ஆதியாகமம் 32:22-32

ஆதியாகமம் 32:22-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அன்றிரவு யாக்கோபு எழுந்து தன் இரண்டு மனைவிகளையும், இரண்டு பணிப்பெண்களையும், தன் பதினொன்று மகன்களையும் கூட்டிக்கொண்டு யாப்போக்கு ஆற்றின் துறையைக் கடந்தான். அவன் அவர்களை ஆற்றுக்கு அப்பால் அனுப்பியபின் தனது உடைமைகள் எல்லாவற்றையும் அனுப்பிவைத்தான். அதன்பின் யாக்கோபு தனிமையில் இருந்தான், அப்பொழுது ஒரு மனிதர் வந்து பொழுது விடியும்வரை அவனுடன் போராடினார். யாக்கோபை மேற்கொள்ள முடியாதென்பதைக் கண்ட அவர் தொடர்ந்து போராடுகையில், யாக்கோபின் தொடைச்சந்தைத் தொட்டவுடனே தொடைச்சந்து இடம் விலகியது. அப்பொழுது அந்த மனிதர், “என்னைப் போகவிடு; பொழுது விடிகிறது” என்றார். அதற்கு யாக்கோபு, “நீர் என்னை ஆசீர்வதித்தாலன்றி உம்மைப் போகவிடமாட்டேன்” என்றான். அவர், “உன் பெயர் என்ன?” என்று யாக்கோபிடம் கேட்டார். அவன், “யாக்கோபு” என்றான். அப்பொழுது அவர், “உன் பெயர் இனிமேல் யாக்கோபு எனப்படாமல் இஸ்ரயேல் எனப்படும். ஏனெனில், நீ இறைவனோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார். அப்பொழுது யாக்கோபு அவரிடம், “தயவுசெய்து உம்முடையப் பெயரை எனக்குச் சொல்லும்” என்றான். அதற்கு அவர், “நீ ஏன் என் பெயரைக் கேட்கிறாய்?” என்று கேட்டு, அவனை ஆசீர்வதித்தார். உடனே யாக்கோபு, “நான் இறைவனை முகமுகமாய்க் கண்டும் இன்னும் என் உயிர் தப்பியிருக்கிறது” என்று சொல்லி, அவ்விடத்திற்குப் பெனியேல் என்று பெயரிட்டான். அவன் பெனியேலைக் கடந்து போகையில், அவனுக்கு மேலாகச் சூரியன் உதித்தது. அவனுடைய தொடைச்சந்து இடம்விலகி இருந்ததால், அவன் நொண்டிக்கொண்டு நடந்தான். யாக்கோபின் தொடைச்சந்து அருகேயிருந்த தசைநார் தொடப்பட்டபடியால், இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச்சந்துடன் இணைந்திருக்கும் தசைநாரைச் சாப்பிடுவதில்லை.

ஆதியாகமம் 32:22-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இரவில் எழுந்திருந்து, தன்னுடைய இரண்டு மனைவிகளையும், இரண்டு மறுமனையாட்டிகளையும், பதினொரு மகன்களையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்ற ஆற்றை அதன் ஆழமில்லாத பகுதியில் கடந்தான். அவர்களையும், தனக்கு உண்டான அனைத்தையும் ஆற்றைக்கடக்க செய்து, அக்கரைப்படுத்தினான். யாக்கோபு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான்; அப்பொழுது ஒரு மனிதன் பொழுது விடியும்வரை அவனுடன் போராடி, அவனை மேற்கொள்ள முடியாததைக்கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதனால் அவருடன் போராடும்போது யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. அவர்: “என்னைப் போகவிடு, பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடமாட்டேன்” என்றான். அவர்: “உன் பெயர் என்ன” என்று கேட்டார்; “யாக்கோபு” என்றான். அப்பொழுது அவர்: “உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் எனப்படும்; தேவனோடும் மனிதர்களோடும் போராடி மேற்கொண்டாயே” என்றார். அப்பொழுது யாக்கோபு: “உம்முடைய நாமத்தை எனக்கு தெரிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: “நீ என் நாமத்தைக் கேட்பதென்ன” என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார். அப்பொழுது யாக்கோபு: “நான் தேவனை முகமுகமாகக் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பெனியேல் என்று பெயரிட்டான். அவன் பெனியேலைக் கடந்துபோகும்போது, சூரியன் உதயமானது; அவனுடைய தொடை சுளுக்கியதாலே நொண்டி நொண்டி நடந்தான். அவர் யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைத் தொட்டதால், இஸ்ரவேல் வம்சத்தார் இந்த நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைச் சாப்பிடுகிறதில்லை.

ஆதியாகமம் 32:22-32 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னிரவில் எழுந்து அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான். அவன் தனது இரண்டு மனைவிகளையும், இரண்டு வேலைக்காரிகளையும், பதினொரு குழந்தைகளையும் தன்னோடு அழைத்துக்கொண்டு ஆற்றைக் கடந்தான். முதலில் தன் குடும்பத்தை ஆற்றைக் கடக்க அனுப்பினான். பிறகு தனக்குரிய அனைத்தும் கடக்க உதவினான். யாக்கோபு ஆற்றைக் கடந்தவர்களில் கடைசி நபர். அவன் ஆற்றைக் கடக்குமுன், தனியாக நிற்கும்போது தேவதூதனைப் போன்ற ஒருவர் வந்து அவனோடு போராடினார். சூரியன் உதயமாகும் வரைக்கும் அவர் போராடியும், அந்த மனிதரை யாக்கோபு விடுவதாயில்லை. எனவே, அவர் யாக்கோபின் தொடையைத் தொட்டார். அப்போது யாக்கோபின் கால் சுளுக்கிக்கொண்டது. அந்த மனிதர் யாக்கோபிடம், “என்னைப் போக விடுகிறாயா? சூரியன் உதித்துவிட்டது” என்று கேட்டார். அதற்கு யாக்கோபு, “நான் உம்மைப் போகவிடமாட்டேன். நீர் என்னை ஆசீர்வதித்தே ஆக வேண்டும்” என்றான். அந்த மனிதர், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அவன், “என் பெயர் யாக்கோபு” என்றான். பிறகு அந்த மனிதர், “உன் பெயர் இனி யாக்கோபு அல்ல. உன் பெயர் இஸ்ரவேல். நீ தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டபடியால் நான் உனக்கு இந்தப் பெயரை வைக்கிறேன். உன்னைத் தோற்கடிக்க மனிதர்களால் முடியாது” என்றார். யாக்கோபு அவரிடம், “உமது பெயரைத் தயவு செய்து சொல்லும்” என்றான். ஆனால் அவர், “என் பெயரை ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார். அதே சமயத்தில் அவர் யாக்கோபை ஆசீர்வதித்தார். எனவே, யாக்கோபு அந்த இடத்திற்கு பெனியேல் என்று பெயர் வைத்தான். “இந்த இடத்தில் நான் தேவனை முகமுகமாய்ப் பார்த்தேன். உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்றான். அவன் பெனியேலைக் கடந்து போகையில் சூரியன் உதயமாகிவிட்டது. அவனது தொடை சுளுக்கிக்கொண்டதால் நொண்டி, நொண்டி நடந்தான். எனவே, இன்னும் இஸ்ரவேல் ஜனங்கள் தொடைச் சந்து தசையை உண்பதில்லை. ஏனென்றால் அது தேவன் யாக்கோபின் தொடைச் சந்து தசையைத் தொட்ட இடம் ஆகும்.

ஆதியாகமம் 32:22-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான். அவர்களையும் சேர்த்து, ஆற்றைக்கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான். யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, அவனை மேற்கொள்ளாததைக்கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான். அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார். அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான். அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான். அவர் யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்