யாக்கோபு 5:7-12
யாக்கோபு 5:7-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆகையால் பிரியமானவர்களே, கர்த்தருடைய வருகைவரைக்கும் பொறுமையுள்ளவர்களாக இருங்கள். இதோ, நிலம் அதன் மதிப்புமிக்க விளைச்சலைக் கொடுக்கும்வரைக்கும் பயிரிடுகிறவன் எவ்வளவாய் காத்திருக்கிறான். அவன் கோடை மழைக்காகவும், மாரி மழைக்காகவும் எவ்வளவு பொறுமையாகக் காத்திருக்கிறான். நீங்களும் பொறுமையுடையவர்களாய், உறுதியுடன் நில்லுங்கள். ஏனெனில் கர்த்தருடைய வருகை நெருங்கி இருக்கிறது. பிரியமானவர்களே, ஒருவருக்கொருவர் விரோதமாக முறுமுறுக்காதீர்கள். அப்படிச் செய்தால், நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு உட்படுவீர்கள். நியாயாதிபதி வாசற்படியிலே நிற்கிறாரே! பிரியமானவர்களே, துன்புறுத்தலின் மத்தியிலும், பொறுமைக்கு உதாரணமாக, கர்த்தருடைய பெயரில் பேசிய இறைவாக்கினரையே எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அறிந்திருக்கிறபடி, சகிப்புடன் செயல்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று நாங்கள் எண்ணுகிறோமே. யோபுவின் சகிப்புத் தன்மையைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் கர்த்தர் என்ன செய்தார் என்பதையும் கண்டுகொண்டீர்கள். கர்த்தர் மனதுருக்கமும் இரக்கமும் நிறைந்தவராய் இருக்கிறாரே. எல்லாவற்றிற்கும் மேலாக, எனக்கு பிரியமானவர்களே, ஆணையிட வேண்டாம். பரலோகத்தின்மேலோ, பூமியின்மேலோ, அல்லது வேறு எதன்மேலோ ஆணையிட வேண்டாம். நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு உங்கள் பேச்சு, ஆம் என்றால் “ஆம்” என்றும்; இல்லை என்றால் “இல்லை” என்றும் இருக்கட்டும்.
யாக்கோபு 5:7-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இப்படியிருக்க, சகோதரர்களே, கர்த்தருடைய வருகைவரை நீடிய பொறுமையாக இருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்கனியை அடையவேண்டும் என்று, முன்மாரியும், பின்மாரியும் வரும்வரை, நீடிய பொறுமையோடு காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடு இருந்து, உங்களுடைய இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாக இருக்கிறது. சகோதரர்களே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாக குறைசொல்லாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். என் சகோதரர்களே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும், நீடிய பொறுமைக்கும் உதாரணமாக வைத்துக்கொள்ளுங்கள். இதோ, பொறுமையாக இருக்கிறவர்களை பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் பார்த்திருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும், இரக்கமும் உள்ளவராக இருக்கிறாரே. குறிப்பாக, என் சகோதரர்களே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறு எதன்மீதும் சத்தியம் செய்யாமலிருங்கள்; நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்.
யாக்கோபு 5:7-12 பரிசுத்த பைபிள் (TAERV)
சகோதர சகோதரிகளே, பொறுமையாக இருங்கள். கர்த்தராகிய இயேசு வருவார். காலம் வரும்வரை பொறுமையாக இருங்கள். ஒரு விவசாயி தன் பயிர் வளர்ந்து அறுவடையாகும்வரை காத்திருக்கிறான். தன் பயிருக்காக வேண்டி முதல் மழைக்கும் இறுதி மழைக்கும் அவன் மிகப் பொறுமையாக காத்திருக்கிறான். நீங்களும் கூடப் பொறுமையாக இருக்க வேண்டும். நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். கர்த்தராகிய இயேசு சீக்கிரம் வருவார். சகோதர சகோதரிகளே, உங்களை நீங்களே குற்றவாளியாக நியாயம் தீர்த்துக்கொள்ளாதபடிக்கு ஒருவரை ஒருவர் எதிர்த்து புகார்கள் செய்வதை நிறுத்துங்கள். பாருங்கள், கதவுக்கு வெளியே நீதிபதி நின்றுகொண்டிருக்கிறார். துன்பப்படுதலுக்கும் பொறுமைக்கும் ஒரு உதாரணமாகக் கர்த்தரின் பெயரில் பேசிய தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். சகித்துக்கொண்டதால் இப்போது நாம் அவர்களை “ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று அழைக்கிறோம். நீங்கள் யோபின் பொறுமையைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவரது அனைத்துத் துன்பங்களுக்கும் பிறகு கர்த்தர் உதவினார். இது, தேவன் கிருபையும், இரக்கமும் உடையவர் என்பதைக் காட்டும். எனது சகோதர சகோதரிகளே, இது மிகவும் முக்கியமானது. பரலோகம் அல்லது பூமியின் பெயரைப் பயன்படுத்தி ஆணையிடுவதை நிறுத்துங்கள். உண்மையில் எந்த ஆணையுமே இடாதீர்கள். உங்கள் “ஆமாம்” என்பது “ஆமாமாகவே” இருக்க வேண்டும். மேலும் உங்கள் “இல்லை” என்பது “இல்லை” யாகவே இருக்கவேண்டும். நீங்கள் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படாதபடிக்கு இதை மட்டுமே சொல்லுங்கள்.
யாக்கோபு 5:7-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே. விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.