ஏசாயா 49:8-26

ஏசாயா 49:8-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா சொல்வது இதுவே: “என் தயவின் காலத்திலே நான் உங்களுக்குப் பதிலளிப்பேன், இரட்சிப்பின் நாளில் நான் உங்களுக்கு உதவி செய்வேன்; நான் உங்களைப் பாதுகாத்து, மக்களிடையே நீங்கள் ஒரு உடன்படிக்கையாக இருக்கும்படி நான் உங்களை ஏற்படுத்துவேன். நாட்டைப் புதுப்பித்து பழைய நிலைக்குக் கொண்டுவரவும், பாழடைந்த உரிமைச் சொத்துக்களைத் திரும்ப ஒப்படைக்கவும், சிறைப்பட்டிருக்கிறவர்களைப் பார்த்து, ‘புறப்பட்டுப் போங்கள்’ என்று சொல்லவும், இருளில் உள்ளவர்களைப் பார்த்து, ‘வெளிப்படுங்கள்!’ என்றும் சொல்லவும் இப்படிச் செய்வேன். “வீதிகளின் ஓரங்களில் அவர்கள் மேய்வார்கள்; வறண்ட குன்றுகள் ஒவ்வொன்றிலும் அவர்கள் மேய்ச்சல் நிலத்தைக் காண்பார்கள். அவர்கள் பசியடைவதுமில்லை, தாகங்கொள்வதுமில்லை; பாலைவன வெப்பமோ, வெயிலோ அவர்களைத் தாக்காது. அவர்கள்மேல் இரக்கமாயிருக்கிறவரே அவர்களுக்கு வழிகாட்டி, அவர்களைத் தண்ணீர் ஊற்றுகளின் அருகே வழிநடத்திச் செல்வார். எனது எல்லா மலைகளையும் நான் வழிகளாக மாற்றுவேன்; எனது பெரும் பாதைகள் உயர்த்தப்படும். இதோ, அவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள், சிலர் வடக்கிலிருந்தும், சிலர் மேற்கிலிருந்தும், சிலர் சீனீம் பிரதேசத்திலிருந்தும் வருவார்கள்.” வானங்களே, ஆனந்த சத்தமிடுங்கள்; பூமியே, சந்தோஷப்படு; மலைகளே, கெம்பீரமாய்ப் பாடுங்கள்! யெகோவா தமது மக்களைத் தேற்றுகிறார், துன்புற்ற தம்முடையவர்கள்மேல் இரக்கம் காட்டுவார். ஆனால் சீயோனோ, “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்; யெகோவா என்னை மறந்துவிட்டார்” என்கிறது. “தான் பாலூட்டும் தன்னுடைய குழந்தையை எந்தத் தாயும் மறந்துபோவாளோ? கருவில் உருவான தனது பிள்ளைக்கு அவள் கருணை காட்டாதிருப்பாளோ? அப்படி அவள் மறந்தாலுங்கூட, நான் உன்னை மறப்பதில்லை. இதோ, நான் என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்பொழுதும் என் கண்முன் இருக்கின்றன. உனது பிள்ளைகள் விரைந்து திரும்புவார்கள், உன்னை அழித்தவர்கள் உன்னைவிட்டு விலகிப் போவார்கள். உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்; உனது பிள்ளைகள் யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள். நான் வாழ்வது நிச்சயமாய் இருப்பதுபோலவே, நீ அவர்களையெல்லாம் நகைகளாய் அணிந்துகொள்வாய்; மணமகளைப்போல் அவர்களை அணிந்துகொள்வாய்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நீ அழிக்கப்பட்டு பாழாக்கப்பட்டாய், உனது நாடு பாழாய் விடப்பட்டது. ஆயினும் இப்பொழுதோ உன்னில் குடியிருக்கிறவர்கள் வாழ்வதற்கு இடம் போதாதபடி நீ சிறிதாய் இருப்பாய். உன்னை விழுங்கியவர்களும் உன்னைவிட்டுத் தூரமாய் போவார்கள். உன் இழப்பில் துயருற்ற நாட்களில் உனக்குப் பிறந்த பிள்ளைகள் உன்னைப் பார்த்து, ‘இந்த இடம் எங்களுக்கு மிகச் சிறிதாக இருக்கிறது; நாங்கள் வசிப்பதற்கு போதிய இடம் தாரும்’ என உன் செவிகள் கேட்கும்படி சொல்லுவார்கள். அப்பொழுது நீ உனது உள்ளத்தில் ‘எனக்கு இந்தப் பிள்ளைகளைக் கொடுத்தது யார்? நான் துயருற்றவளாகவும் மலடியாகவும் இருந்தேன்; நான் நாடுகடத்தப்பட்டவளாகவும், புறக்கணிக்கப்பட்டவளாகவும் இருந்தேன். யார் இந்தப் பிள்ளைகளை வளர்த்தெடுத்தார்கள்? இதோ நான் தனித்தவளாயிருந்தேனே! ஆனால் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?’ என்று சொல்லிக்கொள்வாய்.” ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “இதோ, நான் பிற நாட்டவர்களை கைகாட்டி அழைப்பேன், மக்கள் கூட்டங்களுக்கு எனது கொடியை ஏற்றுவேன். அவர்கள் உங்கள் மகன்களைத் தங்கள் கைகளில் கொண்டுவருவார்கள்; மகள்களையும் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டுவருவார்கள். அரசர்கள் உங்களுக்கு வளர்ப்புத் தந்தைகளாய் இருப்பார்கள்; அரசிகள் உங்களுக்கு வளர்ப்புத் தாய்களாய் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு முன்பாகத் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்குவார்கள்; அவர்கள் உங்கள் பாதங்களிலுள்ள புழுதியை நக்குவார்கள். அப்பொழுது நீங்கள், நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள்; என்னை நம்பியிருப்பவர்கள் வெட்கப்பட்டு போகமாட்டார்கள்” என்கிறார். போர்வீரர்களிடமிருந்து கொள்ளைப்பொருட்களைப் பறித்தெடுக்க முடியுமோ? வெற்றி வீரனிடமிருந்து கைதிகளைக் காப்பாற்ற முடியுமோ? ஆனால், யெகோவா சொல்வது இதுவே: “ஆம், கைதிகள் போர்வீரரிடமிருந்து விடுவிக்கப்படுவார்கள்; வலியவனிடமிருந்து கொள்ளைப்பொருளும் மீட்கப்படும். உங்களுடன் சண்டையிடுகிறவர்களோடு நான் சண்டையிடுவேன். உங்கள் பிள்ளைகளை நான் காப்பாற்றுவேன். உங்களை ஒடுக்குகிறவர்களைத் தங்கள் சொந்த மாமிசத்தையே தின்னச் செய்வேன்; திராட்சை மதுவினால் வெறிகொள்வதுபோல், அவர்கள் தங்கள் சொந்த இரத்தத்தினாலேயே வெறிகொள்வார்கள். அப்பொழுது யெகோவாவாகிய நானே உங்கள் இரட்சகர்; யாக்கோபின் வல்லவராகிய நானே உங்கள் மீட்பர் என்பதை மனுக்குலம் அனைத்தும் அறிந்துகொள்ளும்.”

ஏசாயா 49:8-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் யெகோவா: அனுக்கிரகக் காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சொந்தமாக்கிக்கொள்ளவும்; கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளியே வாருங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை மக்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும். அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார். என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும். இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள்; இவர்கள் அஸ்வான் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார். வானங்களே, கெம்பீரித்துப் பாடுங்கள்; பூமியே, களிகூரு; மலைகளே, கெம்பீரமாக முழங்குங்கள்; யெகோவா தம்முடைய மக்களுக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார். சீயோனோ: யெகோவா என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்கிறாள். ஒரு பெண் தன் கர்ப்பத்தின் குழந்தைக்கு இரங்காமல், தன் மகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. உன் மகன்கள் துரிதமாக வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னை விட்டுப் புறப்பட்டுப்போவார்கள். உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லோரும் ஏகமாகக்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லோரையும் ஆபரணமாக அணிந்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்று யெகோவா உரைக்கிறார். அப்பொழுது உன் வனாந்திரங்களும், உன் பாழான இடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிமக்களின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள். பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச்சொல்வார்கள். அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும், சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் தனிமையாக விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்வாய். இதோ, தேசங்களுக்கு நேராக என் கையை உயர்த்தி, மக்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் மகன்களை பெரும் கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் மகள்கள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் வளர்க்கும் தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புறவிழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் யெகோவா, எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய். பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கமுடியுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்கமுடியுமோ? என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களுடன் நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்வேன். உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே சாப்பிடக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான அனைவரும் அறிந்துகொள்வார்களென்று யெகோவா சொல்கிறார்.

ஏசாயா 49:8-26 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் கூறுகிறார், “எனது தயவைக் காட்டும் சிறப்பான நேரம் இருக்கிறது. அப்போது, நான் உனது ஜெபங்களுக்குப் பதில் தருவேன். நான் உன்னைக் காப்பாற்றும்போது அது சிறப்பான நாளாக இருக்கும். அந்த நேரத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன். நான் உன்னைப் பாதுகாப்பேன். எனக்கு ஜனங்களோடு ஒரு உடன்படிக்கை இருந்தது என்பதற்கு நீங்களே சாட்சியாக இருப்பீர்கள். இப்போது நாடு அழிக்கப்படுகிறது. ஆனால் தேசத்தை அதற்கு உரியவர்களிடம் நீ திருப்பிக் கொடுப்பாய். நீங்கள் சிறைக் கைதிகளிடம் கூறுவீர்கள், ‘சிறையை விட்டு வெளியே வாருங்கள்’ இருளில் இருக்கிற ஜனங்களுக்கு நீங்கள் சொல்வீர்கள், ‘இருளை விட்டு வெளியே வாருங்கள்’ ஜனங்கள் பயணம்செய்யும்போது சாப்பிடுவார்கள். காலியான குன்றுகளிலும் அவர்கள் உணவு வைத்திருப்பார்கள். ஜனங்கள் பசியுடன் இருக்கமாட்டார்கள். அவர்கள் தாகத்தோடு இருக்கமாட்டார்கள். வெப்பமான சூரியனும் காற்றும் அவர்களைப் பாதிக்காது. ஏனென்றால் தேவன் ஆறுதல் செய்கிறார்; தேவன் அவர்களை வழிநடத்துகிறார். அவர் அவர்களை நீரூற்றுகளின் அருகில் வழி நடத்திச்செல்வார். நான் எனது ஜனங்களுக்காகச் சாலை அமைப்பேன். மலைகள் தரைமட்டமாக்கப்படும். தாழ்வான சாலைகள் உயர்த்தப்படும். “பாருங்கள்! வெகு தொலைவான இடங்களிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள். வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள். எகிப்தின் அஸ்வனிலிருந்து ஜனங்கள் என்னிடம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.” வானங்களும் பூமியும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும். மலைகள் மகிழ்ச்சியோடு சத்தமிடட்டும். ஏனென்றால், கர்த்தர் தமது ஜனங்களை ஆறுதல் படுத்துகிறார். கர்த்தர் தமது ஏழை ஜனங்களிடம் நல்லவராக இருக்கிறார். ஆனால், இப்பொழுது சீயோன் கூறுகிறாள், “கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார். எனது ஆண்டவர் என்னை மறந்துவிட்டார்.” ஆனால் நான் சொல்கிறேன், “ஒரு பெண்ணால் தன் குழந்தையை மறக்கமுடியுமா? முடியாது! ஒரு பெண்ணால் தன் கர்ப்பத்திலிருந்து வந்த குழந்தையை மறக்கமுடியுமா? இல்லை! ஒரு பெண்ணால் தன் பிள்ளையை மறக்கமுடியாது! ஆனால் அவள் மறந்தாலும் நான் (கர்த்தர்) உன்னை மறக்கமுடியாது. பார், நான் உனது பெயரை என் உள்ளங்கையில் செதுக்கி இருக்கிறேன். நான் எப்பொழுதும் உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்! உனது பிள்ளைகள் உன்னிடம் திரும்பி வருவார்கள். ஜனங்கள் உன்னைத் தோற்கடித்தார்கள். ஆனால் அந்த ஜனங்கள் உன்னைத் தனியாகவிடுவார்கள்! மேலே பார்! உன்னைச் சுற்றிலும் பார்! உனது பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகக் கூடி உன்னிடம் வருகிறார்கள்.” “என் உயிர்மேல் வாக்குறுதியாக இதனைச் சொல்கிறேன்” என்கிறார் கர்த்தர். உங்கள் பிள்ளைகள் நகைகளைப்போன்றவர்கள். அவர்களைக் கழுத்தைச் சுற்றி அணிந்துகொள். உங்கள் பிள்ளைகளை மணமகள் அணியத்தக்க கழுத்துப் பதக்கம் போன்று அணிந்துகொள். “இப்பொழுது நீங்கள் தோற்கடிக்கப்படுகிறீர்கள்; அழிக்கப்படுகிறீர்கள், உங்கள் தேசம் பயனற்றது. ஆனால் கொஞ்சக் காலத்திற்குப் பிறகு, உன் நாட்டில் ஏராளமான ஜனங்கள் இருப்பார்கள். உங்களை அழித்த ஜனங்கள் வெகுதொலைவில் இருப்பார்கள். நீங்கள் இழந்துப்போன பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டீர்கள். ஆனால் அந்தப் பிள்ளைகள் உங்களிடம், ‘இந்த இடம் மிகவும் சிறிதாய் உள்ளது. நாங்கள் வாழ்வதற்கு ஒரு பெரிய இடத்தைக் கொடு’ என்று சொல்வார்கள். பிறகு நீ உனக்குள்ளேயே, ‘இந்தப் பிள்ளைகளையெல்லாம் எனக்கு யார் கொடுத்தது. இது மிகவும் நல்லது. நான் தனியாகவும் சோகமாகவும் இருக்கிறேன். நான் தோற்கடிக்கப்பட்டு என் ஜனங்களிடமிருந்து தொலைவில் உள்ளேன். எனவே, இந்த பிள்ளைகளை எனக்கு யார் கொடுத்தது? பார், நான் தனியாக விடப்பட்டுள்ளேன். இந்தப் பிள்ளைகள் எல்லோரும் எங்கிருந்து வந்தார்கள்?’” என்று சொல்லிக்கொள்வாய். எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார். “பார், நான் நாடுகளுக்கு என் கையை ஆட்டுகிறேன். எல்லா ஜனங்களும் பார்க்கும்படி நான் எனது கொடியை ஏற்றுவேன். பிறகு உனது பிள்ளைகளை உன்னிடம் அழைத்து வருவார்கள். அந்த ஜனங்கள் உங்கள் பிள்ளைகளைத் தம் தோள்களில் தூக்கிச் செல்வார்கள். அவர்கள் தம் கைகளில் பிடித்துக்கொள்வார்கள். ராஜா உன் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாக இருப்பார்கள். அரசகுமாரிகள் அவர்களைக் கவனித்துகொள்வார்கள். அந்த ராஜாக்களும் இளவரசிகளும் உங்களுக்குப் பணிவார்கள். அவர்கள் புழுதி படிந்த உங்கள் கால்களை முத்தமிடுவார்கள். பிறகு நான்தான் கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள். என்னை நம்புகிற எவனும் ஏமாற்றப்படமாட்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.” ஒரு பலமான வீரன் போரில் செல்வத்தை அபகரித்தால், அவனிடமிருந்து நீங்கள் அச்செல்வத்தைப் பெறமுடியாது. ஒரு வல்லமையுள்ள வீரன் ஒரு கைதியைக் காத்து நின்றால், அந்தக் கைதி அவனிடமிருந்து தப்பமுடியாது. ஆனால் கர்த்தர் கூறுகிறார், “கைதிகள் தப்பித்துக்கொள்வார்கள் எவனோ ஒருவன், பலமான வீரனிடமிருந்து கைதிகளை மீட்டுச் செல்வான். இது எவ்வாறு நடக்கும்? உன்னோடு போராடுபவர்களோடு போராடுவேன் நான் பிள்ளைகளைக் காப்பாற்றுவேன். அந்த ஜனங்கள் உன்னைக் காயப்படுத்துகிறார்கள். ஆனால், நான் அவர்கள் தமது சொந்த உடலையே உண்ணும்படி அவர்களை வற்புறுத்துவேன். அவர்களது சொந்த இரத்தமே அவர்கள் குடிக்கும் திராட்சைரசமாகும். பிறகு, கர்த்தர் உன்னைப் பாதுகாத்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். அனைத்து ஜனங்களும், யாக்கோபின் வல்லமைமிக்கவர் உன்னைக் காப்பாற்றினார் என்பதை அறிவார்கள்.”

ஏசாயா 49:8-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் கர்த்தர்: அநுக்கிரககாலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்; கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும். அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார். என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும். இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள்; இவர்கள் சீனீம் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார். வானங்களே, கெம்பீரித்துப் பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார். சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. உன் குமாரர் தீவிரித்து வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னை விட்டுப் புறப்பட்டுப்போவார்கள். உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள். பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச்சொல்லுவார்கள். அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும், சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய், இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புறவிழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய். பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ? என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன். உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.