ஏசாயா 51:1-8

ஏசாயா 51:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“நீதியைப் பின்பற்றுகிறவர்களே, யெகோவாவைத் தேடுகிறவர்களே, நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் எந்தக் கற்பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டீர்களோ, எந்தக் கற்குழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டீர்களோ, அந்தக் கற்பாறையானவரை நோக்கிப்பாருங்கள். உங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாமையும் உங்களைப் பெற்றெடுத்த சாராளையும் நோக்கிப்பாருங்கள். நான் அவனை அழைத்தபோது, அவன் ஒருவனாய் மாத்திரமே இருந்தான்; நான் அவனை ஆசீர்வதித்து அவனை அநேகராகப் பெருகச் செய்தேன். மெய்யாகவே யெகோவா சீயோனைத் தேற்றுவார், அவளுடைய பாழான இடங்களையெல்லாம் ஆறுதல் செய்வார்; அவர் அவளுடைய பாலைவனங்களை ஏதேனைப் போலவும், அவளுடைய பாழிடங்களை யெகோவாவின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார். சந்தோஷமும் மகிழ்ச்சியும் அங்கு காணப்படும், நன்றி செலுத்துதலும் பாடலின் சத்தமும் அங்கு இருக்கும். “என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் நாடே, கேளுங்கள்: சட்டம் என்னிலிருந்து வெளிப்படும்: என் நீதி நாடுகளுக்கு ஒரு வெளிச்சமாக இருக்கும். என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படுகிறது, என் புயம் நாடுகளுக்கு நீதியைக் கொண்டுவரும். தீவுகள் என்னை நோக்கி, என் கரத்திற்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும். உங்கள் கண்களை வானங்களை நோக்கி உயர்த்துங்கள், கீழிருக்கும் பூமியையும் பாருங்கள்; வானங்கள் புகையைப்போல் மறையும், பூமியும் பழைய உடையைப்போல் கந்தையாகும்; அங்கு குடியிருப்போரும் ஈக்களைப்போல் சாவார்கள். ஆனால் எனது இரட்சிப்போ என்றென்றைக்கும் நிலைநிற்கும், எனது நீதி ஒருபோதும் தவறுவதில்லை. “நியாயத்தை அறிந்தவர்களே, எனது சட்டத்தை மனதில் வைத்திருக்கும் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள். மனிதரின் நிந்தனைக்குப் பயப்படாதீர்கள்; அவர்களின் ஏளனப் பேச்சுக்களால் திகிலடையாதீர்கள். பொட்டுப்பூச்சி உடையை அரித்து, ஆட்டு மயிரைத் தின்பதுபோல் அவர்களைத் தின்னும். ஆனால் என் நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், எனது இரட்சிப்பும் எல்லா தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கும்.”

ஏசாயா 51:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீதியைப் பின்பற்றி யெகோவாவை தேடுகிறவர்களாகிய நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட கிணற்றின் குழியையும் நோக்கிப்பாருங்கள். உன்னுடைய தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கும்போது நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகச்செய்தேன். யெகோவா சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான இடங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்திரத்தை ஏதேனைப்போலவும், அதின் காலியான இடத்தைக் யெகோவாவின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் பாடலின் சத்தமும் அதில் உண்டாயிருக்கும். என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் மக்களே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை மக்களின் வெளிச்சமாக நிறுவுவேன். என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் மக்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும். உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோகும், பூமி ஆடையைப்போல் பழையதாகும்; அதின் குடிமக்களும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை. நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள். பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுரோமத்தைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.

ஏசாயா 51:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

“உங்களில் சிலர் நல்வாழ்வு வாழக் கஷ்டப்பட்டு உழைக்கிறீர்கள். உதவிக்காக நீங்கள் கர்த்தரிடம் போகிறீர்கள். என்னைக் கவனியுங்கள்! உங்கள் தந்தையான ஆபிரகாமை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் கன்மலையாகிய அவனிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்டவர்கள். ஆபிரகாம் உங்களுடைய தந்தை. நீங்கள் அவனைப் பாருங்கள்! நீங்கள் சாராளைப் பாருங்கள்! உங்களைப் பெற்றவள் அவள். நான் அழைக்கும்போது ஆபிரகாம் தனியாக இருந்தான். பிறகு நான் அவனை ஆசீர்வதித்தேன். அவன் பெரிய குடும்பமாக ஆனான். அவனிடமிருந்து ஏராளமான ஜனங்கள் வந்தனர்.” அதே வழியில், கர்த்தர் சீயோனையும் அவளது எல்லா பாழான இடங்களையும் தேற்றுவார். அவளுக்காகவும், அவளது ஜனங்களுக்காகவும் கர்த்தர் வருத்தப்படுவார். அவளுக்காக அவர் பெரிய செயல்களைச் செய்வார். கர்த்தர் வனாந்திரத்தை மாற்றுவார். வனாந்திரம் ஏதேன் தோட்டத்தைப்போன்ற தோட்டமாகும். அந்தத் தேசம் காலியாய் இருந்தது. ஆனால் இது கர்த்தருடைய தோட்டம் போலாகும். அங்குள்ள ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்கள் வெற்றியைக் குறித்தும், நன்றிகூறியும் பாடுவார்கள். “எனது ஜனங்களே! என்னைக் கவனியுங்கள்! எனது முடிவுகள் ஜனங்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் காட்டும் வெளிச்சங்களாக இருக்கும். நான் நியாயமாக இருப்பதை விரைவில் காட்டுவேன். நான் விரைவில் உன்னைக் காப்பாற்றுவேன். நான் எனது வல்லமையைப் பயன்படுத்தி நாடுகளை எல்லாம் நியாயம்தீர்ப்பேன். துரமான இடங்கள் எல்லாம் எனக்காகக் காத்திருக்கின்றன. அவர்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள என் வல்லமைக்காகக் காத்திருக்கிறார்கள். வானத்தைப் பாருங்கள்! கீழே உள்ள பூமியில் உங்களைச் சுற்றிப் பாருங்கள் வானங்கள் மறைந்து போகும், மேகம் புகையைப்போன்றும், பூமியானது பயனற்ற பழைய ஆடைகளைப்போன்றும் ஆகும். பூமியிலுள்ள ஜனங்கள் மரித்துப்போவார்கள். ஆனால், எனது இரட்சிப்பு தொடர்ந்து என்றென்றும் இருக்கும். எனது நன்மைக்கு முடிவு இராது. நன்மையைப் புரிந்துகொண்ட ஜனங்கள் என்னைக் கவனிக்கட்டும். என் போதனைகளைப் பின்பற்றுகிற ஜனங்கள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். தீயவர்களுக்காக அஞ்சவேண்டாம்! அவர்கள் உன்னைப்பற்றிச் சொல்லும் தீயவற்றுக்கு அஞ்ச வேண்டாம்! ஏனென்றால், அவர்கள் பழைய ஆடைகளைப்போன்றவர்கள். அவற்றைப் பொட்டுப்பூச்சிகள் உண்ணும் அவர்கள் மரக் கட்டையைப்போலாவார்கள். கரையான் அவற்றை உண்ணும். ஆனால், எனது நன்மை என்றென்றும் தொடரும். எனது இரட்சிப்பு என்றென்றும் தொடரும்!”

ஏசாயா 51:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீதியைப் பின்பற்றி கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள். உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன். கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும். என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன். என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும். உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போகும்; அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை. நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள். பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.