ஆதியாகமம் 49:1-33
ஆதியாகமம் 49:1-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு யாக்கோபு தன் மகன்களைக் கூப்பிட்டு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் எல்லோரும் என்னைச் சுற்றி நில்லுங்கள், இனிவரப்போகும் நாட்களில் நடக்கப்போவதை நான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன். “யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பன் இஸ்ரயேல் சொல்வதைக் கேளுங்கள். “ரூபன், நீ என் முதற்பேறானவன், நீ வலிமையும் என் பெலனின் முதல் அடையாளமுமானவன், நீ மதிப்பில் சிறந்தவன், நீ வல்லமையிலும் சிறந்தவன். தண்ணீரைப்போல் தளம்புகிறவனே, நீ இனிமேல் மேன்மை அடையமாட்டாய்; ஏனெனில், நீ உன்னுடைய தகப்பனின் படுக்கைக்குப்போய், என் கட்டிலைத் தீட்டுப்படுத்தினாய். “சிமியோனும், லேவியும் சகோதரர்கள். அவர்களின் வாள்கள் வன்முறையின் ஆயுதங்கள். நான் அவர்களுடைய ஆலோசனைக்கு உடன்படாமலும், அவர்களுடைய கூட்டத்தில் சேராமலும் இருப்பேனாக. ஏனெனில், அவர்கள் தங்கள் கோபத்தினால் மனிதரைக் கொன்றார்கள், தாங்கள் விரும்பியவாறு எருதுகளை முடமாக்கினார்கள். அவர்களுடைய பயங்கரமான கோபமும், கொடூரமான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக; நான் அவர்களை யாக்கோபிலே பிரியச்செய்து, இஸ்ரயேலிலே சிதறப்பண்ணுவேன். “யூதா, உன் சகோதரர் உன்னைப் புகழ்வார்கள்; உன் பகைவர்களின் கழுத்தின்மேல் உன்னுடைய கை இருக்கும்; உன் தகப்பனின் மகன்கள் உன்முன் பணிவார்கள். யூதா, நீ ஒரு சிங்கக்குட்டி; என் மகனே, நீ இரைதின்று திரும்புகிறாய். அவன் சிங்கத்தைப்போலும் பெண் சிங்கத்தைப்போலும் மடங்கிப் படுக்கிறான்; அவனை எழுப்பத் துணிபவன் யார்? செங்கோலுக்குரியவர் வரும்வரை செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது, ஆளுநரின் கோல் அவனுடைய பாதங்களைவிட்டு விலகாது; நாடுகளின் கீழ்ப்படிதல் அவருக்கே உரியது. அவன் தன் கழுதையை திராட்சைச் செடியிலும், தன் கழுதைக் குட்டியைச் சிறந்த திராட்சைக் கொடியிலும் கட்டுவான்; அவன் தன் உடைகளைத் திராட்சை இரசத்திலும், அங்கிகளைத் திராட்சைப்பழச் சாற்றிலும் கழுவுவான். அவனுடைய கண்கள் திராட்சை இரசத்தைவிட கருமையும், பற்கள் பாலைவிட வெண்மையுமாய் இருக்கும். “செபுலோன் கடற்கரையில் குடியிருந்து, கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவனுடைய எல்லை சீதோன்வரை பரந்திருக்கும். “இசக்கார் இரண்டு பொதிகளுக்கிடையே படுத்திருக்கும் பலமுள்ள கழுதை. அவன் தன் இளைப்பாறும் இடம் எவ்வளவு நல்லதென்றும், தனது நாடு எத்தகைய மகிழ்ச்சிக்குரியது என்றும் கண்டு, சுமைக்குத் தன் தோளை சாய்ப்பான்; கட்டாய வேலைக்கும் இணங்குவான். “தாண் இஸ்ரயேலின் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாயிருந்து, தன் மக்களுக்கு நீதி வழங்குவான். தாண், குதிரைமீது போகிறவன் இடறிவிழும்படி பாதையோரம் கிடந்து, குதிரைகளின் குதிங்காலைக் கடிக்கிற பாம்பைப்போலவும், வழியிலே கிடக்கும் விரியன் பாம்பைப்போலவும் இருப்பான். “யெகோவாவே, நான் உம்முடைய மீட்புக்காகக் காத்திருக்கிறேன். “காத் கொள்ளைக் கூட்டத்தாரால் தாக்கப்படுவான், ஆனாலும் இறுதியில் அவன் அவர்களைத் தாக்குவான். “ஆசேருடைய உணவு கொழுமையானதாய் இருக்கும்; அரசனுக்குத் தகுந்த சுவையான உணவை அவன் கொடுப்பான். “நப்தலி அழகான குட்டிகளை ஈனும் விடுதலை பெற்ற பெண்மான். “யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீரூற்றருகில் கனிதரும் திராட்சைக்கொடி. அவனுடைய கிளைகள், மதில்களில் ஓங்கி வளரும். வில்வீரர் அவனைக் கொடூரமாகத் தாக்கினார்கள்; பகைமையுடன் அவன்மேல் எய்தார்கள். ஆனால், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவனுடைய பெலமுள்ள புயங்கள் சுறுசுறுப்பாயிருந்தன; யாக்கோபின் வல்லவரின் கரத்தினாலும், மேய்ப்பராலும், இஸ்ரயேலுடைய கற்பாறையாலும், உனக்கு உதவிசெய்யும் உன் தகப்பனின் இறைவனாலும் இப்படியாகும். அவர் மேலேயுள்ள வானங்களின் ஆசீர்வாதங்களினாலும், கீழேயுள்ள ஆழங்களின் ஆசீர்வாதங்களினாலும், மார்பகங்களின், கருப்பையின் ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிக்கும் எல்லாம் வல்லவராய் இருக்கிறார். உன் தகப்பனின் ஆசீர்வாதங்கள் நித்திய மலைகளின் ஆசீர்வாதங்களைப் பார்க்கிலும், பழைமை வாய்ந்த குன்றுகளின் செழிப்பைப் பார்க்கிலும் பெரிதானவை. இவைகளெல்லாம் யோசேப்பின் தலையின்மேலும், தன் சகோதரருக்குள் பிரபுவாய் இருக்கிறவனின் நெற்றியிலும் தங்குவதாக. “பென்யமீன் ஒரு பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பேராவலுடன் பட்சிப்பான். மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்.” இஸ்ரயேலின் பன்னிரு கோத்திரங்களும் இவர்களே, அவர்களுடைய தகப்பன் அவனவனுக்குத் தகுந்த ஆசீர்வாதங்களைச் சொல்லி, அவர்களை ஆசீர்வதிக்கும்போது சொன்னவை இவையே. பின்பு அவன் அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னதாவது: “நான் என் முன்னோர்களுடன் சேர்த்துக்கொள்ளப்படப் போகிறேன். ஏத்தியனான எப்ரோனிடமிருந்து வாங்கிய நிலத்திலே, என் தந்தையர்களை அடக்கம்பண்ணிய குகையிலேயே என்னையும் அடக்கம்பண்ணுங்கள். அந்தக் குகை கானானிலுள்ள மம்ரேக்கு அருகில் மக்பேலா என்னும் வயல்வெளியில் இருக்கிறது; ஆபிரகாம் அதை ஏத்தியனான எப்ரோனிடமிருந்து வயலையும் சேர்த்து கல்லறை நிலமாக வாங்கினார். அங்கேயே ஆபிரகாமும் அவர் மனைவி சாராளும், ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்; என் மனைவி லேயாளையும் நான் அங்கேயே அடக்கம்பண்ணினேன். அந்த நிலமும் குகையும் ஏத்தியரிடமிருந்து வாங்கப்பட்டவை” என்றான். யாக்கோபு தன் மகன்களுக்கு அறிவுரை கூறிமுடித்ததும், அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் தூக்கிவைத்து, இறுதி மூச்சை விட்டான். இவ்வாறு அவன் தனது முன்னோருடன் சேர்க்கப்பட்டான்.
ஆதியாகமம் 49:1-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யாக்கோபு தன் மகன்களை அழைத்து: “நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்குச் சம்பவிக்கும் காரியங்களை அறிவிப்பேன். யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்”. “ரூபனே, நீ என் முதற்பிறந்தவன்; நீ என் திறமையும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய படுக்கையின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. சிமியோனும், லேவியும் சகோதரர்கள்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு மனிதனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை அழித்தார்களே. அவர்களுடைய கடுமையான கோபமும், கொடுமையான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் செய்வேன். யூதாவே, சகோதரர்களால் புகழப்படுபவன் நீயே; உன் கை உன் எதிரிகளுடைய கழுத்தின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய மகன்கள் உன்னைப் பணிவார்கள். யூதா பெரிய சிங்கம், நீ இரையை விரும்பி ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப்படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? சமாதானக் யெகோவா வரும்வரைக்கும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, ஆளுகை அவனுடைய பாதங்களைவிட்டு ஒழிவதும் இல்லை; மக்கள் அவரிடத்தில் சேருவார்கள். அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சைச்செடியிலும், தன் பெண்கழுதையின் குட்டியை உயர்தர திராட்சைச்செடியிலும் கட்டுவான்; திராட்சை ரசத்திலே தன் ஆடையையும், திராட்சைப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் வெளுப்பான். அவனுடைய கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகவும், அவனுடைய பற்கள் பாலினால் வெண்மையாகவும் இருக்கும். செபுலோன் கடற்கரை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாக இருப்பான்; அவனுடைய எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும். இசக்கார் இரண்டு சுமைகளின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை. அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, கூலிவேலை செய்கிறவனானான். தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான். தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாக அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற பாம்பைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான். யெகோவாவே, உம்மாலே விடுவிக்கப்படக் காத்திருக்கிறேன். காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான். ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிகரமானவைகளை அவன் தருவான். நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான். யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீரூற்றின் அருகில் உள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும். வில்வீரர்கள் அவனை மனவருத்தமாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள். ஆனாலும், அவனுடைய வில் உறுதியாக நின்றது; அவனுடைய புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கைகளால் பலமடைந்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான். உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், மார்பகங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார். உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுவரைக்கும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய தலையின் மேலும், தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையை அழிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்” என்றான். இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான். பின்னும் அவன் அவர்களை நோக்கி: “நான் என் ஜனத்தாரோடு சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களருகில் அடக்கம் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டு; அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா எனப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாக இருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனான எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்செய்தேன். அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான். யாக்கோபு தன் மகன்களுக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு உயிர்போய், தன் மக்களோடு சேர்க்கப்பட்டான்.
ஆதியாகமம் 49:1-33 பரிசுத்த பைபிள் (TAERV)
பின்பு யாக்கோபு தன் அனைத்து பிள்ளைகளையும் அழைத்து, “பிள்ளைகளே! என்னிடம் வாருங்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்கிறேன். “சேர்ந்து வாருங்கள், கவனியுங்கள். யாக்கோபின் பிள்ளைகளே. இஸ்ரவேலாகிய உங்கள் தந்தை சொல்வதைக் கேளுங்கள். “ரூபனே! என் முதல் மகனே! நீ எனக்கு முதல் பிள்ளை. எனது மனித சக்தியின் முதல் அடையாளம் நீயே. நீயே வல்லமையும் மரியாதையும் உள்ள குமாரனாக விளங்கியிருக்கலாம். ஆனால் உனது உணர்ச்சிகளை வெள்ளம்போல உன்னால் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது. எனவே நீ மரியாதைக்குரியவனாக இருக்கமாட்டாய். நீ உன் தந்தையின் படுக்கையில் அவர் மனைவிகளுள் ஒருத்தியோடு படுத்தவன். நீ எனது படுக்கைக்கே அவமானம் தேடித் தந்தவன். “சிமியோனும் லேவியும் சகோதரர்கள். அவர்கள் வாள்களால் சண்டையிடுவதை விரும்புவார்கள். இரகசியமாகப் பாவம் செய்யத் திட்டமிடுவார்கள். அவர்களின் திட்டங்களில் என் ஆத்துமா பங்குகொள்ள விரும்பவில்லை. அவர்களின் இரகசியக் கூட்டங்களை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். கோபமாக இருக்கும்போது மனிதர்களைக் கொல்லுகிறார்கள், மிருகங்களை வேடிக்கைக்காகவே துன்புறுத்துகிறார்கள். அவர்களின் கோபமே ஒரு சாபம். அது வலிமையானது. அவர்கள் பைத்தியமாகும்போது கொடூரமானவர்களாகிறார்கள். யாக்கோபின் பூமியிலே அவர்கள் சொந்த பூமியைப் பெறமாட்டார்கள். அவர்கள் இஸ்ரவேல் முழுவதும் பரவி வாழ்வார்கள். “உன்னை உன் சகோதரர்கள் போற்றுவார்கள். நீ உன் பகைவர்களை வெல்வாய். உன் சகோதரர்கள் உனக்கு அடிபணிவார்கள். யூதா ஒரு சிங்கத்தைப் போன்றவன். என் மகனே, தான் கொன்ற மிருகத்தின் மேல் நிற்கும் ஒரு சிங்கத்தை போன்றவன் நீ. நீ ஓய்வெடுக்கும்போது உன்னை எவரும் தொந்தரவு செய்யமுடியாது. யூதாவின் குடும்பத்தில் வருபவர்கள் ராஜா ஆவார்கள். சமாதான கர்த்தர் வரும்வரை உன்னை விட்டு செங்கோல் நீங்குவதில்லை. ஏராளமான ஜனங்கள் அவனுக்கு அடிபணிந்து சேவை செய்வார்கள். அவன் தன் கழுதையைத் திராட்சைக் கொடியில் கட்டி வைப்பான். அவன் தன் இளைய கழுதையை சிறந்த திராட்டைக் கொடியில் கட்டி வைப்பான். அவன் சிறந்த திராட்சைரசத்தை ஆடைவெளுக்கப் பயன்படுத்துவான். அவன் கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகும். அவன் பற்கள் பாலால் வெளுக்கும். “இவன் கடற்கரையில் வசிப்பான். அவனது துறைமுகம் கப்பல்களுக்கு ஏற்றதாக இருக்கும். அவனது எல்லை சீதோன்வரை இருக்கும். “இசக்கார் ஒரு கழுதையைப்போல கடினமாக உழைப்பான். இரண்டு பொதியின் நடுவே படுத்திருப்பவனைப் போன்றவன். தன் ஓய்விடத்தை நன்றாக இருக்கும்படி பார்த்துக்கொள்வான். தன் பூமியை செழிப்பாக வைத்துக்கொள்வான். அடிமையைப்போல வேலை செய்ய சம்மதிப்பான். “தாண் இஸ்ரவேல் குடும்பத்தில் ஒருவனாக தன் சொந்த ஜனங்களையே நியாயம்தீர்ப்பான். இவன் சாலையோரத்தில் அலையும் பாம்பைப் போன்றவன். இவன் பாதையிலேபடுத்திருக்கும் பாம்பைப் போன்று பயங்கரமானவன். இப்பாம்பு ஒரு குதிரையின் காலை கடிக்கிறது, சவாரி செய்தவன் கீழே விழுகிறான். “கர்த்தாவே நான் உமது இரட்சிப்புக்காகக் காத்திருக்கிறேன். “ஒரு கொள்ளைக் கூட்டம் காத்தைத் தாக்கும். ஆனால் அவர்களை அவன் துரத்திவிடுவான். “இவனது நிலம் அதிகமாக விளையும். ஒரு ராஜாவுக்கு வேண்டிய உணவு பொருட்களைத் தருவான். “இவன் சுதந்திரமாக ஓடுகிற மானைப் போன்றவன். அவன் வார்த்தைகள் குழந்தைகளைப் போன்று அழகானவைகள்.” “இவன் வெற்றி பெற்றவன். இவன் பழத்தால் மூடப்பட்ட திராட்சைக்கொடியைப் போன்றவன். நீரூற்றுக்கருகிலும் வேலிக்குள்ளும் இருக்கிற கொடியைப் போன்றவன். பலர் அவனுக்கு எதிராகப் போரிடுவார்கள். வில் வீரர்களே அவன் பகைவர். ஆனால் அவன் பலம் வாய்ந்த வில்லாலும் திறமையான கைகளாலும் சண்டையில் வென்றான். அவன் யாக்கோபின் வல்லவரும், மேய்ப்பரும், இஸ்ரவேலின் பாறையும் ஆனவரிடமிருந்தும் உன் பிதாவின் தேவனிடமிருந்தும் வலிமை பெற்றான். தேவன் உன்னை ஆசீர்வதிக்கிறார். சர்வ வல்லமையுள்ள தேவன் வானத்திலிருந்தும், கீழே ஆழத்திலிருந்தும் உன்னை ஆசீர்வதிக்கட்டும். ஸ்தனங்களுக்கும், கர்ப்பங்களுக்குமுரிய ஆசிகளை அவர் உனக்கு வழங்கட்டும். எனது பெற்றோர்களுக்கு எவ்வளவோ நன்னமைகள் ஏற்பட்டன எனினும் எனது ஆசீர்வாதங்கள் அவற்றைவிட மேலானது. உனது சகோதரர்கள் உன்னை எதுவுமில்லாமல் விட்டுவிட்டுப் போனார்கள். ஆனால், இப்போது எனது ஆசீர்வாதங்களையெல்லாம் மலையின் உயரம்போல் கூட்டித் தருகிறேன். “பென்யமீன் ஒரு பசித்த நரி போன்றவன். காலையில் கொன்று தின்பான். மாலையில் மிஞ்சியதைப் பகிர்ந்துகொள்வான்.” இவர்கள் அனைவரும் இஸ்ரவேலின் 12 குடும்பத்தினர். இவ்வாறு யாக்கோபு அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருக்குப் பொருத்தமான ஆசீர்வாதங்களைக் கொடுத்தான். பின் இஸ்ரவேல் ஒரு ஆணையிட்டான். “நான் மரிக்கும்போது என் ஜனங்களோடு இருக்க விரும்புகிறேன். என் முற்பிதாக்களோடு நான் அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தக் கல்லறை ஏத்தியரிடம் வாங்கிய எப்பெரோனில் உள்ளது. அந்தக் குகை மம்ரேக்கு அருகில் மக்பேலா எனும் இடத்தில் வயலில் உள்ளது. இது கானான் நாட்டில் உள்ளது. இதனை ஆபிரகாம் எப்ரோனிடமிருந்து விலைக்கு வாங்கி கல்லறையாக மாற்றிவிட்டார். ஆபிரகாமும் அவன் மனைவி சாராளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். நான் என் மனைவி லேயாளையும் அதே குகையில் அடக்கம் பண்ணினேன். அந்தக் குகை இருக்கும் நிலம் ஏத்தின் குமாரன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான். யாக்கோபு பேசி முடித்ததும் படுத்தான். கால்களைக் கட்டிலின்மேல் மடக்கியபடியே மரணமடைந்தான்.
ஆதியாகமம் 49:1-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன். யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள். ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. சிமியோனும், லேவியும் ஏகசகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே. உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும்பண்ணுவேன். யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள். யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள். அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சச்செடியிலும், தன் கோளிகைக்கழுதையின் குட்டியை நற்குல திராட்சச்செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான். அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும். செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன் வரைக்கும் இருக்கும். இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை. அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான். தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான். தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான். கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன். காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான். ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான். நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான். யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும். வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள். ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான். உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார். உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான். இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான். பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு; அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறை பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன். அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான். யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக் கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.