எபிரெயர் 8:1-13

எபிரெயர் 8:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நாங்கள் சொல்வதன் முக்கியமான கருத்து என்னவெனில், நமக்கு அப்படிப்பட்ட பிரதான ஆசாரியர் ஒருவர் இருக்கிறார். அவர் பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய அரியணையின் வலதுபக்கத்தில் அமர்ந்திருக்கிறார். கிறிஸ்துவாகிய இவர் அங்கே, பரலோகத்தில் பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்கிறார். இது கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட உண்மையான இறைசமுகக் கூடாரம். இது மனிதரால் ஏற்படுத்தப்பட்டதல்ல. காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காகவே ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் நியமிக்கப்படுகிறான். எனவே இயேசுவும் செலுத்தும்படி, ஏதோ ஒன்றைத் தம்மிடத்தில் வைத்திருக்க வேண்டியிருந்தது. அவர் பூமியில் இருந்திருந்தால், ஒரு ஆசாரியனாய் இருந்திருக்கமாட்டார். ஏனெனில், மோசேயின் சட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறபடி, காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள். அவர்கள் பரலோகத்திலுள்ள, உண்மையான பரிசுத்த இடத்தின் மாதிரியாகவும், நிழலாகவும் இங்கே இருக்கின்ற ஒரு பரிசுத்த இடத்திலேயே ஊழியம் செய்கிறார்கள். இதனாலேயே மோசே, அந்த இறைசமுகக் கூடாரத்தை அமைக்கத் தொடங்குமுன், அவனுக்கு இறைவன்: “மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட அந்த மாதிரியின்படியே எல்லாவற்றையும் செய்யும்படி நீ கவனமாயிரு” என்று எச்சரிக்கை கொடுத்தார். இயேசு பெற்றுக்கொண்ட ஊழியம் முந்தைய ஆசாரியர்களின் ஊழியத்தைவிட மேன்மையானது. ஏனெனில், இயேசுவை நடுவராகக் கொண்ட புதிய உடன்படிக்கை, மேன்மையான வாக்குத்தத்தங்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது, அதினால், அது பழைய உடன்படிக்கையைப் பார்க்கிலும் சிறந்ததாயிருக்கிறது. ஏனெனில், முதலாவது உடன்படிக்கை குறையற்றதாய் இருந்தால், இரண்டாவது உடன்படிக்கைக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால், இறைவனோ மக்களில் குறைபாட்டைக் கண்டதினாலேயே: “கர்த்தர் அறிவிக்கிறதாவது, இஸ்ரயேல் குடும்பத்தோடும், யூதா குடும்பத்தோடும் நான் புதிய உடன்படிக்கையைச் செய்துகொள்ளும் நாட்கள் வருகிறது. நான் அவர்களுடைய முற்பிதாக்களை என்னுடைய கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திக் கொண்டுவந்தபோது, நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல் இருப்பதில்லை; ஏனெனில், அவர்கள் என் உடன்படிக்கையில் நிலைத்திருக்கவில்லை. அதனால் நான், அவர்கள்மேல் கவனம் செலுத்தாமல் இருந்தேன், என்று கர்த்தர் அறிவிக்கிறார். அந்த நாட்களுக்குப்பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே என்று கர்த்தர் அறிவிக்கிறார். நான் எனது சட்டங்களை அவர்களுடைய மனங்களில் வைப்பேன். அவற்றை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன். நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன். அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள். இனிமேல் ஒருவன் தன் அயலானுக்கோ, அல்லது தன் சகோதரனுக்கோ, ‘கர்த்தரை அறிந்துகொள்’ என்று போதிக்க வேண்டியிருக்காது. ஏனெனில், சிறியவர்களிலிருந்து பெரியவர்கள்வரை எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள். நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன். அவர்களுடைய பாவங்களை ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.” இந்த உடன்படிக்கையை “புதியது,” என்று சொல்கிறதினாலே, அவர் முதலாவது உடன்படிக்கையை பழமையாக்கினார். எனவே அது பழமையானதும், நாள்பட்டதும், மறைந்து போகிறதுமாயிற்று.

எபிரெயர் 8:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மேலே சொல்லியவைகளின் முக்கியமான பொருள் என்னவென்றால்; பரலோகத்தில் உள்ள மகத்துவமான சிங்காசனத்தின் வலதுபக்கத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாக, பரிசுத்த இடத்திலும், மனிதர்களால் அல்ல, கர்த்தரால் நிறுவப்பட்ட உண்மையான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியம் செய்கிறவருமாக இருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு. ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக நியமிக்கப்படுகிறான்; ஆகவே, செலுத்துவதற்கு எதாவது ஒன்று இவருக்கும் அவசியமாக இருக்கிறது. பூமியிலே கிறிஸ்து இருப்பாரானால் ஆசாரியராக இருக்கமாட்டார்; ஏனென்றால், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே; இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்தில் இருப்பவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தைக் கட்டப் போகும்போது: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாக இரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார். கிறிஸ்துவானவர் விசேஷித்த வாக்குத்தத்தங்களினால் நிறுவிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராக இருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாமல் இருந்தால், இரண்டாம் உடன்படிக்கை தேவையில்லையே. அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களைப் பார்த்து: இதோ, கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தும் காலம் வருகிறது. அவர்களுடைய முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவர நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு செய்த உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைத்து நிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடு செய்யும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள். அப்பொழுது சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும் எல்லோரும் என்னை அறிவார்கள்; ஆகவே, கர்த்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டியது இல்லை. ஏனென்றால், நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாக மன்னித்து, அவர்கள் பாவங்களையும், அக்கிரமங்களையும் இனி நினைக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். புதிய உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாக இருக்கிறது உருக்குலைந்துபோகும் காலம் நெருங்கியிருக்கிறது.

எபிரெயர் 8:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

பரலோகத்தில் தேவனுடைய சிம்மாசனத்திற்கு வலதுபக்கமாய் வீற்றிருக்கிற ஒரு பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார் என்பதையே நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். மேலும், பரிசுத்த இடத்திலும், மனிதர்களால் அல்லாமல் தேவனால் ஸ்தாபிக்கப்பட்ட பரிசுத்தக் கூடாரத்திலும் அவர் ஆசாரியராக சேவை செய்துகொண்டிருக்கிறார். காணிக்கைகளையும் பலிகளையும் கொடுக்கும் பொருட்டு ஒரு பிரதான ஆசாரியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆதலால் வழங்குவதற்கு ஏதோ ஒன்று இயேசுவுக்கும் தேவையாயிருக்கிறது. நமது பிரதான ஆசாரியனும் இப்போது பூமியில் இருந்திருந்தால், ஆசாரியனாக இருக்கமாட்டார். ஏனெனில் சட்டம் விவரிக்கிற காணிக்கைகளை வழங்குகிற ஆசாரியர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள். அவர்கள் புரியும் சேவையானது பரலோகத்தில் உள்ள சேவையின் சாயலாகவும், நிழலாகவும் மட்டுமே இருக்கிறது. அதனால்தான் பரிசுத்தக் கூடாரத்தை மோசே ஸ்தாபிக்கப் போகும்போது தேவன் எச்சரித்தார். “மலையிலே உனக்கு நான் காட்டிய மாதிரியின்படியே நீ ஒவ்வொன்றையும் செய்ய உறுதியாய் இரு” என்று தேவன் சொன்னார். மிக உயர்ந்த கடமையானது இயேசுவுக்குத் தரப்பட்டது என்பதே இதன் பொருள் ஆகும். மேலும் இதே முறையில் அவர் நடுவராக இருக்கிற உடன்படிக்கையும் உயர்வானதாகும். ஏனெனில், நல்ல வாக்குறுதிகளால் இந்த உடன்படிக்கை நிறுவப்பட்டது. பழைய உடன்படிக்கையில் எவ்விதக் குறையும் இல்லாவிட்டால் இரண்டாவது உடன்படிக்கைக்குத் தேவையில்லாமல் போயிருக்கும். ஆனால் தேவன் மக்களிடம் சில பிழைகளைக் கண்டுபிடித்து அவர்களிடம், “இஸ்ரவேல் மக்களோடும் யூதா மக்களோடும் ஒரு புதிய உடன்படிக்கையை நான் ஏற்படுத்தும் காலம் வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று எகிப்துக்கு வெளியே வழி நடத்தியபோது அவர்களுடைய முன்னோர்களோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கைபோல் அது இருக்காது. அது வித்தியாசமாக இருக்கும், ஏனெனில், அந்த உடன்படிக்கைக்கு அவர்கள் உண்மையுள்ளவர்களாகத் தொடர்ந்து இருக்கவில்லை என்பதால் நான் அவர்களிடமிருந்து விலகினேன்.” அக்காரியங்களைக் கர்த்தர் சொன்னார். “அந்த நாட்களுக்குப் பின்பு இஸ்ரவேல் மக்களோடு நான் செய்துகொள்ளும் புதிய உடன்படிக்கையாகும் இது. நான் எனது சட்டங்களை அவர்கள் மனங்களில் பதித்து அவர்கள் இதயங்களின் மேல் எழுதுவேன். நான் அவர்களின் தேவனாக இருப்பேன். அவர்கள் எனது பிள்ளைகளாக இருப்பார்கள். அதற்குப் பின்பு கூடவாழும் குடிமகனுக்கோ அல்லது தேசத்தவனுக்கோ கர்த்தரை அறிந்துகொள் எனப் போதிக்கவேண்டிய அவசியம் ஒருவனுக்கும் இருக்காது. ஏனெனில் சிறியவன் முதற் கொண்டு பெரியவன் வரைக்கும் அவர்கள் எல்லாரும் என்னை அறிவார்கள். ஏனெனில் நான் அவர்கள் எனக்கெதிராகச் செய்த தவறுகளை மன்னித்து விடுவேன். அவர்களின் பாவங்களை இனிமேல் நினையாது இருப்பேன்.” தேவன் இதனைப் புதிய உடன்படிக்கை என்று அழைத்தபோது முதல் உடன்படிக்கையை பழசாக்கினார். இப்போது பழமையானதும் நாள்பட்டிருக்கிறதுமான அந்த உடன்படிக்கை விரைவில் மறைந்துபோகும்.

எபிரெயர் 8:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய், பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு. ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்; ஆதலால் செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது. பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்; ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே; இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப்போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார். இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே. அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது. அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை. ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.