ஆதியாகமம் 8:13-18

ஆதியாகமம் 8:13-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நோவாவுக்கு 601 வயதாகிய வருடத்தின் முதலாம் மாதம் முதலாம் நாள் நிலத்தின் மேலிருந்து தண்ணீர் வற்றிவிட்டது. நோவா பேழையின் மேல்தட்டு மூடியைத் திறந்து பார்த்தான், நிலம் உலர்ந்திருந்தது. இரண்டாம் மாதம் இருபத்தி ஏழாம்நாளில் பூமி முழுவதும் காய்ந்து போயிற்று. அப்பொழுது இறைவன் நோவாவிடம், “நீ உன் மனைவியுடனும், உன் மகன்களுடனும் அவர்களுடைய மனைவிகளுடனும் பேழையைவிட்டு வெளியே வா. உன்னுடன் இருக்கும் எல்லா விதமான உயிரினங்களாகிய பறவைகள், விலங்குகள், தரையில் ஊரும் உயிரினங்கள் ஆகிய எல்லாவற்றையும் வெளியே கொண்டுவா. அவை பூமியில் பலுகி, எண்ணிக்கையில் பெருகட்டும்” என்றார். அப்படியே நோவா தன்னுடைய மகன்களோடும், தன் மனைவியோடும், மகன்களின் மனைவிகளோடும் வெளியே வந்தான்.

ஆதியாகமம் 8:13-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவனுக்கு 601 வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல் அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது. இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது. அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: “நீயும், உன்னோடுகூட உன்னுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் கப்பலைவிட்டுப் புறப்படுங்கள். உன்னிடத்தில் இருக்கிற அனைத்துவித உயிரினங்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற அனைத்து பிராணிகளையும் உன்னோடு வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாக ஈன்றெடுத்து, பூமியின்மேல் பலுகிப் பெருகட்டும்” என்றார். அப்பொழுது நோவாவும், அவனுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் வெளியே வந்தார்கள்.

ஆதியாகமம் 8:13-18 பரிசுத்த பைபிள் (TAERV)

அதன் பிறகு நோவா கப்பலின் கதவைத் திறந்தான். தரை காய்ந்துபோனதை நோவா தெரிந்துகொண்டான். இதுதான் அந்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று. நோவா 601 வயதுடையவன் ஆனான். இரண்டாவது மாதத்தின் 27வது நாளில் தரை முழுவதும் நன்றாகக் காய்ந்துவிட்டது. பிறகு தேவன் நோவாவிடம், “நீயும் உன் மனைவியும் உன் குமாரர்களும் அவர்களின் மனைவியரும் இப்போது கப்பலை விட்டு வெளியே வாருங்கள். உங்களோடுள்ள அனைத்தையும் வெளியே கொண்டு வாருங்கள். பறவைகள், விலங்குகள், ஊர்வன அனைத்தும் மீண்டும் குட்டிகளும் குஞ்சுகளும் இட்டு பூமியை நிரப்பட்டும்” என்றார். எனவே நோவா தன் மனைவி, குமாரர்கள், மருமகள்கள் ஆகியோரோடு வெளியே வந்தான்.

ஆதியாகமம் 8:13-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது. இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது. அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி; நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள். உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார். அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்.