ஓசியா 14:1-9
ஓசியா 14:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இஸ்ரயேலே, உன் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பு; உன் பாவங்களே நீ விழுந்துபோவதற்குக் காரணமாய் அமைந்தன. நீங்கள் உங்கள் வேண்டுதல்களுடன் யெகோவாவிடம் திரும்புங்கள்; நீங்கள் அவரிடம், “எங்கள் பாவங்களையெல்லாம் மன்னியும், எங்களை கிருபையாய் ஏற்றுக்கொள்ளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் துதியை காளைகளின் பலியாய் செலுத்துவோம் என்று சொல்லுங்கள். அசீரியா நாடு எங்களைக் காப்பாற்றமாட்டாது; நாங்கள் போர்க் குதிரைகளில் ஏறமாட்டோம். எங்கள் கைகளினால் நாங்கள் செய்த விக்கிரகங்களை ‘எங்கள் தெய்வம்’ என இனி ஒருபோதும் சொல்லமாட்டோம்; ஏனெனில் உம்மிடமே திக்கற்றவர்கள் கருணை பெறுகிறார்கள் என்று கூறுங்கள்.” “நான் அவர்களுடைய பின்மாற்றத்தைக் குணமாக்குவேன், நான் அவர்களில் அதிகமாய் அன்பு செலுத்துவேன், எனது கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று. நான் இஸ்ரயேலுக்குப் பனிபோல் இருப்பேன்; அவன் லில்லியைப்போல் பூப்பான். லெபனோனின் கேதுருபோல் வேரூன்றி நிற்பான். அவனுடைய இளந்தளிர்கள் வளரும். அவனுடைய புகழ் ஒலிவமரத்தைப் போலவும், அவனுடைய வாசனை லெபனோனின் கேதுரு போலவும் இருக்கும். திரும்பவும் மனிதர்கள் அவனுடைய நிழலில் குடியிருப்பார்கள்; அவன் தானியத்தைப்போல் செழிப்பான். திராட்சைக் கொடியைப்போல் பூப்பான்; அவனுடைய புகழ் லெபனோனின் திராட்சை இரசம்போல் இருக்கும். எப்பிராயீமுக்கு விக்கிரகங்களுடன் இனியும் வேலை இல்லை; இனிமேல் நான் அவனுடைய வேண்டுதலுக்குப் பதில் கொடுத்து, அவனைப் பராமரிப்பேன். நான் அவர்களுக்குப் பசுமையான தேவதாரு மரம் போலிருக்கிறேன். அவர்களுடைய பலன்களின் நிறைவுகளெல்லாம் என்னிடமிருந்தே வருகின்றன.” ஞானமுள்ளவன் யார்? அவனே இவற்றை உணர்ந்துகொள்வான். பகுத்தறிவுள்ளவன் யார்? அவனே இவற்றை விளங்கிக்கொள்வான். யெகோவாவின் வழிகள் நீதியானவைகள்; நீதிமான்கள் அவற்றில் நடக்கிறார்கள், ஆனால் கலகக்காரர்கள் அவைகளில் இடறி விழுகிறார்கள்.
ஓசியா 14:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இஸ்ரவேலே, உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். வார்த்தைகளைக்கொண்டு யெகோவாவிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாக அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் பலிகளைச் செலுத்துவோம். அசீரியா எங்களைக் காப்பாற்றுவதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் செயலைப்பார்த்து: நீங்கள் எங்களுடைய தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள். நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாகச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கினது. நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போல் இருப்பேன்; அவன் லீலி மலரைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான். அவனுடைய கிளைகள் ஓங்கிப் படரும், அவனுடைய அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும். அவனுடைய நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சைச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவனுடைய வாசனை லீபனோனுடைய திராட்சைரசத்தின் வாசனையைப்போல இருக்கும். இனி எனக்கும் சிலைகளுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்வான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன்மேல் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு மரத்தைப்போல் இருக்கிறேன்; என்னாலே உன்னுடைய கனி உண்டானது என்று எப்பிராயீம் சொல்வான். இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளை ஏற்றுக்கொள்ளத்தக்க புத்தியுள்ளவன் யார்? யெகோவாவுடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; கலகக்காரர்களோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.
ஓசியா 14:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)
இஸ்ரவேலே, நீ விழுந்தாய், தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாய். எனவே உனது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வா. நீ சொல்லப் போவதைப் பற்றி நினைத்துப் பார். கர்த்தரிடம் திரும்பி வா. அவரிடம், “எங்கள் பாவங்களை எடுத்துவிடும். நாங்கள் செய்யும் நன்மைகளை ஏற்றுக்கொள்ளும். நாங்கள் எங்கள் உதடுகளிலிருந்து துதிகளை செலுத்துகிறோம். அசீரியா எங்களைக் காப்பாற்றாது. நாங்கள் போர்க் குதிரைகளில் சவாரி செய்யமாட்டோம். நாங்கள் மீண்டும் ஒருபோதும் ‘எங்கள் தேவன்’ என்று எங்கள் கைகளால் செய்யப்பட்டப் பொருட்களைக் கூறமாட்டோம். ஏனென்றால் நீர் ஒருவர் தான் அனாதைகள் மீது இரக்கங்காட்டுகிறவர்.” கர்த்தர் கூறுகிறார்: “என்னைவிட்டு அவர்கள் விலகியதை நான் மன்னிப்பேன். நான் அவர்களைத் தடையின்றி நேசிப்பேன். ஏனெனில் அவர்களுடன் கோபங்கொண்டதை நிறுத்திவிட்டேன். நான் இஸ்ரவேலுக்குப் பனியைப் போலிருப்பேன். இஸ்ரவேல் லீலிப் புஷ்பத்தைப் போன்று மலருவான். அவன் லீபனோனின் கேதுரு மரங்களைப்போன்று வளருவான். அவனது கிளைகள் வளரும். அவன் அழகான ஒலிவ மரத்தைப் போன்றிருப்பான். அவன் லீபனோனின் கேதுரு மரங்களிலிருந்து வரும் இனிய மணத்தைப் போன்று இருப்பான். இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் எனது பாதுகாப்பின் கீழ் வாழ்வார்கள். அவர்கள் தானியத்தைப் போன்று வளருவார்கள். அவர்கள் திராட்சைக் கொடியைப் போன்று மலருவார்கள். அவர்கள் லீபனோனின் திராட்சைரசம் போல் இருப்பார்கள்.” “எப்பிராயீமே, நான் (கர்த்தர்) இனி விக்கிரகங்களோடு எந்தத் தொடர்பும் கொள்ளமாட்டேன். நான் ஒருவனே உங்களது ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறவர். நான் ஒருவனே உன்னைக் கவனித்து வருபவர். நான் எப்பொழுதும் பசுமையாக இருக்கும் தேவதாரு மரத்தைப் போன்றவர். உன் கனி என்னிடமிருந்து வருகிறது.” அறிவுள்ள ஒருவன் இவற்றைப் புரிந்துக்கொள்கிறான். விழிப்புள்ள ஒருவன் இவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தருடைய வழிகள் சரியாக இருக்கின்றன. அவற்றில் நல்லவர்கள் நடப்பார்கள். பாவிகளோ அவற்றில் இடறிவிழுந்து மரிப்பார்கள்.
ஓசியா 14:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம். அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள். நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று. நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான். அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும். அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப்போல இருக்கும். இனி எனக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்லுவான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன்மேல் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு விருட்சம் போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று என்று எப்பிராயீம் சொல்லுவான். இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.