யாக்கோபு 2:1-4

யாக்கோபு 2:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரியமானவர்களே, நமது மகிமையுள்ள கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிறவர்களாகிய நீங்கள் பாரபட்சம் காட்டக்கூடாது. உங்களுடைய திருச்சபை கூடும்போது, ஒருவன் தங்கமோதிரத்தையும், பளபளப்பான உடைகளையும் அணிந்துகொண்டு வந்திருக்கிறான் என்றும், இன்னொரு ஏழை கந்தையான உடை அணிந்து அங்கு வந்திருக்கிறான் என்றும் வைத்துக்கொள்வோம். நீங்கள் பளபளப்பான உடை அணிந்துவந்த அந்த மனிதனைப் பார்த்து, “இங்குள்ள நல்ல இருக்கையில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று, அவனுக்கு விசேஷ கவனிப்பைக் கொடுத்து, அந்த ஏழையைப் பார்த்தோ, “நீ அங்கே நில்” அல்லது, “எனது காலடியில், தரையில் உட்கார்ந்துகொள்” என்றும் சொன்னால், நீங்கள் உங்களுக்குள்ளே வேறுபாடு காண்பிக்கிறீர்கள் அல்லவா? இதனால் நீங்கள் அவர்களைத் தீய எண்ணத்துடன் மதிப்பிடுகிறீர்களே!

யாக்கோபு 2:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் சகோதரர்களே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நீங்கள் ஒரு சிலரை பட்சபாதத்துடன் நடத்தாதிருங்கள். ஏனென்றால், பொன்மோதிரமும் அழகான ஆடையும் அணிந்திருக்கிற ஒரு மனிதனும், கந்தையான ஆடை அணிந்திருக்கிற ஒரு ஏழ்மையானவனும் உங்களுடைய ஆலயத்திற்கு வரும்போது, அழகான ஆடை அணிந்திருந்தவனைப் பார்த்து: ஐயா இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள் என்றும்; ஏழ்மையானவனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் காலடியிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பட்சபாதத்துடன், தகாத சிந்தனைகளோடு தீர்ப்பளிக்கிறவர்களாக இருப்பீர்களல்லவா?

யாக்கோபு 2:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, நம் மகிமைமிக்க கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் விசுவாசிகளாயிருக்கும்போது, பாரபட்சமாக இருக்காதீர்கள். உதாரணமாக, ஒருவன் சிறந்த ஆடைகளையும் தங்க மோதிரங்களையும் அணிந்தவனாக உங்களிடம் வரலாம். இன்னொருவன் ஏழையாக பழைய அழுக்கான ஆடைகளை அணிந்தவனாக வரலாம். நீங்கள் செல்வந்தனிடம் அதிகம் அக்கறை காட்டுகிறீர்கள். “நல்ல ஆசனத்தில் அமருங்கள்” என்று கூறுகிறீர்கள். ஆனால் ஒரு ஏழை வந்தால் அவனை நிற்கவைக்கிறீர்கள். அல்லது தரையிலே உட்காரும்படி கூறுகிறீர்கள். இப்படிச் செய்யும்போது சிலர் மற்றவர்களைவிட மிகவும் முக்கியமானவர்கள் என்பது போல உங்களில் சிலரை நடத்துகிறீர்கள். அப்போது தகாத நோக்கங்கள் உள்ள நீதிபதியாக நீங்கள் ஆகிறீர்கள்.

யாக்கோபு 2:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக. ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா?

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்