ஏசாயா 46:1-13
ஏசாயா 46:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பேல் தெய்வம் தலை கவிழ்கிறது; நேபோ தெய்வம் குப்புற விழுகிறது. அவர்களுடைய விக்கிரகங்கள் சுமை சுமக்கும் மிருகங்களால் கொண்டு செல்லப்படுகின்றன; ஊர்வலத்தில் சுமக்கப்பட்ட அந்த விக்கிரகங்கள் இப்பொழுது களைத்துப்போன மிருகங்களுக்கு மிகவும் பாரமாயிருக்கின்றன. அவை ஒன்றாய் குப்புற விழுகின்றன. அந்த உருவச்சிலைகள் தங்களைச் சுமக்கும் மிருகங்களைத் தப்புவிக்கும் ஆற்றலின்றி தாங்களும் சிறைப்பட்டுப் போகின்றன. “யாக்கோபின் குடும்பமே, இஸ்ரயேல் குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களே, நீங்கள் அனைவரும் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் கருவில் உருவானதுமுதல் நான் உங்களைத் தாங்கினேன், நீங்கள் பிறந்ததுமுதல் நான் உங்களைச் சுமந்தேன். நீங்கள் முதிர்வயது அடைந்து, உங்களுக்கு நரைமயிர் உண்டாகும் காலத்திலும், உங்களைத் தாங்கப்போகிறவர் நானே. உங்களைப் படைத்த நானே உங்களைச் சுமப்பேன். நானே உங்களைத் தாங்குவேன், நானே உங்களைக் காப்பாற்றுவேன். “என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? யாருக்கு சமமாக எண்ணுவீர்கள்? என்னை ஒப்பிடுவதற்கு யாரை எனக்கு ஒப்பிடுவீர்கள்? சிலர் தங்கள் பைகளிலிருந்து தங்கத்தை அள்ளிக்கொட்டி, தராசுகளில் வெள்ளியை நிறுக்கிறார்கள்; அதை ஒரு தெய்வமாகச் செய்யும்படி அவர்கள் ஒரு கொல்லனை கூலிக்கு அமர்த்துகிறார்கள்; பின் அவர்கள் தாழ்ந்து வீழ்ந்து அதை வணங்குகிறார்கள். அதைத் தமது தோள்களில் தூக்கிச் சுமக்கிறார்கள். அவர்கள் அதை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்கள். அது அங்கேயே நிற்கிறது, அந்த இடத்திலிருந்து அதனால் நகரமுடியாது. ஒருவன் அதை நோக்கி அழுதாலும் அது பதிலளிப்பதில்லை; ஒருவனை அவனுடைய துன்பங்களிலிருந்து காப்பாற்ற அதனால் இயலாது. “கலகக்காரரே, இதை நினைவில்கொள்ளுங்கள். இதை மனதில் பதித்து வையுங்கள். முந்தி நிகழ்ந்த பூர்வீகக் காரியங்களை நினைத்துப் பாருங்கள்; நானே இறைவன், வேறொருவர் இல்லை; நானே இறைவன், என்னைப்போல் ஒருவரும் இல்லை. நான் ஆரம்பத்திலிருந்தே முடிவை அறிவிக்கிறவர், முற்காலங்களிலேயே வரப்போகிறதை அறிவிக்கின்றவர். ‘என் நோக்கம் நிலைநிற்கும்; நான் விரும்பிய எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன்’ என்று நான் சொல்கிறேன். நான் கிழக்கிலிருந்து இரைதேடும் பறவையை அழைப்பிக்கின்றேன். தூரதேசத்திலிருந்து என் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு மனிதனை அழைப்பிக்கின்றேன். நான் என்ன சொன்னேனோ அதை நிறைவேற்றுவேன்; நான் எதைத் திட்டமிட்டேனோ அதைச் செய்வேன். பிடிவாத இருதயமுள்ள நீதிக்குத் தூரமானவர்களே! எனக்குச் செவிகொடுங்கள். நானே எனது நீதியை அருகில் கொண்டுவருகிறேன், அது வெகுதூரத்தில் இல்லை; எனது இரட்சிப்பு தாமதம் அடையாது. நான் சீயோனுக்கு இரட்சிப்பையும், இஸ்ரயேலுக்கு எனது சிறப்பையும் கொடுப்பேன்.
ஏசாயா 46:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் சிலைகள் காட்டு மிருகங்களுக்கும் நாட்டு மிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள், இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும். அவைகள் ஏகமாகக் குனிந்து பணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும். யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுவரை நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படி என்னை ஒப்பிடுவீர்கள்? பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, கொல்லனுடனே கூலி பொருத்திக்கொள்கிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள். அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் இடத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்திரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை காப்பாற்றியதுமில்லை. இதை நினைத்து ஆண்களாயிருங்கள்; பாதகர்களே, இதை மனதில் வையுங்கள். முன்பு ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. முடிவிலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் ஆரம்பகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, வேகமாக பறக்கிற ஒரு பறவையைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனிதனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்செய்தேன், அதைச் செய்துமுடிப்பேன். கடின இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள். என் நீதியைச் சமீபிக்கச்செய்கிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கொடுப்பேன்.
ஏசாயா 46:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)
பேலும் நேபோவும் எனக்கு முன்னால் அடிபணியும். அந்தப் பொய்த் தெய்வங்கள் வெறும் சிலைகளே. மனிதர்கள் அந்தச் சிலைகளை மிருகங்களின் முதுகில் வைத்தனர். அவை சுமக்கத் தக்க சுமைகளே. அப்பொய்த் தெய்வங்கள் ஜனங்களைக் களைப்புறச் செய்வதைத்தவிர வேறெதுவும் செய்வதில்லை. அந்தப் பொய்த் தெய்வங்கள் குனிந்து கீழே விழுவார்கள். அப்பொய்த் தெய்வங்கள் தப்பிக்க இயலாது. அவைகள் கைதிகளைப்போல எடுத்துச் செல்லப்படுவார்கள். “யாக்கோபின் குடும்பத்தினரே! நான் சொல்வதைக் கேளுங்கள். இஸ்ரவேலர்களில் இன்னும் உயிரோடு இருப்பவர்களே, கவனியுங்கள்! நான் உங்களைத் தாங்கியிருக்கிறேன். நீங்கள் உங்கள் தாயின் கர்ப்பத்தில் இருந்தது முதல் நான் உங்களைத் தாங்கியிருக்கிறேன். நீங்கள் பிறந்ததும், உங்களைச் சுமந்தேன். நீங்கள் முதுமை அடையும்வரை உங்களைத் தாங்குவேன். உங்கள் தலைமுடி நரைக்கும்வரை உங்களைத் தாங்குவேன். ஏனென்றால், நான் உங்களைப் படைத்தேன். நான் உங்களைத் தொடர்ந்து தாங்குவேன், உங்களைப் பாதுகாப்பேன். “என்னை வேறு எவருடனும் ஒப்பிட முடியுமா? இல்லை! எவரும் எனக்கு இணையில்லை. என்னைப் பற்றிய அனைத்தையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. என்னைப்போன்று எதுவுமில்லை. சில ஜனங்கள் பொன்னும் வெள்ளியும் கொண்டு வளத்துடன் இருக்கிறார்கள். தங்கம் அவர்களின் பைகளிலிருந்து விழுகிறது. அவர்கள் தங்கள் வெள்ளியை எடைபோடுகிறார்கள். அந்த ஜனங்கள் ஒரு கலைஞனுக்குப் பணம் கொடுத்து மரத்திலிருந்து ஒரு சிலையைச் செதுக்கி, பிறகு அந்த ஜனங்கள் அதற்கு முன்பு விழுந்து அதனைத் தொழுதுகொள்கிறார்கள். அந்த ஜனங்கள் பொய்த் தெய்வங்களைத் தோளில் வைத்து சுமக்கின்றனர். அந்தப் பொய்த் தெய்வம் பயனற்றது. ஜனங்கள் அதைச் சுமக்க வேண்டும். ஜனங்கள் தரையில் அந்தச் சிலையை வைப்பார்கள். அந்த தெய்வங்களால் நகர முடியாது. அந்தப் பொய்த் தெய்வங்களால் இடத்தை விட்டு எழுந்து நடக்க முடியாது. ஜனங்கள் அதைக் கூப்பிட்டாலும். அது பதில் சொல்லாது. அப்பொய்த் தெய்வம் ஒரு சிலை மட்டும்தான். அது ஜனங்களை அவர்களின் துன்பத்திலிருந்து காப்பாற்ற முடியாது. “நீங்கள் பாவம் செய்திருக்கிறீர்கள். மீண்டும் நீங்கள் இவற்றைப்பற்றி சிந்திக்க வேண்டும். இவற்றை நினைவுபடுத்தி பலமுள்ளவர்கள் ஆகுங்கள். நீண்ட காலத்திற்கு முன் நடந்ததை நினைத்துப்பாருங்கள். நான் தேவன் என்பதை நினையுங்கள். வேறு தேவன் இல்லை. அப்பொய்த் தெய்வங்கள் என்னைப்போன்று இல்லை. “தொடக்க காலத்தில், நான் முடிவில் நடக்கப்போவதைப்பற்றிச் சொன்னேன். நீண்ட காலத்துக்கு முன்பு, இதுவரை நடைபெறாததைப்பற்றிச் சொன்னேன். நான் ஏதாவது திட்டமிட்டால் அது நடைபெறும். நான் செய்ய விரும்புவதைச் செய்வேன். நான் கிழக்கே இருந்து ஒருவனை அழைத்துக்கொண்டிருக்கிறேன். அம்மனிதன் கழுகைப்போன்று இருப்பான். அவன் தொலைதூர நாட்டிலிருந்து வருவான். நான் செய்ய திட்டமிட்டிருப்பதை அவன் செய்வான். நான் செய்வேன் எனச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நான் அதனைச் செய்வேன். நான் அவனைப் படைத்தேன். நான் அவனைக் கொண்டுவருவேன்! “உங்களில் சிலர் உங்களுக்குப் பெரும் வல்லமை இருப்பதாக நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நல்லவற்றைச் செய்வதில்லை. எனக்குச் செவிகொடுங்கள்! நான் நல்லவற்றைச் செய்வேன். விரைவில் நான் என் ஜனங்களைக் காப்பாற்றுவேன். நான் சீயோனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவேன். எனது அற்புதமான இஸ்ரவேலுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவருவேன்.”
ஏசாயா 46:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டு மிருகங்களுக்கும் நாட்டு மிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும். அவைகள் ஏகமாய்க் குனிந்து பணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும். யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலி பொருத்திக்கொள்ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள். அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் ஸ்தானத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை. இதை நினைத்துப் புருஷராயிருங்கள்; பாதகரே, இதை மனதில் வையுங்கள். முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன். முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள். என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்.