ஏசாயா 31:1-9

ஏசாயா 31:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உதவி நாடி எகிப்திற்குப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு! அவர்கள் குதிரைகளை நம்பி, தங்கள் திரளான தேர்களிலும், தங்கள் குதிரைவீரரின் பெரும் பலத்திலும் நம்பிக்கை வைக்கிறார்கள். ஆனால், இஸ்ரயேலின் பரிசுத்தரை நோக்காமலும், யெகோவாவின் உதவியைத் தேடாமலும் இருக்கின்றார்கள். யெகோவாவோ ஞானமுள்ளவர், அவரால்தான் அழிவைக் கொண்டுவர முடியும்; அவர் சொன்ன வார்த்தையை மாற்றுவதில்லை, அவர் கொடுமையானவரின் குடும்பத்திற்கு விரோதமாகவும், தீயவர்களுக்கு உதவுவோருக்கு எதிராகவும் எழும்புவார். ஆனால் எகிப்தியர் மனிதர்களேயன்றி இறைவன் அல்ல; அவர்களின் குதிரைகள் மாமிசமேயன்றி ஆவியல்ல. யெகோவா தமது கரத்தை நீட்டும்போது, உதவிசெய்கிறவன் இடறுவான். உதவி பெறுவோனும் விழுவான்; இருவரும் ஒன்றாய் அழிவார்கள். யெகோவா எனக்கு சொல்வது இதுவே: “சிங்கமோ, இளஞ்சிங்கமோ, தன் இரையைப் பிடித்துக்கொண்டு கர்ஜிக்கும்போது, அதை எதிர்ப்பதற்கு முழு மேய்ப்பர் கூட்டத்தை அழைத்தாலும், அது அவர்களின் கூக்குரலுக்கு அஞ்சவோ, இரைச்சலைப் பொருட்படுத்தவோ மாட்டாது. அதுபோலவே, சேனைகளின் யெகோவா, சீயோன் மலையிலும் அதன் உயரிடங்களிலும் யுத்தம் செய்வதற்கு இறங்குவார். பறவைகள் தமது கூடுகளின் மேலே வட்டமிட்டுப் பறப்பதுபோல, சேனைகளின் யெகோவா எருசலேமைப் பாதுகாப்பார். அவர் அதைப் பாதுகாத்து மீட்பார், அவர் அதற்கு மேலாகக் கடந்து அதை விடுவிப்பார்.” இஸ்ரயேலரே, அவரை எதிர்த்து அதிகமாய் கலகம் செய்த நீங்கள் அவரிடம் திரும்புங்கள். ஏனென்றால், அந்த நாளிலே நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவக் கைகளினால் செய்த வெள்ளி விக்கிரகங்களையும், தங்க விக்கிரகங்களையும் ஒதுக்கி எறிந்து விடுவீர்கள். “அசீரியா வீழ்ச்சியடைவது மனிதனின் வாளினால் அல்ல. மனிதனால் ஆக்கப்படாத ஒரு வாள் அவர்களை விழுங்கும்; வாளுக்கு முன்னால் அவர்கள் பயந்து ஓடுவார்கள்; அவர்களின் வாலிபர் கட்டாய வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். அவர்களின் அரண் பயங்கரத்தால் வீழ்ச்சியடையும்; அவர்களின் தளபதிகள் போர்க் கொடிகளைக் கண்டதும் திகிலடைவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். சீயோனில் அவருடைய நெருப்பும், எருசலேமில் அவருடைய சூளையும் இருக்கிறது.

ஏசாயா 31:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உதவி பெறுவதற்காக இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், யெகோவாவை தேடாமலும், எகிப்திற்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர்கள் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ, அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரச்செய்து, தீமை செய்கிறவர்களின் வீட்டிற்கும், அக்கிரமக்காரருக்கு உதவி செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார். எகிப்தியர்கள் தெய்வம் அல்ல, மனிதர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; யெகோவா தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது உதவி செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாக அழிந்துபோவார்கள். யெகோவா என்னுடன் சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாகக் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் யெகோவா சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் போர்செய்ய இறங்குவார். பறந்து காக்கிற பறவைகளைப்போல, சேனைகளின் யெகோவா எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதை தப்புவித்துக் காப்பாற்றுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார். இஸ்ரவேல் மக்களே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள். உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி சிலைகளையும், பொன் சிலைகளையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள். அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; மனிதனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்திற்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள். அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய யெகோவா சொல்கிறார்.

ஏசாயா 31:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

எகிப்துக்கு ஜனங்கள் உதவி கேட்டுப்போவதைப் பார். ஜனங்கள் குதிரைகளைக் கேட்கிறார்கள். குதிரைகள் தங்களைக் காக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எகிப்திலிருந்து வரும் பல இரதங்களும், குதிரை வீரர்களும் அவர்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். படை மிகப் பெரிதாய் இருப்பதால் தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக ஜனங்கள் நினைக்கின்றனர். இஸ்ரவேலின் பரிசுத்தமானவரை (தேவனை) ஜனங்கள் நம்பவில்லை. ஜனங்கள் கர்த்தரிடம் உதவி கேட்பதில்லை. ஆனால், கர்த்தர் ஞானமுள்ளவராய் இருக்கிறார். அவர்களுக்கு எதிராக கர்த்தர் தீங்குவரப் பண்ணுகிறார். கர்த்தருடைய கட்டளையை ஜனங்களால் மாற்ற முடியாது. கர்த்தர் எழும்பி, தீய ஜனங்களுக்கு (யூதா) எதிராகப்போரிடுவார். அவர்களுக்கு உதவ முயல்கிற ஜனங்களுக்கு (எகிப்து) எதிராகவும் கர்த்தர் போரிடுவார். எகிப்து ஜனங்கள் தேவன் அல்ல மனிதர்கள் மட்டுமே. எகிப்திலுள்ள குதிரைகள் ஆவி அல்ல, மிருகங்கள் மட்டுமே. கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார். உதவுபவர்கள் (எகிப்து) தோற்கடிக்கப்படுவார்கள். உதவியை விரும்புகிற ஜனங்களும் (யூதா) விழுவார்கள். எல்லா ஜனங்களும் சேர்ந்து அழிவார்கள். கர்த்தர் என்னிடம், “ஒரு சிங்கமோ சிங்கக்குட்டியோ உண்பதற்காக ஒரு மிருகத்தைப் பிடிக்கும்போது, அது மரித்த மிருகத்தின் அருகில் நின்று கெர்ச்சிக்கும். அப்போது அந்தச் சிறந்த சிங்கத்தை எதுவும் பயமுறுத்தாது. மனிதர்கள் வந்து சிங்கத்தின் அருகில் சத்தமிட்டால், அது அஞ்சாது. மனிதர்கள் அதிகமாக ஓசை எழுப்பலாம். ஆனால் சிங்கம் வெளியே ஓடாது” என்று கூறினார். அதுபோலவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் சீயோன் மலைக்கு வருவார். அம்மலையில் அவர் போரிடுவார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எருசலேமை பறவைகள் கூட்டுக்குமேல் பறப்பதைப்போன்று காப்பாற்றுவார். அவளை கர்த்தர் காப்பாற்றுவார். கர்த்தர் “கடந்து வந்து” எருசலேமைக் காப்பாற்றுவார். இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய நீங்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினீர்கள். நீங்கள் தேவனிடம் திரும்பிவர வேண்டும். பிறகு, நீங்கள் செய்த பொன்னாலும், வெள்ளியாலுமான விக்கிரகங்களைத் தொழுதுகொள்வதை ஜனங்கள் நிறுத்துவார்கள். நீங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்யும்போது, உண்மையில் பாவம் செய்தீர்கள். அசீரியா வாளால் தோற்கடிக்கப்படும். ஆனால், அந்த வாள் ஒரு மனிதனின் வாளல்ல. அசீரியா அழிக்கப்படும். ஆனால், அந்த அழிவானது மனிதனின் வாளிலிருந்து வராது. அசீரியா தேவனுடைய வாளிலிருந்து தப்பி ஓடுவான். ஆனால், இளைஞர்கள் கைப்பற்றப்பட்டு அடிமைகளாக்கப்படுவார்கள். அவர்களது பாதுகாப்புக்குரிய இடம் அழிக்கப்படும். அவர்களின் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டு அவர்களின் கொடியை விடுவார்கள். கர்த்தர் இவற்றை கூறினார். கர்த்தருடைய பலிபீடம் சீயோனில் இருக்கிறது. கர்த்தருடைய அடுப்பு (பலிபீடம்) எருசலேமில் இருக்கிறது.

ஏசாயா 31:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ! அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார். எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள். கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார். பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார். இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள். உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி விக்கிரகங்களையும், பொன் விக்கிரகங்களையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள். அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; நீசனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்துக்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள். அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய கர்த்தர் சொல்லுகிறார்.