யாக்கோபு 1:13-18
யாக்கோபு 1:13-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சோதிக்கப்படும்போது, “இறைவன் என்னைச் சோதிக்கிறார்” என்று ஒருவனும் சொல்லக்கூடாது. ஏனெனில் இறைவன் தீமையினால் சோதிக்கப்படுகிறவரல்ல, அவர் யாரையும் அப்படிச் சோதிக்கிறவருமல்ல; ஆனால் ஒவ்வொருவனும் தனது சொந்தத் தீய ஆசையினாலேயே இழுப்புண்டும், கவரப்பட்டும் சோதிக்கப்படுகிறான். அப்பொழுது அந்த ஆசையானது கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கின்றது; பாவம் முழு வளர்ச்சி பெறும்போது, அது மரணத்தை பிறப்பிக்கின்றது. எனக்கு பிரியமானவர்களே, ஏமாந்து போகவேண்டாம். நல்லதும் முழுநிறைவானதுமான நன்கொடை அனைத்தும், பரலோகத்திலிருக்கின்ற பிதாவினிடத்திலிருந்தே வருகின்றன. அவரே பரலோக வெளிச்சத்தின் பிதா, அவர் இடம் மாறும் நிழலைப்போல் மாறுகிறவரல்ல. பிதா படைத்தவை எல்லாவற்றிலும், நாம் முதற்கனிகளாய் இருக்கும்படி நம்மைத் தமது சித்தத்தின்படி, சத்திய வார்த்தையின் மூலமாக நமக்கு பிறப்பைக் கொடுத்தார்.
யாக்கோபு 1:13-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாமல் இருப்பானாக; தேவன் தீமைகளினால் சோதிக்கப்படுகிறவர் இல்லை, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரும் இல்லை. அவனவன் தன்தன் சொந்த ஆசையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பெற்றெடுக்கும். என் பிரியமான சகோதரர்களே, ஏமாந்துபோகவேண்டாம். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை. அவர் விருப்பம்கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்தியவசனத்தினாலே பெற்றெடுத்தார்.
யாக்கோபு 1:13-18 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு மனிதன் சோதிக்கப்படும்போது, “அந்த சோதனை தேவனிடமிருந்து உண்டாகிறது” என்று அவன் சொல்லக் கூடாது. பொல்லாங்கினால் தேவன் சோதிக்கப்படுவதில்லை. மேலும் தேவன் ஒருவரையும் சோதிப்பதும் இல்லை. அவனவன் தனது சுய ஆசைகளாலேயே இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். இந்த ஆசையானது கருத்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கிறது. மேலும் பாவம் முழுமையடையும்போது மரணத்தைத் தருகிறது. எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, ஏமாற்றப்படாமல் இருங்கள். எல்லா நன்மைகளும் தேவனிடமிருந்தே வருகின்றன. ஒவ்வொரு முழுமையான வரமும் அவரிடமிருந்தே வருகின்றது. இவை, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவற்றை உருவாக்கிய பிதாவிடமிருந்தே வருகின்றன. அவர் மாறுவதில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கிறார். உண்மையான வார்த்தை மூலமே தேவன் நமக்கு வாழ்க்கையைத் தர முடிவு செய்துள்ளார். அவரால் படைக்கப்பட்ட அனைத்திலும் நம்மையே முக்கியமானவையாகக் கருதுகிறார்.
யாக்கோபு 1:13-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.