யாக்கோபு 3:7-10
யாக்கோபு 3:7-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எல்லா விதமான மிருகங்களும், பறவைகளும், ஊரும் பிராணிகளும், கடலில் வாழும் உயிரினங்களும் மனிதனால் அடக்கிக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அப்படிக் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. ஆனால் நாவையோ ஒருவனாலும் அடக்கிக் கட்டுப்படுத்த முடியாது. அது கட்டுக்கடங்காத கொடியது. மரணத்தை விளைவிக்கும் விஷம் நிறைந்ததாயிருக்கிறது. நாம் நாவினாலே நமது கர்த்தரையும், பிதாவையும் துதிக்கிறோம். அதே நாவினாலேயே இறைவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களைச் சபிக்கிறோம். ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகிறது. எனக்கு பிரியமானவர்களே, இவ்விதமாய் இருக்கக்கூடாதே.
யாக்கோபு 3:7-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எல்லாவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீரில்வாழும் உயிரினங்கள் ஆகிய இவைகள் மனிதர்களால் அடக்கப்படும், அடக்கப்பட்டதும் உண்டு. நாக்கை அடக்க ஒரு மனிதனாலும் முடியாது; அது அடங்காத பொல்லாங்கு உள்ளதும், மரணத்திற்கு ஏதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனிதர்களை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரர்களே, இப்படி இருக்ககூடாது.
யாக்கோபு 3:7-10 பரிசுத்த பைபிள் (TAERV)
மக்கள் எல்லாவகையான மிருகங்கள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன ஆகியவற்றையெல்லாம் அடக்கும் வலிமை பெற்றவர்கள். ஆனால் நாவானது அடங்காததும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது. அந்த நாவால் தான் நம் பிதாவாகிய கர்த்தரைத் துதிக்கிறோம். அவர் சாயலில் உருவாக்கப்பட்ட மனிதர்களையும் பழிக்கிறோம். துதித்தலும் பழித்தலும் ஒரே வாயில் இருந்துதான் வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, அப்படி நடக்கக் கூடாது.
யாக்கோபு 3:7-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.