ஏசாயா 2:1-15

ஏசாயா 2:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆமோஸின் மகன் ஏசாயா, யூதா நாட்டையும், எருசலேம் பட்டணத்தையும் பற்றிக் கண்ட தரிசனம். கடைசி நாட்களிலே, யெகோவாவினுடைய ஆலயத்தின் மலை, எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாக நிலைநிறுத்தப்படும்; எல்லா குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும், எல்லா தேசத்தார்களும் அதை நாடி ஓடி வருவார்கள். அநேக மக்கள் கூட்டங்கள் வந்து, “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்கு ஏறிப்போவோம், யாக்கோபின் இறைவனுடைய ஆலயத்திற்குப் போவோம். நாம் அவர் பாதைகளில் நடப்பதற்கு அவர் தம் வழிகளை நமக்கு போதிப்பார்” என்பார்கள். சீயோனிலிருந்து அவரது சட்டமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிவரும். அவர் நாடுளுக்கிடையில் நியாயம் விசாரித்து, அநேக மக்கள் கூட்டங்களின் வழக்குகளைத் தீர்த்துவைப்பார். அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்துச் செய்துகொள்வார்கள். அதன்பின் ஒரு நாடு வேறு நாட்டை எதிர்த்து பட்டயத்தை எடுப்பதுமில்லை, போருக்கான பயிற்சியையும் அவர்கள் கற்பதுமில்லை. யாக்கோபின் குடும்பமே, வாருங்கள், யெகோவாவின் வெளிச்சத்தில் நடப்போம். யாக்கோபின் குடும்பமான உமது மக்களை நீர் கைவிட்டுவிட்டீர். அவர்கள் கிழக்குத் தேசத்தவர்களின் போதனைகளால் நிறைந்து, பெலிஸ்தியரைப்போல் குறிபார்க்கிறவர்களாய் இருக்கிறார்கள். வேற்று நாட்டு மக்களுடன் கைகோர்த்துத் திரிகிறார்கள். அவர்களுடைய நாடு வெள்ளியாலும், தங்கத்தாலும், நிறைந்திருக்கிறது; அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு அளவேயில்லை. அவர்களுடைய நாடு குதிரைகளால் நிறைந்திருக்கிறது; அவர்களிடத்தில் தேர்களும் ஏராளமாயிருக்கின்றன. அவர்களின் நாடு விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறது; அவர்கள் தங்களுடைய கைகளினாலும், விரல்களினாலும் செய்தவைகளையே விழுந்து வணங்குகிறார்கள். இவற்றால் மனிதன் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படுவான், மனுக்குலமும் தாழ்த்தப்படும்; நீர் அவர்களை மன்னியாதிரும். யெகோவாவின் பயங்கரத்திற்கும், அவரின் மாட்சிமையின் சிறப்புக்கும் ஒதுங்கி, கன்மலைக்குள் புகுந்து, மண்ணில் ஒளிந்துகொள்ளுங்கள்! கர்வமுள்ள மனிதரின் பார்வை தாழ்த்தப்படும், மனிதரின் பெருமையும் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படும்; அந்த நியாயத்தீர்ப்பின் நாளில் யெகோவா மட்டுமே உயர்த்தப்படுவார். அகந்தையும் இறுமாப்பும் உள்ள யாவருக்கும், உயர்த்தப்பட்ட அனைத்திற்கும் சேனைகளின் யெகோவா நாளொன்றை வைத்திருக்கிறார்; அவர்கள் எல்லோரும் தாழ்த்தப்படுவார்கள். அந்த நாளில் லெபனோனிலே ஓங்கி வளர்ந்த எல்லா கேதுரு மரங்களும், பாசானின் எல்லா கர்வாலி மரங்களும், உயர்ந்த எல்லா மலைகளும், உயரமான எல்லாக் குன்றுகளும், உயர்வான ஒவ்வொரு கோபுரமும், அரண்செய்யப்பட்ட ஒவ்வொரு மதிலும்

ஏசாயா 2:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆமோத்சின் மகனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும்குறித்துக் கண்ட காட்சி. வரும்நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் அமைக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; எல்லா தேசத்தார்களும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான மக்கள் புறப்பட்டுவந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும். அவர் தேசங்களிடையே நியாயந்தீர்த்து, திரளான மக்களின் வாக்குவாதங்களைத் தீர்த்துவைப்பார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் மாற்றுவார்கள்; நாட்டிற்கு விரோதமாக நாடு பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் போர்ப்பயிற்சி எடுப்பதுமில்லை. யாக்கோபின் வம்சத்தாரே, யெகோவாவின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள். யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய மக்களைக் கைவிட்டீர்; அவர்கள் கிழக்குத் நாடுகளின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தர்களைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய மக்கள்மேல் பிரியப்படுகிறார்களே. அவர்களுடைய தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்களுடைய தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய இரதங்களுக்கும் முடிவில்லை. அவர்களுடைய தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளாலும், தங்கள் விரல்களாலும் உருவாக்கிய சிலைகளைப் பணிந்துகொள்கிறார்கள். சிறியவனும், பெரியவனும் அவமானப்படுத்தப்படுகிறார்கள்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீராக. யெகோவாவின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமையின் புகழ்ச்சிக்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள். மனிதர்களின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனிதர்களின் வீணான பிடிவாதமும் தணியும்; யெகோவா ஒருவரே நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்திருப்பார். அனைத்தும் தாழ்த்தப்படுவதற்காக சேனைகளுடைய யெகோவாவின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும், லீபனோனிலுள்ள உயரமும் உயர்ந்ததுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின்மேலும், உன்னதமான எல்லா மலைகளின்மேலும், உயரமான எல்லா மலைகளின்மேலும், உயர்ந்த எல்லாக் கோபுரத்தின்மேலும், பாதுகாப்பான எல்லா மதிலின்மேலும்

ஏசாயா 2:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆமோத்சின் குமாரனான ஏசாயா யூதா மற்றும் எருசலேம் பற்றியச் செய்தியைப் பார்த்தான். கர்த்தருடைய ஆலயம் மலையின் மேல் இருக்கும். இறுதி நாட்களில், அம்மலை அனைத்து குன்றுகளையும்விட உயரமாக இருக்கும். அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்கள் தொடர்ச்சியாக அங்கு வருவார்கள். ஏராளமான ஜனங்கள் அங்கு போவார்கள். அவர்கள், “நாம் கர்த்தருடைய மலைக்குப்போவோம் நாம் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்குப்போவோம். பின் தேவன் நமக்கு வாழும் வழியைக் கற்றுத்தருவார். நாம் அவரைப் பின்பற்றுவோம்” என்பார்கள். தேவனாகிய கர்த்தருடைய போதனைகளும் செய்தியும் சீயோன் மலையிலுள்ள எருசலேமில் துவங்கி, உலகம் முழுவதும் பரவும். பிறகு, தேவனே அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களுக்கும் நீதிபதியாவார். தேவன் பலரது வாக்குவாதங்களை முடித்துவைப்பார். சண்டைக்காகத் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஜனங்கள் நிறுத்துவார்கள். அவர்கள் தங்கள் வாள்களை கலப்பையின் கொழுவாகச் செய்வார்கள். அவர்கள் தங்கள் ஈட்டிகளிலிருந்து செடிகளை வெட்டும் கருவிகளைச் செய்வார்கள். ஜனங்கள், மற்றவர்களோடு சண்டையிடுவதை நிறுத்துவார்கள். ஜனங்கள் மீண்டும் யுத்தத்திற்குரிய பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தினரே, வாருங்கள், நீங்கள் கர்த்தருடைய வெளிச்சத்திலே நடக்க வேண்டும்! நான் இவற்றை உங்களுக்குச் கூறுகிறேன். ஏனென்றால், நீங்கள் உங்களது ஜனங்களை விட்டுவிட்டீர்கள். உங்கள் ஜனங்கள் கிழக்கு நாட்டு ஜனங்களின் தவறான எண்ணங்களைத் தமக்குள் நிரப்பிக்கொண்டனர். நீங்கள் பெலிஸ்தியர்களைப்போன்று எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள். உங்கள் ஜனங்கள் அந்த விநோத எண்ணங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். பிற நாடுகளிலுள்ள பொன்னாலும் வெள்ளியாலும் உங்கள் தேசம் நிறைந்துள்ளது. அங்கே ஏராளமான கருவூலங்கள் உள்ளன. உங்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்துள்ளது. அங்கே ஏராளமான இரதங்களும் உள்ளன. உங்கள் தேசம் ஜனங்கள் தொழுதுகொள்ளும் சிலைகளாலும் நிறைந்துள்ளது. ஜனங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்தனர். ஜனங்கள் அவற்றைத் தொழுதுகொண்டனர். ஜனங்கள் மேலும், மேலும் மோசமானர்கள். ஜனங்கள் மிகவும் கீழானவர்கள். தேவன், அவர்களை நிச்சயமாக மன்னியாமல் இருப்பார். பாறைகளுக்கு பின்னால் மண்ணில் ஒளித்துக்கொள்ள போ! நீ கர்த்தருக்குப் பயப்படவேண்டும். அவரது மகா வல்லமையிலிருந்து மறைய வேண்டும். இறுமாப்புடையவர்கள் இனிமேல் இறுமாப்புடையவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் அவமானத்தால் தரையளவு தாழ்த்தப்படுவார்கள். அப்போது, கர்த்தர் ஒருவரே உயர்த்தப்படுவார். கர்த்தர் ஒரு சிறப்பு நாளுக்குத் திட்டமிட்டார். அன்று, கர்த்தர் பெருமிதம் கொண்டவர்களையும் வீண் பெருமை பேசுபவர்களையும் தண்டிப்பார். பிறகு அவர்கள் முக்கியமற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். அவர்கள் லீபனோனிலுள்ள உலர்ந்த கேதுரு மரங்களைப்போலிருக்கிறார்கள். அவர்கள் பாசானில் உள்ள கர்வாலி மரங்களைப்போன்றவர்கள். ஆனாலும் தேவன் அவர்களைத் தண்டிப்பார். அவர்கள் உயர்ந்த மலைகளையும் உயர்ந்த சிகரங்களையும் போன்றவர்கள். அவர்கள் உயர்ந்த கோபுரங்களைப்போன்றவர்கள். பலமான சுவர்களைப்போன்றவர்கள். ஆனால் தேவன் அவர்களைத் தண்டிப்பார்.

ஏசாயா 2:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம். கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள். யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தரைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர்மேல் பிரியப்படுகிறார்களே. அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை. அவர்கள் தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளின் கிரியையையும், தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்துகொள்ளுகிறார்கள். சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர். கர்த்தரின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள். நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். எல்லாம் தாழ்த்தப்படும்பொருட்டு சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும், லீபனோனிலுள்ள உயரமும் ஓங்கலுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின்மேலும், உன்னதமான எல்லாப் பர்வதங்களின்மேலும், உயரமான எல்லா மலைகளின்மேலும், உயர்ந்த எல்லாக் கோபுரத்தின்மேலும், அரணான எல்லா மதிலின்மேலும்