ஏசாயா 41:1-29

ஏசாயா 41:1-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“தீவுகளே, நீங்கள் எனக்குமுன் மவுனமாயிருங்கள்! நாடுகள் தமது பெலனைப் புதுப்பிக்கட்டும்! அவர்கள் முன்வந்து பேசட்டும்; நாம் எல்லோரும் நியாயந்தீர்க்கும் இடத்தில் ஒன்று கூடுவோம். “கிழக்கிலிருந்து ஒருவனை எழுப்பி, நேர்மையுடன் தனக்குப் பணிசெய்ய அவனை அழைத்தவர் யார்? அவர் நாடுகளை அவனிடம் ஒப்படைத்து, அரசர்களை அவன் முன்னே அடக்குகிறார். அவனோ அவர்களைத் தன் வாளினால் தூசியாக்கி, தன் வில்லினால் காற்றில் பறக்கும் பதராக்குகிறான். அவன் தனக்குத் தீங்கு நேராமல், தான் முன்னர் போகாத வழியாக அவர்களைத் துரத்திச் செல்கிறான். இதைச் செய்தது யார்? ஆதியிலிருந்து தலைமுறைகளை அழைத்து, இதை நிறைவேற்றியது யார்? முந்தினவராய் இருப்பவர் யெகோவாவாகிய நானே, பிந்தினவராய் இருப்பதும் நானே.” தீவுகள் அதைக்கண்டு பயப்படுகின்றன; பூமியின் எல்லைகள் நடுங்குகின்றன. அவர்கள் நெருங்கி முன்னேறி வந்து, ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்து, “திடன்கொள்!” என்று தம் அடுத்தவருக்கு சொல்கிறார்கள். கைவினைஞன் கொல்லனை ஊக்குவிக்கிறான், சுத்தியலால் தட்டி மிருதுவாக்குகிறவன் பட்டறையில் இரும்பை வைத்து அடிப்பவனை உற்சாகப்படுத்தி, “அது நன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறது” என்று சொல்லி, அது அசையாதபடி ஆணிகளால் அடித்து இறுக்குகிறான். “ஆனால் நீயோ, இஸ்ரயேலே, என் அடியவனே, நான் தெரிந்தெடுத்த யாக்கோபே, என் நண்பன் ஆபிரகாமின் வழித்தோன்றலே, நான் பூமியின் எல்லைகளிலிருந்து உன்னை எடுத்து, அதன் தொலைதூரத்திலிருந்து உன்னை அழைத்தேன். நான், ‘நீ என் ஊழியக்காரன்’; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னைப் புறக்கணிக்கவில்லை என்றேன். ஆகையால் பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; கலங்காதே, நானே உன் இறைவன். நான் உன்னைப் பெலப்படுத்தி, உனக்கு உதவி செய்வேன்; எனது நீதியின் வலது கரத்தால் நான் உன்னைத் தாங்கிக்கொள்வேன். “கடுங்கோபத்தோடு உன்னை எதிர்ப்பவர்கள் யாவரும் நிச்சயமாக வெட்கப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்படுவார்கள். உன்னை எதிர்ப்பவர்கள் இருந்த இடம் தெரியாமலேயே அழிந்துபோவார்கள். உனது பகைவரைத் தேடினாலும் நீ காணமாட்டாய், உன்னை எதிர்த்துப் போரிடும் யாவரும் இருந்த இடம் தெரியாமலே போய்விடுவார்கள். ஏனெனில், யெகோவாவாகிய நானே உன் இறைவன். நானே உனது வலதுகையைப் பிடித்து, பயப்படாதே, உனக்கு நான் உதவி செய்வேன் என்று சொல்கிறவர். பயப்படாதே, யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் சிறுகூட்டமே, நான், நானே உனக்கு உதவி செய்வேன்” என்று, உனது மீட்பரும் இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய யெகோவா அறிவிக்கிறார். “இதோ, நான் உன்னை ஒரு சூடடிக்கும் கருவியாக்குவேன், அது புதியதும், கூர்மையானதும், அநேக பற்களை உடையதுமான கருவி. நீ மலைகளை போரடித்து, அவைகளை நொறுக்குவாய்; நீ குன்றுகளைப் பதராக்குவாய். நீ அவைகளைத் தூற்றுவாய், காற்று அவைகளை அள்ளிக்கொண்டுபோய், புயல்காற்று அவைகளை வாரிக்கொண்டு போகும். ஆனால் நீயோ, யெகோவாவில் அகமகிழ்ந்து, இஸ்ரயேலின் பரிசுத்தரில் மேன்மை அடைவாய். “ஏழைகளும், எளியவர்களும் தண்ணீரைத் தேடுவார்கள்; ஆனால் அங்கு ஒன்றுமிராது. அவர்களின் நாவுகள் தாகத்தினால் வறண்டுபோகும். ஆனால் யெகோவாவாகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் இறைவனாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். நான் வறண்ட மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளில் நீரூற்றுக்களையும் உண்டாக்குவேன். பாலைவனத்தை நீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுவேன். நான் பாலைவனத்திலே கேதுருக்களையும், சித்தீம் மரங்களையும், மிருதுச் செடிகளையும், ஒலிவ மரங்களையும் நாட்டுவேன். பாழ்நிலங்களில் தேவதாரு மரங்களையும், சவுக்கு மரங்களையும், புன்னை மரங்களையும் நான் சேர்த்து நாட்டுவேன். யெகோவாவின் கரம்தான் இப்படிச் செய்தது, இஸ்ரயேலின் பரிசுத்தரே இவற்றை உண்டாக்கினார் என்று, மக்கள் பார்த்து அறிந்துகொள்ளவும், சிந்தித்து விளங்கிக்கொள்ளவுமே இப்படிச் செய்வேன். “உங்கள் வழக்கைச் சொல்லுங்கள்” என்று யெகோவா சொல்லுகிறார். “உங்களுடைய நியாயங்களை எடுத்துக் கூறுங்கள்” என்று யாக்கோபின் அரசர் சொல்கிறார். “உங்களுடைய விக்கிரகங்களைக் கொண்டுவாருங்கள், இனி நடக்கப் போகிறதை அவை தெரிவிக்கட்டும். முன்பு நடந்தவற்றை அவை எங்களுக்குச் சொல்லட்டும், அப்பொழுது நாம் அவைகளைச் சிந்தித்து, அவைகளின் முடிவுகளை அறிவோம், அல்லது இனி நடக்கப்போவதை அவை தெரிவிக்கட்டும். நீங்கள்தான் தெய்வங்கள் என்று நாம் அறியும்படி, இனி நடக்கப்போவதை எங்களுக்குத் தெரிவியுங்கள்; நல்லதோ, கெட்டதோ எதையேனும் செய்யுங்கள். அப்பொழுது நாங்கள் கலங்கி, பயத்தால் நிரப்பப்படுவோம். ஆனால் நீங்களோ, வெறுமையிலும் வெறுமையானவர்கள். உங்கள் செயல்களெல்லாம் முற்றிலும் பயனற்றவை, உங்களைத் தெரிந்தெடுப்பவன் அருவருப்பானவன். “நான் வடக்கிலிருந்து ஒருவனை எழும்பப் பண்ணியிருக்கிறேன்; அவன் வருகிறான். அவன் சூரிய உதயத்தில் இருந்து என் பெயரைச்சொல்லிக் கூப்பிடுகிறான். அவன் ஆளுநர்களை சுண்ணாம்புக் கலவையைப்போல் மிதிக்கிறான்; குயவன் களிமண்ணை மிதித்துத் துவைப்பதுபோல் அவர்களை மிதிக்கிறான். இதை நாம் அறியும்படியாக ஆதியில் சொன்னது யார்? அல்லது, ‘அவர் சொன்னது சரி’ என்று நாம் சொல்லும்படியாக இதை முன்பே கூறியது யார்? இதைக்குறித்து ஒருவருமே சொல்லவில்லை; ஒருவருமே முன்னறிவிக்கவுமில்லை, உங்களிடமிருந்து ஒரு வார்த்தையையும் கேட்டவர்களும் இல்லை. ‘இதோ, அவர்கள் வருகிறார்கள்’ என்று நானே சீயோனிடம் முதன் முதலாகச் சொன்னேன். நானே நற்செய்தியின் தூதுவனை எருசலேமுக்குக் கொடுத்தேன். தெய்வங்களுக்குள்ளே நான் பார்த்தேன், ஆனால் அங்கு ஒருவருமில்லை. ஆலோசனை கூற அவர்களில் ஒருவரும் இல்லை, நான் கேட்கும்போது எனக்கு விடையளிக்கவும் ஒருவரும் இல்லை. இதோ, இவர்கள் எல்லோருமே மாயை! அவர்களின் செயல்கள் வீணானவை; அவர்களின் உருவச்சிலைகள் காற்றும் வெறுமையுமே.

ஏசாயா 41:1-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; மக்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, அருகில் வந்து, பின்பு பேசட்டும்; நாம் ஒருமிக்க நியாயாசனத்திற்கு முன்பாகச் சேருவோம். கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பி, தமது பாதப்படியிலே வரவழைத்தவர் யார்? தேசங்களை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவனுடைய பட்டயத்திற்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட வைக்கோலுமாக்கி, அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடக்காமலிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் செய்தவர் யார்? அதைச்செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற யெகோவாவாகிய நான்தானே; பிந்தினவர்களுடனும் இருப்பவராகிய நான்தானே. தீவுகள் அதைக்கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து, ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசைசெய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்கிறான். சித்திரவேலைக்காரன் கொல்லனையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான். என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே, நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் ஊழியக்காரன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன். நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்செய்வேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற அனைவரும் வெட்கி கனவீனமடைவார்கள்; உன்னுடன் வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள். உன்னுடன் போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னுடன் போர்செய்த மனிதர்கள் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்கிறேன். யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய். அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ யெகோவாவுக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக்கொண்டிருப்பாய். சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடைக்காமல், அவர்கள் நாக்கு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன். உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்திரத்தைத் தண்ணீருள்ள குளமும், வறண்ட பூமியை தண்ணீருள்ள கிணறுகளுமாக்கி, வனாந்திரத்திலே கேதுருமரங்களையும், சீத்திம் மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாருமரங்களையும், பாய்மர மரங்களையும், புன்னைமரங்களையும் வளரச்செய்வேன். யெகோவாவுடைய கரம் அதைச் செய்தது என்றும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், அனைவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள். உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று யெகோவா சொல்கிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார். அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவைகள் இவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும். பின்வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்; அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம்; அல்லது நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்; அப்பொழுது நாங்கள் திகைத்து ஏகமாகக் கூடி அதைப்பார்ப்போம். இதோ, நீங்கள் சூனியத்திலும் சூனியமாயிருக்கிறீர்கள்; உங்கள் செயல் வெறுமையிலும் வெறுமையானது; உங்களைத் தெரிந்துகொள்ளுகிறவன் அருவருப்பானவன். நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பச்செய்வேன், அவன் வருவான்; சூரியன் உதிக்கும் திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்வான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான். நாம் அதை அறியும்படியாக ஆரம்பத்தில் சொன்னவன் யார்? நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி ஆரம்பகாலத்தில் அறிவித்தவன் யார்? அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே; உரைக்கிறவனும் இல்லையே; உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே. முதல் முதல், நானே, சீயோனை நோக்கி: இதோ, அவைகளைப் பார் என்று சொல்லி, எருசலேமுக்குச் சுவிசேஷகர்களைக் கொடுக்கிறேன். நான் பார்த்தேன், அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை; நான் கேட்கும் காரியத்திற்கு மறுமொழி கொடுக்கக்கூடிய ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை. இதோ, அவர்கள் எல்லோரும் மாயை, அவர்கள் செயல்கள் வீண்; அவர்களுடைய சிலைகள் காற்றும் வெறுமையுந்தானே.

ஏசாயா 41:1-29 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் கூறுகிறார், “தூரத்திலுள்ள நாடுகளே, அமைதியாக இருங்கள் என்னிடம் வாருங்கள்! நாடுகளே மறுபடியும் தைரியம் கொள்ளுங்கள். என்னிடம் வந்து பேசுங்கள். நாம் சந்தித்து கூடுவோம். யார் சரியென்று முடிவு செய்வோம். இந்த வினாக்களுக்கு என்னிடம் பதில் சொல்லுங்கள். கிழக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிற மனிதனை எழுப்பியது யார்? நன்மையானது அவரோடு நடக்கிறது. அவர் தமது வாளைப் பயன்படுத்தி நாடுகளைத் தாக்குகிறார். அவைகள் தூசிபோல ஆகின்றன. அவர் தமது வில்லைப் பயன்படுத்தி ராஜாக்களை வென்றார். அவர்கள் காற்றால் அடித்துச் செல்லப்படும் துரும்புகளைப்போன்று ஓடிப்போனார்கள். அவர் படைகளைத் துரத்துகிறார். அவர் காயப்படுத்தவில்லை. இதற்கு முன்னால் போகாத இடங்களுக்கு எல்லாம் அவர் போகிறார். இவை நிகழக் காரணமாக இருந்தது யார்? இதனைச் செய்தது யார்? தொடக்கத்திலிருந்து அனைத்து ஜனங்களையும் அழைத்தது யார்? கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன். கர்த்தராகிய நானே முதல்வர்! தொடக்கத்திற்கு முன்னரே நான் இங்கே இருந்தேன். எல்லாம் முடியும்போதும் நான் இங்கே இருப்பேன். வெகு தொலைவிலுள்ள இடங்களே பாருங்கள் பயப்படுங்கள்! பூமியிலுள்ள தொலைதூர இடங்களே அச்சத்தால் நடுங்குங்கள். இங்கே வந்து என்னைக் கவனியுங்கள்!” அவர்கள் வந்தார்கள். “தொழிலாளிகள் ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். அவர்கள் பலம் பெற ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தினார்கள். ஒரு வேலைக்காரன் சிலை செதுக்க மரம் வெட்டினான். அவன் தங்க வேலை செய்பவனை உற்சாகப்படுத்தினான். இன்னொரு வேலைக்காரன் சுத்தியலைப் பயன்படுத்தி உலோகத்தை மென்மைப்படுத்தினான். பிறகு, அந்த வேலைக்காரன் அடைக்கல்லில் வேலை செய்பவனை உற்சாகப்படுத்துகிறான். இந்த இறுதி வேலைக்காரன், ‘இந்த வேலை நன்று. இந்த உலோகம் வெளியே வராது’ என்று கூறுகிறான். எனவே, அவன் சிலையை ஒரு பீடத்தின் மேல் அசையாமல் ஆணியால் இறுக்குகிறான். அந்தச் சிலை கீழே விழாது. அது எப்பொழுதும் அசையாது.” கர்த்தர் சொல்கிறார், “இஸ்ரவேலே, நீ எனது தாசன். யாக்கோபே, நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து நீ வந்தாய், நான் ஆபிரகாமை நேசிக்கிறேன். பூமியில் நீங்கள் வெகு தொலைவில் இருந்தீர்கள். நீங்கள் தொலைதூர நாட்டில் இருந்தீர்கள். ஆனால் நான் உன்னிடம் தேடிவந்து உன்னை அழைத்துச் சொன்னேன், ‘நீ எனது ஊழியன்.’ நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நான் உன்னைத் தள்ளிவிடவில்லை! கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். பயப்படாதே, நான் உனது தேவன். நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்திருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன். நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன். பார், சில ஜனங்கள் உன் மீது கோபத்தோடு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவமானம் அடைவார்கள். உங்கள் பகைவர்கள் மறைந்து தொலைந்து போவார்கள். நீங்கள் உங்களுக்கு எதிரான ஜனங்களைத் தேடுவீர்கள். ஆனால் அவர்களை உங்களால் காணமுடியாது. உங்களுக்கு எதிராகப்போரிடுகிற அனைவரும் முழுவதுமாக மறைந்துபோவார்கள். நான் உனது தேவனாகிய கர்த்தர். நான் உனது வலது கையைப் பற்றியிருக்கிறேன். ‘நான் உனக்குச் சொல்கிறேன்: பயப்படாதே! நான் உனக்கு உதவுவேன்.’ விலையேறப்பெற்ற யூதாவே, பயப்படாதே. எனது அருமை இஸ்ரவேல் ஜனங்களே! கலங்க வேண்டாம்! நான் உங்களுக்கு உண்மையாகவே உதவுவேன்.” கர்த்தர் தாமாகவே இவற்றைக் கூறினார். “நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும் (தேவன்) உன்னைக் காப்பாற்றுகிறவரும் இதனைக் கூறுகிறார். பார்! நான் உன்னை போரடிப்பதற்கான புதிய கருவியாக்குவேன். அது கூர்மையான பற்களை உடையது. விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி போரடிப்பார்கள். அவர்கள் தானியத்தை அதிலிருந்து பிரிப்பார்கள். நீ மலைகளின் மேல் நடந்து அவற்றை நசுக்குவாய். நீ குன்றுகளைப் பதர்களைப்போன்று ஆக்கிவிடுவாய். நீ அவற்றைக் காற்றில் தூற்றிவிடுவாய். அவற்றைக் காற்று அடித்துச்சென்று, சிதறடித்துவிடும். பிறகு, நீ கர்த்தருக்குள் மகிழ்ச்சியுடன் இருப்பாய். இஸ்ரவேலின் பரிசுத்தமானவரைப்பற்றி (தேவன்) நீ மிகவும் பெருமை அடைவாய்.” “ஏழ்மையும் தேவையும் கொண்ட ஜனங்கள் தண்ணீருக்காக அலைவார்கள். ஆனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்கள் தாகமாக இருக்கிறார்கள். அவர்களின் நாக்கு உலர்ந்துபோயிற்று. அவர்களின் ஜெபத்திற்கு இஸ்ரவேலின் தேவனும் கர்த்தருமாகிய நான் பதில் சொல்வேன். நான் அவர்களை விடமாட்டேன். அவர்கள் மரிக்கவும் விடமாட்டேன். வறண்ட மலைகளில் நதிகளை நான் பாயச் செய்வேன். பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை நான் எழச்செய்வேன். வனாந்திரங்களை தண்ணீர் நிறைந்த ஏரியாக நான் மாற்றுவேன். வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் இருக்கும். வனாந்திரங்களில் மரங்கள் வளரும். அங்கு கேதுரு மரங்களும், சித்தீம் மரங்களும், ஒலிவ மரங்களும், சைப்பிரஸ் மரங்களும், ஊசி இலை மரங்களும், பைன் மரங்களும் இருக்கச் செய்வேன். ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள். கர்த்தருடைய வல்லமை இவற்றைச் செய்தது என்று அவர்கள் அறிவார்கள். ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள். அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள், இஸ்ரவேலின் பரிசுத்தமானவர் (தேவன்) இவற்றைச் செய்தார்.” யாக்கோபின் ராஜாவான கர்த்தர், “வா, உனது வாதங்களைக் கூறு. உனது சான்றுகளைக் காட்டு. சரியானவற்றை நாம் முடிவு செய்வோம். உங்கள் சிலைகள் (பொய்த் தெய்வங்கள்) வந்து என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் என்ன நடந்தது? எதிர்காலத்தில் என்ன நடக்கும்? எங்களிடம் கூறு. நாங்கள் கடினமாகக் கவனிப்போம். பிறகு அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிவோம். என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கும்படி எங்களுக்குக் கூறுங்கள். பிறகு நாங்கள் உங்களை உண்மையான தெய்வங்கள் என்று நம்புவோம். ஏதாவது செய்யுங்கள்! எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், நல்லதோ அல்லது கெட்டதோ! பிறகு நீங்கள் உயிரோடு இருப்பதாக நாங்கள் பார்ப்போம். நாங்கள் உங்களைப் பின்பற்றுவோம். “பாருங்கள், பொய்த் தெய்வங்களான நீங்கள் ஒன்றுமில்லாமல் இருக்கிறீர்கள்! உங்களால் எதுவும் செய்யமுடியாது! அருவருப்பானவன் மட்டுமே உங்களை வழிபட விரும்புவான்!” “வடக்கே நான் ஒருவனை எழுப்பினேன் அவன் சூரியன் உதிக்கிற கிழக்கே இருந்து வந்துகொண்டிருக்கிறான். அவன் எனது நாமத்தைத் தொழுதுகொள்கிறான். பானைகளைச் செய்பவன் களிமண்னை மிதிப்பதுபோல அந்தச் சிறப்பானவன் ராஜாக்களை அழிப்பான் (மிதிப்பான்). “இது நடைபெறுவதற்கு முன்னால் யார் இதைப்பற்றிச் சொன்னது. நாம் அவனை தேவன் என்று அழைப்போம். எங்களுக்கு இவற்றை உனது சிலைகளில் ஒன்று சொன்னதா? இல்லை! சிலைகளில் எதுவும் எதையும் சொல்லவில்லை. அந்தச் சிலைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அந்தப் பொய்த் தெய்வங்கள் நீங்கள் சொல்லும் வார்த்தைகளையும் கேட்க முடியாது. கர்த்தராகிய நானே சீயோனிடம் இதைப் பற்றிச் சொன்ன முதல் நபர். இந்தச் செய்திகளோடு ஒரு தூதுவனை நான் எருசலேமிற்கு அனுப்பினேன். ‘பாருங்கள், உங்கள் ஜனங்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்!’” நான் அந்தப் பொய்த் தெய்வங்களைப் பார்த்தேன். அவைகளில் ஒன்றும் எதுவும் சொல்லும் வகையில் ஞானமுள்ளவையல்ல. அவைகளிடம் நான் கேள்விகள் கேட்டேன், அவைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை! அந்தத் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாதவைகள்! அவைகளால் எதுவும் செய்யமுடியாது! அந்தச் சிலைகள் முழுமையாகப் பயனற்றவை!

ஏசாயா 41:1-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, சமீபித்து வந்து, பின்பு பேசக்கடவர்கள்; நாம் ஒருமிக்க நியாயாசனத்துக்கு முன்பாகச் சேருவோம். கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பி, தமது பாதபடியிலே வரவழைத்தவர் யார்? ஜாதிகளை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட தாளடியுமாக்கி, அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்? அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே. தீவுகள் அதைக் கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து, ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான். சித்திரவேலைக்காரன் தட்டானையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான். என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே, நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன். நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள். உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய். அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக் கொண்டிருப்பாய். சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன். உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி, வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்தீம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன். கர்த்தருடைய கரம் அதைச் செய்தது என்றும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள். உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார். அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவைகள் இன்னவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும். பின்வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்; அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம்; அல்லது நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்; அப்பொழுது நாங்கள் திகைத்து ஏகமாய்க் கூடி அதைப்பார்ப்போம். இதோ, நீங்கள் சூனியத்திலும் சூனியமாயிருக்கிறீர்கள்; உங்கள் செயல் வெறுமையிலும் வெறுமையானது; உங்களைத் தெரிந்துகொள்ளுகிறவன் அருவருப்பானவன். நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பப்பண்ணுவேன், அவன் வருவான்; சூரியோதய திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்ளுவான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான். நாம் அதை அறியும்படியாக ஆதியில் சொன்னவன் யார்? நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி பூர்வகாலத்தில் அறிவித்தவன் யார்? அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே; உரைக்கிறவனும் இல்லையே; உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே. முதல் முதல், நானே, சீயோனை நோக்கி: இதோ, அவைகளைப் பார் என்று சொல்லி, எருசலேமுக்குச் சுவிசேஷகரைக் கொடுக்கிறேன். நான் பார்த்தேன், அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை; நான் கேட்குங் காரியத்துக்குப் பிரதியுத்தரம் கொடுக்கத்தக்க ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை. இதோ, அவர்கள் எல்லாரும் மாயை, அவர்கள் கிரியைகள் விருதா; அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே.