எபிரெயர் 11:1-6

எபிரெயர் 11:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

விசுவாசம் என்பது, நாம் எதிர்பார்த்திருக்கும் காரியங்களைக்குறித்த நிச்சயமும், நம்மால் காண முடியாதவற்றைக் குறித்த உறுதியுமாயிருக்கிறது. இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே நமது முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். விசுவாசத்தினாலேயே நாம் உலகங்கள் அனைத்தும் இறைவன் தனது வார்த்தையினால் கட்டளையிட உருவாக்கப்பட்டன என்று விளங்கிக்கொள்கிறோம். ஆகவே காணப்படுகிறவைகள், காணப்படாதவற்றிலிருந்து உண்டாயிற்று. விசுவாசத்தினாலேயே ஆபேல், காயீன் செலுத்திய பலியைப் பார்க்கிலும் மேன்மையான பலியை இறைவனுக்குச் செலுத்தினான். இறைவனே அவனுடைய காணிக்கையைக்குறித்து நன்றாகப் பேசியபோது, விசுவாசத்தினாலேயே அவன், நீதிமான் என நற்சாட்சி பெற்றான். விசுவாசத்தினாலேயே ஆபேல் இறந்து போனபோதும், இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறான். விசுவாசத்தினாலேயே ஏனோக்கு மரணத்தை அனுபவிக்காமல், இவ்வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டான். இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அவன் காணாமல் போய்விட்டான். அவன் இறைவனால் எடுத்துக்கொள்ளப்படும் முன்பு, அவன் இறைவனுக்குப் பிரியமானவன் என்று நற்சாட்சி பெற்றிருந்தான். விசுவாசம் இல்லாமல் இறைவனை ஒருபோதும் பிரியப்படுத்தமுடியாது. ஏனெனில் இறைவனிடம் வருகிறவர்கள், அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மை முழுமனதோடு தேடுகிறவர்களுக்கு வெகுமதியைக் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும்.

எபிரெயர் 11:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாக இருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியைவிட மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமான் என்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைப்பற்றி தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணமடையாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டதினால், அவன் காணப்படாமல் போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே சாட்சிபெற்றான். விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும்.

எபிரெயர் 11:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

நாம் நம்புகிறவற்றின் மீது கொண்டுள்ள உறுதிதான் விசுவாசம் ஆகும். நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் கூட உண்மையான ஒன்றை நம்புவது தான் விசுவாசம். முன்பு வாழ்ந்தவர்களை தேவன் பெரிதும் விரும்பினார். ஏனென்றால் அவர்கள் இது போன்ற விசுவாசம் கொண்டவர்களாய் இருந்தார்கள். தேவன் தமது ஆணையால் இந்த முழு உலகையும் படைத்தார் என்று நாம் நம்ப விசுவாசம் உதவுகிறது. அதாவது நாம் பார்க்கின்ற பொருட்கள் எல்லாம் பார்க்கப்படாத ஒன்றால் உருவாக்கப்பட்டதை உணர்ந்துகொள்கிறோம். காயீனும் ஆபேலும் தேவனுக்குப் பலி கொடுத்தார்கள். ஆனால் ஆபேலின் பலி, அவனது விசுவாசம் காரணமாக உயர்வாகக் கருதப்பட்டது. தேவனும் அதையே விரும்பி ஏற்றுக்கொண்டார். ஆகவே அவனை நல்லவன் என்று அழைத்தார். அவன் இறந்து போனான். எனினும் அவன் தன் விசுவாசத்தின் வழியே இன்னும் பேசிக்கொண்டிருக்கிறான். ஏனோக்கு இறக்கவில்லை. இந்த பூமியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டான். அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன் தேவனுக்கு விருப்பமானவனாக இருந்தான். தேவன் அவனைத் தன்னிடம் எடுத்துக்கொண்டார். அதனால் மக்கள் அதன் பிறகு அவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. இது அவனது விசுவாசத்தினாலேயே ஆயிற்று. விசுவாசம் இல்லாமல் எவனும் தேவனுக்கு விருப்பமானவனாக இருக்கமுடியாது. தேவனிடத்தில் வருகிறவன் அவர் உண்மையாகவே இருக்கிறார் என நம்பிக்கை கொள்கிறான். அதோடு தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுப்பார் என்றும் நம்பிக்கை கொள்ளவேண்டும்.

எபிரெயர் 11:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

எபிரெயர் 11:1-6

எபிரெயர் 11:1-6 TAOVBSIஎபிரெயர் 11:1-6 TAOVBSIஎபிரெயர் 11:1-6 TAOVBSIஎபிரெயர் 11:1-6 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்