நியாயாதிபதிகள் 11:1-40
நியாயாதிபதிகள் 11:1-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கீலேயாத்தியனான யெப்தா வலிமைமிக்க ஒரு வீரனாயிருந்தான். அவனுடைய தகப்பன் கீலேயாத். ஆனால் தாயோ ஒரு வேசிப்பெண். கீலேயாத்தின் மனைவியும் கீலேயாத்திற்கு மகன்களைப் பெற்றாள். அவர்கள் வளர்ந்து பெரியவர்களானபோது யெப்தாவை நோக்கி, “நீ வேறொரு பெண்ணிற்கு பிறந்த மகனாகையால், எங்கள் குடும்ப உரிமைச்சொத்தில் நீ எதையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை” என்று கூறி அவனைத் துரத்திவிட்டார்கள். எனவே யெப்தா தன் சகோதரர்களை விட்டு ஓடிப்போய் தோப் என்னும் நாட்டில் குடியிருந்தான். அப்போது அங்கேயிருந்த முரடர்கள் அவனோடு ஒன்றுசேர்ந்து அவனைப் பின்பற்றினார்கள். சில காலத்தின்பின் அம்மோனியர் இஸ்ரயேலரோடு யுத்தம் செய்ய வந்தார்கள். அப்போது கீலேயாத்தின் முதியவர்கள் யெப்தாவை அழைத்துவர தோப் நாட்டிற்குச் சென்றார்கள். அவர்கள் யெப்தாவிடம், “அம்மோனியருக்கு எதிராக சண்டையிடுவதற்கு நீ எங்களுக்குப் படைத்தளபதியாக இரு” என்றார்கள். அப்பொழுது யெப்தா அவர்களிடம், “நீங்கள் என்னை வெறுத்து என் தகப்பன் வீட்டிலிருந்து துரத்திவிடவில்லையோ? உங்களுக்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் போது ஏன் என்னைத் தேடிவந்திருக்கிறீர்கள்” என்றான். அதற்குக் கீலேயாத்தின் முதியவர்கள் யெப்தாவிடம், “எப்படியாயினும் நாங்கள் இப்பொழுது உன் பக்கம் வருகிறோம். அம்மோனியருடன் சண்டையிடும்படி நீ எங்களோடு வா. அப்போது கீலேயாத்தில் இருக்கும் எல்லோருக்கும் நீ தலைவனாயிருப்பாய்” என்று சொன்னார்கள். அதற்கு யெப்தா, “நான் உங்களுடன் வந்து அம்மோனியருடன் சண்டையிடும் போது, யெகோவா அவர்களை என் கையில் ஒப்படைத்தால் உண்மையாகவே நான் உங்கள் தலைவனாயிருப்பேனோ?” என்று கேட்டான். அப்பொழுது கீலேயாத்தின் முதியவர்கள் யெப்தாவிடம், “யெகோவாவே எங்கள் சாட்சி. நீ சொல்வதை நிச்சயமாகச் செய்வோம்” என்று பதிலளித்தனர். அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் முதியவர்களுடன் சென்றான். அவனை மக்கள் தங்கள் தலைவனாகவும், தளபதியாகவும் நியமித்தனர். மிஸ்பாவில் யெகோவா முன்னிலையில், யெப்தா திரும்பவும் தன் நிபந்தனைகளையெல்லாம் எடுத்துச்சொன்னான். பின்பு யெப்தா அம்மோனிய அரசனிடம் தூதுவர்களை அனுப்பி, “எங்கள் நாட்டை நீங்கள் தாக்கியிருப்பதற்கு எங்களுடன் உங்களுக்கிருக்கும் விரோதம் என்ன?” என்று கேட்டுவரும்படி சொன்னான். அம்மோனியரின் அரசன் யெப்தாவின் தூதுவர்களிடம், “இஸ்ரயேலர் எகிப்தில் இருந்து வெளியேறி வந்தபோது, அவர்கள் யோர்தான் வரைக்கும் அர்னோன் ஆறுதொடங்கி, யாப்போக் ஆறுவரையும் உள்ள எனது நாட்டை பிடித்துக்கொண்டார்கள். இப்போது அதைத் திரும்பவும் சமாதானமாக தந்துவிடுங்கள்” என்று கேட்டான். யெப்தா தூதுவர்களை அம்மோன் அரசனிடம் திரும்பவும் அனுப்பி அவனிடம் சொல்லச் சொன்னதாவது, யெப்தா சொல்லுவது இதுவே: “இஸ்ரயேலர் மோவாபின் நாட்டையோ, அம்மோனியரின் நாட்டையோ பிடித்துக்கொள்ளவில்லை.” ஆனால் அவர்கள் எகிப்தைவிட்டு வெளியே வந்தபோது, இஸ்ரயேலர் பாலைவனத்தின் வழியாகச் செங்கடல்வரை சென்று காதேசுக்கு வந்தார்கள். அப்பொழுது இஸ்ரயேலர் ஏதோமின் அரசனுக்குத் தூதுவரை அனுப்பி, “உமது நாட்டின் வழியாகச் செல்ல எங்களுக்கு அனுமதியளியும்” என்று கேட்டார்கள். ஆனால் ஏதோமின் அரசன் அதைக் கேட்கவில்லை. அவ்வாறே அவர்கள் மோவாப்பின் அரசனுக்கும் தூதுவர்களை அனுப்பினார்கள். அவனும் மறுத்துவிட்டான். எனவேதான் இஸ்ரயேலர் காதேசில் தங்கினார்கள். “பின்பு அவர்கள் பாலைவனத்தின் வழியாக, ஏதோம், மோவாப் நாட்டைச் சுற்றி சென்று மோவாப் நாட்டின் கிழக்குப்பகுதிக்கு வழியாகப்போய், அர்னோன் ஆற்றுக்கு மற்றப் பகுதியில் முகாமிட்டார்கள். மோவாப்பின் ஆட்சிப் பகுதிக்குள் அவர்கள் வரவில்லை. ஏனெனில் அர்னோன் ஆறே மோவாப்பின் எல்லை. “அதன்பின்பும் இஸ்ரயேலர் எஸ்போனில் அரசாண்ட எமோரியரின் அரசன் சீகோனுக்குத் தூதுவர்களை அனுப்பி, ‘உமது நாட்டின் வழியாக எங்கள் சொந்த இடத்திற்குப் போக அனுமதிகொடும்’ என்று கேட்டார்கள். ஆனால் சீகோன் இஸ்ரயேலரை நம்பாது தனது ஆட்சிப் பகுதியைக் கடந்துசெல்ல விடவில்லை. மாறாக அவன் தன் மனிதர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி, யாகாசிலே முகாமிட்டு இஸ்ரயேலரோடு போரிட்டான். “அப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சீகோனையும், அவனுடைய மனிதர்களையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்படைத்ததால் இஸ்ரயேலர்கள் அவர்களை முறியடித்தார்கள். இஸ்ரயேலர் அந்நாட்களில் அந்த இடத்தில் வாழ்ந்த எமோரியரின் எல்லா நாட்டையும் பிடித்துக்கொண்டார்கள். அதோடு அர்னோன் ஆற்றிலிருந்து யாப்போத் ஆறுவரைக்கும், பாலைவனம் தொடக்கம் யோர்தான் ஆறுவரைக்கும் உள்ள நாடுகளையும் அவர்கள் கைப்பற்றினார்கள். “இப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா, தனது மக்களான இஸ்ரயேலரின் முன்னால் எமோரியரைத் துரத்தியிருக்கையில் அந்நாட்டில் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? உனது தெய்வமான கேமோஸ் தருவதை நீ எடுக்கமாட்டாயோ? அதுபோலவே எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு எதைக் கொடுத்தாலும் நாங்கள் அதை எங்கள் உடைமையாக்கிக்கொள்வோம். நீங்கள் சிப்போரின் மகனும், மோவாப்பின் அரசனுமான பாலாக்கைவிட சிறந்தவர்களோ? அவன் எப்பொழுதாவது இஸ்ரயேலருடன் தர்க்கம் பண்ணியதும், சண்டையிட்டதும் உண்டோ? இஸ்ரயேலர் எஸ்போன், அரோயேர் சுற்றுப்புற குடியிருப்புகளிலும், அர்னோனை அண்டியுள்ள எல்லாப் பட்டணங்களிலும் முந்நூறு வருடகாலமாக குடியிருந்தார்கள். நீங்கள் அந்தக் காலத்தில் ஏன் அதைத் திருப்பி எடுக்கவில்லை. நான் உனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. ஆனால் நீ எனக்கெதிராக யுத்தம் செய்வதனால் எனக்குத் தீங்கு செய்கிறாய். எனவே இந்நாளில் இஸ்ரயேலருக்கும், அம்மோனியருக்கும் இடையிலுள்ள தர்க்கத்தை நீதிபதியான யெகோவா தீர்த்து வைக்கட்டும்.” ஆனால் அம்மோன் அரசனோ யெப்தாவின் செய்தி ஒன்றையும் கவனிக்கவில்லை. அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் யெப்தாவின்மேல் வந்தார். அவன் கீலேயாத்தையும், மனாசேயையும் கடந்துபோய்; கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து அங்கிருந்து அவன் அம்மோனியருக்கு எதிராக முன்னேறிச் சென்றான். அங்கே யெப்தா யெகோவாவுடன் ஒரு நேர்த்திக்கடன் செய்தான். “நீர் எனது கையில் அம்மோனியர்களைக் கொடுப்பீராகில், நான் அம்மோனியரை வெற்றிகொண்டு திரும்பி வரும்போது, எனது வீட்டின் வாசலில் இருந்து முதன்முதல் என்னைச் சந்திக்க வருவது எதுவோ, அது யெகோவாவுக்குரியது; நான் அதை யெகோவாவுக்குக் காணிக்கையாகப் பலியிடுவேன்” என்றான். பின்பு யெப்தா அம்மோனியருடன் யுத்தம் செய்யப்போனான்; யெகோவா அவர்களை யெப்தாவின் கையில் கொடுத்தார். யெப்தா அரோயேர் தொடக்கம் ஆபேல் கேராமின் வரைக்கும் மின்னீத்தின் சுற்றுப்புறங்களிலுள்ள இருபது பட்டணங்களை முறியடித்தான். இவ்வாறு இஸ்ரயேலர் அம்மோனியரை அடக்கினார்கள். யெப்தா மிஸ்பாவிலுள்ள தனது வீட்டிற்குத் திரும்பி வரும்போது, அவனைச் சந்திக்க வந்தது வேறு யாருமல்ல. அவனுடைய மகளே தான். அவள் தம்புரா தாளத்திற்கு நடனமாடிக்கொண்டு, அவன் முன்னே வந்தாள். அவள் அவனுடைய ஒரே பிள்ளை. அவளைவிட அவனுக்கு வேறு மகனோ, மகளோ இருக்கவில்லை. அவன் தன் மகளைப் பார்த்ததும், “ஐயோ என் மகளே! நீ என்னை வேதனைக்குள்ளாக்கி விட்டாயே! நான் யெகோவாவுடன் செய்துகொண்ட நேர்த்திக்கடனை என்னால் மீறமுடியாதே” என சொல்லி தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு அழுதான். அதற்கு அவள், “என் தகப்பனே, நீர் யெகோவாவுக்கு வாக்குப்பண்ணி விட்டீர். உமது பகைவரான அம்மோனியரை யெகோவா பழிவாங்கியபடியால் நீர் வாக்குக் கொடுத்தபடி எனக்குச் செய்யும். ஆனால் இந்த ஒரு வேண்டுகோளுக்கு இணங்கும். நான் திருமணம் செய்ய மாட்டேனாகையால், என் சிநேகிதிகளுடன் மலைகளில் சுற்றித்திரிந்து அழுவதற்கு எனக்கு இரண்டு மாதம் தவணை கொடும்” என்று கேட்டாள். அதற்கு அவன், “நீ போகலாம்” என்று சொல்லி இரண்டு மாதங்களுக்குப் போக அனுமதித்தான். அவளும், அவள் சிநேகிதிகளும் மலைகளின்மேல் சென்று, அவள் திருமணம் செய்யாத காரியத்தினிமித்தம் அவளுடன் சேர்ந்து அழுதார்கள். இரண்டு மாதங்களின் பின்பு அவள் தன் தகப்பனிடத்திற்கு திரும்பிவந்தாள்; அவன் தான் நேர்த்திக்கடன் செய்தபடி அவளுக்குச் செய்தான். அவள் கன்னிகையாயிருந்தாள். ஒவ்வொரு வருடமும் இஸ்ரயேல் கன்னிப்பெண்கள் கீலேயாத்தியனான யெப்தாவின் மகளுக்காக, நாலு நாட்கள் வெளியில் போய் நினைவுகூர்ந்து துக்கங்கொண்டாடும் வழக்கம் இஸ்ரயேலருக்குள் இதனாலேயே வந்தது.
நியாயாதிபதிகள் 11:1-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கீலேயாத்தியனான யெப்தா வல்லமையுள்ள வீரனாக இருந்தான்; அவன் வேசியின் மகன்; கிலெயாத் அவனைப் பெற்றான். கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் மகன்களைப் பெற்றாள்; அவனுடைய மனைவி பெற்ற மகன்கள் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்களுடைய தகப்பன் வீட்டிலே சொத்து இல்லை; நீ அந்நிய பெண்ணின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள். அப்பொழுது யெப்தா: தன்னுடைய சகோதரர்களை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனிதர்கள் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடு யுத்தத்திற்குப் போவார்கள். சிலநாட்களுக்குப்பின்பு, அம்மோனிய மக்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள். அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்யும்போது கீலேயாத்தின் மூப்பர்கள் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்துவரப்போய், யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய எங்களுடைய தளபதியாக இருக்கவேண்டும் என்றார்கள். அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என்னுடைய தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து சம்பவித்திருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான். அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களோடு வந்து, அம்மோன் மக்களோடு யுத்தம்செய்து, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாக இருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடம் வந்தோம் என்றார்கள். அதற்கு யெப்தா: அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, யெகோவா அவர்களை எனக்கு முன்பாக ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாக வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான். கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன்னுடைய வார்த்தையின்படியே செய்யாவிட்டால், யெகோவா நமக்கு நடுவாக நின்று கேட்பாராக என்றார்கள். அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பர்களோடு போனான்; மக்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் தளபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன்னுடைய காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே யெகோவாவுடைய சந்நிதியிலே சொன்னான். பின்பு யெப்தா அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நீ என்னுடைய தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்செய்ய வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான். அம்மோன் மக்களின் ராஜா யெப்தாவின் தூதுவர்களை நோக்கி: இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவங்கி யாப்போக், யோர்தான்வரை இருக்கிற என்னுடைய தேசத்தைக் பிடித்துக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாகத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். யெப்தா மறுபடியும் அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது: யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் தேசத்தையாகிலும், அம்மோன் மக்களின் தேசத்தையாகிலும் பிடித்துக்கொண்டதில்லையே. இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்திரத்தில் சிவந்த சமுத்திரம்வரை நடந்து, பின்பு காதேசுக்கு வந்து, இஸ்ரவேலர்கள் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாகக் கடந்துபோகிறோம் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர்கள் காதேசிலே தங்கியிருந்து, பின்பு வனாந்திரவழியாக நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கேவந்து, மோவாபின் எல்லைக்குள் நுழையாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே முகாமிட்டார்கள். அப்பொழுது இஸ்ரவேலர்கள் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியர்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாக எங்களுடைய இடத்திற்கு கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள். சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன்னுடைய மக்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே முகாமிட்டு, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான். அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சீகோனையும் அவனுடைய எல்லா மக்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர்கள் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியர்களின் நாடுகளையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி, யாப்போக்வரை, வனாந்திரம் துவக்கி யோர்தான்வரை இருக்கிற எமோரியரின் எல்லைகளையெல்லாம் சொந்தமாக பிடித்துக்கொண்டார்கள். இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எமோரியர்களை தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தை பிடித்துக்கொள்ளமுடியுமா? உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் பிடித்துக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் பிடித்துக்கொள்கிறோம். மேலும் சிப்போரின் மகனான பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைவிட உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலர்களோடு எப்போதாவது வாதாடினானா? எப்போதாவது அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்தானா? இஸ்ரவேலர்கள் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியின் அருகே எல்லா ஊர்களிலும், முந்நூறு வருடங்கள் குடியிருக்கும்போது, இவ்வளவு காலமாக நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாமல் போனதென்ன? நான் உமக்கு எதிராகக் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு எதிராக யுத்தம்செய்கிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய யெகோவா இன்று இஸ்ரவேல் மக்களுக்கும் அம்மோன் மக்களுக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான். ஆனாலும் அம்மோன் மக்களின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளை கேட்காமற்போனான். அப்பொழுது யெகோவாவுடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் மக்களுக்கு எதிராகப் போனான். அப்பொழுது யெப்தா யெகோவாவுக்கு ஒரு பொருத்தனையைச் செய்து: தேவரீர் அம்மோன் மக்களை என் கையில் ஒப்புக்கொடுத்தால், நான் அம்மோன் மக்களிடத்திலிருந்து சமாதானத்தோடு திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது யெகோவாவுக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான். யெப்தா அம்மோன் மக்களின்மேல் யுத்தம்செய்ய, அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுப்போனான்; யெகோவா அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகும்வரை, திராட்சைத் தோட்டத்து நிலங்கள்வரைக்கும், பேரழிவாக முறியடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் மக்கள் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள். யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன்னுடைய வீட்டிற்கு வருகிறபோது, இதோ, அவன் மகள் தம்புரு வாசித்து நடனமாடி, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளை; அவளைத்தவிர அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை. அவன் அவளைப் பார்த்தவுடனே தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு: ஐயோ, என் மகளே, என்னை மிகவும் மனவேதனை அடையவும் கலங்கவும் செய்கிறாய்; நான் யெகோவாவை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான். அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் யெகோவாவை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் மக்களாகிய உம்முடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் யெகோவா உமக்குக் கட்டளையிட்டபடியால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள். பின்னும் அவள் தன்னுடைய தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என்னுடைய தோழிகளும் என்னுடைய கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டு மாதங்கள் தவணைகொடும் என்றாள். அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன்னுடைய தோழிகளோடு போய்த் தன்னுடைய கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி, இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன்னுடைய தகப்பனிடம் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் செய்திருந்த தன்னுடைய பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் திருமணம் ஆகாத கன்னியாகவே வாழ்ந்து மரித்து விட்டாள். இதினிமித்தம் இஸ்ரவேலின் மகள்கள் வருடந்தோறும் போய், நான்கு நாட்கள் கீலேயாத்தியனான யெப்தாவின் மகளைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமானது.
நியாயாதிபதிகள் 11:1-40 பரிசுத்த பைபிள் (TAERV)
கீலேயாத் கோத்திரத்தைச் சேர்ந்தவன் யெப்தா, அவன் சிறந்த வீரன். ஆனால் யெப்தா ஒரு வேசியின் குமாரன். அவன் தந்தை கிலேயாத் என்பவன். கிலேயாத்தின் மனைவிக்குப் பல குமாரர்கள் இருந்தனர். அவர்கள் வளர்ந்தபோது யெப்தாவை விரும்பவில்லை. அவனது சொந்த ஊரைவிட்டுச் செல்லுமாறு அந்த குமாரர்கள் யெப்தாவைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் அவனை நோக்கி, “நீ நம் தந்தையின் சொத்தில் எதையும் பெறமாட்டாய். நீ வேறொரு பெண்ணின் குமாரன்” என்றனர். எனவே தன் சகோதரர்களினிமித்தமாக யெப்தா அங்கிருந்து போய் தோப் தேசத்தில் வாழ்ந்து வந்தான். தோப் தேசத்தில் சில முரட்டு மனிதர்கள் அவனைப் பின்பற்றத் தொடங்கினார்கள். கொஞ்சக் காலத்திற்குப் பின் அம்மோனிய ஜனங்கள் இஸ்ரவேலரோடு போர் செய்தனர். அம்மோனிய ஜனங்கள் இஸ்ரவேலரை எதிர்த்துப் போரிட்டதால் கீலேயாத்தின் தலைவர்கள் யெப்தாவிடம் சென்றனர். தோப் தேசத்தை விட்டுக் கீலேயாத்திற்கு யெப்தா திரும்பிவர வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். தலைவர்கள் யெப்தாவை நோக்கி, “வா, வந்து எங்கள் சேனாதிபதியாக அம்மோனியர்களை எதிர்த்துப் போரிடு” என்றனர். ஆனால் யெப்தா கீலேயாத் தேசத்து மூப்பர்களிடம் (தலைவர்களிடம்), “எனது தந்தையின் வீட்டிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தினீர்கள். நீங்கள் என்னைப் பகைக்கிறீர்கள்! உங்களுக்குத் துன்பம் வந்தபோது என்னிடம் ஏன் வருகிறீர்கள்?” என்று கேட்டான். கீலேயாத்தின் தலைவர்கள் யெப்தாவிடம், “அதனாலேயே நாங்கள் உன்னிடம் வந்துள்ளோம். எங்களோடு வந்து அம்மோனிய ஜனங்களை எதிர்த்துப் போராடு. கீலேயாத்தில் வாழும் ஜனங்கள் எல்லோருக்கும் நீ அதிபதியாவாய்” என்றனர். அப்போது யெப்தா கீலேயாத்தின் தலைவர்களிடம், “நான் கீலேயாத்திற்கு வந்து அம்மோனிய ஜனங்களை எதிர்த்துப் போரிட வேண்டுமென்றால் அவ்வாறே செய்வேன். ஆனால் கர்த்தர் எனக்கு வெற்றி பெற உதவினால், நான் உங்கள் புதியத் தலைவனாக இருப்பேன்” என்றான். கீலேயாத்தின் மூப்பர்கள் (தலைவர்கள்) யெப்தாவை நோக்கி, “நாம் கூறுகின்ற எல்லாவற்றையும் கர்த்தர் கேட்டுக்கொண்டிருக்கிறார். நீ கூறுகின்றபடியே செய்வதாக நாங்கள் வாக்களிக்கிறோம்” என்றார்கள். எனவே யெப்தா கீலேயாத்தின் மூப்பர்களோடு (தலைவர்களோடு) சென்றான். அவர்கள் யெப்தாவைத் தங்கள் தலைவனாகவும், அதிபதியாகவும் நியமித்தனர். மிஸ்பா நகரத்தில் கர்த்தருக்கு முன்பாக யெப்தா தனது வார்த்தைகளையெல்லாம் மீண்டும் கூறினான். அம்மோனிய ஜனங்களின் ராஜாவிடம் யெப்தா செய்தியாளர்களை அனுப்பினான். “அம்மோனிய ஜனங்களுக்கும் இஸ்ரவேலருக்குமிடையே இருக்கும் பிரச்சினை என்ன? எங்கள் தேசத்தில் நீங்கள் போர் தொடுத்துவரக் காரணமென்ன?” என்பதே அவன் அனுப்பிய செய்தியாகும். அம்மோனிய ஜனங்களின் ராஜா யெப்தாவிடமிருந்து வந்தோருக்கு, “எகிப்திலிருந்து வந்தபோது இஸ்ரவேலர் எங்கள் தேசத்தை எடுத்துக்கொண்டதால் நாங்கள் இஸ்ரவேலை எதிர்த்துப் போர் செய்கிறோம். அர்னோன் நதியிலிருந்து யாபோக் நதி வரைக்கும் யோர்தான் நதிவரைக்கும் அவர்கள் எங்கள் தேசத்தை கைப்பற்றிக்கொண்டார்கள். இப்போது எங்கள் தேசத்தை அமைதியான முறையில் திரும்பக் கொடுத்துவிடுமாறு இஸ்ரவேலர்களிடம் கூறு” என்றான். எனவே யெப்தாவின் தூதுவர்கள் (செய்தி தெரிவிப்போர்) இச்செய்தியை யெப்தாவிற்குத் தெரிவித்தனர். யெப்தா மீண்டும் தூதுவர்களை அம்மோனிய ராஜாவிடம் அனுப்பினான். அவர்கள் இச்செய்தியை எடுத்துச் சென்றனர்: “யெப்தா கூறுவது இதுவே: மோவாப் அல்லது அம்மோனிய ஜனங்களின் தேசத்தை இஸ்ரவேலர் எடுத்துக்கொள்ளவில்லை. எகிப்திலிருந்து இஸ்ரவேலர் வெளியேறிய போது பாலைவன வழியாக செங்கடலுக்குச் சென்றனர். பின்பு காதேசுக்குப் போனார்கள். இஸ்ரவேலர் ஏதோம் ராஜாவுக்கு தூதுவரை அனுப்பினார்கள். தூதுவர்கள் ஒரு தயவு கேட்டனர். அவர்கள், ‘இஸ்ரவேலர் உங்கள் தேசத்தினூடே கடந்து செல்லட்டும்’ என்று கேட்டனர். ஆனால் ஏதோமின் ராஜா தனது தேசத்தைக் கடந்து செல்ல அனுமதிக்கவில்லை. மோவாப் ராஜாவுக்கும் இதே செய்தியை அனுப்பினோம். மோவாப் எங்களைத் தனது தேசத்தின் வழியாக கடந்து செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் இஸ்ரவேலர் காதேசில் தங்கினார்கள். “பின்பு இஸ்ரவேலர் பாலைவனத்தின் வழியாக ஏதோம், மோவாப் தேசங்களின் எல்லை ஓரமாகவே கடந்துச் சென்றனர். மோவாபின் கிழக்கே இஸ்ரவேலர் பயணம் செய்தனர். அர்னோன் நதியின் மறுபுறம் அவர்கள் முகாமிட்டுத் தங்கினார்கள். மோவாப் தேசத்தில் எல்லையையும் அவர்கள் தாண்டிச் செல்லவில்லை. (அர்னோன் நதியே மோவாபின் எல்லையாக இருந்தது.) “எமோரிய ராஜாவாகிய சீகோனிடம் இஸ்ரவேலர் தூதுவரை அனுப்பினார்கள். சீகோன் எஸ்போன் நகரத்து மன்னன். தூதுவர் சீகோனிடம், ‘இஸ்ரவேலர் உங்கள் தேசத்தின் வழியே கடந்து செல்ல அனுமதிக்கவேண்டும். எங்கள் தேசத்துக்குப் போக நாங்கள் விரும்புகிறோம்’ என்றனர். ஆனால், எமோரிய ராஜாவாகிய சீகோன் தன் எல்லைகளைக் கடந்து செல்ல இஸ்ரவேலரை அனுமதிக்கவில்லை. சீகோன் தம் ஆட்களை ஒருங்கே அழைத்து யாகாசில் முகாமிட்டான். பின் எமோரியர் இஸ்ரவேலரோடு போர் செய்தனர். ஆனால் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், சீகோனையும் அவனது சேனையையும் வெல்வதற்கு இஸ்ரவேலருக்கு உதவினார். எனவே எமோரியரின் தேசம் இஸ்ரவேலருக்குச் சொந்தமாயிற்று. அவ்வாறு இஸ்ரவேலர் எமோரியரின் தேசத்தையே தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள முடிந்தது. அத்தேசம் அர்னோன் நதியிலிருந்து யாபோக் நதிவரைக்கும் இருந்தது. அத்தேசம் பாலைவனத்திலிருந்து யோர்தான் நதிவரைக்கும் பரவியிருந்தது. “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தரே எமோரியரை அவர்கள் தேசத்திலிருந்து வெளியேறும்படிச் செய்தார். கர்த்தர் இஸ்ரவேலருக்கு அத்தேசத்தைக் கொடுத்தார். இஸ்ரவேலரை இத்தேசத்தைவிட்டுப் போகச்செய்ய முடியுமென நீங்கள் நினைக்கிறீர்களா? காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும். எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நாங்கள் வாழ்வோம்! நீங்கள் சிப்போரின் குமாரனாகிய பாலாக்கைக் காட்டிலும் சிறத்வர்களா? அவன் மோவாப் தேசத்தின் ராஜாவாக இருந்தான். அவன் இஸ்ரவேலரோடு வாக்குவாதம் செய்தானா? அவன் இஸ்ரவேலரோடு நேரில் போரிட்டானா? இஸ்ரவேலர் எஸ்போனிலும் அதைச் சுற்றிலுமுள்ள ஊர்களிலும் 300 ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர். இஸ்ரவேலர் ஆரோவேரிலும் அதைச் சுற்றிலுமுள்ள நகரங்களிலும் 300 ஆண்டுகள் வசித்து உள்ளனர். இஸ்ரவேலர் அர்னோன் நதியருகேயுள்ள எல்லா நகரங்களிலும் 300 ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர். இவ்வளவு காலமும் அந்நகரங்களைக் கைப்பற்றிக்கொள்ள நீங்கள் முயலாததேன்? இஸ்ரவேலர் உங்களுக்கெதிராகப் பாவம் செய்யவில்லை. ஆனால் இஸ்ரவேலருக்கெதிராக நீங்கள் தீமை செய்கிறீர்கள். உண்மையான நீதிபதியாகிய கர்த்தரே இஸ்ரவேலர்கள், அம்மோனியர்கள் ஆகிய இருவரிடையே சரியானவர் யார் என்பதைத் தீர்மானிக்கட்டும்!” என்றனர். அம்மோனிய ஜனங்களின் ராஜா யெப்தாவிடமிருந்து வந்த இச்செய்தியை ஏற்றுக்கொள்ள மறுத்தான். அப்போது தேவஆவியானவர் யெப்தாவின் மேல் வந்தார். யெப்தா கீலேயாத், மனாசே பகுதிகளைக் கடந்து கீலேயாத்திலுள்ள மிஸ்பாவுக்குப் போனான். கீலேயாத்திலுள்ள மிஸ்பாவிலிருந்து அம்மோனிய ஜனங்களின் தேசத்தை யெப்தா தாண்டிச் சென்றான். யெப்தா கர்த்தரிடம், “நீர் அம்மோனிய ஜனங்களை வெல்ல என்னை அனுமதித்தால் வெற்றிபெற்று நான் திரும்பும்போது, எனது வீட்டிலிருந்து முதலில் வெளிவருகிறது எதுவோ அதை உமக்குத் தகன பலியாகக் கொடுப்பேன்” என்று வாக்குறுதி செய்தான். பின்பு யெப்தா அம்மோனிய ஜனங்களின் தேசத்திற்குச் சென்று, அம்மோனிய ஜனங்களோடுப் போரிட்டான். அவர்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அவனுக்கு உதவினார். ஆரோவேர் நகரத்திலிருந்து மின்னித் நகரம் வரைக்கும் அவர்களைத் தோற்கடித்தான். யெப்தா 20 நகரங்களைக் கைப்பற்றினான். பின் அவன் அம்மோனிய ஜனங்களோடு ஆபேல்கேராமிம் வரைக்கும் போரிட்டான். இஸ்ரவேலர் அம்மோனிய ஜனங்களைத் தோற்கடித்தனர். இது அம்மோனியருக்கு மிகப்பெரிய தோல்வியாக இருந்தது. பின்பு யெப்தா தனது வீட்டிற்குப் போனான். அவனைச் சந்திப்பதற்கு அவனது குமாரத்தி எதிரே வந்தாள். அவள் தம்புரு வாசித்து நடனமாடிக்கெண்டிருந்தாள். அவள் அவனது ஒரே குமாரத்தி. யெப்தா அவளை மிகவும் நேசித்தான். யெப்தாவிற்கு வேறு மகனோ, மகளோ இல்லை. தனது வீட்டிலிருந்து முதலில் வெளிவந்தவள் தன் மகளே என்று யெப்தா அறிந்தபோது தனது ஆடையைக் கிழிந்து தனது துக்கத்தைக் காட்டினான். பின் அவன், “என் மகளே! நீ என்னை அழித்தாய். நீ என்னை மிகுந்த துக்கத்திற்குள்ளாக்கினாய். நான் கர்த்தருக்குக் கொடுத்த வாக்குறுதியை மாற்ற இயலாது” என்றான். அப்போது அவனது குமாரத்தி யெப்தாவை நோக்கி, “தந்தையே! நீங்கள் கர்த்தருக்கு கொடுத்த உங்கள் வாக்கைக் காப்பாற்றுங்கள். நீங்கள் செய்வதாகக் கூறியதைச் செய்யுங்கள். உங்கள் பகைவராகிய அம்மோனிய ஜனங்களை நீங்கள் வெல்வதற்கு கர்த்தர் உதவியுள்ளார்” என்றாள். பின்பு யெப்தாவின் குமாரத்தி தன் தந்தையிடம், “எனக்காக முதலில் ஒரு காரியம் செய்யுங்கள். நான் இரண்டு மாதங்கள் தனித்திருக்க வேண்டும், நான் மலைகளுக்குப் போவேன். நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். குழந்தை பெறவும் மாட்டேன். எனவே, நானும் எனது தோழியரும் போய் சேர்ந்து அழ அனுமதி கொடுங்கள்” என்றாள். யெப்தா, “போய், அவ்வாறே செய்” என்றான். யெப்தா அவளை இரண்டு மாதத்திற்கு அங்கிருந்து அனுப்பி வைத்தான். யெப்தாவின் குமாரத்தியும் அவளது தோழியரும் மலைகளில் தங்கினார்கள். அவர்கள் அவளுக்காக அழுதனர். ஏனென்றால் அவள் திருமணம் செய்து குழந்தை பெறுவதாக இல்லை. இரண்டு மாதங்கள் முடிந்த பின்னர், யெப்தாவின் குமாரத்தி தந்தையிடம் திரும்பினாள். கர்த்தருக்கு வாக்குறுதி அளித்தபடியே யெப்தா அவளுக்குச் செய்தான். யெப்தாவின் குமாரத்தி யாரோடும் பாலின உறவு கொண்டு வாழ்ந்திருக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கீலேயாத்திலுள்ள பெய்தாவின் குமாரத்தியை இஸ்ரவேலின் பெண்கள் நினைவுகூர்ந்தனர். அப்பெண்கள் ஒவ்வொரு வருடமும் நான்கு நாட்கள் யெப்தாவின் மகளுக்காக அழுதனர். இது இஸ்ரவேலில் ஒரு பழக்கமாயிற்று.
நியாயாதிபதிகள் 11:1-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான். கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள். அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள். சிலநாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணினார்கள். அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணும்போது கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்துவரப்போய், யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ண எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும் என்றார்கள். அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான். அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள். அதற்கு யெப்தா: அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான். கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன் வார்த்தையின்படியே செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுநின்று கேட்பாராக என்றார்கள். அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான். பின்பு யெப்தா அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நீ என் தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்பண்ண வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான். அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தாவின் ஸ்தானாபதிகளை நோக்கி: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவக்கி யாபோக்மட்டும், யோர்தான்மட்டும் இருக்கிற என் தேசத்தைக் கட்டிக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாய்த் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். யெப்தா மறுபடியும் அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது: யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் மோவாபியரின் தேசத்தையாகிலும், அம்மோன் புத்திரரின் தேசத்தையாகிலும் கட்டிக்கொண்டதில்லையே. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்தரத்தில் சிவந்த சமுத்திரமட்டும் நடந்து, பின்பு காதேசுக்கு வந்து, இஸ்ரவேலர் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்துவழியாய்க் கடந்து போகட்டும் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர் காதேசிலே தரித்திருந்து, பின்பு வனாந்தரவழியாய் நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கேவந்து, மோவாபின் எல்லைக்குள் பிரவேசியாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே பாளயமிறங்கினார்கள். அப்பொழுது இஸ்ரவேலர் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்து வழியாய் எங்கள் ஸ்தானத்திற்குக் கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள். சீகோன் இஸ்ரவேலரை நம்பாததினால், தன் எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன் ஜனங்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே பாளயமிறங்கி, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான். அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா ஜனங்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியரின் சீமையையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி, யாபோக்மட்டும், வனாந்தரம் துவக்கி யோர்தான்மட்டும் இருக்கிற எமோரியரின் எல்லையையெல்லாம் சுதந்தரமாய்க் கட்டிக்கொண்டார்கள். இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா? உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் கட்டிக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் கட்டிக்கொள்ளுகிறோம். மேலும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைப்பார்க்கிலும் உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலோடே எப்போதாகிலும் வழக்காடினானா? எப்போதாகிலும் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினானா? இஸ்ரவேலர் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியருகான எல்லா ஊர்களிலும், முந்நூறு வருஷம் குடியிருக்கையில், இவ்வளவு காலமாய் நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாதே போனதென்ன? நான் உமக்கு விரோதமாய்க் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான். ஆனாலும் அம்மோன் புத்திரரின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளுக்குச் செவிகொடாதே போனான். அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான். அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப்பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால், நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான். யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள்வரைக்கும், மகா சங்காரமாய் முறிய அடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள். யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை. அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான். அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் புத்திரராகிய உம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியினால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள். பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டு மாதம் தவணைகொடும் என்றாள். அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி, இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள். இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று.