எபிரெயர் 3:1-6

எபிரெயர் 3:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகையால் பரலோக அழைப்பில் பங்குகொள்கிறவர்களான பரிசுத்த சகோதரர்களே, நாம் அறிக்கையிடுகிற நமது அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாகிய இயேசுவைப்பற்றி சிந்தியுங்கள். இறைவனுடைய வீட்டில் அனைத்திலும் மோசே உண்மையுள்ளவனாய் இருந்ததுபோல, இயேசுவும் தம்மை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராகவே இருந்தார். ஒரு வீட்டைக் கட்டுகிறவன், அந்த வீட்டைப்பார்க்கிலும் அதிக மதிப்புக்குரியவனாய் இருப்பதுபோலவே, இயேசுவும் மோசேயைப்பார்க்கிலும், அதிக மதிப்புக்குரியவராய் இருக்கிறார்; ஏனெனில் ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவனாலே கட்டப்படுகிறது. அதுபோல, எல்லாவற்றையும் கட்டுகிறவரோ இறைவனே. மோசே இறைவனுடைய வீட்டின் எல்லாவற்றிலும் ஒரு உண்மையுள்ள வேலைக்காரனாய் இருந்து, இனிவரப்போகும் காலத்தில் வெளிப்படப் போகிறவற்றிற்கு சாட்சிகொடுக்கிறவனாகவே இருந்தான். ஆனால் கிறிஸ்துவோ, இறைவனுடைய வீட்டில் உண்மையுள்ள மகனாய் இருக்கிறார். அப்படியிருக்கும்படியே, நாம் நமது மனத்தைரியத்தையும் நாம் பெருமிதங்கொள்ளும் எதிர்பார்ப்பையும் உறுதியாய்ப் பற்றிக்கொண்டால், நாமே இறைவனுடைய வீடாயிருப்போம்.

எபிரெயர் 3:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்படியிருக்க, பரலோக அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரர்களே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலர்களும் பிரதான ஆசாரியருமாக இருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்; மோசே தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்ததுபோல இவரும் தம்மை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராக இருந்தார். வீட்டைக் கட்டுகிறவன் வீட்டைவிட அதிக கனத்திற்குரியவனாக இருக்கிறான்; அதுபோல மோசேயைவிட இவர் அதிக மகிமைக்குத் தகுதியானவராக இருக்கிறார். ஏனென்றால், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாக, தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்தான். கிறிஸ்துவோ தேவனுடைய வீட்டில் அதிகாரமுள்ள மகனாக உண்மையுள்ளவராக இருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுவரைக்கும் உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம் என்றால், நாமே அவருடைய வீடாக இருப்போம்.

எபிரெயர் 3:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே, நீங்கள் அனைவரும் இயேசுவைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும். தேவன் இயேசுவை நம்மிடம் அனுப்பினார். அவர் நம் விசுவாசத்தின் பிரதானஆசாரியர் ஆவார். எனது பரிசுத்தமான சகோதர சகோதரிகளே! நான் இதை உங்களுக்காகக் கூறுகிறேன். நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவன் இயேசுவை நம்மிடம் அனுப்பி நமது பிரதான ஆசாரியர் ஆக்கினார். மோசே போன்று உண்மையுள்ளவராய் முழுக்குடும்பத்தின் பொறுப்பும் இயேசுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒருவன் ஒரு வீட்டைக் கட்டும்போது மக்கள் அந்த வீட்டை விட மனிதனையே பெரிதும் மதிப்பர். இதேபோல, மோசேயைவிட அதிக மரியாதைக்கு இயேசு தகுதியானவராக இருக்கிறார். தேவன் எல்லாவற்றையும் படைக்கிறார் எனினும் ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவனால் கட்டப்படுகிறது. மோசே தேவனுடைய வீட்டில் ஒரு பணியாளைப் போன்று உண்மையுள்ளவனாயிருந்தான். எதிர்காலத்தில் சொல்வதைப் பற்றி அவன் சொன்னான். ஆனால் ஒரு குமாரனைப் போல தேவனுடைய குடும்பத்தை ஆள்வதில் இயேசு உண்மையுள்ளவராயிருக்கிறார். நம்மிடமுள்ள மாபெரும் நம்பிக்கையினைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி மேன்மையாக எண்ணினால், விசுவாசிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தவர்களாயிருப்போம்.

எபிரெயர் 3:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள். மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்; அதுபோல மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார். ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான். கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்