எபிரெயர் 13:14-21

எபிரெயர் 13:14-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏனெனில், நித்தியமான நகரம் நமக்கு இங்கு இல்லை. வரப்போகின்ற ஒரு நகரத்திற்காகவே நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ஆகவே இயேசுவின் மூலமாய் இறைவனுடைய பெயரை அறிக்கையிடுகிற உதடுகளின் கனியை, துதியின் காணிக்கையாக இறைவனுக்கு இடைவிடாது செலுத்துவோமாக. நன்மைசெய்ய மறக்கவேண்டாம், உங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் மறந்துவிடவேண்டாம். இப்படியான பலிகளிலேயே இறைவன் பிரியப்படுகிறார். உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்களுடைய அதிகாரத்திற்கு பணிந்து நடவுங்கள். ஏனெனில், அவர்கள் கணக்குக் கொடுக்கவேண்டியவர்களாக, உங்கள்மேல் கண்காணிப்பு செய்கிறார்கள். நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்களது பொறுப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அது ஒரு துயரமாய் இருக்காது. அவர்கள் துயரத்தோடு பொறுப்பெடுத்தால், உங்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது. எங்களுக்காக மன்றாடுங்கள். எங்களுக்கு நல்ல மனசாட்சி உண்டு என்பதில், நாங்கள் நிச்சயமுடையவர்களாய் இருக்கிறோம். எல்லா வழியிலும் நன்மதிப்புக்குரியவர்களாக வாழவே ஆசைப்படுகிறோம். நான் சீக்கிரமாய் உங்களிடம் வரும்படி, நீங்கள் மன்றாட வேண்டும் என உங்களிடம் விசேஷமாக வேண்டிக்கொள்கிறேன். நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே, ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் இறைவன், இயேசுகிறிஸ்துவின் வழியாகத் தமக்கு பிரியமானதை உங்களில் செயலாற்றி, நீங்கள் இறைவனுடைய சித்தத்தின்படி செய்ய உங்களை எல்லா நல்ல செயல்களிலும் ஆயத்தப்படுத்துவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

எபிரெயர் 13:14-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே விரும்பித்தேடுகிறோம். ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம். அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார். உங்களை நடத்துகிறவர்கள், உங்களுடைய ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம் பண்ணுகிறவர்களாக விழித்திருக்கிறதினால், அவர்கள் துக்கத்தோடு இல்லை, சந்தோஷத்தோடு அதைச் செய்வதற்காக, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கி இருங்கள்; அவர்கள் துக்கத்தோடு அதைச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்காது. எங்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்; நாங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக எல்லாவற்றிலும் யோக்கியமாக நடக்க விரும்புகிறோம் என்று உறுதியாக நம்புகிறோம். நான் மிகவும் சீக்கிரமாக உங்களிடம் வருவதற்கு நீங்கள் தேவனை வேண்டிக்கொள்ளும்படி உங்களை அதிகமாகக் கேட்டுக்கொள்ளுகிறேன். நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

எபிரெயர் 13:14-21 பரிசுத்த பைபிள் (TAERV)

இந்த உலகத்தில் என்றென்றும் நிலைத்திருக்கிற ஒரு நகரம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வரப்போகிற என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற நகரத்திற்காகக் காத்திருக்கிறோம். எனவே, அவர் மூலமாக நம் தினசரி துதி காணிக்கையை நாம் தேவனுக்கு வழங்குவோம். அது அவர் பெயரைத் துதிக்கும் உதடுகளின் கனியாகும். மற்றவர்களுக்கு நன்மை செய்யவும், பகிர்ந்துகொள்ளவும் மறக்காதீர்கள். இவையே தேவன் விரும்பும் பலியாகும். உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்களின் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு நடவுங்கள். அவர்கள் உங்கள் மேல் பொறுப்புள்ளவர்கள். அவர்கள் உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்கள் துக்கத்தோடு அல்ல சந்தோஷத்தோடு அவற்றைச் செய்பவர்கள். நீங்கள் அவர்களுக்குப் பணியாமல் அவர்களின் பணியை கடினப்படுத்தினால் அது எவ்வகையிலும் உங்களுக்கு உதவாது. எங்களுக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். சுத்தமான மனசாட்சி உடையவர்களாய் நாங்கள் இருக்கிறோம். என்றும், எப்போதும் நல்ல செயல்களையே செய்ய விரும்புகிறோம் என்றும் நாங்கள் உறுதி கூறுகிறோம். உங்களிடத்தில் நான் மிக விரைவில் வருவதற்கு வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் மற்ற அனைத்தையும் விட இதனையே பெரிதும் விரும்புகிறேன். சமாதானத்தின் தேவன் எல்லா நன்மைகளையும் உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். எனவே அவர் விரும்புகிறபடி நீங்கள் செய்யுங்கள். தேவன் ஒருவரே தம் மந்தையின் பெரிய மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினால் எழுப்பினார். அவர் விரும்புவதை நீங்கள் செய்யும்படிக்கு ஒவ்வொரு விதமான நன்மையையும் செய்யும் திறமையை உங்களுக்கு வழங்கவேண்டும் என நான் வேண்டுகிறேன். இயேசுவுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

எபிரெயர் 13:14-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித்தேடுகிறோம். ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம். நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன். நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்