எபிரெயர் 11:32-40

எபிரெயர் 11:32-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இன்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுயேல் ஆகியோரைக்குறித்தும், மற்ற இறைவாக்கினரைக்குறித்தும் சொல்வதற்கு நேரமில்லை. இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலேயே அரசுகளை வென்றெடுத்தார்கள். நீதியை நடைமுறைப்படுத்தினார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டார்கள். சிங்கங்களின் வாய்களைக் கட்டினார்கள். கொழுந்து விட்டெரியும் நெருப்பின் அனலையும் அணைத்தார்கள். வாள்முனைக்கும் தப்பினார்கள். அவர்களது பலவீனங்கள் பலமுள்ளதாய் மாற்றப்பட்டன. அவர்கள் யுத்தத்தில் வலிமையுடையவர்களாகி, அந்நிய படைகளைத் தோற்கடித்தார்கள். விசுவாசத்தினாலேயே பெண்கள் தங்கள் இறந்தவர்களை மீண்டும் உயிரோடப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் வேறுசிலரோ துன்புறுத்தப்பட்டும், ஒரு மேன்மையான உயிர்த்தெழுதலைப் பெற்றுக்கொள்வதற்காகவே விடுதலை பெற்றுக்கொள்ள மறுத்தார்கள். இன்னும் சிலர் ஏளனத்துக்குள்ளாகி, சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். வேறுசிலர் விலங்கிடப்பட்டவர்களாய், சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் கல்லெறியப்பட்டார்கள், இரண்டாக அறுக்கப்பட்டார்கள், வாளினால் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் உடுத்திக்கொண்டு திரிந்தார்கள். குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அநுபவித்தார்கள். இந்த உலகமோ அவர்களுக்குத் தகுதியற்றதாயிருந்தது. அவர்கள் பாலைவனங்களிலும், மலைகளிலும் அலைந்து, குகைகளிலும், நிலத்திலுள்ள கிடங்குகளிலும் வாழ்ந்தார்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் விசுவாசத்தால் நற்பெயர் பெற்றார்கள். ஆனால் இவர்கள் ஒருவரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொள்ளவில்லை. இறைவனோ நமக்காக அதிலும் மேன்மையான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். இதனால் அவர்களும், நம்முடன் ஒன்று சேர்ந்துதான் நிறைவுபெறமுடியும்.

எபிரெயர் 11:32-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையும்குறித்து நான் விபரம் சொல்லவேண்டுமென்றால் காலம்போதாது. விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் கோபத்தை அணைத்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியர்களுடைய படைகளை முறியடித்தார்கள். பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்; வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்; கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள். இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள். நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார்.

எபிரெயர் 11:32-40 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னும் வேறு எடுத்துக்காட்டுகளை நான் சொல்லவேண்டுமா! கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும் தீர்க்கதரிசிகளையும் குறித்து விளக்கிச் சொல்லக் காலம் போதாது. விசுவாசத்தாலேயே அவர்கள் அரசுகளை வெற்றிகொண்டார்கள். நீதியை வலியுறுத்தினார்கள். தேவனுடைய வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டார்கள். சிலர் சிங்கங்களின் வாய்களை மூடினார்கள். சிலர் நெருப்பின் உக்கிரத்தைக் குறைத்தார்கள். வாளின் சாவிலிருந்து தப்பினார்கள். பலவீனத்திலிருந்து அவர்கள் பலம் பெற்று அந்நியப் படைகளைத் தோற்கடித்து யுத்தத்தில் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தார்கள். இறந்துபோன தங்களுடையவர்களை பெண்கள் மீண்டும் அடைந்தார்கள். மற்றவர்கள் வாதைக்குள்ளானபோதும் விடுபட மறுத்தார்கள். மரணத்திலிருந்து ஒரு சிறந்த வாழ்விற்கென உயிரோடு எழுப்பப்படுவதற்காக இதனைச் செய்தார்கள். வேறு சிலர் கேலிசெய்யப்பட்டனர்; அடிக்கப்பட்டனர்; கட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். சிலர் கல்லால் எறியப்பட்டார்கள்; வாள்களினால் இரண்டு துண்டாகக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். சிலர் செம்மறியாட்டுத் தோலையும், வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு திரிந்து ஏழ்மையையும், துன்பத்தையும், கசப்புகளையும் அனுபவித்தனர். உலகம் அந்த உத்தமர்களுக்கு உகந்ததாக இல்லை. அவர்கள் மலைகளிலும் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்தனர். மலைக் குகைகளிலும் பூமியில் உள்ள பொந்துகளிலும் வாழ்ந்தார்கள். தம் விசுவாசத்தாலேயே அவர்கள் புகழப்படுகின்றனர். ஆனால் இவர்களில் எவரும் தேவனுடைய வாக்குறுதியை அடையவில்லை. தேவன் நமக்குச் சிறந்த சிலவற்றைத் தரத் திட்டமிட்டிருந்தார். பிறகு நம்மோடு சேர்ந்து மட்டுமே அவர்களும் முழுமைபடுத்தப்படுவார்கள்.

எபிரெயர் 11:32-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம்போதாது. விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்; வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்