நியாயாதிபதிகள் 13:1-25
நியாயாதிபதிகள் 13:1-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
திரும்பவும் இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தார்கள்; எனவே யெகோவா அவர்களை நாற்பது வருடங்களுக்குப் பெலிஸ்தியரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார். சோரா ஊரில் தாண் வம்சத்தைச் சேர்ந்த மனோவா, என்ற பெயருடைய ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி பிள்ளை பெறாது மலடியாயிருந்தாள். யெகோவாவின் தூதனானவர் அவள்முன் தோன்றி, “நீ பிள்ளை பெறாது மலடியாயிருக்கிறாய், ஆனால் நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெறப்போகிறாய். இப்பொழுதும் நீ திராட்சை இரசமோ அல்லது மதுபானமோ குடிக்காதே. அசுத்தமான ஒன்றையும் சாப்பிடாமலும் இருக்கும்படி கவனமாயிரு. ஏனெனில் நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவாய். அவன் தலையில் சவரக்கத்தி படக்கூடாது; ஏனெனில் அவன் பிறந்ததுமுதல் இறைவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்ட நசரேயனாயிருக்க வேண்டும்; அவனே பெலிஸ்தியரின் கையினின்று இஸ்ரயேலரை விடுவிக்கத் தொடங்குவான்” என்று சொன்னார். அப்பொழுது அந்த பெண் தன் கணவனிடத்திற்குச் சென்று அவனிடம், “இறைவனின் மனிதன் ஒருவர் என்னிடம் வந்தார். அவர் இறைத்தூதனைப்போல் பார்க்கப் பயமாயிருந்தது. நான் அவரிடம் நீர் எங்கேயிருந்து வந்தீரென்று கேட்கவுமில்லை. அவர் எனக்கு அவரது பெயரைச் சொல்லவுமில்லை. ஆனால் அவர் என்னிடம், நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவாய்; அதனால் இன்றிலிருந்து நீ திராட்சை இரசமோ மதுபானமோ குடிக்கவும், தீட்டானவற்றைச் சாப்பிடவும் வேண்டாம். ஏனெனில் அவன் பிறந்ததுமுதல் இறக்கும்வரை இறைவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்ட நசரேயனாயிருப்பான்” என்று சொன்னார் என்றாள். அப்பொழுது மனோவா யெகோவாவிடம் மன்றாடி, “யெகோவாவே! நீர் எங்களிடம் அனுப்பிய இறைவனின் மனிதனைத் திரும்பவும் எங்களிடம் அனுப்பும். அவர் வந்து பிறக்கப்போகும் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும் என்பதைப்பற்றி எங்களுக்குக் கற்பிக்கட்டும்” என்று வேண்டிக்கொண்டான். இறைவன் மனோவாவின் வேண்டுதலைக் கேட்டு, திரும்பவும் வயலில் இருந்த அவனுடைய மனைவியிடத்திற்கு இறைவனின் தூதனானவர் வந்தார். ஆனால் அவளது கணவன் மனோவா அவளுடனிருக்கவில்லை. அந்தப் பெண் தன் கணவனிடத்திற்கு விரைவாக ஓடிச்சென்று, “அன்று எனக்குமுன் தோன்றிய அந்த மனிதன் இன்றும் வந்திருக்கிறார்” என்றாள். அப்பொழுது மனோவா எழுந்து தனது மனைவியின் பின்னே சென்றான். அவன் அந்த மனிதனிடத்திற்கு வந்ததும், “என் மனைவியுடன் பேசியது நீர்தானா?” என்றான். அதற்கு அவர், “நான்தான்” என்றார். அப்பொழுது மனோவா, “உம்முடைய வாக்கு நிறைவேறும்பொழுது பிறக்கும் பிள்ளையின் வாழ்க்கைக்கும் அவன் செய்யவேண்டிய வேலைக்கும் ஒழுங்குமுறை என்ன?” என்று கேட்டான். அதற்கு யெகோவாவின் தூதனானவர், “உனது மனைவியிடம் நான் சொன்னவற்றையெல்லாம் அவள் செய்யவேண்டும். அவள் திராட்சைச் செடியிலிருந்து பெறும் எதையும் சாப்பிடக்கூடாது. திராட்சை இரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ குடிக்கவோ, அசுத்தமானவற்றைச் சாப்பிடவோ கூடாது. நான் இட்ட கட்டளைகள் எல்லாவற்றையும் அவள் கடைபிடிக்க வேண்டும்” என்று பதிலளித்தார். அப்பொழுது மனோவா யெகோவாவின் தூதனானவரிடம், “நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைக்கும்வரை, நீர் எங்களுடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றான். அதற்கு யெகோவாவின் தூதனானவர், “நீ என்னைத் தடுத்தாலும் நான் உனது உணவில் எதையும் சாப்பிடமாட்டேன். ஆனால் நீ தகன காணிக்கையை ஆயத்தம் செய்தால், அதை யெகோவாவுக்கு செலுத்து” என்றார். மனோவாவோ அவரை யெகோவாவின் தூதனானவர் என்று உணராமல் இருந்தான். அப்பொழுது மனோவா யெகோவாவின் தூதனானவரிடம், “நீர் சொன்னது நிறைவேறும்பொழுது உம்மை மகிமைப்படுத்துவதற்கு உம்முடைய பெயர் என்ன?” என விசாரித்தான். அதற்கு யெகோவாவினுடைய தூதன், “ஏன் என்னுடைய பெயரை கேட்கிறாய்? அதை உன்னால் விளங்கிக்கொள்ள முடியாதிருக்கும்” எனப் பதிலளித்தார். அப்பொழுது மனோவா ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், அதோடு தானியக் காணிக்கைகளையும் கொண்டுவந்து கல்லின் மேல்வைத்து யெகோவாவுக்குப் பலியாகக் கொடுத்தான். மனோவாவும், அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில் ஒரு வியக்கத்தக்க செயலை யெகோவா செய்தார். பலிபீடத்திலிருந்து நெருப்பு ஜூவாலை வானத்தை நோக்கி எழும்புகையில் யெகோவாவின் தூதனானவர் அந்த நெருப்பு ஜூவாலையில் மேலெழுந்து சென்றார். இதைக் கண்ட மனோவாவும் அவன் மனைவியும் தரையில் முகங்குப்புற கீழே விழுந்தார்கள். அதற்குபின் மனோவாவுக்கும், அவன் மனைவிக்கும் யெகோவாவின் தூதனானவர் காணப்படாததால், வந்தவர் யெகோவாவின் தூதனானவர் என்று மனோவா உணர்ந்து கொண்டான். மனோவா தன் மனைவியிடம், “நாம் இறைவனைக் கண்டோமே. ஆகையால் நாம் சாகப்போகிறோம்” என்றான். ஆனால் அவனுடைய மனைவி, “யெகோவா எங்களைக் கொலைசெய்ய எண்ணியிருந்தால், எங்களிடமிருந்து தகனக் காணிக்கையையும், தானியக் காணிக்கையையும் ஏற்றிருக்கமாட்டார். இவற்றையெல்லாம் எங்களுக்குக் காண்பிக்கவும், இதை எங்களுக்குச் சொல்லியிருக்கவும் மாட்டார்” என்று சொன்னாள். அந்தப் பெண் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு, “சிம்சோன்” என்று பெயரிட்டாள். அவன் வளர்ந்தான்; யெகோவா அவனை ஆசீர்வதித்தார். அவன் சோராவுக்கும், எஸ்தாவோலுக்கும் இடையிலுள்ள தாணின் முகாமில் இருக்கும்போது யெகோவாவின் ஆவியானவர் அவனைத் தூண்டத்தொடங்கினார்.
நியாயாதிபதிகள் 13:1-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் யெகோவாவின் பார்வைக்கு தீமையானதைச் செய்ததால், யெகோவா அவர்களை 40 வருடங்கள் வரை பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனிதன் இருந்தான்; அவன் பெயர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள். யெகோவாவுடைய தூதன் அந்த பெண்ணுக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். ஆதலால் நீ திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காதபடிக்கும், தீட்டானது ஒன்றும் சாப்பிட்டாதபடிக்கும் எச்சரிக்கையாக இரு. நீ கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெறுவாய்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படவேண்டாம்; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றத் தொடங்குவான் என்றார். அப்பொழுது அந்தப் பெண் தன்னுடைய கணவனிடம் வந்து: தேவனுடைய மனிதன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாக இருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை. அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; ஆதலால் நீ திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காமலும், தீட்டானது ஒன்றும் சாப்பிடாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன்னுடைய மரணநாள்வரை தேவனுக்கென்று நசரேயனாக இருப்பான் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது மனோவா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ, என்னுடைய ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனிதன் மறுபடியும் ஒருமுறை எங்களிடம் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான். தேவன் மனோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுத்தார்; அந்தப் பெண் வயல்வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் கணவனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை. ஆகையால் அந்தப் பெண் சீக்கிரமாய் ஓடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன்னுடைய கணவனுக்கு அறிவித்தாள். அப்பொழுது மனோவா எழுந்து, தன்னுடைய மனைவியின் பின்னாலே போய், அவரிடத்திற்கு வந்து: இந்தப் பெண்ணோடு பேசியவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார். அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான். யெகோவாவுடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் அந்தப் பெண்ணோடே சொன்ன எல்லாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து, திராட்சைச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காமலும், தீட்டானதொன்றும் சாப்பிடாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கடைபிடிக்கட்டும் என்றார். அப்பொழுது மனோவா யெகோவாவுடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காக சமைத்துக் கொண்டுவரும்வரை தங்கியிரும் என்றான். யெகோவாவுடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன்னுடைய உணவை சாப்பிடமாட்டேன்; நீ சர்வாங்க தகனபலி செலுத்தவேண்டுமானால், அதை நீ யெகோவாவுக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் யெகோவாவுடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான். அப்பொழுது மனோவா யெகோவாவுடைய தூதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மை மரியாதை செய்யும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான். அதற்குக் யெகோவாவுடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார். மனோவா போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் யெகோவாவுக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவனுடைய மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அதிசயம் வெளிப்பட்டது. அக்கினிஜூவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்பும்போது, யெகோவாவுடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் பார்த்து, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள். பின்பு யெகோவாவுடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் யெகோவாவுடைய தூதன் என்று மனோவா அறிந்து, தன்னுடைய மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், நிச்சயமாக மரிப்போம் என்றான். அதற்கு அவன் மனைவி: யெகோவா நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்கதகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள். பின்பு அந்தப் பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; யெகோவா அவனை ஆசீர்வதித்தார். அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் முகாமில் இருக்கும்போது யெகோவாவுடைய ஆவியானவர் அவனை தூண்டத்தொடங்கினார்.
நியாயாதிபதிகள் 13:1-25 பரிசுத்த பைபிள் (TAERV)
மீண்டும் இஸ்ரவேலர்கள் தீயசெல்களில் ஈடுபடுவதை கர்த்தர் கண்டார். எனவே பெலிஸ்தியர் இஸ்ரவேலரை 40 ஆண்டுகள் ஆள்வதற்கு அனுமதித்தார். சோரா என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு மனிதன் இருந்தான். அவன் பெயர் மனோவா. அவன் தாண் கோத்திரத்தைச் சார்ந்தவன். மனோவாவின் மனைவி குழந்தைகளின்றி மலடியாக இருந்தாள். கர்த்தருடைய தூதன் மனோவாவின் மனைவியின் முன் தோன்றி, “நீ பிள்ளை இல்லாதவளாயிருக்கிறாய், ஆனால் நீ கருவுற்று ஒரு குமாரனைப் பெறுவாய். திராட்சைரசத்தையோ, வேறு மதுபானத்தையோ பருகாதே. அசுத்தமான உணவு எதையும் உண்ணாதே. ஏனெனில் நீ கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெறுவாய். அவன் விசேஷமாக தேவனுக்கென்று அர்பணிக்கப்படுவான். அவன் நசரேயனாக இருப்பான். எனவே அவன் முடியை சவரம் செய்யவோ, வெட்டவோ கூடாது. அவன் பிறப்பதற்கு முன்பிருந்தே தேவனுக்கென்று விசேஷமானவனாக இருப்பான். அவன் பெலிஸ்தியரின் ஆட்சியிலிருந்து இஸ்ரவேலரை மீட்பான்” என்றான். அப்போது அப்பெண் தன் கணவனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினாள். அவள், “தேவனிடமிருந்து ஒரு மனிதன் என்னிடம் வந்தார். அவர் தேவன் அனுப்பிய தூதனைப் போன்றிருந்தார். அவர் என்னை பயமடையச் செய்தார். அவர் எங்கிருந்து வந்தாரென்று நான் விசாரிக்கவில்லை. அவர் தன் பெயரையும் எனக்குச் சொல்லவில்லை. ஆனால் அவர் என்னை நோக்கி, ‘நீ கருவுற்று ஒரு குமாரனைப் பெறுவாய். திராட்சைரசத்தையோ, வேறு மதுபானத்தையோ பருகாதே, அசுத்தமான எதையும் உண்ணாதே. ஏனெனில் ஒரு விசேஷமான வகையில் அச்சிறுவான் தேவனுக்காக அர்ப்பணிக்கப்படுவான். அவன் தேவனுக்குரிய விசேஷமானவனாக, பிறக்கும் முன்னரே அமைந்து, மரணம் அடையும் மட்டும் அவ்வாறே விளங்குவான்’ என்றார்” என்றாள். பின்பு மனோவா கர்த்தரிடம் ஜெபம் செய்தான். அவன், “கர்த்தாவே, நீர் உமது தேவ மனிதனை எங்களிடம் மீண்டும் அனுப்ப வேண்டும். விரைவில் பிறக்கப் போகிற குமாரனுக்கு நாங்கள் என்னென்ன செய்ய வேண்டுமென்பதை அவர் எங்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்று விரும்புகிறோம்” என்றான். தேவன் மனோவாவின் ஜெபத்தைக் கேட்டார். தேவதூதன் அப்பெண்ணிடம் மீண்டும் வந்தான். அவள் மனோவா இல்லாதபோது வயலில் தனித்திருந்தாள். எனவே அவள் தன் கணவனிடம் ஓடி, “அந்த மனிதன் வந்திருக்கிறார்! அன்று என்னிடம் வந்த அதே மனிதன்!” என்றாள். மனோவா எழுந்து மனைவியைப் பின் தொடர்ந்து சென்றான். அம்மனிதனிடம் வந்து, “நீர் எனது மனைவியிடம் முன்பு பேசிய அதே மனிதரா?” என்று கேட்டான். தூதன், “நானே” என்றான். மனோவா, “நீர் சொன்னபடியே நடக்குமென நம்புகிறேன். சிறுவன் வாழப்போகும் வாழ்க்கையைக் குறித்துச் சொல்லுங்கள். அவன் என்ன செய்வான்?” என்றான். கர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி, “உன் மனைவி நான் கூறிய எல்லாவற்றையும் செய்ய வேண்டும். திராட்சைச் செடியில் விளையும் எதையும் அவள் உண்ணக்கூடாது. அவள் திராட்சை ரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ பருகக் கூடாது. அசுத்தமான உணவு எதையும் அவள் உண்ணக் கூடாது. நான் அவளைச் செய்யுமாறு கட்டளையிட்ட அனைத்தையும் அவள் செய்யவேண்டும்” என்றான். அப்போது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி, “நீர் சற்றுத் தங்கிச் செல்வதை விரும்புகிறோம். ஒரு வெள்ளாட்டுக் குட்டியை நீர் உண்பதற்காகச் சமைத்து வர விரும்புகிறோம்” என்றான். கர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி, “நீங்கள் இருக்குமாறு கூறினாலும் உங்கள் உணவை உண்ணமாட்டேன். நீங்கள் ஏதேனும் தயாரிக்க விரும்பினால் கர்த்தருக்குத் தகனபலி கொடுங்கள்” என்றான். (மனோவா உண்மையிலேயே அவன் கர்த்தருடைய தூதன் என்பதை அறியாதிருந்தான்.) பின் கர்த்தருடைய தூதனிடம் மனோவா, “உமது நாமமென்ன? நீர் சொன்னது உண்மையாகவே நடந்தால் நாங்கள் உம்மை எப்படி கௌரவிக்க முடியும்? இதற்காகவே உமது நாமத்தை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என்றான். கர்த்தருடைய தூதன், “என் நாமத்தை ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு அது மிக அதிசயம் ஆகும்” என்றார். மனோவா ஒரு வெள்ளாட்டுக்குட்டியை ஒரு பாறையின் மேல் பலியிட்டான். அவன் ஆட்டுக் குட்டியையும் தானியக் காணிக்கையையும் அதிசயங்களை செய்கிற கர்த்தருக்கு அன்பளிப்பாகச் செலுத்தினான். மனோவாவும் அவனது மனைவியும் நடந்த அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தனர். பலிபீடத்திலிருந்து நெருப்பு ஜூவாலை எழும்பிய போது கர்த்தருடைய தூதன் நெருப்பிலேயே விண்ணிற்கு எழுந்து சென்றார். மனோவாவும் அவனது மனைவியும் அதைக் கண்டு முகங்குப்புற தரையில் விழுந்து வணங்கினார்கள். அவர் கர்த்தருடைய தூதன் என்பதை மனோவா இறுதியில் கண்டுகொண்டான். கர்த்தருடைய தூதன் மீண்டும் மனோவாவிற்கும் அவன் மனைவிக்கும் காட்சியளிக்கவில்லை. மனோவா தன் மனைவியை நோக்கி, “நாம் தேவனைப் பார்த்தோம், அதனால் நாம் கண்டிப்பாக மரித்துவிடுவோம்!” என்றான். ஆனால் அவள் அவனை நோக்கி, “கர்த்தர் நம்மைக் கொல்ல விரும்பவில்லை. அவர் நம்மைக் கொல்ல விரும்பினால் நமது தகனபலியையும், தானியக் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். இந்த அற்புதங்களையும் காட்டியிருக்கமாட்டார். இக்காரியங்களை அறிவித்திருக்கவும்மாட்டார்” என்றாள். அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு சிம்சோன் என்று பெயரிட்டனர். சிம்சோன் நன்றாக வளர்ந்தான். அவனை கர்த்தர் ஆசீர்வதித்தார். கர்த்தருடைய ஆவி சிம்சோன் மீது வந்து, அவன் மகானே தாண் என்னும் நகரிலிருக்கும்போது கர்த்தருடைய ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பித்தார். மகானே நகரம் என்பது சோரா என்னும் நகரத்திற்கும் எஸ்தாவோல் என்னும் நகரத்திற்கும் நடுவில் உள்ளது.
நியாயாதிபதிகள் 13:1-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள். கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கத் தொடங்குவான் என்றார். அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை. அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள்மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒரு விசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான். தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல்வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை. ஆகையால் அந்த ஸ்திரீ சீக்கிரமாய் ஓடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன் புருஷனுக்கு அறிவித்தாள். அப்பொழுது மனோவா எழுந்திருந்து, தன் மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார். அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான். கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து, திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார். அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக்கொண்டுவருமட்டும் தரித்திரும் என்றான். கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான். அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான். அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார். மனோவா போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது. அக்கினிஜூவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள். பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து, தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான். அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்கதகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள். பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.