ஆதியாகமம் 2:4-9 - Compare All Versions
ஆதியாகமம் 2:4-9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவனாகிய யெகோவா வானத்தையும் பூமியையும் உண்டாக்கியபோது, வானமும் பூமியும் படைக்கப்பட்ட வரலாறு இவைகளே. இறைவனாகிய யெகோவா பூமியில் மழையை அனுப்பாதிருந்ததினால், பூமியில் எந்தப் புதரும் இன்னும் காணப்படவுமில்லை, எந்த செடிகளும் இன்னும் முளைத்திருக்கவும் இல்லை; நிலத்தைப் பண்படுத்தவும் யாரும் இருக்கவில்லை. ஆனாலும், பூமியிலிருந்து மூடுபனி மேலெழும்பி நிலத்தின் மேற்பரப்பு முழுவதையும் நனைத்தது. இறைவனாகிய யெகோவா நிலத்தின் மண்ணினால் மனிதனை உருவாக்கி, அவனுடைய நாசியில் உயிர்மூச்சை ஊதினார்; அப்பொழுது மனிதன் உயிருள்ளவனானான். இறைவனாகிய யெகோவா, கிழக்குத் திசையிலுள்ள ஏதேனில் ஒரு தோட்டத்தை அமைத்து, தாம் உருவாக்கிய மனிதனை அங்கே குடியமர்த்தினார். இறைவனாகிய யெகோவா பார்வைக்கு இனியதும் உணவுக்கு ஏற்றதுமான எல்லா வகையான மரங்களையும் அத்தோட்டத்தில் வளரச்செய்தார். தோட்டத்தின் நடுவில் வாழ்வளிக்கும் மரமும் நன்மை தீமையின் அறிவைத் தரும் மரமும் இருந்தன.
ஆதியாகமம் 2:4-9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேவனாகிய யெகோவா பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே. நிலத்தினுடைய அனைத்துவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய அனைத்துவிதத் தாவரங்களும் இன்னும் முளைக்கவில்லை; ஏனென்றால் தேவனாகிய யெகோவா பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யச்செய்யவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இல்லை. அப்பொழுது பூமியிலிருந்து நீரூற்று எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான். தேவனாகிய யெகோவா கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார். தேவனாகிய யெகோவா, பார்வைக்கு அழகும் சாப்பிடுவதற்கு ஏற்ற அனைத்துவித மரங்களையும், தோட்டத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியத்தக்க ஆற்றலைக் கொடுக்கும் மரத்தையும் பூமியிலிருந்து முளைக்கச்செய்தார்.
ஆதியாகமம் 2:4-9 TAERV (பரிசுத்த பைபிள்)
இதுதான் பூமி மற்றும் வானம் தோன்றின வரலாறாகும். இதுதான் தேவனாகிய கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைக்கும்போது, நடந்தவற்றைப்பற்றிக் கூறும் விபரங்களாகும். பூமியில் எந்தத் தாவரமும் இல்லாமல் இருந்தது. வயலிலும் அதுவரை எதுவும் வளரவில்லை. எந்தப் பகுதியிலும் எந்தச் செடிகொடிகளும் இல்லை. ஏனெனில் தேவனாகிய கர்த்தர் இன்னும் மண்ணில் மழை பெய்யச் செய்யவில்லை. பூமியில் விவசாயம் செய்ய மனுக்குலம் எதுவும் இல்லை. பூமியிலிருந்து தண்ணீர் எழும்பி நிலத்தை நனைத்தது. பிறகு தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை தேவனாகிய கர்த்தர் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான். பிறகு தேவனாகிய கர்த்தர் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டத்தை அமைத்து அதற்கு ஏதேன் என்று பெயரிட்டார். தேவனாகிய கர்த்தர் தாம் உருவாக்கிய மனிதனை அத்தோட்டத்தில் வைத்தார். தேவனாகிய கர்த்தர் எல்லாவகையான அழகான மரங்களையும், உணவுக் கேற்ற கனிதரும் மரங்களையும் தோட்டத்தில் வளரும்படிச் செய்தார். அத்தோட்டத்தின் நடுவில் தேவனாகிய கர்த்தர் ஜீவ மரத்தையும், நன்மை மற்றும் தீமை பற்றி அறிவு தருகிற மரத்தையும் வைத்தார்.
ஆதியாகமம் 2:4-9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே. நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.