ஓசியா 11:1-8
ஓசியா 11:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“இஸ்ரயேல் சிறுவனாக இருந்தபோதே, நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன். ஆனால், எவ்வளவு அதிகமாய் நான் அவர்களை அழைத்தேனோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் என்னைவிட்டுத் தூரமானார்கள். அவர்கள் பாகால் தெய்வங்களுக்குப் பலியிட்டு, உருவச் சிலைகளுக்குத் தூபங்காட்டினார்கள். எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கக் கற்றுக்கொடுத்தவர் நானே; ஆனாலும், அவர்களைப் பராமரித்தவர் நானே என்பதை அவர்கள் உணரவில்லை. நான் அவர்களை அன்பின் பிணைப்பினாலும் மனித தயவின் கயிறுகளினாலும் வழிநடத்தினேன். ஒரு சிறு குழந்தையை கன்னத்தில் தூக்கும் ஒருவரைப்போல இருந்தேன், அவர்களுடைய கழுத்திலிருந்த நுகத்தை அகற்றினேன், அவர்களுக்குக் குனிந்து உணவூட்டினேன். “ஆனால் அவர்கள் மனந்திரும்ப மறுக்கிறார்கள். ஆகையால் அவர்கள் எகிப்திற்கு திரும்பிப் போகமாட்டார்களோ? அவர்கள்மேல் அசீரியா ஆளுகை செய்யாதோ? நிச்சயமாக அவர்களுடைய தீமையான திட்டங்களினால் வாள் அவர்களுடைய பட்டணங்களுக்குள் பாய்ந்து, வாசல் கதவுகளின் தாழ்ப்பாள்களை முறித்துப்போட்டு, அவர்களை அழிக்கும். என் மக்கள் என்னைவிட்டு விலகிப்போகத் தீர்மானித்திருக்கிறார்கள். அவர்கள் என்னை உன்னதமானவர் எனக் கூப்பிட்டாலும், அவர்களை எவ்விதத்திலும் உயர்த்தமாட்டேன். “ஆனாலும் எப்பிராயீமே, எப்படி நான் உன்னைக் கைவிடுவேன்? இஸ்ரயேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் எப்படி உன்னை அத்மா பட்டணத்தைப்போல் அழிக்கமுடியும்? நான் எப்படி உன்னை செபோயீமைப்போல் ஆக்கமுடியும்? என் இருதயமோ எனக்குள் மாற்றமடைந்திருக்கிறது; என் கருணை பொங்குகிறது.
ஓசியா 11:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய மகனை வரவழைத்தேன். அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்திற்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, சிலைகளுக்குத் தூபங்காட்டினார்கள். நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள். மனிதரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த பாரத்தை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பக்கமாக சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன். மனந்திரும்பமாட்டோமென்றதினால் அவர்கள் எகிப்து தேசத்திற்குத் திரும்பிப்போவதில்லை; அசீரியன் அவர்களுக்கு ராஜா. ஆகையால் அவர்களுடைய ஆலோசனைகளினால் பட்டயம் அவர்கள் பட்டணங்களுக்குள் பாய்ந்து, அவர்கள் தாழ்ப்பாள்களை அழியச்செய்து, அவர்களை எரித்துப்போடும். என் மக்கள் என்னைவிட்டு விலகுகிற வேறுபாட்டைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை. எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போல் ஆக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாகப் பொங்குகிறது.
ஓசியா 11:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர், “இஸ்ரவேல் குழந்தையாக இருக்கும்போது நான் (கர்த்தர்) அவனை நேசித்தேன். நான் என் குமாரனை எகிப்தை விட்டு வெளியே அழைத்தேன். ஆனால் நான் இஸ்ரவேலர்களை மிகுதியாக அழைக்க அவர்களும் என்னை விட்டு மிகுதியாக விலகினார்கள். இஸ்ரவேலர்கள் பாகாலுக்குப் பலிகளைக் கொடுத்தார்கள். அவர்கள் விக்கிரகங்களுக்கு நறுமணப் பொருட்களை எரித்தார்கள். “ஆனால் எப்பிராயீமை கைப்பிடித்து நடக்கப் பழக்கியது நான். நான் இஸ்ரவேலர்களை என் கைகளில் எடுத்தேன். அவர்களைக் குணப்படுத்தினேன். ஆனால் அவர்கள் அதனை அறியாமலிருக்கிறார்கள். நான் அவர்களைக் கயிறுகளால் வழி நடத்தினேன். ஆனால் அவை அன்பு என்னும் கயிறுகள். நான் விடுதலை அளிக்கும் மனிதனைப் போன்றவன். நான் கீழே குனிந்து அவர்களுக்கு ஆகாரம் கொடுத்தேன். “இஸ்ரவேலர்கள் தேவனிடம் திரும்ப மறுக்கிறார்கள். எனவே அவர்கள் எகிப்துக்குச் செல்வார்கள். அசீரியாவின் ராஜா அவர்கள் ராஜாவாவான். அவர்களது நகரங்களின் மேல் வாளானது தொங்கிக்கொண்டிருக்கும். அது அவர்களது பலமுள்ள மனிதர்களைக் கொல்லும். அது அவர்களது தலைவர்களை அழிக்கும். “எனது ஜனங்கள் நான் திரும்பி வருவதை எதிர்ப்பார்க்கின்றார்கள். அவர்கள் மேல் நோக்கி தேவனை அழைப்பார்கள். ஆனால் தேவன் அவர்களுக்கு உதவமாட்டார்.” “எப்பிராயீமே, நான் உன்னைக் கைவிட விரும்பவில்லை. இஸ்ரவேலே நான் உன்னைப் பாதுகாக்க விரும்புகிறேன். நான் உன்னை அத்மாவைப் போலாக்க விரும்பவில்லை. நான் உன்னை செபோயீமைப் போலாக்க விரும்பவில்லை. நான் என் மனதை மாற்றிக் கொண்டிருக்கிறேன். உனக்கான எனது அன்பு பலமானது.
ஓசியா 11:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன். அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள். நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள். மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன். மனந்திரும்பமாட்டோ மென்றதினால் அவர்கள் எகிப்து தேசத்துக்குத் திரும்பிப்போவதில்லை; அசீரியன் அவர்களுக்கு ராஜா. ஆகையால் அவர்களுடைய ஆலோசனைகளினிமித்தம் பட்டயம் அவர்கள் பட்டணங்களுக்குள் பாய்ந்து, அவர்கள் தாழ்ப்பாள்களை நிர்மூலம்பண்ணி, அவர்களைப் பட்சிக்கும். என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை. எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.