ஆபகூக் 2:15-20
ஆபகூக் 2:15-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“ஐயோ, தன் அயலவர்களுக்கு அவர்கள் வெறிக்கும்வரை தோல் குடுவையிலிருந்து மதுவை ஊற்றிக் கொடுக்கிறவனுக்குக் கேடு, அவன் அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படி இப்படிச் செய்கிறானே! நீ மகிமைக்குப் பதிலாய் வெட்கத்தினால் நிரப்பப்படுவாய். இப்பொழுது உன்னுடைய முறை வந்துவிட்டது! நீயும் குடித்து உன் நிர்வாணத்தை வெளியே காட்டு! யெகோவாவின் வலதுகையிலுள்ள தண்டனையின் கிண்ணம் உன்மேல் வருகிறது, அப்பொழுது உன் மகிமையை அவமானம் மூடிவிடும். நீ லெபனோனுக்குச் செய்த கொடுமைகள் உன்னை மேற்கொள்ளும். நீ மிருகங்களுக்குச் செய்த பேரழிவு உனக்குத் திகிலூட்டும். ஏனெனில் நீ மனிதனுடைய இரத்தத்தைச் சிந்தினாய்; நாடுகளையும், நகரங்களையும் அங்குள்ள அனைவரையும் அழித்தாயே. “ஒரு விக்கிரகத்திற்கு என்ன மதிப்பு உண்டு, அதை மனிதன்தானே செதுக்கினான்? பொய்களை போதிக்கும் ஒரு உருவச்சிலைக்கு என்ன மதிப்பு உண்டு? ஏனென்றால் அதை செய்பவன், தான் உருவாக்கியதிலேயே நம்பிக்கையை வைக்கிறான்; அவன் பேசமுடியாத விக்கிரகங்களைச் செய்கிறான். ஐயோ, மரத்தால் செய்யப்பட்ட விக்கிரகத்தைப்பார்த்து, ‘உயிர் பெறு’ என்றும், உயிரற்ற சிலையைப்பார்த்து, ‘எழுந்திரு’ என்றும் சொல்கிற பாபிலோனுக்குக் கேடு! இவற்றினால் வழிகாட்ட முடியுமா? இவை தங்கத்தினாலும் வெள்ளியினாலும் மூடப்பட்டிருக்கின்றன; இவற்றிலே சுவாசம் இல்லை.” ஆனால் யெகோவாவோ தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமி முழுவதும் அவருக்குமுன் மவுனமாய் இருப்பதாக.
ஆபகூக் 2:15-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தன் தோழர்களுக்குக் குடிக்கக்கொடுத்துத் தன் தோல்பையை அவர்களுக்கு அருகிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்குமளவுக்கு, அவர்களை வெறிக்கச்செய்கிறவனுக்கு ஐயோ, நீ மகிமையினால் அல்ல, வெட்கத்தினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று காட்டிக்கொள்; யெகோவாவுடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் வெட்கமான வாந்திபண்ணுவாய். லீபனோனுக்குச் செய்த கொடுமை உன்னை மூடும்; சிந்தின மனித இரத்தத்தின் காரணமாகவும், தேசத்திற்கும் பட்டணத்திற்கும் அதின் குடிமக்கள் எல்லோருக்கும் செய்த கொடுமையின் காரணமாகவும் மிருகங்கள் செய்யும் பாழ்க்கடிப்பு உன்னைக் கலங்கச்செய்யும். சித்திரக்காரனுக்கு அவன் செய்த உருவமும், ஊமையான தெய்வங்களை உண்டாக்கித் தான் உருவாக்கின உருவத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும், பொய்ப்போதகம் செய்கிறதுமான சிலையும் எதற்கு உதவும்? மரத்தால் செய்யப்பட்ட விக்கிரகத்தைப்பார்த்து விழியென்றும், ஊமையான கல் சிலையைப் பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ, அது போதிக்குமோ? இதோ, அது பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது; அதற்குள்ளே சுவாசம் இல்லையே? யெகோவாவோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருப்பதாக.
ஆபகூக் 2:15-20 பரிசுத்த பைபிள் (TAERV)
தன்னுடைய நண்பர்களுக்குப் போதை ஏற்றுகிறவனுக்குக் கேடு விளையும். அவன் திராட்சைரசத்தோடு விஷத்தைக் கலக்கிறான். பிறகு அவர்களது நிர்வாணத்தைப் பார்க்கிறான். “ஆனால், அந்த மனிதன் கர்த்தருடைய கோபத்தை அறிவான். அக்கோபமானது கர்த்தருடைய வலதுகையில் உள்ள விஷம் நிறைந்த கிண்ணத்தைப் போன்றது. அம்மனிதன் அக்கோபத்தைச் சுவைப்பான். அவன் குடிக்காரனைப்போன்று கீழே தரையில் விழுவான். “தீமையான ராஜாவே, நீ அக்கிண்ணத்திலிருந்து குடிப்பாய். நீ மகிமையை அல்ல அவமானத்தைப் பெறுவாய். லீபனோனில் உள்ள பல ஜனங்கள் உன்னால் பாதிக்கப்பட்டனர். நீ அங்கே பல மிருகங்களைத் திருடினாய். எனவே, நீ அஞ்சுகிறாய். ஏனென்றால் மரித்துப்போன ஜனங்களும் அந்நாட்டில் நீ செய்த அக்கிரமங்களும், இதற்கு காரணமாகும். நீ அந்த நகரங்களுக்கும், அவற்றில் வாழ்ந்த ஜனங்களுக்கும் பயப்படுவாய்” என்றார். அந்த நபரின் விக்கிரகங்கள் அவனைக் காப்பாற்றுவதில்லை. ஏனென்றால், அது வெறுமனே உலோகத்தால் மூடப்பட்ட சிலைதான். அது சிலை மட்டும்தான். எனவே, அந்தச் சிலையைச் செய்த நபர் அந்த சிலையினிடத்திலிருந்து உதவிகிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்தச் சிலையால் பேசக்கூட முடியாது. மரச்சிலையைப் பார்த்து “எழும்பு!” என்று சொல்கிறவன் மிகவும் மோசமானவன். பேசமுடியாத ஒரு கற்சிலையிடம் ஒருவன் “விழித்தெழு!” என்று கூறுவது அவனுக்கு மிகவும் கேடானது. அவை அவனுக்கு உதவாது. அச்சிலை வேண்டுமானால் பொன்னாலும் வெள்ளியாலும் மூடப்பட்டிருக்கலாம், ஆனால் அச்சிலைக்குள் உயிரில்லை. ஆனால் கர்த்தர் வித்தியாசமானவர். கர்த்தர் தனது பரிசுத்தமான ஆலயத்தில் உள்ளார். எனவே, பூமிமுழுவதும் அமைதியாக இருந்து கர்த்தருக்கு முன் மரியாதை காட்டட்டும்.
ஆபகூக் 2:15-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தன் தோழருக்குக் குடிக்கக்கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப்பண்ணுகிறவனுக்கு ஐயோ! நீ மகிமையினால் அல்ல, இலச்சையினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று விளங்கு; கர்த்தருடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் இலச்சையான வாந்திபண்ணுவாய். லீபனோனுக்குச் செய்த கொடுமை உன்னை மூடும்; சிந்தின மனுஷரத்தத்தினிமித்தமும் தேசத்திற்கும் பட்டணத்திற்கும் அதின் குடிகள் எல்லாருக்கும் செய்த கொடுமையினிமித்தமும் மிருகங்கள் செய்யும் பாழ்க்கடிப்பு உன்னைக் கலங்கப்பண்ணும். சித்திரக்காரனுக்கு அவன் செய்த சுரூபமும், ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணித் தான் உருவாக்கின சுரூபத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம்பண்ணுகிறதுமான விக்கிரகமும் என்னத்துக்கு உதவும்? மரத்தைப்பார்த்து விழியென்றும், ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! அது போதிக்குமோ? இதோ, அது பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது; அதற்குள்ளே சுவாசம் இல்லையே? கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது.