ஏசாயா 61:1-4

ஏசாயா 61:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆண்டவராகிய யெகோவாவின் ஆவியானவர் என் மேலிருக்கிறார்; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி, யெகோவா என்னை அபிஷேகம் பண்ணினார். உள்ளமுடைந்தவர்களுக்குக் காயங்கட்டவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை அறிவிக்கவும், கட்டுண்டோரை இருளிலிருந்து விடுவிக்கவும், யெகோவாவின் தயவின் வருடத்தையும், நமது இறைவன் அநீதிக்குப் பழிவாங்கப்போகும் நாளையும் அறிவிக்கவும், துக்கப்படும் அனைவரையும் ஆறுதல்படுத்தவும், சீயோனில் துக்கப்படுகிறவர்களுக்கு சாம்பலுக்குப் பதிலாக அழகின் மகுடத்தையும், துயரத்திற்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், மனச்சோர்வுக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுப்பதற்காகவும் அவர் என்னை அனுப்பியிருக்கிறார். அவர்கள் யெகோவா தமது சிறப்பை வெளிப்படுத்துவதற்காக, அவரால் நாட்டப்பட்ட நீதியின் விருட்சங்கள் என அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஆதிகாலத்தின் இடிபாடுகளை திரும்பக் கட்டி, நெடுங்காலமாய்ப் பாழாய் கிடந்த இடங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவார்கள். தலைமுறை தலைமுறைகளாய் பாழடைந்து சூறையாடப்பட்டுக் கிடந்த பட்டணங்களைப் புதுப்பிப்பார்கள்.

ஏசாயா 61:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக் யெகோவா என்னை அபிஷேகம்செய்தார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டப்பட்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், யெகோவாவுடைய அநுக்கிரக வருடத்தையும், நம்முடைய தேவன் நீதியைநிலைப்படுத்தும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல்செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாக அலங்காரத்தையும், துயரத்திற்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் யெகோவா தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் மரங்கள் எனப்படுவார்கள். அவர்கள் நீண்டநாட்களாக பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, முற்காலத்தில் அழிக்கப்பட்டவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாக இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள்.

ஏசாயா 61:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தருடைய ஊழியன் கூறுகிறான், “எனது கர்த்தராகிய ஆண்டவர், என் மீது அவருடைய ஆவியை வைத்தார். தேவன் என்னை ஏழை ஜனங்களுக்கு நற்செய்திகளைச் சொல்லவும், துக்கமுள்ளவர்களுக்கு ஆறுதலளிக்கவும் தேர்ந்தெடுத்தார். கட்டப்பட்டவர்களிடம் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றும் சிறைப்பட்டவர்களிடம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் சொல்ல தேவன் என்னை அனுப்பினார். கர்த்தர் எப்பொழுது தமது தயவைக் காட்டுவார் என்று தெரிவிக்க தேவன் என்னை அனுப்பினார். தேவன் எப்பொழுது தீயவர்களைத் தண்டிப்பார் என்பதைத் தெரிவிக்க தேவன் என்னை அனுப்பினார். துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் அளிக்க தேவன் என்னை அனுப்பினார். சீயோனிலுள்ள துக்கப்பட்ட ஜனங்களிடம் தேவன் என்னை அனுப்பினார். நான் அவர்களைக் கொண்டாட்டத்திற்கு தயார் செய்வேன். நான் அவர்கள் தலையிலிருந்து சாம்பலை எடுத்துவிட்டு அவர்களுக்கு கிரீடத்தைக் கொடுப்பேன். நான் அவர்களின் துக்கத்தை எடுத்துவிட்டு மகிழ்ச்சியின் எண்ணெயைக் கொடுப்பேன். நான் அவர்களின் துயரத்தை எடுத்துவிட்டு கொண்டாட்டத்தின் ஆடைகளைக் கொடுப்பேன். நான் ‘நல்ல மரங்கள்’ என்றும் ‘கர்த்தருடைய அற்புதமான செடிகள்’ என்றும் அந்த ஜனங்களுக்குப் பெயரிட தேவன் என்னை அனுப்பினார்.” “அந்தக் காலத்தில், அழிந்த பழைய நகரங்கள் மீண்டும் கட்டப்படும். அவை ஆரம்பத்தில் இருந்ததுபோலவே புதியதாக்கப்படும். பற்பல ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட நகரங்கள் எல்லாம் புதியவைபோலக் கட்டப்படும்.

ஏசாயா 61:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள். அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்