீலாள் சிம்சோனிடம், “இதுவரைக்கும் நீ என்னை ஏமாற்றிக்கொண்டும், பொய் சொல்லிக்கொண்டும் இருக்கிறாய். உன்னை எதனால் கட்டமுடியும் என்று இப்பொழுது எனக்குச் சொல்” என்றாள். அதற்கு அவன், “என் தலைமயிரில் உள்ள ஏழு சடைகளை எடுத்து அவற்றை நெசவுத்தறியிலுள்ள நூல் பாவோடு சேர்த்து நெசவுசெய்து ஆணியால் இறுக்கினால், நான் மற்ற மனிதரைப்போல் பெலனற்றவனாவேன்” எனச் சொன்னான். எனவே அவள் அவன் நித்திரையாயிருக்கும்போது, அவன் தலைமயிரில் ஏழு சடைகளை எடுத்து நெசவுத்தறி நூல் பாவோடு நெசவுசெய்து ஆணியால் இறுக்கினாள். திரும்பவும் அவள் அவனை அழைத்து, “சிம்சோனே பெலிஸ்தியர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள்” என்றாள். உடனே அவன் நித்திரை விட்டெழுந்து பின்னலை ஆணியடிக்கப்பட்டிருந்த நெசவுத்தறியோடு பிடுங்கிக்கொண்டு போனான். அப்பொழுது அவள் அவனிடம், “என்னில் முழுநம்பிக்கை இல்லாதபோது, ‘உன்னை நேசிக்கிறேன்’ என்று எப்படிச் சொல்லலாம் என்றாள். உனது வலிமைமிக்க பெலன் எங்கிருந்து வருகின்றதென்ற இரகசியத்தைச் சொல்லாமல் மூன்றாவது முறையாக என்னை ஏமாற்றியிருக்கிறாயே” என்றாள். இவ்வாறு அவள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நச்சரித்துத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்ததால் அவன் தாங்கமுடியாத அளவு சோர்வடைந்தான். எனவே அவன் அவளிடம், “என்னுடைய தலையில் இதுவரை சவரக்கத்தி பட்டதேயில்லை. ஏனெனில் நான் பிறந்தது முதற்கொண்டே இறைவனுக்கென வேறுபிரிக்கப்பட்ட நசரேயனாயிருக்கிறேன்; எனது தலைசவரம் செய்யப்பட்டால் என் பெலன் என்னைவிட்டுப் போய்விடும். நான் மற்ற மனிதரைப்போல பெலனற்ற மனிதனாவேன்” என அவன் எல்லாவற்றையும் அவளிடம் சொன்னான். அவன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான் என்பதை தெலீலாள் உணர்ந்தபோது, பெலிஸ்தியரின் ஆளுநர்களிடம், “இன்னும் ஒருமுறை மாத்திரம் வாருங்கள். அவன் எனக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்” எனச் சொல்லியனுப்பினாள். எனவே பெலிஸ்தியரை ஆளுபவர்கள் வெள்ளிப்பணத்துடன் திரும்பி வந்தார்கள். பின்பு அவள் சிம்சோனைத் தனது மடியில் நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து சிம்சோனின் தலையிலிருந்த ஏழு சடைகளையும் சவரம்செய்து, அவனைப் பலவீனப்படுத்தத் தொடங்கினாள். அவனுடைய பலம் அவனைவிட்டு நீங்கிற்று. அப்பொழுது அவள், “சிம்சோனே! பெலிஸ்தியர்கள் உன்னைப் பிடிக்க வந்திருக்கிறார்கள்” என்றாள். உடனே அவன் நித்திரைவிட்டு எழுந்து, “இப்பொழுது நான் முன்புபோல வெளியே போய் என்னை விடுவித்துக்கொள்வேன்” என நினைத்தான். ஆனால் யெகோவா தன்னைவிட்டு அகன்றுவிட்டதை அவன் அறியாதிருந்தான். அப்பொழுது பெலிஸ்தியர் வந்து அவனைப் பிடித்து, அவனுடைய இரண்டு கண்களையும் தோண்டியெடுத்தபின் அவனை காசாவுக்குக் கொண்டுபோனார்கள். அங்கே அவனை வெண்கலச் சங்கிலியினால் கட்டி, சிறையில் மாவரைக்கும்படி வைத்தார்கள். ஆனால் சவரம் செய்தபின் அவனுடைய தலையில் திரும்பவும் மயிர் முளைக்கத் தொடங்கிற்று. பெலிஸ்தியரின் ஆளுநர்கள் தங்களுடைய தெய்வமான தாகோனுக்கு ஒரு பெரிய பலியைச் செலுத்தவும் விழாக்கொண்டாடவும் ஒன்றுகூடினார்கள். அவர்கள், “எங்கள் தெய்வம் எங்கள் பகைவனான சிம்சோனை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறது” என்று சொல்லிக்கொண்டார்கள். அந்த மக்கள் சிம்சோனைக் கண்டதும், தங்கள் தெய்வத்தைப் புகழ்ந்து சொன்னதாவது: “நமது தெய்வம் எங்கள் பகைவனை நம் கையில் ஒப்படைத்திருக்கிறது; நம்முடைய நாட்டைப் பாழாக்கி, நம்மில் அநேகரை இவன் கொன்றொழித்தானே!” இவ்வாறு அவர்கள் அதிக உற்சாகத்துடன் இருக்கும்போது, “எங்களை மகிழ்விக்க சிம்சோனை வெளியே கொண்டுவாருங்கள்” என்று சத்தமிட்டார்கள். எனவே சிம்சோனைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்கள். அவன் அவர்களுக்குச் சாகசங்கள் செய்துகாட்டினான். அவர்கள் அவனைத் தூண்களுக்கிடையே நிறுத்தினார்கள். அப்பொழுது சிம்சோன் தனது கையைப் பிடித்துநின்ற பணியாளிடம், “கோயிலைத் தாங்கிநிற்கும் தூண்களைத் தடவிப்பார்க்கும்படி அங்கே என்னைக்கொண்டு போ. நான் அவற்றில் சாய்ந்துகொள்ளவேண்டும்” என்றான். இப்பொழுது பெலிஸ்திய ஆண்களினாலும், பெண்களினாலும் அந்த கோயில் நிறைந்திருந்தது. பெலிஸ்திய ஆளுநர்கள் எல்லோரும் அங்கிருந்தார்கள். மேல்மாடத்தின் மேலும் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்களும், பெண்களும் சிம்சோனின் சாகசங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிம்சோன் யெகோவாவிடம், “என்னை ஆட்சிசெய்கிற யெகோவாவாகிய ஆண்டவரே! என்னை நினைவுகூரும்; என் இறைவனே இன்னும் ஒருமுறை மட்டும் என்னைப் பலப்படுத்தும். எனது இரு கண்களையும் எடுத்துப்போட்ட பெலிஸ்தியரை ஒரேயடியில் பழிவாங்கவிடும்” என வேண்டுதல் செய்தான். பின்பு சிம்சோன் கோவிலைத் தாங்கிநின்ற நடுத்தூண்கள் இரண்டையும் எட்டிப்பிடித்தான். அவற்றில் ஒன்றைத் தனது வலதுகையாலும், மற்றொன்றை தனது இடதுகையாலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டான். பின் சிம்சோன், “நான் சாகும்போது பெலிஸ்தியருடனே சாகவேண்டும்” என்று சொல்லி, தனது முழு பெலனையும் சேர்த்துத் தூண்களைத் தள்ளினான். அப்பொழுது ஆளுநர்கள்மேலும், கூடியிருந்த எல்லா மக்கள்மேலும் கோயில் இடிந்து விழுந்தது. இவ்வாறாக அவன் உயிருடன் இருக்கும்போது கொன்றவர்களைவிட, அவன் இறந்தபோது அநேகரைக் கொன்றான். அப்பொழுது சிம்சோனின் சகோதரர்களும், அவன் தகப்பனின் முழுக் குடும்பத்தவர்களும் வந்து அவனுடைய உடலை எடுத்துக்கொண்டு போனார்கள். அவர்கள் அவனை சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் இடையிலுள்ள அவனுடைய தகப்பன் மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரயேலுக்கு இருபது வருடங்கள் நீதிபதியாய் இருந்தான்.

நியாயாதிபதிகள் 16:1-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு விபச்சாரியை கண்டு, அவளிடம் போனான். அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊர்க்காரர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை சுற்றிவளைத்து இரவுமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் காத்திருந்து இரவு முழுவதும் பேசாமல் இருந்தார்கள். சிம்சோன் நடுஇரவுவரை படுத்திருந்து, நடு இரவில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடுப் பெயர்த்து, தன்னுடைய தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்துகொண்டுபோனான். அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணோடு அன்பாயிருந்தான். அவளிடத்திற்கு பெலிஸ்தர்களின் அதிபதிகள் போய்: நீ அவனை வசப்படுத்தி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டி பலவீனப்படுத்துவதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் 1,100 வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள். அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன்னுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது. உன்னை பலவீனப்படுத்த, உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ என்னிடம் சொல்லவேண்டும் என்றாள். அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளினாலே என்னைக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது பெலிஸ்தர்களின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளை அவளிடம் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள். மறைந்திருக்கிறவர்கள் உள் அறையிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல்நூலானது நெருப்புப் பட்டவுடனே அறுந்துபோகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவனுடைய பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று அவர்களால் அறிந்துகொள்ளமுடியவில்லை. அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னை ஏமாற்றி, எனக்கு பொய் சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று என்னிடம் சொல்லவேண்டும் என்றாள். அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் பயன்படுத்தாமலிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக்கட்டி: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்: மறைந்திருக்கிறவர்கள் உள் அறையில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன்னுடைய புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான். பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னை ஏமாற்றி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினால் கட்டலாம் என்று நீ என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன்: நீ என்னுடைய தலைமுடியின் ஏழு ஜடைகளை நெசவுநூல் தறியோடு பின்னிவிட்டால் மற்ற மனிதர்களைப்போல் ஆவேன் என்றான். அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு எழுந்து, நெசவு ஆணியையும் தறியையும் பிடுங்கிக்கொண்டு போனான். அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன்னுடைய இருதயம் என்னோடு இல்லாமலிருக்க, உன்னை நேசிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுமுறைகளும் என்னைப் பரியாசம் செய்தாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று என்னிடம் சொல்லாமல் போனாயே என்று சொல்லி, இப்படி அவனைத் தினம்தினம் தன்னுடைய வார்த்தைகளினாலே நெருக்கி தொந்தரவுசெய்தபடியால், சாகத்தக்கதாக அவனுடைய ஆத்துமா துக்கப்பட்டு, தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என்னுடைய தலையின்மேல் படவில்லை; நான் என்னுடைய தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என்னுடைய தலை சிரைக்கப்பட்டால், என்னுடைய பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலவீனனாகி, மற்ற எல்லா மனிதர்களைப்போல ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான். அவன் தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதை தெலீலாள் கேட்டபோது, அவள் பெலிஸ்தர்களின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருமுறை வாருங்கள், அவன் தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் என்னிடத்தில் வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தர்களின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் வந்தார்கள். அவள் அவனைத் தன்னுடைய மடியிலே தூங்கவைத்து, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைத்து, அவனை பலவீனப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கியது. அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு விழித்து, யெகோவா தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான். பெலிஸ்தர்கள் அவனைப் பிடித்து, அவனுடைய கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைக்க வைத்தார்கள். அவனுடைய தலைமுடி சிரைக்கப்பட்டப்பின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கியது. பெலிஸ்தர்களின் பிரபுக்கள்: நம்முடைய எதிரியாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்களுடைய தெய்வமாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தார்கள். மக்கள் அவனைப் பார்த்தவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய எதிரியை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்களுடைய தேவனைப் புகழ்ந்தார்கள். இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கை காட்டுவதற்கு, சிம்சோனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துக்கொண்டு வந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கைக் காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள். சிம்சோன் தன்னுடைய கையைப் பிடித்து நடத்துகிற சிறுவனோடு, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப் பார்க்கவேண்டும் என்றான். அந்த வீடு ஆண்களாலும், பெண்களாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தர்களின் எல்லா பிரபுக்களும், வீட்டின்மேல் ஆண்களும் பெண்களுமாக ஏறக்குறைய மூவாயிரம் 3,000 பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிம்சோன் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: யெகோவாவாகிய ஆண்டவரே, நான் என்னுடைய இரண்டு கண்களுக்காக ஒரே முடிவாகப் பெலிஸ்தர்கள் கையிலே பழிவாங்கும்படி, இந்த ஒருமுறைமட்டும் என்னை நினைத்தருளும், தேவனே பெலப்படுத்தும் என்று சொல்லி, சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன்னுடைய வலதுகையினாலும், மற்றொன்றைத் தன்னுடைய இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு, என்னுடைய ஜீவன் பெலிஸ்தர்களோடு மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா மக்கள்மேலும் விழுந்தது; இப்படி அவன் உயிரோடிருக்கும்போது அவனால் கொல்லப்பட்டவர்களைவிட, அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாக இருந்தார்கள். பின்பு அவன் சகோதரர்களும், அவன் தகப்பனுடைய வீட்டார் அனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவனுடைய தகப்பனான மனோவாவின் கல்லறையில் அடக்கம்செய்தார்கள். அவன் இஸ்ரவேலை 20 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.

நியாயாதிபதிகள் 16:1-31 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு நாள் சிம்சோன் காசா நகரத்திற்குச் சென்றான். அவன் அங்கு ஒரு வேசியைச் சந்தித்து, அன்றிரவு அவளோடு தங்கச் சென்றான். காசா நகர ஜனங்களிடம், “சிம்சோன் இங்கு வந்திருக்கிறான்” என்று யாரோ தெரிவித்தனர். அவர்கள் அவனைக் கொல்ல எண்ணினார்கள். எனவே, அவன் இருந்த இடத்தை சூழ்ந்தனர். அவர்கள் மறைந்திருந்து சிம்சோனின் வரவுக்காக காத்திருந்தனர். அவர்கள் நகர வாயிலருகே இரவு முழுவதும் அமைதியாகத் தங்கியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர், “காலையில் சிம்சோனைக் கொல்வோம்” என்று பேசிக்கொண்டனர். ஆனால் சிம்சோன் அவ்விலைமகளோடு நள்ளிரவுவரை மட்டுமே தங்கியிருந்தான். சிம்சோன் நள்ளிரவில் விழித்தெழுந்தான். சிம்சோன் நகரவாயில் கதவுகளை பிடித்து, மதிலிலிருந்து தளர்த்திப் பெயர்த்தெடுத்தான். சிம்சோன் கதவுகளையும், அவற்றின் இரண்டு தூண்களையும், கதவுகளை மூடும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்துத் தூக்கிக்கொண்டான். சிம்சோன் அதை தோளில் சுமந்துக்கொண்டு, எபிரோன் நகருக்கு அருகிலுள்ள மலையின்மீது ஏறினான். பின்னர் சிம்சோன் தெலீலாள் என்னும் ஒரு பெண்ணை நேசித்தான். அவள் சோரேக் என்னும் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவள். பெலிஸ்திய ஜனங்களின் தலைவர்கள் தெலீலாளிடம் சென்றனர். அவர்கள், “சிம்சோனைப் பெலசாலியாக வைத்திருப்பது எதுவென்று நாங்கள் அறிய விரும்புகிறோம். அவனது இரகசியத்தை உனக்குத் தெரிவிக்குமாறு நீ ஏதேனும் தந்திரம் செய். அப்போது அவனைப் பிடித்துக் கட்டுவது எப்படியென்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். பிறகு அவனைக் கட்டுப்படுத்துவதும் எளிதாயிருக்கும். நீ இதைச் செய்தால் நாங்கள் ஒவ்வொரு வரும் உனக்கு 28 பவுண்டு எடையுள்ள வெள்ளியைக் கொடுப்போம்” என்றார்கள். எனவே தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் எதனால் பெலசாலியாக இருக்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். எவ்வாறு உங்களைக் கட்டி பெலவீனப்படுத்த முடியும்?” என்று கேட்டாள். சிம்சோன் பதிலாக, “ஏழு பச்சையான உலராத வில் நாண்களால் என்னைக் கட்டவேண்டும். அவ்வாறு செய்தால் நான் பிறரைப் போன்று பெலனற்றவனாவேன்” என்றான். அப்போது பெலிஸ்தியரின் அதிகாரிகள் தெலீலாளிடம் ஏழு பச்சையான வில் நாண்களைக் கொண்டு வந்தனர். அவை இன்னும் உலர்ந்திருக்கவில்லை. அவற்றால் தெலீலாள் சிம்சோனைக் கட்டினாள். சிலர் அடுத்த அறையில் ஒளித்திருந்தனர். தெலீலாள் சிம்சோனிடம், “சிம்சோன், உங்களைப் பெலிஸ்தியர்கள் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். ஆனால் சிம்சோன் எளிதாக அந்த வில் நாண்களை அறுத்துப்போட்டான். விளக்கில் எரியும் திரியிலுள்ள சாம்பலைப் போன்று அவைத் தெறித்து விழுந்தன. எனவே பெலிஸ்தியர்கள் சிம்சோனின் பெலத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ளவில்லை. அப்போது தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் என்னிடம் பொய் சொன்னீர்கள்! என்னை முட்டாளாக்கினீர்கள். உண்மையைத் தயவுசெய்து எனக்குக் கூறுங்கள். எப்படி, யாரால் உங்களைக் கட்டிப்போட முடியும்?” என்று கேட்டாள். சிம்சோன், “யாராவது என்னை முன்னால் பயன்படுத்தப்படாத புதுக் கயிறுகளால் கட்டவேண்டும். அவ்வாறு யாரேனும் எனக்குச் செய்தால் நானும் பிற மனிதர்களைப் போன்று பெலமிழந்தவனாகிவிடுவேன்” என்றான். எனவே தெலீளாள் சில புதுக்கயிறுகளை எடுத்து சிம்சோனைக் கட்டினாள். சில ஆட்கள் அடுத்த அறையில் ஒளித்துக்கொண்டிருந்தனர். தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கபோகிறார்கள்!” என்றாள். ஆனால் அவன் கயிறுகளை எளிதாக அறுத்துவிட்டான். நூலை அறுத்தாற்போன்று அவன் கயிறுகளை அறுத்தெறிந்தான். பின்பு தெலீலாள் சிம்சோனை நோக்கி, “நீங்கள் என்னிடம் மீண்டும் பொய் சொல்லிவிட்டீர்கள்! என்னை முட்டாள் ஆக்கிவிட்டீர்கள். இப்போது உங்களை ஒருவன் எவ்வாறு கட்டக்கூடும் என்பதைக் கூறுங்கள்” என்றாள். சிம்சோன், “நீ என் தலைமயிரின் 7 ஜடைகளையும் நெசவு தறியால் நெய்து அதனைப் பின்னலிட்டு இறுகக் கட்டினால் நானும் பிற மனிதரைப்போல் பெலமற்றவனாவேன்” என்றான். பின் சிம்சோன் உறங்கப்போனான். தெலீலாள் நெசவுத் துணியின் நூலைப் பயன்படுத்தி அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் நெய்தாள். பின் தறியை நிலத்தில் ஒரு கூடார ஆணியால் அடித்தாள். அவள் மீண்டும் சிம்சோனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். சிம்சோன் கூடார ஆணியையும், தறியையும், பாவையும் பிடுங்கி எடுத்துக் கொண்டு எழுந்தான்! பின் தெலீலாள் சிம்சோனைப் பார்த்து, “முற்றிலும் என்மேல் நம்பிக்கையற்றவராக இருக்கும்போது ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? உங்கள் இரகசியத்தை சொல்ல மறுக்கிறீர்கள்? மூன்றாவதுமுறை நீங்கள் என்னை முட்டாளாக்கிவிட்டீர்கள். உங்களது பேராற்றலின் இரகசியத்தை நீங்கள் இன்னும் எனக்குக் கூறவில்லை” என்றாள். தினந்தோறும் அவள் சிம்சோனைத் தொந்தரவுச் செய்துக்கொண்டேயிருந்தாள். அவனது இரகசியத்தைப்பற்றி அவள் கேட்டதினால் அவன் ஆத்துமா மிகவும் சோர்ந்து, வாழ்க்கையை வெறுத்தான். இறுதியில் சிம்சோன் தெலீலாளுக்கு எல்லாவற்றையும் கூறினான். அவன், “நான் எனது தலைமயிரைச் சிரைத்ததில்லை. நான் பிறக்கும் முன்னரே தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவன். யாராவது எனது தலை மயிரை நீக்கினால் எனது பலத்தை இழந்துவிடுவேன். நான் வேறெந்த மனிதனைப் போன்றும் பலவீனனாய் காணப்படுவேன்” என்றான். சிம்சோன் அவளிடம் இரகசியத்தைக் கூறிவிட்டான் என்பதைத் தெலீலாள் கண்டு கொண்டாள். பெலிஸ்தியரின் தலைவர்களுக்கு அவள் செய்தியைச் சொல்லியனுப்பினாள். அவள், “மீண்டும் இங்கே வாருங்கள். சிம்சோன் என்னிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டான்” என்றாள். எனவே பெலிஸ்தியரின் தலைவர்கள் தெலீலாளிடம் வந்தார்கள். அவளுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த பணத்தை அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள். சிம்சோன் அவள் மடியில் படுத்திருந்தபோதே அவனைத் தெலீலாள் உறங்க வைத்தாள். பின்பு அவள் சவரம் செய்யும் ஒருவனை அழைத்து அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் சிரைத்துவிடச் செய்தாள். அப்போது சிம்சோன் தனது பெலத்தை இழந்தான். சிம்சோனின் பலம் அவனை விட்டு நீங்கியது. அப்போது தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்தியர் உன்னைப் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். அவன் எழுந்து, “நான் எப்போதும் போல் என்னை விடுவித்து தப்பிவிடுவேன்” என்று நினைத்தான். கர்த்தர் அவனை விட்டு நீங்கிச்சென்றதை அவன் அறியவில்லை. பெலிஸ்திய ஆட்கள் சிம்சோனைச் சிறைபிடித்தனர். அவர்கள் அவனது கண்களைப் பிடுங்கி, அவனைக் காசா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். அவன் ஓடிவிடாதபடிக்கு அவனுக்கு விலங்கிட்டுக் கட்டினார்கள். அவர்கள் சிம்சோனைச் சிறையில் அடைத்து, அவனைத் தானியம் அரைக்குமாறு செய்தனர். ஆனால் சிம்சோனின் தலைமயிர் மீண்டும் வளர ஆரம்பித்தது. பெலிஸ்தியரின் தலைவர்கள் கொண்டாட்டத்திற்கென ஓரிடத்தில் கூடினார்கள். தங்கள் பொய்த் தெய்வமாகிய தாகோனிற்குப் பெரும்பலிகொடுக்க அங்கு வந்தனர். அவர்கள், “நமது தேவன் நமது பகைவனாகிய சிம்சோனை வெல்வதற்கு நமக்கு உதவினார்” என்று சொன்னார்கள். பெலிஸ்தியர் சிம்சோனைக் காணும்பொழுது, அவர்கள் தம் பொய்த் தெய்வத்தை வாழ்த்தினார்கள். அவர்கள், “இம்மனிதன் நம் ஜனங்களை அழித்தான்! இம்மனிதன் நம் ஜனங்களில் பலரைக் கொன்றான்! ஆனால் நமது தெய்வம் நம் பகைவனை வெல்ல உதவினார்!” என்றார்கள். அவர்கள் கொண்டாட்டத்தில் களிகூர்ந்து நன்றாகப் பொழுதைப் போக்கினார்கள். எனவே அவர்கள், “சிம்சோனை வெளியே அழைத்து வாருங்கள். அவனை ஆட்டம் காண்பித்து கிண்டல் செய்ய நாங்கள் விரும்புகிறோம்” என்றார்கள். எனவே அவர்கள் சிம்சோனைச் சிறையிலிருந்து அழைத்து வந்து அவனைக் கேலிச் செய்தனர். பொய்த் தெய்வம் தாகோன் கோவிலின் தூண்களுக்கு நடுவே அவனை நிறுத்தினார்கள். ஒரு பணியாள் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தான். சிம்சோன் அவனிடம், “இக்கோவிலைத் தாங்கி நிற்கும் தூண்களை நான் தொடுமாறு என்னை நிறுத்து. நான் அவற்றில் சாய்ந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான். அக்கோவில் ஆண்களாலும் பெண்களாலும் நிரம்பிவழிந்தது. பெலிஸ்தியரின் எல்லா தலைவர்களும் அங்கிருந்தனர். கோவிலின் மாடி அடுக்கில் சுமார் 3,000 ஆண்களும் பெண்களும் இருந்தனர். அவர்கள் நகைத்துக் கொண்டு, சிம்சோனைக் கேலிச் செய்தபடி இருந்தனர். அப்போது சிம்சோன் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்தான். அவன், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, என்னை நினைவுகூரும். தேவனே, எனக்கு இன்னொருமுறை பெலன் தாரும். எனது இரு கண்களையும் பிடுங்கியதற்காய் இப்பெலிஸ்தியரை ஒருமுறை நான் தண்டிக்க அனுமதியும்!” என்றான். பின்பு கோவிலின் நடுவே கோவிலைத் தாங்கிக் கொண்டிருந்த இரண்டு தூண்களையும் சிம்சோன் பற்றிக்கொண்டான். ஒரு தூண் அவனது வலதுபுறமும், இன்னொரு தூண் அவனது இடதுபுறமும் இருக்கும்படி நின்று கொண்டான். சிம்சோன், “என்னையும் இந்த பெலிஸ்தியர்களுடன் மரிக்கவிடும்” என்றான். பின்பு அத்தூண்களைப் பலங்கொண்டமட்டும் தள்ளினான். தலைவர்கள் மீதும், அதிலிருந்த ஜனங்கள்மீதும் கோவில் இடிந்து விழுந்தது. இவ்வாறு உயிரோடிருந்தபோது கொன்றதைக் காட்டிலும் அதிகமான பெலிஸ்தியரைச் சிம்சோன் மரித்தபோது கொன்றான். சிம்சோனின் சகோதரர்களும் அவனது தந்தையின் குடும்பத்தினரும் அவனது உடலை எடுத்துக் கொண்டு வந்து, அவனது தந்தையின் கல்லறையிலேயே புதைத்தனர். அக்கல்லறை சோரா நகரத்திற்கும் எஸ்தாவோல் நகரத்திற்கும் நடுவே இருந்தது. இஸ்ரவேலருக்கு 20 ஆண்டுகள் சிம்சோன் நியாயாதிபதியாக இருந்தான்.

நியாயாதிபதிகள் 16:1-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான். அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இராமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுவதும் பேசாதிருந்தார்கள். சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பெயர்த்து, தன் தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான். அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான். அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்துநூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள். அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது. உன்னைச் சிறுமைப்படுத்த, உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள். பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல்நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவன் பலம் இன்னதினாலே உண்டாயிருக்கிறது என்று அறியப்படவில்லை. அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக்கட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்: பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான். பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன்: நீ என் தலைமயிரின் ஏழுஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னிவிட்டால் ஆகும் என்றான். அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல்பாவையும் கூடப் பிடுங்கிக்கொண்டு போனான். அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்று விசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி, இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக்கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான். அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள். அவள் அவனைத் தன் மடியிலே நித்திரைசெய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று. அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான். பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள். அவன் தலைமயிர் சிரைக்கப்பட்டபின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று. பெலிஸ்தரின் பிரபுக்கள்: நம்முடைய பகைஞனாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தார்கள். ஜனங்கள் அவனைக் கண்டவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள். இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு, சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள். சிம்சோன் தனக்குக் கைலாகு கொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான். அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி, சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு, என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள். பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.